அஹ்னாப் தடுத்து வைக்கப்பட்டிருந்தமை சர்வதேச சட்டத்தை மீறும் செயலாகும்
ஐக்கிய நாடுகள் சபை செயற்குழு
(ஏ.ஆர்.ஏ.பரீல்)
மனித உரிமைகள் செயற்பாட்டாளரும் இளம் கவிஞருமான அஹ்னாப் ஜெஸீம் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தமையானது சர்வதேச சட்டத்தை மீறிய செயற்பாடாகும் என ஐக்கிய நாடுகள் சபை செயற்குழு பிரகடனப்படுத்தியுள்ளது.
விசாரணைகளின்றி நியாயமற்ற முறையில் அஹ்னாப் ஜெஸீம் சிறை வைக்கப்பட்டமை மூலம் இலங்கை அரசாங்கம் சர்வதேச மனித உரிமை சட்டத்தை மீறியுள்ளது.
ஐ.நா.சபையின் செயற்குழுவினது தீர்மானத்தை நாங்கள் வரவேற்கிறோம் என Freedom Now சட்ட அலுவலர் அடம் லேட்மட் (LHEMAT) தெரிவித்துள்ளார். அத்தோடு அஹ்னாப் ஜெஸீம் தொடர்ந்தும் சிறையில் இல்லை.அவர் சுமார் இரண்டு வருடங்கள் விசாரணைகளின்றி தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தார். இது அவரது கருத்துச் சுதந்திர உரிமை மீறப்பட்டமையை தெளிவாக உறுதிப்படுத்துகிறது. இதனிலும் மேலாக அவர் தான் எழுதிய கவிதைகளுக்காக சிறைத்தண்டனை பெறும் நிலைமையை எதிர்கொண்டார். இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்துக்கு உடன்படுமாறும் அஹ்னாப் ஜெஸீம் மேலதிக சட்ட ரீதியான தொந்தரவுகளுக்கு உள்ளாகமலிருப்பதை உறுதிசெய்யுமாறும் வேண்டிக்கொள்கிறோம் எனவும் கோரியுள்ளார்.
அஹ்னாப் ஜெஸீம் கைது செய்யப்படுவதற்கு முன்பு 2019 ஜூலை மாதம் முதல் வடமேல் மாகாணத்தின் புத்தளம் நகரிலுள்ள தனியார் சர்வதேச பாடசாலையொன்றில் ஆசிரியராகக் கடமையாற்றினார். அவர் அங்கு தமிழ் மொழியும், தமிழ் இலக்கியமும் போதித்தார். அவர் பல்கலைக்கழக அங்கத்தினராக இருந்த காலத்திலிருந்து மன்னாரமுது அஹ்னப் என்ற புனைப்பெயரில் கவிதைகளையும் சிறுகதைகளையும் வெளியிட்டு வந்தார்.
2017இல் அவர் எழுதிய “நவரசம்” என்ற பெயரில் முதன் முதல் கவிதை நூலொன்றினை வெளியிட்டார். இந்த நூல் பல்வேறு விடயங்களை உள்ளடக்கியிருந்தது. பொது மக்களின் தனிப்பட்ட வாழ்க்கையுடன் தொடர்புபட்டவைகள் குறிப்பாக சமயம், அன்பு, போதை பொருட்கள் மற்றும் இஸ்லாமிய வரலாறு என்பவைகளை உள்ளடக்கியிருந்தன. இந்நூல் அஹ்னாப் ஜெஸீமின் பல்கலைக்கழகத்தில் வெளியிட்டு வைக்கப்பட்டது. நிகழ்வில் சுமார் 1000பேரளவில் கலந்து கொண்டனர்.
2020 ஆம் ஆண்டு மே மாதம் 16 ஆம் திகதி பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினர் அஹ்னாப் ஜெஸீமை பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்தனர். மாணவர்களுக்கு தீவிரவாதம் மற்றும் இன ரீதியான கொள்கைகளைக் கற்பித்தமை மற்றும் அவ்வாறான புத்தகங்களை வெளியிட்டமை எனும் குற்றச்சாட்டுக்களின் கீழேயே அவர் கைது செய்யப்பட்டார்.
பயங்கரவாத தடுப்புச் சட்டம் சந்தேகத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்களை எதுவித விசாரணைகளுமின்றி நீண்டகாலம் தடுத்து வைப்பதற்கு அனுமதியளித்தது. அஹ்னாப் ஜெஸீம் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த போது பல்வேறு நெருக்கடிகளுக்கு உள்ளாக்கப்பட்டார். அவர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த முதல் 10 மாதகாலம் சட்டத்தரணிகளின் உதவிகள் மறுக்கப்பட்டது.
அதிகாரிகள் ஜெஸீமின் குடும்பத்தார் ஊடாக ஜெஸீமை பலவந்தமாக குற்றத்தை ஒப்புக்கொள்ளச் செய்யும் முயற்சிகளில் ஈடுபட்டனர். 2021 ஜூன் மாதம் வரை ஜெஸீமை தடுப்புக்காவலில் வைத்திருக்கும்படி நீதிமன்றம் எந்த உத்தரவினையும் வழங்கியிருக்கவில்லை. 2021 நவம்பர் மாதம் வரை அவருக்கு எதிராக உத்தியோகபூர்வமாக குற்றச்சாட்டுகள் எதுவும் முன்வைக்கப்பட்டிருக்கவில்லை.
கவிதை நூல் தமிழிலே எழுதப்பட்டிருந்தது. விசாரணைகளுக்காக அந்நூல் மொழி பெயர்க்கப்பட்டது. இந்த மொழி பெயர்ப்பு தமிழ் மொழி நிபுணர்களினால் விமர்சிக்கப்பட்டது. ஜெஸீமின் கவிதை நூல் எவ்வாறு வன்செயல்களைத் தூண்டுகிறது என்பதை அரசாங்கத்தினால் நிரூபிக்க முடியாமற்போனது.
இதற்கு மாறாக ஜெஸீமின் கவிதை நூலில் அடங்கியுள்ள கவிதைகள் ஐ.எஸ்.ஐஎஸ். அமைப்பினை கண்டிப்பதாக அமைந்திருந்தன. பயங்கரவாத அமைப்புகளுக்கும் இஸ்லாத்துக்கும் இடையில் எவ்வித தொடர்பும் இல்லை என்பதை பிரகடனம் செய்வதாகவும் கவிதைகள் புனையப்பட்டிருந்தன.
அஹ்னாப் ஜெஸீம் 2021 டிசம்பர் மாதம் பிணையில் விடுதலை செய்யப்பட்டார். அவர் 19 மாதங்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தார். அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்ந்தும் நிலுவையில் உள்ளன.- Vidivelli