மாவனல்லை சிலை உடைப்பு சம்பவத்தில் குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டுள்ள 16 பேர் மீது பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் அன்றி தண்டனைச் சட்டக்கோவையின் கீழ் வழக்குகளை முன்னெடுக்க சட்டமா அதிபர் திணைக்களம் இணக்கம் தெரிவித்துள்ளதாக அறிய முடிகிறது.
2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இறுதிக் காலப்பகுதியில் மாவனெல்லை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் மாவனெல்லை திதுல்வத்தையிலும் ஏனைய இடங்களிலும் ஐந்து புத்தர் சிலைகளை சேதப்படுத்தியமை தொடர்பில் 46 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 16 பேருக்கு எதிராக 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறித்த 16 பேரில் 10 பேர் தம் மீதான குற்றச்சாட்டுக்களை ஏற்றுக் கொண்டுள்ளனர்.
இந் நிலையில் இவ்வாறு பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு தீர்ப்பு அளிக்கப்படுமாயின் அவர்களுக்கு சுமார் 15 வருடங்கள் முதல் 20 வருடங்கள் வரை சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக சட்டத்தரணிகள் தெரிவிக்கின்றனர். எனினும் தண்டனைச் சட்டத்தின் கீழ் வழக்கு முன்கொண்டு செல்லப்படுமாயின் அதிகபட்சமாக ஒருவருக்கு இரு வருட சிறைத்தண்டனையே விதிக்கப்பட முடியும். இந் நிலையிலேயே இவ்வழக்கை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் அல்லாது தண்டனைச் சட்டக் கோவையின் கீழ் முன்கொண்டு செல்வதற்கு அனுமதிக்குமாறு சந்தேக நபர்களின் சட்டத்தரணிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதற்கு தற்போது சட்டமா அதிபர் திணைக்களம் இணக்கம் தெரிவித்துள்ளதாக அறிய முடிகிறது.
இதனைத் தொடர்ந்து இவ் வழக்கை எவ்வாறு முன்கொண்டு செல்வது என்பது தொடர்பில் சந்தேக நபர்களின் சட்டத்தரணிகள் கலந்தாலோசித்து வருவதாகவும் அறிய முடிகிறது.– Vidivelli