எம்.எப்.எம்.பஸீர்
பிரபல றக்பி வீரர் வஸீம் தாஜுதீன் படுகொலை செய்யப்பட்டு 10 வருடங்கள் பூர்த்தியாகின்றன. கடந்த 2012 மே 17 ஆம் திகதி வஸீம் தாஜுதீன் படுகொலை செய்யப்பட்ட நிலையில் ஜனாஸா அவரது காருக்குள் இருந்து நாரஹேன்பிட்டி சாலிகா மைதானத்துக்கு அருகில் மீட்கப்பட்டிருந்தது.
எனினும் இன்று வரை குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை. கொலையாளிகள் அடையாளம் காணப்படவோ கைது செய்யப்படவோ இல்லை.
இந்நிலையில், கடந்த 2021 மே 17 ஆம் திகதி, வஸீம் தாஜுதீனின் சகோதரி ஆயிஷா தாஜுதீன், தனது முகப் புத்தகத்தில் வஸீமின் படுகொலைக்கு இதுவரை நியாயம் கிடைக்காமையை சுட்டிக்காட்டி, ‘நீதி என்பது ஒரு மாயை” என வர்ணித்திருந்தார்.
“புயலைப் போல, பல ஆண்டுகள் கடந்துவிட்டன, விடயங்கள் அமைதியாகிவிட்டன, நீதி என்பது ஒரு மாயை.ஆனால் காயங்கள் இன்னும் புதிதாகவே எரிகிறது. அதனை ஒரு போதும் வெல்ல முடியாது. 9 ஆண்டுகளுக்கு முன்னர் அந்த சமயம் நடந்தது என்ன என்பது இன்னும் எமக்கு கேள்விக் குறியே. மறக்க முடியாமல் உமது இறுதி நாள் தருணங்களில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம் வஸீம். நாம் உன்னை இழந்துவிட்டோம்” என ஆயிஷா தாஜுதீன் அதில் பதிவிட்டிருந்தார். ஆம், நீதி இன்னும் மாயையே. விசாரணைகளில் எந்த முன்னேற்றமும் இல்லை.
கடந்த 2015 இல் ஆட்சி மாற்றத்தில் முக்கிய பங்கு, வஸீம் தாஜுதீன் கொலையாளிகளை பிடிப்போம் என்ற வாக்குறுதிக்கும் இருந்தது. எனினும் அது நடக்கவே இல்லை. பல தடங்கல்களைக் கடந்து அந்த விசாரணைகளை முன்னெடுத்து, சந்தேக நபர்களை நெருங்கிக்கொண்டிருந்த நிலையில், அதனை விசாரித்த சி.ஐ.டி. விசாரணை அதிகாரி, அவ்விசாரணைகளை நெறிப்படுத்திய உதவி பொலிஸ் அத்தியட்சர் (தற்போது பொலிஸ் அத்தியட்சர்) உள்ளிட்ட குழு, சி.ஐ.டி.யை விட்டே மாற்றப்பட்டு விட்டனர்.
இந்த 8 வருடத்தில் சாட்சியங்களை மறைத்தமை, அழித்தமை தொடர்பில் மட்டும் மூவர் கைது செய்யப்பட்டனர்.
வஸீமின் மரணத்தை கொலை என உறுதி செய்ய நடந்த சட்டப்
போராட்டங்கள் ஏராளம். அரச இரசாயன பகுப்பாய்வாளர் வஸீமின் காருக்குள் தீ பரவ இரசாயனம் ஒன்று பயன்படுத்தப்பட்டுள்ளதாக
சந்தேகிக்கும் சான்றுகள் உள்ளதாக அறிக்கை கொடுத்தும், அதனை கொலை என சொல்ல 3 வருடங்களுக்கு மேல் ஆனது.
2 பிரேத பரிசோதனைகள் தேவைப்பட்டன.
மேல் மாகாணத்தில் கொலை நடந்த அன்று சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக இருந்த அனுர சேனநாயக்க, அப்போது கொலை நடந்த பொலிஸ் பிரிவின் குற்றவியல் பொறுப்பதிகாரியாக இருந்த பொலிஸ் பரிசோதகர் சுமித் பெரேரா ஆகியோருக்கு எதிராக தகவல்களை மறைத்தமை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டது. அக்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். வஸீம் தாஜுதீன் விவகாரத்தில், கொலையின் பின்னர் மேலதிக ஆய்வுக்காக எடுக்கப்பட்ட வஸீமின் உடற் பாகங்கள் சில காணாமல் போனமை தொடர்பில் சி.ஐ.டி. முன்னெடுத்த விசாரணைக்கு அமைவாக முன்னாள் கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி ஆனந்த சமரசேகர கைது செய்யப்பட்டிருந்தார்.
இந் நிலையில் அவர்களில் முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனநாயக்க, முன்னாள் கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி ஆனந்த சமரசேகர ஆகியோருக்கு எதிராக சட்ட மா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றில் தண்டனை சட்டக் கோவையின் 198 ஆவது அத்தியாயத்தின் கீழ் தண்டனைக் குரிய குற்றம் ஒன்றினை செய்துள்ளதாக கூறி வழக்கு தொடரப்பட்டது. எவ்வாறாயினும், வழக்கு விசாரணை ஆரம்பத்தில் ஆனந்த சமரசேகரவும், பின்னர் அனுர சேனநாயக்கவும் உயிரிழந்தனர். எனினும் கொலையாளிகள் இதுவரை கண்டறியப்படவில்லை.
வஸீமின் மரணத்தை கொலை என உறுதி செய்ய நடந்த சட்டப் போராட்டங்கள் ஏராளம். அரச இரசாயன பகுப்பாய்வாளர் வஸீமின் காருக்குள் தீ பரவ இரசாயனம் ஒன்று பயன்படுத்தப்பட்டுள்ளதாக சந்தேகிக்கும் சான்றுகள் உள்ளதாக அறிக்கை கொடுத்தும், வஸீமின் ஜனாஸா, அவரது காரின் சாரதி ஆசனத்துக்கு பக்கத்து ஆசனத்தில் ஆசனப்பட்டி அணிந்திருந்த நிலையில் மீட்கப்பட்டும் கூட அதனை கொலை என சொல்ல 3 வருடங்களுக்கு மேல் ஆனது. 2 பிரேத பரிசோதனைகள் தேவைப்பட்டன.
இந்தப் படுகொலை தொடர்பில் மீண்டும் தற்போது பேசப்படுகிறது. தற்போது காலி முகத்திடல் அருகே கோட்டா கோ கம எனும் பெயரில் ஜனாதிபதிக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் தொடரும் நிலையில், ராஜபக்ச குடும்பத்தின் கடந்த கால நடவடிக்கைகள் குறித்து அங்கு பேசப்படுகிறது.
ராஜபக்ச குடும்பத்திற்கு எதிரான குற்றச்சாட்டுக்களில் வஸீம் தாஜுதீனின் படுகொலை முக்கியமானது. இந்த படுகொலை தொடர்பில் ராஜபக்சாக்கள் மீதுவிரல் நீட்ட 3 முக்கிய விடயங்கள் காரணமாகின்றன.
முதலாவது கொலைக்கான காரணமாக கருதப்படும் ஹெவ்லொக் – கால்டன் றக்பி கழகங்கள் குறித்த முறுகல் நிலையாகும். கால்டன் விளையாட்டு கழகமும் அது சார் செயற்பாடுகளும் ராஜபக்ச குடும்பத்தை மையப்படுத்தியது என்பது எல்லோரும் அறிந்த விடயமாகும். 2 ஆவது காரணம், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவி, கொலை நடக்கும் போது நாட்டின் முதற் பெண்மணி சிரந்தி ராஜபக்சவின் சிரிலிய மன்றத்துக்கு செஞ்சிலுவை சங்கத்தினால் வழங்கப்பட்ட டப்ளியூ. பி. கே. ஏ.0642 எனும் டிபண்டர் வண்டியாகும். இவ்வண்டி 2011.08.11 ஆம் திகதி சிரந்தி ராஜபக்சவுக்கு செஞ்சிலுவை சங்கத் தலைவர் ஜகத் பாலசுரியவினால் கையளிக்கப்பட்டுள்ளது. வஸீம் கொலை நடந்த போது, வஸீம் வாகனத்தை பின் தொடர்ந்து சென்றதாக சி.ஐ.டி. அடையாளம் கண்ட வண்டி இந்த டிபண்டர் வண்டியை ஒத்தது. அத்துடன் எந்த நம்பும் படியான காரணிகளும் இன்றி, டிபண்டர் வண்டியின் நிறம் இரு தடவைகள் மாற்றப்பட்டுள்ளன. இது சந்தேகத்தை அதிகரிக்கும் செயற்பாடாகும்.
அடுத்த காரணம், வஸீம் கொலை தொடர்பில் 2015 ஆம் ஆண்டின் பின் விசாரித்த சி.ஐ.டி. பல தடயங்களை வைத்து, வஸீமின் வாகனத்தை பின் தொடர்ந்த கொலைக்கார கும்பல் சிரந்தி ராஜபக்சவின் பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்டிருந்த கடற்படை சிறப்புக் குழு என சந்தேகித்து விசாரணைகளை நடத்தினர். இதற்காக அவர்கள் அப்பாதுகாப்பு குழுவின் நாளாந்த பதிவுப் புத்தகத்தை ஆராய்ந்தனர். இதன்போது நாளாந்த பதிவுப் புத்தகத்தின் 6 பக்கங்கள் கிழிக்கப்பட்டு, வேறு பக்கங்கள் செலோடேப் கொண்டு ஒட்டப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டது. அந்த பக்கங்கள் வஸீம் கொலை நடந்த தினத்துக்குரியதாகும். இந்த நிலையில் அன்று கடமையிலிருந்த கடற்படையினர் குறித்த தகவல்களை தருமாறு சி.ஐ.டி. கோரிய போதும் அவை வழங்கப்படாததால் வஸீம் கொலையாளியை தேடிய விசாரணை தடைப்பட்டது. இதற்கு மைத்திரி–ரணில் கூட்டாட்சியும் பதில் சொல்ல வேண்டும். அந்த அரசாங்கமும் விசாரணைகள் முன் கொண்டு நகர்வதை தடுக்கும் செயல்களை செய்தன. தேர்தல் காலத்தில் மட்டும் அவர்கள் வஸீம் மீது அக்கறை காட்டினர்.
எவ்வாறாயினும், வஸீம் கொலைக்கு நேற்று முன் தினத்துடன் ஒரு தசாப்தம் பூர்த்தியானது. உண்மைகள் வெளிப்படையானவை. ஆனால் விசாரணை மந்தமானது. குற்றவாளிகள் என கருதப்படுவோர் அரசியல் பலமிக்கவர்கள். அதனால் வஸீம் கொலையாளிகள் இன்னும் சுதந்திரமாக திரிகின்றனர்.- Vidivelli