நீர்கொழும்பில் நடப்பது என்ன?
எம்.எம். இஸ்மதுல் றஹுமான்
கொழும்பில் ஜனாதிபதி செயலகம் மற்றும் அலரி மாளிகை முன்பாக அமைதியான முறையில் போராட்டங்களை நடாத்தி வந்தவர்கள் மீது கடந்த மே 9 ஆம் திகதி ஆளும் தரப்பு குண்டர்கள் நடாத்திய தாக்குதலையடுத்து நாட்டின் பல பாகங்களிலும் வன்முறைகள் வெடித்தன. இவற்றில் அதிகம் வன்முறைகள் மற்றும் பதற்ற நிலையை சந்தித்த ஒரு பிரதேசமே நீர்கொழும்பு. அங்கு அரசியல்வாதிகள் மாத்திரமன்றி தனியாருக்குச் சொந்தமான ஹோட்டல்கள், வீடுகள், வர்த்தக நிலையங்களும் தாக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து அங்கு முஸ்லிம்களை இலக்கு வைத்து இன முரண்பாட்டைத் தூண்டவும் ஒரு குழு முயற்சித்தது. எனினும் இந்த முயற்சி தோற்கடிக்கப்பட்டது. இந் நிலையில் இந்த வன்முறைகளின் பின்னர் நீர்கொழும்பில் தற்போதைய நிலைவரம் எவ்வாறுள்ளது என்பது பற்றிய ஒரு பார்வையை இந்தக் கட்டுரை முன்வைக்க விளைகிறது.
கொழும்பில் அமைதியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்த மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட தகவல் கிடைக்கப் பெற்றதைத் தொடர்ந்து, நீர்கொழும்பு, தெல்வத்த சந்தியில் அமைந்துள்ள ‘கோட்டா கோ ஹோம்’ கிளையில் ஒன்று சேர்ந்த மக்கள் வீதியை மறித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். அலரிமாளிகைக்கு ஆட்களை ஏற்றிச்சென்ற பஸ்களின் இலக்கங்களை காட்சிப்படுத்தினர். கொழும்பிலிருந்து வரும் பஸ்களை நிறுத்தி காலிமுகத்திடல் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் உள்ளனரா என தேடினர்.
ஊரடங்குச் சட்டத்தையும் பொருட்படுத்தாது சந்தி சந்தியாக கூடியிருந்த ஆண்கள், பெண்கள், இளைஞர்கள், யுவதிகள் பஸ்களை நிறுத்தி சோதனையில் ஈடுபட்டனர்.
கடற்கரைத் தெருவில் ஒன்று கூடிய மக்கள் கூட்டம் முதலில் லுயிஸ் பிளேஸில் உள்ள நிமல் லான்சா எம்.பி.யின் காரியாலயத்தைத் தாக்கி அங்கிருந்த ஆவணங்களை வீதியில் வீசினர். அதனைத்தொடர்ந்து அவரின் தந்தையின் வீடு, வர்த்தக நிலையங்களை தாக்கி சேதமாக்கியதுடன் அங்கிருந்த பொருட்களையும் வீதியில் போட்டுக் கொளுத்தினர்.
ஒன்றுகூடிய கூட்டத்தினர் கோஷங்களை எழுப்பிக்கொண்டு ஊர்வலமாகச் சென்று தலுபொத்த, ஹிரகதவுர வீதியில் அமைந்துள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சாவின் அருகருகே அமைந்துள்ள இரு வீடுகளுக்கும் தீ வைத்தனர். இதில் இரு வீடுகளும் முற்றாக சேதமடைந்தன.
பின்னர் அவரின் சகோதரரான நீர்கொழும்பு முதல்வர் தயான் லான்சாவின் கட்டுவபிட்டிய வீதியில் உள்ள வீட்டை உடைத்தனர். இந்த வன்முறைகளின்போது, வீதியில் ஊர்வலமாக செல்லும் போதும் தீயிட்டுக் கொளுத்தும் போதும் தமது கையடக்கத் தொலைபேசிகள் ஊடாக புகைப்படம் எடுப்பதையோ வீடியோ எடுப்பதையோ தடுப்பதிலும் அவர்கள் கண்ணும் கருத்துமாக இருந்தார்கள். ஊடகவியலாளர்களைக் கூட படம் எடுக்க விடவில்லை.
பின்னர் அரசியல் பிரமுகர்களுடன் தொடர்புடையதென பேசப்படும் கட்டான பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நீர்கொழும்பு-மீரிகம பிரதான வீதியில் அமைந்துள்ள எவன்ரா கார்டன் ஹோட்டல், குராண, கொழும்பு வீதியில் உள்ள கிரேன்டிஸா ஹோட்டல், கல்கந்த சந்தியில் உள்ள பே போடேன்ட் ஹோட்டல் என்பனவும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு கொளுத்தப்பட்டன. இவை அனைத்தும் ஆடம்பர சொகுசு ஹோட்டல்களாகும்.
இந்த ஹோட்டல்களின் உரிமையாளரின் இல்லம் என சந்தேகிக்கப்படும் பன்சலை வீதியிலுள்ள வீட்டையும் இக்கும்பல்கள் விட்டுவைக்கவில்லை.
ஒரு கூட்டம் இவ்வாறு தாக்குதல் நடாத்தி கொளுத்திய பின்னர் அதனைப் பார்வையிட அங்கு சென்ற பொதுமக்கள் அங்கிருந்த உடமைகள், தளபாடங்கள் மற்றும் அனைத்துப் பொருட்களையும் சூறையாடிச் சென்றனர்.
கையில் அகப்பட்ட பொருட்களை வாகனங்களிலும், மோட்டார் சைக்கிள்கள், துவிச்சக்கர வண்டிகளிலும், கால்நடையாகவும் எடுத்துச் சென்றனர். விலை உயர்ந்த வெளிநாட்டு மதுபான போத்தல்கள், சமையலுக்காக வைக்கப்பட்டிருந்த உணவுப்பொருட்கள், சமையல் உபகரணங்கள், ஏன் ஆவணங்களை கோவைப்படுத்தி வைத்திருந்த பைல் கவர்களைக் கூட எடுத்துச் சென்றதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் கூறுகின்றனர்.
ஏழெட்டுக் கதிரைகளை துவிச்சக்கர வண்டியில் வைத்து தள்ளிக்கொண்டு செல்லும் காட்சியும் குளிரூட்டி சாதனத்தை கழற்றி எடுத்துச் செல்லும் காட்சியும் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டன. குளிர்சாதனப் பெட்டிகள், மெத்தைகள், பீங்கான் கோப்பைகள், தளபாடங்கள் என அனைத்தையும் எடுத்துச் சென்றனர். எவன்ரா ஹோட்டலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆடம்பர வாகனங்களும் தீயில் கருகி இருந்ததைக் காண முடிந்தது.
எவன்ரா கார்டன் ஹோட்டலின் பாதுகாப்பு பெட்டி (safe) உடைக்கப்பட்டு அதிலிருந்து பணம், தங்க நகைகள் அனைத்தும் களவாடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கிடைக்கின்றன. உரிமையாளரின் மகளின் திருமணத்திற்காக கொள்வனவு செய்யப்பட்டிருந்த நகைகளும் அதில் இருந்ததாகக் கூறப்படுகின்றது.
பொதுவாக ஒரு இடத்தில் ஏதாவது ஒரு குற்றவியல் சம்பவம் நடந்தால் உடனே தடயவியல் பொலிஸார் (சோகோ) அந்த இடத்திற்கு வந்து மஞ்சள் நிற பட்டியைக் கட்டி அந்தப் பகுதிக்கு யாரையும் உட்செல்ல விடமாட்டார்கள். ஆனால் அசம்பாவிதம் நடந்த எந்த ஒரு இடத்திற்கும் பாதுகாப்பு தரப்பினர் உடனடியாக வரவில்லை. இது கொள்ளையர்களுக்கு பொருட்களை எடுத்துச் செல்வதற்கு போதுமான கால அவகாசத்தை வழங்கியது.
பல்வேறு கோணங்களில் விசாரணை நடாத்திய பொலிஸார் கொள்ளையடித்துச் சென்ற பொருட்களை வீதி ஓரங்களில் வைக்குமாறு ஒலிபெருக்கி மூலம் அப்பிரதேச மக்களை அறிவுறுத்தி காலக்கெடு விதித்தனர். இதனை செவிமடுத்த பலர் அவ்வாறே செய்தனர்.
வீதி ஓரங்களில் வைக்கப்பட்ட பொருட்களை பொலிஸார் எடுத்துச் சென்றனர். குறித்த காலக்கெடு முடிவடைந்ததன் பின்னர் நீர்கொழும்பு பிராந்தியத்தின் சகல பொலிஸ் நிலையங்களினதும் பொலிஸார் ஒன்றிணந்து இரவு வேளையில் சந்தேகத்துக்குரிய பகுதிகளில் வீடுவீடாகச் சென்று சோதனை நடத்தினர்.
இதன்போது மறைத்து வைக்கப்பட்டிருந்த கொள்ளையடிக்கப்பட்ட பொருட்கள் என சந்தேகிக்கப்பட்டவற்றை பொலிஸார் கைப்பற்றினர். அத்துடன் அவற்றை வைத்திருந்தவர்களும் கைது செய்யப்பட்டனர்.
கைப்பற்றப்பட்ட, சூறையாடப்பட்ட பொருட்கள் நீர்கொழும்பு, கட்டான பொலிஸ் நிலையங்களில் வைக்கப்பட்டுள்ளன.
இரு பொலிஸ் நிலையங்கள் மூலமும் சந்தேகத்தின் பேரில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் கட்டான பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட 12 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இதேபோல் நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தினூடாக 15 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இன்னும் சிலரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதுடன் மேலும் பலரை கைது செய்வதற்கான புலன்விசாரணைகள் தொடர்ந்து இடம்பெறுகின்றன.
இதேவேளை, எவன்ரா ஹோட்டலுக்கு முன்னால் இடம்பெற்ற சூட்டுச் சம்பவத்தில் இருவர் கொல்லப்பட்டனர். இச் சம்பவம் தொடர்பிலும் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
முஸ்லிம்கள் மீது திருப்ப முயற்சி
இந்த வன்முறைகள் மற்றும் பொருட்களைக் கொள்ளையிட்ட சம்பவங்களில் அப் பகுதியைச் சேர்ந்த பல்வேறு தரப்புகளும் சம்பந்தப்பட்டிருந்த நிலையில், எவன்ரா கார்டன் ஹோட்டலிலிருந்து பொருட்களை கொள்ளையிட்டவர்கள் முஸ்லிம்கள்தான் என கதை பரப்பப்பட்டது.
10 ஆம் திகதி மாலை ஹோட்டல் உரிமையாளரின் ஆதரவாளர்கள் சிலர் அங்கு வருகைதந்து பொருட்களை எடுத்துச் செல்பவர்களை தாக்கத் தொடங்கினர். பின்னர் இரவாகும் போது அந்தக் கும்பல் பெரியமுல்லை, தீன் சந்தியில் அமைந்துள்ள முஸ்லிம்களுக்குச் சொந்தமான கடைகளை தாக்க ஆரம்பித்தனர். உடனடியாக ஸ்தலத்திற்கு விரைந்து வந்த நீர்கொழும்பு பிரதேச கத்தோலிக்க குருக்களும், கன்னியாஸ்திரிகளும் இவ்விவகாரம் இனமோதலாக மாறாது தடுக்க பெரும் பிரயத்தனம் எடுத்தனர். அவர்கள் வீதியில் இறங்கி நிலைமையைக் கட்டுப்படுத்தினர். இவர்களுடன் மௌலவிமார்களும் இணைந்துகொண்டு சமாதானத்தை ஏற்படுத்தினர்.
உடனடியாக பொலிஸாரும், இராணுவ, விமானப்படை வீரர்களும் அங்கு வரவழைக்கப்பட்டனர்.
உரிய நேரத்தில் கத்தோலிக்க குருமார் செயற்பட்டதனால் இன மோதலாக மாறவிருந்த நிலைமை தடுக்கப்பட்டதென மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலை அடுத்து நீர்கொழும்பில் இன வன்முறையைத் தூண்டிய அதே நபர்களே இம்முறையும் இனமுறுகளை தூண்ட எத்தனித்ததாக பலரும் அபிப்பிராயப்படுகின்றனர்.
இந்தச் சம்பவத்தில் தீன் சந்திப் பிரதேசத்தில் 16 கடைகள் உடைக்கப்பட்டன. வேன் ஒன்றும் முச்சக்கரவண்டி, மோட்டார் சைக்கிள், துவிச்சக்கரவண்டி என்பனவும் தீயிடப்பட்டன.
தீன் சந்தி பேக்கரியினுள் நுழைந்த கும்பல் ஒன்று அங்கிருந்த பொருட்களை எடுத்துச் செல்லும் வீடியோ காட்சி வைரலாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது. இராணுவ பாதுகாப்புக்கு மத்தியில் இரவு வேளையில் மைமன்கொடல்லையில் ஒரு கையடக்கத் தொலைபேசி விற்பனை நிலையம் உடைத்து களவாடப்பட்டதுடன் வை சந்தியில் முஸ்லிம் ஒருவரின் பெயின்ட் கடையை உடைத்து அங்கிருந்த பெயின்ட் பக்கற்றுகளை எடுத்துச் செல்லும் காட்சியும் சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ளது.
முஸ்லிம்களை இலக்கு வைத்த இந்த வன்முறைகள் தொடர்பில் போதுமான ஆதாரங்கள் இருந்தும், பாதிக்கப்பட்டவர்களால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டும் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.- Vidivelli