எம்.இஸட். ஷாஜஹான்,
எம்.எம்.இஸ்மதுல் றஹுமான்
அரசியல் பொருளாதர நெருக்கடியால் நாட்டில் ஏற்பட்டிருக்கும் அமைதியற்ற சூழ்நிலையை இன வன்முறையாக மாற்றியமைக்கும் முயற்சிகள் ஆங்காங்கே இடம்பெறுவதை அவதானிக்க முடிகிறது. இதன் ஓர் அங்கமாக நேற்று முன்தினம் மாலை நீர்கொழும்பு பகுதியில் பதற்றமானதொரு சூழ்நிலை திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
நீர்கொழும்பு பெரியமுல்லை பிரதேசத்தில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை (10) மாலை இரு இனங்களுக்கிடையில் முறுகல் நிலையொன்றை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. எனினும் அங்கு விரைந்த கத்தோலிக்க, இஸ்லாமிய மதத் தலைவர்கள், பாதுகாப்பு தரப்பினர் மற்றும் பொலிசார் மேற்கொண்ட நடவடிக்கையை தொடர்ந்து பிரதேசத்தில் அமைதி ஏற்பட்டது.
கடந்த திங்கட்கிழமை நாட்டின் பல பகுதிகளிலும் பொது ஜன பெரமுன அரசியல்வாதிகள் மற்றும் ராஜபக்ச குடும்பத்திற்கு நெருக்கமானவர்களது உடைமைகள் சேதப்படுத்தப்பட்டன. இதன்போது நீர்கொழும்பு மீரிகமை வீதியில் அமைந்துள்ள, மஹிந்த ராஜபக்சவின் நெருங்கிய ஆதரவாளர் ஒருவருக்குச் சொந்தமான அவென்ட்ரா சொகுசு ஹோட்டல் மற்றும் வாகன விற்பனை நிலையம் என்பன தீ வைத்து எரிக்கப்பட்டது.
இதன்போது அங்கிருந்த பெறுமதிவாய்ந்த தளபாடங்கள் மற்றும் உபகரணங்கள் வன்முறையாளர்களால் சூறையாடப்பட்டன. மறுநாள் செவ்வாய்க்கிழமையும் இக் கட்டிடத்தினுள் நுழைந்த மக்கள் அங்கிருந்த பொருட்களைக் களவாடிச் சென்றனர். அயல் பிரதேசங்களிலிருந்து வந்தும் இவ்வாறு பலர் பொருட்களை எடுத்துச் சென்றதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் விடிவெள்ளியிடம் தெரிவித்தனர்.
இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை மாலை நீர்கொழும்பு, பெரியமுல்லை பகுதிக்கு வந்த குறித்த ஹோட்டல் உரிமையாளரின் ஆதரவாளர்கள் சிலர், அப் பகுதியில் உள்ள முஸ்லிம்கள்தான் பொருட்களைக் கொள்ளையடித்ததாக கூறி இந்த விவகாரத்தை இன முரண்பாடாக மாற்றுவதற்கு முயற்சித்ததுடன் வன்முறையிலும் ஈடுபட்டனர். இதன்போது முஸ்லிம்களுக்குச் சொந்தமான உடைமைகள் சில சேதமாக்கப்பட்டன.
இதனையடுத்து முஸ்லிம்கள் செறிந்துவாழும் பெரியமுல்லை, டீன் சந்தியில் அமைந்துள்ள மூன்று கடைகள் தாக்கப்பட்டன. அத்தோடு துவிச்சக்கர வண்டிகள், மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வண்டி மற்றும் வேன் என்பனவும் எரிக்கப்பட்டன.
இந்த தாக்குதல்களின்போது காயமடைந்த நால்வர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் மூன்று முஸ்லிம்களும் ஒரு பெரும்பான்மை இனத்தவரும் அடங்குவர்.
எனினும் இவ்வன்முறைகள் இன முரண்பாடாக மாறலாம் என அஞ்சிய சர்வமத தலைவர்கள் உடனடியாக செயற்பட்டு பிரதேசத்தில் அமைதியை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டனர். கத்தோலிக்க மதத் தலைவர்கள் இஸ்லாமிய, பௌத்த மதத் தலைவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து அமைதி ஏற்படுவதற்கு முயற்சி செய்தனர்.
வீதிக்கு வந்த பிரதேச தேவாலயங்களின் அருட்தந்தையர்கள் மற்றும் அருட் சகோதரிகள் அங்கு கலகத்தில் ஈபட்டவர்களை தடுத்ததுடன், பிரதேச மக்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கையும் எடுத்தனர்.
இதற்கிடையில் விசேட அதிரடிப்படையினர், விமானப்படையினர் மற்றும் பொலிசார் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டனர்.
விசேட அதிரடிப்படையினர் மற்றும் விமானப்படையினர் மீரிகமை வீதி மற்றும் பெரியமுல்லை பிரதேசங்களில் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு பிரதேசத்தில் பாதுகாப்பைப் பலப்படுத்தினர்.
இச் சம்பவம் தொடர்பில் சம்பவ இடத்துக்குச் சென்ற கட்டுநாயக்க மெதடிஸ்த தேவாலயத்தின் அருட்தந்தை குசும் குமாரசிறி கருத்து வெளியிடுகையில், அரசியல் வன்முறையாளர்கள் சிலர் அந்த இடத்துக்குச் சென்று முஸ்லிம் சகோதரர்களின் கடைகள் சிலவற்றைத் தாக்கியுள்ளனர். அத்துடன் வாகனங்களுக்கும் தீ வைத்துள்ளனர்.
முஸ்லிம்கள் எவ்வித வன்முறைகளிலும் ஈடுபடவில்லை. அங்கு வந்த வேறு சிலரே வன்முறைகளில் ஈடுபட்டுள்ளனர். இதனை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். இதனால் எவரும் முஸ்லிம்களுக்கு எதிராக எந்தவித வனமுறைகளிலும் ஈடுபடக் கூடாது. தற்போது இராணுவம் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டுள்ளது. நாம் இராணுவத் தளபதியுடன் தொடர்பு கொண்டோம். முஸ்லிம் சகோதரர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள், இன்றேல் உங்கள் மீதும் மக்கள் சந்தேகப்படுவார்கள் எனக் கூறினோம். பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாக அவர் உறுதியளித்தார். மேலும் முஸ்லிம்கள் ஒருபோதும் கத்தோலிக்கர்கள் மீது தாக்குதல் நடத்தவில்லை.எனக் கூறினோம். பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாக அவர் உறுதியளித்தார். மேலும் முஸ்லிம்கள் ஒருபோதும் கத்தோலிக்கர்கள் மீது தாக்குதல் நடத்தவில்லை. அரசியல் கும்பல் ஒன்றுதான் முஸ்லிம் பகுதிக்கு வந்து தாக்குதல் நடத்தியுள்ளது. நான் அவர்களது பெயரைக் குறிப்பிடவிரும்பவில்லை. நீர்கொழும்பில் உள்ள எந்த அரசியல்வாதி வன்முறைக்கும்பலை வைத்துள்ளார் என்பதை நீங்கள் அறிவீர்கள்” என்றும் தெரிவித்தார்.
தற்போது அங்கு அமைதி நிலவுவதுடன் முப்படையினரும் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டு வருகின்றனர்.- Vidivelli