வீரகெட்டிவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்த எம்.எப்.எம். நபாயிஸ் (வயது 34) எனும் இளைஞரின் ஜனாஸா நேற்று முன்தினம் இரவு யக்கஸ்முல்ல ஜும்ஆ பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
கடந்த திங்கட்கிழமை நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஆளும்கட்சி அரசியல்வாதிகளின் வீடுகள் தாக்குதலுக்கு இலக்காகின. இதன்போது வீரகெட்டிய பிரதேச சபைத் தலைவரின் வீடும் தாக்குதலுக்கு இலக்கானது. இச் சம்பவத்தை தமது கையடக்கத் தொலைபேசியில் புகைப்பம் எடுத்துக் கொண்டிருந்தபோது, நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் சிக்கியே இவர் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை இச் சம்பவத்தில் இவரது சகோதரரும் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. எம்.எப்.எம்.நிஸ்லான் (வயது 28) எனும் இளைஞரே இவ்வாறு படுகாயமடைந்து ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
வீரகெட்டிய, யக்கஸ்முல்லையை பிறப்பிடமாகக் கொண்ட சகோதரர்களான இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிள் ஒன்றில் மேற்படி வன்முறைச் சம்பவத்தை பார்வையிடச் சென்றுள்ளனர். இதன்போது மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருள் சூழ்ந்துள்ளது. இவர்கள் தமது கையடக்கத்தொலைபேசியின் பிளாஷ் வெளிச்சத்தை ஒளிரச் செய்து படம் எடுத்துள்ளனர். இந் நிலையில் மறுபக்கத்தில் மறைந்திருந்தவர்கள் கையடக்கத் தொலைபேசியின் வெளிச்சத்தை இலக்காகக் கொண்டு துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதனால் தலையில் நேரடியாக துப்பாக்கிக் குண்டு பாய்ந்ததில் எம்.எப்.எம். நபாயிஸ் (வயது 34) உயிரிழந்துள்ளார். சில்லறை வியாபாரியான இவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார்.
இவரது சகோதரர் எம்.எப்.எம்.நிஸ்லான் (வயது 28) கழுத்தில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்த நிலையில் ஆபத்தான நிலையில் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனிடையே இத்துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் அப் பிரதேசத்தைச் சேர்ந்த பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். மொத்தமாக இச் சம்பவத்தில் இருவர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.- Vidivelli