மஹிந்தவின் மேன் முறையீடு நாளைய தினம் பரிசீலனைக்கு

உடன் எடுக்க கோரியமை நிராகரிப்பு

0 790

பிரதமர் பதவியிலும் அமைச்சர் பதவியிலும் கடமைகளை முன்னெடுக்கத் தனக்கு மேன் முறையீட்டு நீதிமன்றம்  விதித்துள்ள இடைக்கால தடையை நடை முறைப்படுத்துவதை தடுக்குமுகமாக உத்தரவொன்றினை பிறப்பிக்குமாறு கோரி, பிரதமராக பதவி வகித்த மஹிந்த ராஜபக்ஷ எம்.பி.  தாக்கல் செய்த விஷேட மேன்முறையீடை நாளை 14 ஆம் திகதி வெள்ளியன்று பரிசீலனைக்கு எடுக்க உயர் நீதிமன்றம் நேற்று தீர்மானித்தது. அத்துடன் அமைச்சர்களாகப் பதவிவகித்த ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சமல் ராஜபக் ஷ , தினேஷ் குணவர்தன  மற்றும் விஜேதாஸ ராஜபக் ஷ ஆகியோரும் தமக்கு அமைச்சுப் பதவிகளில் தொடர விதிக்கப்பட்டுள்ள இடைக்கால தடையை செயற்படுத்துவதை தடுக்கும் வகையில் உத்தரவொன்றினை பிறப்பிக்குமாறு கோரியுள்ள விஷேட மேன் முறையீட்டையும் அன்றைய தினமே பரிசீலிப்பதாக உயர் நீதிமன்றம் அறிவித்தது. இவ்விரு விஷேட மேன் முறையீடுகளும் நேற்று முதல் முறையாக உயர் நீதிமன்றின் 403 ஆம் விசாரணை அறையில் ஆராயப்பட்டது. இதன்போதே  நீதியரசர் பிரியந்த ஜயவர்தன தலைமையிலான பிரசன்ன ஜயவர்தன , எல்.டி.பி. தெஹிதெனிய ஆகியோர் அடங்கிய மூவர் கொண்ட நீதியர்சர்கள் குழுவே இதனை அறிவித்தது.

நேற்றைய தினம் இந்த மனுக்கள் இரண்டும் ஆராயப்பட்ட போது, மஹிந்த ராஜபக் ஷ எம்.பி. சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி காமினி மாரப்பனவும், ஏனைய மனுதாரர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா, ஜனாதிபதி சட்டத்தரணி மனோகர டி சில்வா உள்ளிட்டோர் ஆஜராகினர். இந்த விஷேட மேன் முறையீட்டில்  பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி, ஶஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்  ஆகிய கட்சிகளின் 122 பாராளுமன்ற உறுப்பினர்களில் முதலாம் பிரதிவாதி சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி கனக ஈஸ்வரன் ஆஜரானார்.

இதன்போது குறித்த விஷேட மேன் முறையீட்டு மனுவை  நேற்றைய தினமே உடனடியாக பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளுமாறு மஹிந்த ராஜபக் ஷ சார்பில் மன்றில் ஆஜராகிய ஜனாதிபதி சட்டத்தரணி காமினி மாரப்பனவும், ஜனாதிபதி சட்டத்தரணி  ரொமேஷ் டி சில்வாவும்  கோரிக்கை முன்வைத்தனர்.

எனினும் இதற்கு ஜனாதிபதி சட்டத்தரணி கனக ஈஸ்வரன் எதிர்ப்பு வெளியிட்டார். குறித்த மனுவில் தம்மை பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருக்கும் நிலையில் தமக்கு எந்த அறிவித்தலும் இதுவரை விடுக்கப்படவில்லை என சுட்டிக்காட்டிய அவர், வழக்கு குறிப்புக்களும் தமக்கு வழங்கப்படாத நிலையில் எப்படி உடனடியாக இதனை விசாரணை செய்ய முடியுமென அவர் கேள்வி எழுப்பினார். தமக்கு இன்று (நேற்று) அறிவித்தலும் வழக்கு குறிப்புக்களும்  வழங்கப்படுமாக இருப்பின் நாளை (இன்று ) தம்மால் வழக்கில் ஆஜராகி வாதங்களை முன்வைக்க முடியும் என்றார்.

இதன்போது மீண்டும் மன்றில் ஜனாதிபதி சட்டத்தரணிகளான காமினி மாரப்பன மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா ஆகியோர் வாதிட்டனர்.

‘மேன் முறையீட்டு நீதிமன்றம் விடுத்துள்ள தடை உத்தரவால் அமைச்சரவையின் நடவடிக்கைகள் அனைத்தும் ஸ்தம்பிதமடைந்துள்ளன. இந்த வழக்கு தேசிய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்ததால் உடனடியாக இன்றைய தினமே (நேற்று) விசாரணைக்கு எடுக்க வேண்டும். குறைந்தபட்சம்  மனுதாரர் தரப்பான எமது வாதங்களையாவது இன்று செவிமடுங்கள். குறைந்த நேர அளவே எடுப்போம்’ என்றனர்.

இதன்போது ஜனாதிபதி சட்டத்தரணி கனக ஈஸ்வரன், தமக்கு அரிவித்தலின்றி எப்படி வழக்கை பரிசீலனைக்கு எடுக்க முடியும் என வாதிட்டார்.

இதன்போது நீதியரசர் தெஹிதெனிய இன்று (நேற்று) விசாரணைகளை ஆரம்பித்தால் அதனை நாளையும் (இன்று) தொடர வேண்டி ஏற்படலாம்.  நாளை (இன்று) நான் இந்த நீதியரசர்கள் குழுவில் இல்லை. எனவே அது விசாரணையை பாதிக்கும். எனவே நாளை மறுதினம் வெள்ளியன்று ஆராயலாம் என்றார்.

இதன்போது நீதியரசர் பிரசன்ன ஜயவர்தனவும் பிரியந்த ஜயவர்தனவும், தமக்கு இன்று (நேற்று) பிற்பகல் வேளையில் பிரதம நீதியரசருடன் கலந்துரையாடல் இருப்பதாக சுட்டிக்காட்டி பிற்பகல் வேளையில் பரிசீலனை சாத்தியமில்லை எனவும் சுட்டிக்காட்டினர்.

இந்நிலையில் பிரதிவாதிகளுக்கான அறிவித்தல்கள் மற்றும் வழக்கு சுருக்கத்தினை நேற்றைய தினம் மாலை 4.00 மணிக்குள் கையளிக்கவும் நீதியரசர்கள் மனுதாரர்களுக்கு ஆலோசனை வழங்கினர்.

இதனையடுத்தே இது குறித்த பரிசீலனைகள் நாளை வெள்ளிக் கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது.

முன்னதாக கடந்த டிசம்பர் நான்காம் திகதி பிரதமர் பதவியிலும் அமைச்சர் பதவியிலும் கடமைகளை முன்னெடுக்கத தனக்கு  மேன் முறையீட்டு நீதிமன்றம்  விதித்துள்ள இடைக்கால தடையை நடைமுறைப்படுத்துவதை தடுக்குமுகமாக உத்தரவொன்றினை பிறப்பிக்குமாறு கோரி, பிரதமராகப் பதவி வகித்த மஹிந்த ராஜபக் ஷ எம்.பி.  உயர் நீதிமன்றில் மேன் முறையீட்டு மனுவொன்றினை தாக்கல் செய்தார்.   அத்துடன் அமைச்சர்களாக பதவி வகித்த ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சமல் ராஜபக் ஷ , தினேஷ் குணவர்தன  மற்றும் விஜேதாஸ ராஜபக் ஷ ஆகியோரும் தமக்கு அமைச்சுப் பதவிகளில் தொடர விதிக்கப்ப்ட்டுள்ள இடைக்கால தடையை செயற்படுத்துவதை தடுக்கும் வகையில் உத்தரவொன்றினை பிறப்பிக்குமாறு மேன் முறையீடு ஒன்றினை தாக்கல் செய்தனர். அதன்படி 122 பாராளுமன்ற உறுப்பினர்கள் தாக்கல் செய்த கோ வொறண்டோ நீதிப் பேராணை மனு தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் பிரதமர், அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்கள் அந்தப் பதவிகளில் செயற்பட விதித்த இடைக்கால தடை உத்தரவுக்கு  எதிராக தடை உத்தரவொன்றினை பிறப்பிக்குமாறு அவர்கள் கோரியிருந்தனர்.

இந்த இரு விஷேட மேன் முறையீட்டு மனுக்களிலும் ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள், தமிழ் தேசிய கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் 122 பேர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர். எவ்வாறாயினும் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சமல் ராஜபக் ஷ , தினேஷ் குணவர்தன  மற்றும் விஜேதாஸ ராஜபக் ஷ ஆகியோர் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேன் முறையீட்டில் இந்த 122 பேருக்கு மேலதிகமாக கோ வொறண்டோ நீதிப் பேராணை மனுவில் பிரதிவாதிகளான 46 பேரும் மனுதாரர் தரப்பு பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.

இந்த இரு  விஷேட மேன் முறையீடுகளும் சட்டத்தரணி சனத் விஜேவர்தன ஊடாக தாக்கல் செய்யப்ப்ட்டமை குறிப்பிடத்தக்கது.

மேன் முறையீட்டு நீதிமன்றம் சட்டத்தை தவறாக வரைவிலக்கணப்படுத்தி, தம்மை குறித்த பதவிகளில் செயற்படுவதற்கு இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த தடை உத்தரவானது மஹிந்த ராஜபக் ஷவுக்கும் ஏனையோருக்கும் பாதிப்பானது. இந்நிலையில் தம்மை குறித்த பதவிகளில் செயற்படுவதை தடுத்து விடுக்கப்பட்டுள்ள இந்த உத்தரவானது அரசியலமைப்புக்கு முரணானதாகும். அதனால் இந்த விஷேட மேன் முறையீட்டை விசாரணைக்கு ஏற்குமாறும், மேன் முறையீட்டு நீதிமன்றம் விடுத்த இடைக்கால தடை உத்தரவை ரத்து செய்யுமாறும் மனுதாரர்கள் தமது விஷேட மேன் முறையீட்டு மனுவில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்நிலையிலேயே நேற்று அம்மனுக்கள் உயர் நீதிமன்றில் ஆராயப்பட்டு, நாளைய தினம் பரிசீலனைக்காக ஒத்தி வைக்கப்பட்டது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.