(ஏ.ஆர்.ஏ.பரீல்)
ஜும்ஆ தொழுகையை மஸ்ஜிதுகளில் மாத்திரமல்ல மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரை தக்கியாக்கள் மற்றும் ஸாவியாக்களிலும் தொழமுடியும் என வக்பு சபை தீர்மானம் மேற்கொண்டுள்ளதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் இப்றாஹிம் அன்ஸார் விடிவெள்ளிக்குத் தெரிவித்தார்.
கொவிட் பரவலுக்கு முன் ஜும்ஆ தொழுகை நடைபெற்ற மஸ்ஜிதுகளில் மாத்திரம் வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையை நடத்துமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை அவசரப்பட்டு கடந்த வாரம் அறிவுறுத்தல் விடுத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இது தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில், வக்பு சபை வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகை பற்றி இதுவரை தீர்மானம் மேற்கொள்ளவில்லை எனவும் அதனால் கொவிட் 19 பரவல் காரணமாக ஜும்ஆ தொழுகை நடைபெற்ற தக்கியாக்கள், ஸாவியாக்களில் தற்காலிகமாக மறு அறிவித்தல் வரை தொழுகை மேற்கொள்ள முடியும் என்றும் கூறினார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் கொவிட் 19 வைரஸ் பரவல் காரணமாக மக்கள் பள்ளிவாசல்களில் ஒன்றுகூடும் எண்ணக்கை மட்டுப்படுத்தப்பட்டிருந்த நிலையில் ஜும்ஆ தொழுகை தக்கியாக்கள், ஸாவியாக்களில் அனுமதிக்கப்பட்டது.
கொவிட் 19 கட்டுப்பாடுகள் சுகாதார அமைச்சினால் இதுவரை தளர்த்தப்படவோ நீக்கப்படவோ இல்லை. இந்நிலையில் வக்பு சபை இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது. எனவே மறு அறிவித்தல் விடுக்கப்படும்வரை தக்கியாக்கள், ஸாவியாக்களில் ஜும்ஆ தொழுகை அனுமதிக்கப்பட்டுள்ளது என்றார்.- Vidivelli