நெருக்கடி நிலைமையை தீர்க்க முஸ்லிம்கள் கட்சி அரசியலுக்கு அப்பால் சிந்திக்க வேண்டும்
என்.எம்.அமீன் தெரிவிப்பு
(ஏ.ஆர்.ஏ.பரீல்)
எமது நாடு தற்போது பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிக்குள் சிக்குண்டுள்ள நிலையில் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் தூரநோக்குடனும் பொறுப்புடனும் செயற்படவேண்டியது இன்றியமையாததாகும். இன்று முஸ்லிம்கள் கட்சி அரசியலுக்கு அப்பால் நின்று சிந்திக்க வேண்டிய காலத்தில் இருக்கிறோம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்ஸில் தலைவர் என்.எம்.அமீன் தெரிவித்தார்.
நாட்டின் இன்றைய அரசியல், பொருளாதார நெருக்கடி நிலைமையில் முஸ்லிம்களின் வகிபாகம் எவ்வாறு அமைய வேண்டும் என்பது தொடர்பில் கருத்து வெளியிடுகையிலே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்; ‘இலங்கை வரலாற்றில் என்றுமே எதிர்பார்க்காத அரசியல், பொருளாதார நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளது. ஜனநாயகத்தையும், புத்தி ஜீவிகளினதும், பொருளாதார நிபுணர்களினதும் வழிகாட்டல்களையும், கருத்துகளையும் மதிக்காது தமக்கு பெரும்பான்மை பலம் இருக்கிறது என்று ஆட்சி செய்தமையினாலே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
இந்த ஏதேச்சாதிகாரமான ஆட்சியினால் இன்று எல்லா மக்களும் கஷ்டப்படுகிறார்கள். இந்நாட்டின் துயரம் நீங்க வேண்டும். அனைத்து மக்களுக்கும் விமோசனம் கிடைக்க வேண்டும். இதே வேளை கடந்த காலங்களில் இந்நாட்டு முஸ்லிம்களுக்கு ஆட்சியாளர்களால் இழைக்கப்பட்ட அநீதிகள் தான் இதற்குக்காரணம். இது இறைவனின் சாபம் என சிலர் கருத்துகளைத் தெரிவித்து வருகிறார்கள். அவ்வாறான கருத்துகளை நாம் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
இன்று எல்லோருமே துயரங்களையும், கஷ்டங்களையும் அனுபவிக்கிறார்கள். முஸ்லிம்கள் இன்றைய சூழலில் கட்சி அரசியலுக்கு அப்பால் சிந்திக்கவேண்டும். எங்களது செயற்பாடுகள் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு உதவுகின்ற வகையில் அமைய வேண்டும். அனைத்து அரசியல் கட்சிகளும் இந்நிலைமை தங்களது அரசியலுக்கு கிடைத்திருக்கின்ற ஒரு சந்தர்ப்பம் என சுயநலமாக நினைக்கக்கூடாது. குறிப்பிட்ட காலத்துக்கு கட்சி வேறுபாடுகளை மறந்து நாட்டை கட்டியெழுப்ப ஒன்றுபட்டு ஒத்துழைக்க வேண்டும்.
கடந்த காலங்களில் இனவாதம் மற்றும் மதவாதம் மேலோங்கும் வகையில் சில அரசியல் கட்சிகளும், மதக்குழுக்களும் இயங்கின. இந்த நிலைமை தற்போது மாறி வருகின்றமையை அவதானிக்க முடிகிறது. எல்லோரும் நாடு என்ற வகையில் ஒன்றுபட்டு வருவதை நாம் சாதகமாக நோக்கவேண்டும்.
இன்றுள்ள பொருளாதார நெருக்கடி உடனடியாக தீர்க்கப்பட்டு நாட்டுக்குப் பொருத்தமான அரசியல் யாப்பொன்று உருவாக்கப்படவேண்டும். 30 வருடகால யுத்தத்திற்குப் பிறகு நாட்டில் நல்ல சூழ்நிலை உருவாகுமென்று நாம் எதிர்பார்த்தோம். ஆனால் அந்நிலைமை உருவாகவில்லை. சிறுபான்மை மக்களிடையே நம்பிக்கையின்மையே காணப்படுகிறது.
இந்நிலைமை மாறவேண்டும். முஸ்லிம் அரசியல் வாதிகள் மற்றும் புத்தி ஜீவிகள் தங்களது பங்களிப்பை வழங்கவேண்டும்.
அண்மைக் காலமாக முஸ்லிம் நாடுகள் இலங்கைக்கு உதவ முன்வந்துள்ளன. இதனை நாம்வரவேற்க வேண்டும். இது எமது தாய்நாடு, வெளிநாடுகளிலிருக்கும் இலங்கை முஸ்லிம்கள் நெருக்கடி நிலைமையைத் தவிர்ப்பதற்கு தங்களது பங்களிப்பை வழங்கவேண்டும். இதன் மூலம் எமது நாட்டின் ஏனைய சமூகத்தினரதும் வாழ்க்கையில் மலர்ச்சி ஏற்படும்.
சில நேரங்களில் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஓரிருவர் சமூகத்தைக் காட்டிக் கொடுக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் பதிவுகளை இடுகின்றனர். இது தவிர்க்கப்படவேண்டும். இதனால் சட்டத்தின் பிடியில் சிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவர். விமர்சிக்கும் ஜனநாயக உரிமை எல்லை மீறக்கூடாது. தனி ஒருவர் செய்யும் செயல் சமூகம் சார்ந்ததாகவே பார்க்கப்படும். எனவே அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்றார்.
பொருளாதார நெருக்கடி நீங்க பள்ளிவாசல்கள் ஊடாக விவசாயம் ஊக்குவிக்கப்படவேண்டும். பல பகுதிகளில் நாம் வெற்றுக்காணிகளைப் பார்க்கிறோம். இது நாம் நாட்டுக்குச் செய்யும் பெரும் பங்களிப்பாக அமையும்.
பாராளுமன்றத்தில் 21 முஸ்லிம் பிரதிநிதிகள் இருக்கிறார்கள். இவர்கள் பல கட்சிகளைச் சேர்ந்தவர்கள் – குறைந்த பட்சம் சமூகத்தை வழி நடாத்த இவர்கள் ஒன்றுபட வேண்டும். சமூகத்துக்கு வழிகாட்டல் அவசியமாகும்.
நாட்டின் நெருக்கடி நிலைமையைத் தீர்ப்பதற்கு பேதங்களை மறந்து முஸ்லிம்கள் ஒன்றிணைய வேண்டும் என்றார்.- Vidivelli