ஏ.ஆர்.ஏ.பரீல்
சிறீன் அபூ அக்லா கட்டாரைத் தளமாகக் கொண்டு இயங்கும் அல்ஜெசீரா தொலைக்காட்சியின் கள நிருபராவார். இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரையிலுள்ள ஜெனின் அகதிகள் முகாம்மீது கடந்த 11 ஆம் திகதி தாக்குதல் நடத்தினர். அப்போது இஸ்ரேலிய படையினரின் துப்பாக்கி சூட்டுக்கு சிறீன் அபூ அக்லா பலியானார்.
அவர் இரும்பிலான (Steel) அங்கி ஆடையொன்றினை அணிந்து கொண்டு கடமையில் ஈடுபட்டிருந்தார். அந்த அங்கியில் ஊடகம் (Press) என பொறிக்கப்பட்டிருந்தது. இஸ்ரேலிய படையினரின் துப்பாக்கி ரவைகளினால் அவரது தலை கடுமையான காயங்களுக்குள்ளாகிய நிலையில் அவர் இறந்தார்.
இஸ்ரேலிய படையினர் சிறீன் அபூ அக்லாவின் தலையில் துப்பாக்கிச் சூடு நடத்தியிருந்தனர் என பலஸ்தீன சுகாதார அமைச்சு அறிக்கை வெளியிட்டது. இதேவேளை இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சு மற்றும் இஸ்ரேலிய இராணுவம் இதனை ம-றுத்தது. பலஸ்தீன ஊடகவியலாளரான சிறீன் பலஸ்தீனர்கள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிர் துறந்ததாக இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சும் இராணுவமும் வாதிட்டது.
51 வயதான ஊடகவியலாளரான சிறீன் அல் ஜெசீரா தொலைக்காட்சியின் ஆரம்பகால ஊடகவியலாளர்களில் ஒருவராவார். அவர் இப்பிராந்தியத்தில் நீண்ட காலமாக பணியாற்றியவர். இஸ்ரேலினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வாழும் பலஸ்தீன் மக்கள் மீது இஸ்ரேலினால் நடாத்தப்பட்டுவரும் தாக்குதல்களை இவர் ஊடகம் மூலம் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தவர்.
சிறீன் அபூ அக்லா 1971 இல் ஜெருசலத்தில் பிறந்தவர். இவர் ஜோர்தான் யர்மூக் பல்கலைக்கழகத்தில் ஊடகவியல் துறையில் பட்டம் பெற்றவராவார்.
ஜெனின் அகதிகள் முகாமை இஸ்ரேலிய படையினர் சுற்றிவளைத்தபோது பலஸ்தீனர்களுக்கும், இஸ்ரேலிய படையினருக்குமிடையில் கலவரங்கள் மூண்டன. அச்சந்தர்ப்பத்திலே இஸ்ரேலிய படையினர் பலஸ்தீன வீடொன்றினை சுற்றிவளைத்து சிறீனை இலக்கு வைத்தனர்.
இலங்கை ஒருமைப்பாட்டு குழு கண்டனம்
இஸ்ரேலிய படையினரால் பெண் ஊடகவியலாளர் சிறீன் அபூ அக்லா படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் உடனடியாக சர்வதேச விசாரணையை ஆரம்பிக்குமாறு பலஸ்தீன ஒருமைப்பாட்டுக்கான இலங்கைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.
பலஸ்தீன ஒருமைப்பாட்டுக்கான இலங்கை குழுவின் பொதுச் செயலாளர் பெளசர் பாரூக் இது தொடர்பில் அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளார். அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; பலஸ்தீன ஒருமைப்பாட்டுக்கான இலங்கை குழு இஸ்ரேலிய படையினரின் நாகரீகமற்ற, கோழைத்தனமான இந்தச் செயலை தீவிரமாக கண்டிக்கிறது. அத்தோடு படுகொலை செய்யப்பட்ட பலஸ்தீன ஊடகவியலாளர் சிறீன் அபூ அக்லாவின் ஜனாஸாவை சுமந்து சென்றவர்கள் மற்றும் அவரது இறுதிக் கிரியைகளில் அஞ்சலி செலுத்தியோர் மீது இஸ்ரேலிய படையினர் மேற்கொண்ட தாக்குதலையும் வன்மையாகக் கண்டிக்கின்றது.
பலியான (உயிர்நீத்த) உலகப் புகழ்பெற்ற ஊடகவியலாளர் மீதான திட்டமிடப்பட்ட ஸ்னைப்பர் (மறைந்திருந்து தாக்குதல்) தாக்குதல் பலஸ்தீனர்களுக்கு எதிரான யுத்தக் குற்றத்துக்கான எடுத்துக்காட்டாகும். பலஸ்தீனத்தை ஆக்கிரமித்துள்ள இஸ்ரேலிய படையினரால் இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அவரது தலையைக் குறிவைத்து நடாத்தப்பட்ட ஒற்றைத் துப்பாக்கிச் சூட்டினால் அவர் பலியாகியுள்ளார். அவரது தலைக்கவசம் மற்றும் குண்டு துளைக்காத பாதுகாப்பு ஜக்கட்டுக்குமிடையிலான குறுகிய இடைவெளியிலேயே குண்டு துளைத்துள்ளது. இந்த இலக்கினை ஸ்னைப்பர் தாக்குதல் மூலமே அடைய முடியும்.
பலஸ்தீன ஒருமைப்பாட்டுக்கான இலங்கை அமைப்பு பலஸ்தீனர்கள் மற்றும் உலக மக்களுடன் ஒன்றிணைந்து ஊடகவியலாளர் அபூ அக்லா பலியெடுக்கப்பட்டமை தொடர்பில் உடனடியாக சுதந்திரமான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கிறது.
அபூ அக்லா பலஸ்தீனில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு தொடர்பில் பலஸ்தீனர்களுக்காக பலமாக செய்திகளைச் சேகரித்த முதன்மையான ஊடகவியலாளராவார். இதற்காகவே இவர் கொலை செய்யப்பட்டதாக நம்பப்படுகிறது.
இஸ்ரேலிய அரசாங்கத்தின் விடாப்பிடியான தன்மை காரணமாக ஆயிரக்கணக்கான மனித உரிமை மீறல்களில் நூற்றுக்கணக்கானவைகளே உள்நாட்டு விசாரணைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன. உள்நாட்டு விசாரணைகள் ஏற்றுக்கொள்ளக்கூடியனவல்ல.
இஸ்ரேல் இராணுவம் ஏழு தசாப்த காலத்துக்கும் மேலாக சட்டத்துக்கு முரணாக பலஸ்தீனத்தை ஆக்கிரமித்துக்கொண்டுள்ளது. நூற்றுக்கணக்கான பலஸ்தீன ஊடக பணியாளர்கள் தங்களது கடமையின் போது காலமாகியிருக்கிறார்கள் என அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
55 பலஸ்தீன ஊடகவியலாளர்கள் கொலை
இதேவேளை, இஸ்ரேலினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மேற்குக்கரை, கிழக்கு ஜெருசலேம், தடைகள் விதிக்கப்பட்டுள்ள காஸா பகுதிகளில் இஸ்ரேலிய படையினர் கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் 55 பலஸ்தீன ஊடகவியலாளர்களை கொலை செய்துள்ளதாக பலஸ்தீன் விடுதலை இயக்கம் தெரிவித்துள்ளது.
ஊடகவியலாளர் சிறீன் அபூ அக்லாவின் கொலைக்கு உலகளாவிய ரீதியில் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பலஸ்தீன விடுதலை இயக்கம் (PLO) தனது சமூக ஊடக பதிவில் இஸ்ரேலிய படையினர் 2000 ஆண்டு முதல் 55 பலஸ்தீன ஊடகவியலாளர்களைக் கொலை செய்துள்ளதாகவும் 16 பலஸ்தீன் ஊடகவியலாளர்களை சிறையில் அடைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
அதேவேளை இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் லியோர் ஹைடாட் இவ்விவகாரம் தொடர்பில் தாம் பரிசீலனை செய்வதாக அனடொலு ஏஜென்சி (AA) க்குத் தெரிவித்துள்ளார்.
பலஸ்தீன ஊடகவியலாளர்கள் நாட்டில் நடைபெறும் ஆர்ப்பாட்டங்களை துணிகரமாக வெளிக்கொண்டு வருகின்றனர் என எல்லைகளற்ற நிருபர்கள் அமைப்பு தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. இவ்வாறு துணிகரமாக பணியாற்றும் ஊடகவியலாளர்கள் இஸ்ரேலிய படையினரால் பல்வேறு இன்னல்களுக்குள்ளாக்கப்படுகின்றனர்.
தடுத்து வைத்தல், அவர்களது ஊடக உபகரணங்கள் சேதங்களுக்கு உள்ளாக்கப்படல் மற்றும் ஊடக அடையாள அட்டை இரத்துச் செய்யப்படல் போன்ற நடவடிக்கைகள் அவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படுகின்றன. இதேவேளை இஸ்ரேலிய படையினர் ஆர்ப்பாட்டங்களில் தலையிடுவதால் காயங்களுக்குள்ளாகின்றனர்.
காஸா எல்லையில் ஆர்ப்பாட்டங்களைப் பார்த்துக் கொண்டிருந்த இரண்டு பலஸ்தீன ஊடகவியலாளர்கள் 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6 ஆம் திகதி கொல்லப்பட்டார்கள். இஸ்ரேலிய படையினர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்துக்கு இலக்காகியே இவர்கள் கொல்லப்பட்டனர்.
அனடொலு ஏஜன்ஸி (AA)படப்பிடிப்பாளர் (Cameraman) மெடின் யுக்சல் கயா, அலிகடல்லா உட்பட பல ஊடகவியலாளர்கள் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது இஸ்ரேலிய படையினர் துப்பாக்கி சூடு மேற்கொண்டதால் காயங்களுக்குள்ளாகினர்.
காஸா எல்லையில் இஸ்ரேலிய படையினர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட துப்பாக்கிச் சூட்டின் காரணமாக ஒரு சில பலஸ்தீன் ஊடகவியலாளர்கள் தங்கள் கண்பார்வையைக் கூட இழந்தனர்.
துப்பாக்கி ரவைகளிலிருந்து வெளியான துகள்கள் காரணமாகவே அந்நிலைமை ஏற்பட்டது.
2021 ஆம் ஆண்டு மே மாதம் இஸ்ரேலிய இராணுவத்தினர் மேற்கொண்ட வான் தாக்குதல் காரணமாக பலஸ்தீன ஊடகவியலாளர் யூசுப் அபு ஹுசைன் கொல்லப்பட்டார்.
இவ்வாறு பலஸ்தீன ஊடகவியலாளர்களுக்கு எதிராக இஸ்ரேல் முன்னெடுக்கும் மனித உரிமை மீறல்கள் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச உரிமைசார் அமைப்புகள் முன்வர வேண்டும்.– Vidivelli