றிப்தி அலி
நாட்டின் தேசிய முக்கியத்துவமிக்க பிரச்சினைகளில் இலங்கை வாழ் முஸ்லிம்களின் பங்குபற்றல் மிகக் குறைவு என்ற குற்றச்சாட்டொன்று நீண்ட காலமாகவே முன்வைக்கப்பட்டு வருகின்றது.
இப்பிரச்சினைகளின் போது ஏனைய சமூகத்தவர்களுடன் இணைந்து முஸ்லிம் சமூகம் குரல் கொடுக்காமல் ஒதுங்கி நிற்பதனாலேயே இந்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது. நூற்றுக்கணக்கான முஸ்லிம் சிவில் அமைப்புகள் உள்ள போதிலும் அவை தம்மை முஸ்லிம் சமூகத்தினுள் மாத்திரம் தனிமைப்படுத்திக் கொண்டே இயங்குகின்றமையும் இதற்கு பிரதான காரணமாகும்.
தற்போது, எமது நாட்டின் பொருளாதாரம் நாளுக்கு நாள் பாரிய பின்னடைவை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது. இதற்கு எதிராக கொழும்பில் ஜனாதிபதி செயலகத்தினை முற்றுகையிட்டு கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக ‘கோட்டா கோ கம’ எனும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இன, மத, மொழி பேதமின்றி அனைத்து மக்களும் இதில் பங்கேற்று தங்களின் எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றனர். மிகுந்த ஆர்வத்துடன் குறிப்பிடத்தக்களவான முஸ்லிம்களும் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டதை அவதானிக்க முடிந்தது.
எனினும், பிரதான முஸ்லிம் சிவில் அமைப்புக்களின் பங்கேற்பினை இந்த போராட்டத்தில் காணவில்லை. சிங்கள, தமிழ் மற்றும் கிறிஸ்தவ சமூகங்களைச் சேர்;ந்த சிவில் மற்றும் சமய அமைப்புக்களும் அவற்றின் முக்கியஸ்தர்களும் இந்த போராட்டத்தில் நேரடியாக கலந்துகொண்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும், ஆளும் அரசாங்கத்திற்கும் எதிராக பாரிய அழுத்தங்களை வழங்கி வருகின்றனர்.
எனினும், இலங்கை முஸ்லிம்களை பிரதிதிநித்துவப்படுத்துவதாக கூறிக்கொள்ளும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, முஸ்லிம் கவுன்ஸில் ஒப் ஸ்ரீலங்கா மற்றும் தேசிய சூரா சபை போன்ற எந்தவொரு முஸ்லிம் சிவில் அமைப்புக்களையோ, அதன் முக்கியஸ்தர்களையோ இந்த போராட்டத்தில் காண முடியவில்லை.
மாறாக, இந்த போராட்டம் தொடர்பில் இவர்கள் சில ஊடக அறிக்கைகளை வெளியிட்டதை மாத்திரமே காணக் கிடைத்தது. ஈஸ்டர் குண்டுத் தாக்குதலின் பின்னர் சில முஸ்லிம் சிவில் அமைப்புக்களின் செயற்பாடுகள் குறைவடைந்து விட்டன. எனினும், குறித்த அமைப்புக்களினால் வெளியிடப்படும் ஊடக அறிக்கைகளின் எண்ணிக்கை குறைவடையவில்லை.
நாசகார குழுவொன்றினால் மேற்கொள்ளப்பட்ட இந்த சம்பவத்தினால் கிறிஸ்தவ மக்கள் எவ்வளவு பாதிக்கப்பட்டார்களோ அந்தளவு முஸ்லிம் மக்களும் பாதிக்கப்பட்டுள்ளமை யாவரும் அறிந்த உண்மையாகும். எனினும், இப்பாதிப்புகளுக்கு எதிராக பகிரங்கமாக குரல் கொடுக்க எந்தவொரு முஸ்லிம் சிவில் அமைப்புகளும் முன்வரவில்லை என்பது கவலையான செயற்பாடாகும்.
குறிப்பாக ஈஸ்டர் குண்டுத் தாக்குதலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் கோரி கொழும்பு போராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் பல போராட்டங்களை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றார். வத்திக்கானிலுள்ள பாப்பரசர் வரை இந்தப் போராட்டத்தினை அவர் கொண்டு சென்றுள்ளார். இப்போராட்டங்களை அவர் இரகசியமாக மேற்கொள்ளாது பகிரங்கமாகவே மேற்கொண்டு வருகின்றார்.
எனினும், இலங்கை முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாக கூறிக்கொள்ளும் முஸ்லிம் அமைப்புக்கள், இலங்கை வாழ் முஸ்லிம்களின் பிரச்சினைகளை சர்வதேசம் வரை கொண்டு சென்றுள்ளதா என்ற கேள்விக்கு சாதமான பதில் இல்லை.
காலத்திற்கு காலம் சில நிகழ்ச்சி நிரல்களை முன்வைத்து செயற்படும் முஸ்லிம் சிவில் அமைப்புக்களினால் முஸ்லிம் சமூகத்திற்கு எந்தவொரு நியாயமான தீர்வினையும் இதுவரை பெற்றுக்கொடுக்க முடியவில்லை.
கடந்த 2012 ஆம் ஆண்டு அப்போது ஆட்சியிலிருந்த மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு குரல் கொடுப்பதற்காக ஜெனீவா சென்ற அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, கொவிட் – 19 காரணமாக உயிரிழந்த முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் பலவந்தமாக தகனம் செய்யப்பட்டதை சர்வதேச மயப்படுத்த தவறிவிட்டது. மாறாக உலமா சபையின் தலைவர், எரிக்கப்பட்ட ஜனாசாக்களின் சாம்பலை அடக்கம் செய்யலாம் என்ற சர்ச்சைக்குரிய பத்வாவையே வழங்கினார்.
இது போன்று, முஸ்லிம் சமூகம் பிரச்சினைகளை எதிர்நோக்கிய காலப் பகுதியிலோ, தற்போது நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார பிரச்சினையின் போதோ அரசாங்கத்தின் செயற்பாடுகளை கண்டித்து எந்தவொரு முஸ்லிம் சிவில் அமைப்புக்களும் பகிரங்க அறிக்கையொன்றினைக் கூட வெளியிடவில்லை.
ஜனாஸா எரிப்பின் போது முஸ்லிம் சிவில் அமைப்புகளை விட ஏனைய சிவில் அமைப்புக்களின் செயற்பாடுகளே அதிகம் வினைத்திறனாக அமைந்திருந்தன. அது மாத்திரமல்லாமல், சமூகத்திற்கு எதிரான பிரச்சினைகளின் போது முஸ்லிம் இளைஞர்கள் போராட்டங்களை முன்னெடுக்க முற்படும் போது, ஆலோசனை, வழிகாட்டல் என்ற பெயரில் அவர்களை அச்சமூட்டுகின்ற அல்லது உற்சாகமிழக்கச் செய்கின்ற வேலைகளையே தொடர்ந்தும் செய்து வருகின்றனர். மாறாக இளைஞர்களை ஒழுங்குபடுத்தி, அவர்களை போராட்டத்தில் ஈடுபடச் செய்வதற்கான வழிகாட்டல்களை வழங்கத் தவறிவிடுகின்றனர்.
எனவே, முஸ்லிம் சிவில் அமைப்புக் களில் காணப்படும் இவ்வாறன பலவீனங்கள் களையப்பட்டு துணிச்சலும் தூர நோக்கும் கொண்ட சிறந்ததொரு சிவில் கட்டமைப்பொன்று உருவாக்கப்பட வேண்டும். அக் கட்டமைப்பு முஸ்லிம் சமூகத்திற்காக மாத்திரமன்றி ஏனைய சமூகங்களுக்காகவும் குரல் கொடுக்கின்ற, தேசிய பிரச்சினைகளில் அக்கறையுடன் செயற்படுவதாக அமைய வேண்டும்.- Vidivelli