இலங்கையின் பௌத்த மற்றும் இந்து மத தலைவர்கள் அடங்கிய குழுவொன்று முதன் முறையாக சவூதி அரேபியாவுக்கு விஜயம் செய்துள்ளது.
உலக முஸ்லிம் லீக்கின் அழைப்பின் பேரில் சவூதியில் இடம்பெற்ற மதங்களைப் பின்பற்றுவோரிடையே உள்ள ‘ஒற்றுமைகளை ஊக்குவித்தல்’ எனும் தலைப்பில் மே 9 முதல் 13 வரை இடம்பெற்ற மாநாட்டில் கலந்து கொள்ளும் பொருட்டே இக் குழு அங்கு விஜயம் செய்துள்ளது.
இலங்கை மகாபோதி சங்கத்தின் தலைவர் பனகல உபதிஸ்ஸ தேரர் தலைமையிலான பௌத்த மற்றும் இந்து மத தலைவர்கள் அடங்கிய குழுவினரே இவ்வாறு சவூதிக்கு விஜயம் செய்துள்ளனர்.
இதன்போது உலக முஸ்லிம் லீக்கின் செயலாளர் நாயகம் கலாநிதி அஷ்ஷெய்க் முஹம்மத் பின் அப்துல் கரீம் அல் ஈஸாவைச் சந்தித்து இக் குழு கலந்துரையாடியதுடன் நினைவுச் சின்னங்களையும் பரிமாறிக் கொண்டனர்.
மே 11 ஆம் திகதி ரியாத், ரிட்ஸ் கார்ல்டன் ஹோட்டலில் இடம்பெற்ற மாநாட்டின் அமர்வில் உரை நிகழ்த்திய பனகல உபதிஸ்ஸ தேரர், புத்தரின் போதனைகளுக்கும் இஸ்லாமிய நம்பிக்கைக்குமிடையிலான ஒற்றுமைகளைச் சுட்டிக்காட்டினார்.
“இஸ்லாத்தையும் பௌத்தத்தையும் ஒப்பிடுவதை நினைத்து பலர் அதிர்ச்சியடையலாம், இருப்பினும் நீங்கள் இரு சமயங்களினதும் போதனைகளையும், அமைதிக்கான முயற்சிகளையும் உன்னிப்பாகப் பார்த்தால், அவை சந்தேகப்படுவதை விட ஒத்ததாகவே இருக்கும்” எனக் குறிப்பிட்டார்.
இந்த விஜயத்தின் போது மத தலைவர்கள் சவூதியில் வாழும் இலங்கையர்களையும் சந்தித்து கலந்துரையாடினர். அத்துடன் இலங்கை தற்போது பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள நிலையில் அங்கும் வாழும் இலங்கையர்களின் பங்களிப்புகளின் அவசியம் குறித்தும் வலியுறுத்தியுள்ளனர்.
அத்துடன் ரியாதிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் இடம்பெற்ற வெசாக் நிகழ்விலும் போதி பூஜையிலும் பங்குபற்றினர். அங்கு தஹம் பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்களின் கலை கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றன. மேலும் தூதரகத்தில் இடம்பெற்ற அன்னதான நிகழ்விலும் பௌத்த மத தலைவர்கள் பங்குபற்றினர்.- Vidivelli