உயர்நீதிமன்றம் செல்லாவிடின் நசீர் எம்.பி.யின் பாராளுமன்ற ஆசனம் 25 ஆம் திகதியோடு வறிதாகும்
ஹரீஸ், பைஸல், தௌபீக்குக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை: ஹக்கீம்
மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நசீர் அஹமடை கட்சியிலிருந்து நீக்கியுள்ளோம். அவர் உயர் நீதிமன்றத்திற்கு செல்லாவிடின் எதிர்வரும் 25 ஆம் திகதியுடன் அவரின் பாராளுமன்ற ஆசனம் வறிதாகிவிடும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
அத்தோடு, பாராளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம்.ஹரீஸ், பைஸல் காஸிம், எம்.எஸ்.தௌபீக் ஆகியோருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்துள்ளோம் எனவும் அவர் ஊடகமொன்றில் இடம்பெற்ற அரசியல் நிகழ்ச்சியொன்றில் தெரிவித்தார்.
நசீர் அஹமட் அமைச்சரவையில் அமைச்சுப் பொறுப்பை ஏற்றதன் அடிப்படையில் அவரை கட்சியிலிருந்து நீக்குகின்றதொரு தீர்மானத்தை தாங்கள் எடுக்கப்பட்டது. அதேவேளையில் 20ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கும் அதற்கு பின்னர் வந்த அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம் சம்பந்தமான விடயங்களில் கட்சியினுடைய தலைமைக்கு மாறாக தங்களுடைய விருப்பங்களை வெளிப்படுத்திய உறுப்பினர்கள் விடயத்தில் சில ஒழுக்காற்று நடவடிக்கைகளைத் தாங்கள் மேற்கொண்டமை தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டபோதே ஹக்கீம் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ஒரு பாராளுமன்ற உறுப்பினரை நாங்கள் கட்சியிலிருந்து நீக்கிவிட்டோம். அவருடைய பாராளுமன்ற ஆசனம் வருகின்ற 25ஆம் திகதியோடு அவர் உயர்நீதிமன்றத்திற்கு செல்லவில்லை என்றால் வறிதாகிவிடும். மற்ற மூவருக்கும் எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன. எனவே அந்த நடவடிக்கைகள் அப்படி இருக்கத்தக்கதாக அவர்களுடைய உறுப்புரிமையிலிருந்தும் அவர்கள் இடைநிறுத்தப்பட்டிருக்கின்றார்கள். இந்தச் சூழலில் முஸ்லிம் காங்கிரஸ் தலைமை அவர்களோடு உத்தியோகபூர்வமாக எதையும் கதைப்பது சாத்தியமல்ல.
எனவே அண்மையில் எதிர்க்கட்சி தலைவரைச் சந்தித்து “நாங்கள் எதிர்க்கட்சியில் மீளவும் இணைந்து பயணிப்பதற்கு தயாராக இருக்கின்றோம் ” என்று அவர்களும் இஷாக் ரஹ்மானும் அறிவித்திருப்பதை நான் கண்ணுற்றேன். எனவே இந்த விடயங்கள் சம்பந்தமாக இன்று பாராளுமன்றத்தில் இருக்கின்ற சமன்பாடு என்பது இந்த கட்டத்தில் எதிர்க் கட்சிகளுக்கு முக்கியமான விடயம். எனவே அந்த சமன்பாட்டை கையாள்வதில் இயன்றவரை எங்களுடைய உதவிகளை செய்ய வேண்டும். அதை குழப்புவதற்கு நாங்கள் முயற்சிக்கப் போவதில்லை. எனவே இதை நாங்கள் மிகவும் அவதானமாக அந்த விடயத்தை கையாள வேண்டிய அவசியம் இருக்கின்றது.
ஒவ்வொருவருடைய அரசியல் எதிர்காலம் சம்பந்தமான விடயத்தில் ஒவ்வொருவருக்கும் அது சம்பந்தமான அனுமானமிருக்கும். நடந்த விவகாரங்கள் சம்பந்தமாக இன்று கட்சிப் போராளிகளுடைய எண்ணங்கள் என்ன என்பதற்கு எல்லோரும் இன்று பத்திரிகைகளை வாசிக்கத் தேவையில்லை. இன்று சமூகவலைத்தளங்களில் வருகின்ற பதிவுகளைப் பார்த்தால் எல்லோருக்கும் அந்த தெளிவு வரும். எனவே இந்த கட்டத்தில் அதைவிடவும் கூடுதலாக நாங்கள் எதையும் சொல்ல வேண்டிய அவசியமில்லை. காலம் இதற்கெல்லாம் தகுந்த பதில் சொல்லும் என்று மாத்திரம் நான் சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன்.– Vidivelli