கலாநிதி அமீரலி,
மேர்டொக் பல்கலைக்கழகம்,
மேற்கு அவுஸ்திரேலியா
இளம் தலைமுறையினரின் அறப்போர் ஈட்டிய முதல் வெற்றி மகிந்த ராஜபக்சவை பிரதமர் பதவியைத் துறக்கச் செய்தமையாகும். ஆனால் அவர் பதவி துறப்பதற்குமுன் நாட்டுக்குக் கொடுத்த நன்கொடை நாட்டையே ஒரு போர்க்களமாக மாற்றிவிட்டமை. அவர் பதவி துறந்த நாள் தொடக்கம் சில தினங்களாக இடம்பெற்ற கொலைகளும், கொள்ளைகளும், சொத்துச் சேதங்களும் அவரால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டவை என்பதை யாராலும் மறுக்க முடியாது. அவர் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட வேண்டியவர். அவரது சூழ்ச்சி எவ்வாறு நடைமுறைப்படுத்தப்பட்டது என்பதை வாசகர்கள் அறிவது அவசியம்.
அவர் பதவி துறப்பதற்கு முன்னர் தனது கடைசி உரையை நாட்டு மக்களுக்கு அலரி மாளிகையின் வாசலில் நின்று நிகழ்த்த விரும்பினார். எனினும் அவர் எந்த அளவுக்கு மக்களின் ஆதரவை இழந்துள்ளார் என்பதையும் ஏற்கனவே அவர் அறிந்துள்ளார். அனுராதபுரத்துக்கு மதவழிபாட்டுக்காகச் சென்றிருந்தபோது அங்கே கூடியிருந்த அவரது முன்னை நாள் ஆதரவாளர்கள் கூச்சல் போட்டதிலிருந்தே அந்த உண்மையை அவர் உணர்ந்திருக்க வேண்டும். எனவே தமக்கு ஆதரவு காட்டும் ஒரு கூட்டத்தினரை தெற்கிலிருந்து கொழும்புக்கு விலைகொடுத்து வரவழைக்கச் செய்தார். அந்தக் கூட்டம் ஒரு கூலிப் படை. இரண்டாயிரம் ரூபா பணத்திற்காகவும் மதுவுக்காகவும் அவரது உரையைக் கேட்பதற்கென பேரூந்துகளில் கொண்டுவரப்பட்டவர்கள். ஆனால் பிரதமரின் அந்தரங்க நோக்கம் காலிமுகத் திடலில் அறப்போரில் ஈடுபட்டிருந்த குழுவினரை அடித்துக் கலைப்பதாகும்.
அதனை கலைக்க வேண்டும் என்ற முடிவு ஏற்கனவே சிலரால் எடுக்கப்பட்டுவிட்டது. அதற்கு அடிப்படையாக அப்போராட்டத்தைப்பற்றிய சில பொய்களை சில தலைவர்கள் பரப்பத் தொடங்கினர். உதாரணமாக, முன்னை நாள் அமைச்சர் சரத் வீரசேகர அறப்போர் அணிக்குள் ஈழப்போராளிகளும் பௌத்தமதத்தின் எதிரிகளும் நுழைந்துள்ளார்களென ஒரு கதையை பகிரங்கத்தில் அவிழ்த்து விட்டார். அவருக்கு முன்னர் அமைச்சரவையிலிருந்து பிரிந்து சென்ற விமல் வீரவங்சவும் இந்த அறப்போர் வெளிச் சக்திகளின் ஒரு சதியென்று பிதற்றினார். ஆகவே அதனை வன்முறைகொண்டு கலைப்பதற்கு மகிந்த ராஜபக்ச தயாரானார். இந்த ஏற்பாடுகள் அனைத்தும் ஜனாதிபதிக்குத் தெரியாமலா இருந்திருக்கும்?
பிரதமரின் உரையைக் கேட்ட கைக்கூலிகள் கூட்டம் கூட்டமாக காலிமுகத் திடலை நோக்கி நகரத் தொடங்கினர். காலிமுகத் திடலுக்கும் அலரி மாளிகைக்கும் நடுவிலேதான் இருக்கிறது கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையம். ஆனால் பொலிஸ் நிலைய அதிகாரிகள் அந்தக் கூட்டத்தினரைத் தடுப்பதற்கு எந்த முயற்சியும் எடுக்காதது இந்தச் சூழ்ச்சியின் இன்னொரு இரகசியத்தை வெளிப்படுத்துகிறது. அதாவது, அதுவரை நடந்தவற்றை நேரில் பார்த்த எந்த ஒரு சாதாரண பிரஜைக்கும் ஏதோ ஒரு அசம்பாவிதத்துடன்தான் அந்த நிகழ்வு முடிவுறும் என்பதை உணராமல் இருந்திருக்க முடியாது. ஆனால் அப்படிப்பட்ட ஒரு முடிவை பொலிஸார் உணராமல் இருந்திருப்பர் என்பதை நம்ப முடியுமா? ஆகவே நிலையத்தைத் தாண்டி நடந்து சென்ற கூட்டத்தைத் தடுக்காததற்கு மேலிடத்து உத்தரவு காரணமாய் இருக்கலாம் என்பதை நிராகரிக்க முடியாது. அது எந்த மேலிடம் என்பதை விசாரணை செய்ய வேண்டும்.
திட்டமிட்டதுபோன்று அறப்போராளிகள் மகிந்தவின் கைக்கூலிகளின் அடிதடிக்கு ஆளாகினர். அதன் விளைவு நாடே ஒரு போர்க்களமாக மாறிற்று. மக்கள் எந்த அளவுக்கு ஆட்சியினர்மேல் வெறுப்புற்றுள்ளனர் என்பதையும் எந்த அளவுக்கு மக்களின் பொருளாதாரக் கஷ்டங்கள் தாங்கொணாத துயரங்களுக்கு அவர்களை ஆளாக்கியுள்ளன என்பதையுமே அக்கலவரங்கள் வெளிப்படுத்துகின்றன. இவற்றை குறைவாக எடைபோட்டுவிட்ட பிரதமர் அந்தக் கலவரத்தையே தனது பிரிவுபசாரப் பரிசாக மக்களுக்கு வழங்கியுள்ளார். அவமானத்துடனும் பழிச்சொல்லுடனும் பதவி இழந்த பிரதமரை வரலாறு எவ்வாறு சித்தரிக்குமோ தெரியாது. “குடைநிழலிருந்து குஞ்சரம் ஊர்ந்தோர் நடைமெலிந்து நண்ணினும் நண்ணுவர்” என்ற பழம் தமிழ் கூற்றே இப்போது ஞாபகத்துக்கு வருகிறது.
அவரின் பதவி துறப்பினாலும் அமைச்சரவை கலைப்பினாலும் ஏற்பட்ட இடைவெளியை நிரப்பாமல் நாட்டின் பொருளாதாரத்தைச் சீர்படுத்த முடியாது. அந்தப் பொறுப்பை ஜனாதிபதியின் தலைமேல் நாட்டின் அரசியல் யாப்பு சுமத்தியுள்ளது. ஆனால் அதிலே ஒரு பிரச்சினை உண்டு என்பதை அவர் நன்கு அறிவார். அதாவது, காலிமுகத்திடலின் அறப்போராளிகளும் நாட்டின் ஏனைய பாகங்களிலுள்ள பெரும்பான்மையான மக்களும் “கோத்தாவே வீட்டுக்குப் போ” என்ற தமது கோரிக்கை நிறைவேறும்வரை ஓயப்போவதில்லை. அதற்கு நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் ஆதரவுண்டு என்பதும் அவர்களுக்குத் தெரியும். அதை ஜனாதிபதியும் உணர்வார். எனவே மகிந்தவின் இடைவெளியை நிரப்ப தனக்குச் சார்பான ஒருவரையே பிரதமராக்க வேண்டுமென விரும்பி ரணில் விக்கிரமசிங்ஹவை நியமிக்கலானார்.
இதனிடையில் பொருளாதாரச் சீர்திருத்தத்தை மேற்கொள்ள வேண்டுமாயின் அதற்கு அடிப்படைத் தேவையாக அரசியல் உறுதிப்பாடு வேண்டும். அந்தத் தேவையை சர்வதேச நாணய நிதி உட்பட சர்வதேச நாடுகளும் அரசுகளும் வலியுறுத்துகின்றன. இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுனரும்கூட அந்தத் தேவை விரைவில் நிறைவேற்றப்படாவிட்டால் தான் தனது பதவியைத் துறப்பதாகவும் எச்சரித்துள்ளார். எனவே ஒரு புதிய பிரதமரையும் அமைச்சரவையையும் காலதாமதமின்றி நியமிக்க வேண்டி இருந்தது. சஜித் பிரேமதாசவின் தயக்கமும் ஏனைய கட்சித்தலைவர்களின் மறுப்பும் ரணிலின் நியமனத்துக்குச் சாதகமாக அமைந்தன. யார் இந்த ரணில்?
பிரபலமான கொழும்பு றோயல் கல்லூரியின் முன்னை நாள் மாணவன்.சட்டக் கல்லூரியிற் பயின்று வழக்குரைஞரானவர். அவுஸ்திரேலிய டீக்கின்ஸ் பல்கலைக்கழகத்தினால் கௌரவ கலாநிதிப் பட்டம் வழங்கப்பட்டவர். எனவே மகிந்தவைவிட அறிவுத்திறனுள்ளவரென சர்வதேச மட்டத்தில் கருதப்படுபவர். வர்த்தகத் துறையின் நண்பன். முதலாளித்துவச் சிந்தனையின் ஆதரவாளன். ஆதலால் மேற்கு நாடுகளின் ஆதரவைப் பெற்றவர். முதலாளித்துவச் சிந்தனையைத் தழுவிய ஐக்கிய தேசியக் கட்சியின்மூலம் 1977 இல் அரசியலுக்கு அறிமுகமானவர். ஜே. ஆர். ஜெயவர்த்தன ஆட்சியில் உதவி வெளிநாட்டு அமைச்சராக 28ஆவது வயதில் நியமனம் பெற்றவர். 1994 இல் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக ரணில் தெரிவு செய்யப்பட்டபோது அக்கட்சிக்கு 44 சதவீத வாக்குகள் இருந்தன. அந்தப் பலத்தை 2020 இல் 2 சதவீதமாகக் குறைத்த பெருமை இவரையே சாரும்.
மகிந்தவின் பத்தாண்டுகால ஜனாதிபதி ஆட்சி பல குற்றச்சாட்டுகளின் மத்தியில் தோல்விகண்டு 2015 இல் நல்லாட்சி அரசாங்கம் பதவியேற்றபோது மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியின்கீழ் ரணில் பிரதமரானார். அப்போது நடைபெற்ற தேர்தல் பிரச்சார மேடைகளில் மகிந்த ஆட்சியின் குற்றச்சாட்டுகளை விசாரித்து தக்க நடவடிக்கைகள் எடுப்பதாக முழங்கினார். ஆனால் அவை எதுவுமே நடைபெறவில்லை. நடந்ததெல்லாம் மத்திய வங்கிப் பணமுறி மோசடியும் ஈஸ்டர் பண்டிகை குண்டுவெடிப்புச் சம்பவமுமே. இவை இரண்டினதும் பழிகள் இவர் தலைமேல் விழத் தொடங்கின. இந்த இரண்டும் மகிந்தவின் கட்சியின் 2020 வெற்றிக்குக் கிடைத்த வரப்பிரசாதங்கள். இங்கேதான் ரணிலின் பலவீனம் வெளிப்படலாயிற்று. தன்மேலும் தனது ஆட்சியின்மேலும் விழுந்த பழியை நீக்கவேண்டுமானால் மகிந்த அரசின்மேல் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை விசாரிக்காது விடவேண்டுமென்று உணர்ந்து அந்த விசாரணைகளைக் கைவிட்டார். அதற்குக் கைமாறாக 2020 இல் மகிந்தவின் கட்சி ஆட்சிக்கு வந்தபோது நல்லாட்சி அரசாங்கத்தைப்பற்றிய விசாரணைகள் காற்றில் பறக்க விடப்பட்டன. இது ஒரு முதுகு சொறியும் உபாயம்.
இப்போது ஜனாதிபதி கோத்தாபயவும் பதவி துறந்து ராஜபக்ச அரசின் ஊழல் மோசடிகளும் கொள்ளைகளும் மனித உரிமை மீறல்களும் போர்க் குற்றச்சாட்டுகளும் விசாரிக்கப்பட்டு அவர்கள் தண்டிக்கப்பட வேண்டுமென்பதில் அறப்போராளிகள் பிடிவாதமாக உள்ளனர். அவர்களின் போராட்டம் நடந்துமுடிந்த கலவரத்தின்பின்னர் நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகின்றது. இந்த நிலையில் ராஜபக்சாக்களையும் காப்பாற்றி பொருளாதார மீட்சிக்கும் வழிதேடப் பொருத்தமான ஒருவர் முதுகு சொறியும் ரணிலைத்தவிர வேறில்லை என்பதை உணர்ந்தே கோத்தாபய அவரை பிரதமராக நியமித்துள்ளார். அவருடன் சேர்ந்து பணியாற்ற சுமார் 15 பேரைக்கொண்ட ஓர் அமைச்சரவையையும் ஜனாதிபதி நியமிப்பார். இவ்வாறு நியமிக்கப்பட்ட இந்த ஆட்சி காப்பாற்றப்போவது பொருளாதாரத்தையா ராஜபக்சாக்களையா அல்லது இரண்டையுமா? இதுதான் இன்று நாடு எதிர்நோக்கும் முக்கிய கேள்வி.
இது மலைபோன்ற ஒரு பிரச்சினை. அதனைத் தீர்க்கும் வலு ரணிலுக்கு உண்டா என்பது சந்தேகமே. திருகோணமலை கடற்படைத் தளத்தில் ஒழிந்துகொண்டிருக்கும் மகிந்த ரணிலுக்கு வாழ்த்துச் செய்தியை உடனடியாக அனுப்பியமை ஏன் என்பதை வாசகர்கள் உணரவேண்டும். சோழியன் குடும்பி சும்மா ஆடுவதில்லை.
இத்தனைக்கும் மத்தியில் கொழும்புப் பங்குச்சந்தை ரணிலின் நியமனத்தைக் கண்டு சுறுசுறுப்படையத் தொடங்கிற்று. இலங்கை நாணயமும் சிறிதளவு விலை மதிப்புப் பெற்றது. சர்வதேச நாணய நிதியுடனான பேச்சுக்களும் புதிய நிதி அமைச்சர் நியமனமானதும் மீண்டும் ஆரம்பிக்கலாம். அமெரிக்கா, இந்தியா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளும் ரணிலுக்கு வாழ்த்துக் கூறியுள்ளன. இருந்தும் இவையெல்லாம் நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வாகுமா?
அறப்போராட்டம் நாட்டின் அரசியல் பொருளாதார அமைப்புகள் மாற்றப்பட வேண்டுமென்று கோரும்போது அதனுள் அடங்கும் பொருளாதார மாற்றங்களை ஏற்படுத்த ஆட்சியாளர்களுக்கு மக்களின் பூரண ஒத்துழைப்பு அவசியம். அது ரணிலுக்கு இப்போது கிடையாது. உதாரணமாக, வரிப்பளு, பொதுத்துறைச் செலவினங்கள், ஊழல் ஒழிப்பு, மாபியாக்களின் ஒழிப்பு, கல்வி, மருத்துவம் போன்ற பொதுநல அபிவிருத்தி, அரச நிறுவனங்களின் சீர்திருத்தங்கள், நிர்வாகச் சீரமைப்பு ஆகியனவற்றில் அடிப்படை மாற்றங்கள் தேவைப்படுகின்றன. ஆனால் அவற்றை ஏற்படுத்தும்போது அடிமட்டத்தில் வாழும் மக்களின் ஜீவாதார நலன்கள் பாதிக்கப்படக்கூடாது. இந்த மாற்றங்களை மக்களின் ஆதரவில்லாமல் ஒரு அரசாங்கத்தால் கொண்டுவர முடியாது. அதற்குரிய செலவினங்களையும் உள்நாட்டிலிருந்தே திரட்டவும் வேண்டும். வெளிநாட்டு உதவிகள் போதாது. ஏற்கனவே கடன் சுமையால் வலுவிழந்துள்ள பொருளாதாரம் இன்னும் கடன்பட முடியாது. யாரும் கடன் தரவும் மாட்டார்கள். சர்வதேச நாணய நிதியின் உதவியும் ஏற்கனவேபட்ட கடன் சுமையால் ஒரு பிரச்சினையாக எழுந்துள்ளது. இந்த நிலையில் கோத்தாவை ஜனாதிபதியாக வைத்துக் கொண்டு மக்களின் ஆதரவை ரணில் எதிர்பார்ப்பாரானால் அவருக்கு அது ஏமாற்றமாகவே முடியும். எதிர்க்கட்சிகளும் தமது ஆதரவை நிபந்தனைகளுடனேதான் வழங்கும். கோத்தாவின் பொந்துக்குள் புகுந்துகொண்டுதான் மகிந்த இத்தனை அமளிகளையும் செய்தார். இப்போது அதே பொந்துக்குள் ரணில் நுழைந்துள்ளார். அவர் செய்யப்போகும் கைங்கரியங்களை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
ரணிலை உடனடியாக எதிர்நோக்கும் பிரச்சினை அறப்போராட்டத்தை எப்படிக் கலைப்பது என்பதே. அவர் அதைக் கலைக்கமாட்டேன் என்று உறுதிமொழி வழங்கியுள்ளார். இராணுவத் தளபதியும் அதை ஆமோதித்துள்ளார். ஆனால் பொலிஸ் உயர் அதிகாரியோ காலிமுகத்திடலை பழைய நிலைக்குக் கொண்டுவர வேண்டும். ஆதலால் அறப்போராளிகள் வெளியேற வேண்டும் என்ற கட்டளையை இன்னும் செயற்படுத்தாது பிற்போட்டுள்ளார். ஆனால் எத்தனை நாட்களுக்கோ? ஜனாதிபதிக்கும் இப்போராட்டம் ஓர் எதிரி. எனவே ஏதோ ஒரு சாட்டைவைத்து இப்போராட்டத்தை பலாத்காரமாகக் கலைக்க முயன்றால் ரணில் அதற்கு என்ன பதிலடி கொடுப்பாரோ? ஆனால் மீண்டும் ஓர் இரத்தக்களரி ஏற்பட்டு அந்தப்போராளிகள் பலியானால் அதுவே ரணிலையும் நிரந்தரமாகவே அரசியலிலிருந்து வெளியேற்றும். மகிந்தவின் அகல்வு இறுதியில் ரணிலையும் பலிகொள்ளும். ஒன்றுமட்டும் உறுதி. மக்களால் தெரியப்பட்ட ஓர் அரசாங்கம் இல்லாமல் பொருளாதாரத்தை எவரும் கட்டி எழுப்ப முடியாது.- Vidivelli