(எம்.எப்.எம்.பஸீர்)
தலைநகர் கொழும்பு உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் பாதுகாப்புக் கடமைகளில் இராணுவ பிரசன்னம் அதிகரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கொழும்பின் பிரதான வீதிகளில் கவச வாகனங்களில் நேற்றுக் காலை முதல் இராணுவத்தினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன் நேற்று முதல் மோட்டார் சைக்கிள் அணியினரும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
நாட்டில் இராணுவ ஆட்சியொன்றுக்கு திட்டமிடப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா உட்பட பலரும் எச்சரித்துள்ள நிலையில் இராணுவ பிரசன்னம் அதிகரிக்கப்பட்டுள்ளமையானது மக்கள் மத்தியில் அச்சத்தைத் தோற்றுவித்துள்ளது.
இதனிடையே வன்முறையில் ஈடுபடுவோர் மீது துப்பாக்கிச் சூடு நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கலவரங்கள் மற்றும் வன்முறைகளில் ஈடுபடுவோரை கட்டுப்படுத்துவதற்கும், குற்றக் குழுக்கள் முன்னெடுக்கும் சட்டவிரோத செயல்களைக் கட்டுப்படுத்தவும் அவசியம் ஏற்படும் போது துப்பாக்கிச் சூடு நடாத்த பொலிஸாருக்கும், முப்படையினருக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கலவரங்களில் ஈடுபடும் குழுக்கள், வன்முறையாளர்கள் உயிர் சேதம் விளைவிக்கும் நோக்கில் அல்லது கொள்ளையிடும் நோக்கில் வாகனங்களை நிறுத்தி சோதனை செய்யும் நடவடிக்கைகளை நிறுத்தவும், அரச மற்றும் தனியார் சொத்துக்களை சேதப்படுத்துதல், கொள்ளையிடுதல், கொலை செய்தல், கடும் காயம் ஏற்படுத்துதல் போன்ற சம்பவங்களைத் தடுக்கவும் உயர்ந்த பட்ச நடவடிக்கைகளை முன்னெடுக்க பொலிஸ் மா அதிபர் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் நேற்று (11) அறிவித்துள்ளார்.
தேவையான போது துப்பாக்கிப் பிரயோகம் செய்யுமாறும் பொலிஸ் மா அதிபர் இதன்போது அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும், பொலிஸ் பொறுப்பதிகாரிகளுக்கும் அதிகாரமளித்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஸ்ட பொலிச் அத்தியட்சர் நிஹால் தல்துவ கூறினார்.
இவ்வாறான நிலையில், மேற்கூறப்பட்ட நடவடிக்கைகளுக்காக, துப்பாக்கிச் சூடு நடாத்த பாதுகாப்பு அமைச்சும் முப்படையினருக்கு அதிகாரமளித்து உத்தரவிட்டுள்ளது.
எவ்வாறெனினும், இராணுவத்தினர் ஆட்சியைப் பொறுப்பேற்கவுள்ளதாக வெளியான செய்திகளை இராணுவத்தளபதி ஜெனரால் சவேந்ர சில்வா மறுத்துள்ளார்.
நாட்டின் ஜனாதிபதி, முப்படைகளின் தளபதியாகவும் இருக்கும் சூழலில், புதிதாக ஏன் இராணுவம் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என இராணுவ தளபதியும் முப்படைகளின் தலைமை அதிகாரியுமான ஜெனரால் சவேந்ர சில்வா கேள்வி எழுப்பினார்.
நேற்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழு முன்னிலையில் விசாரணைகலுக்கு ஆஜரான பின்னர் வெளியேறும் போது, ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
தற்போதைய சூழலில் இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றப் போவதாக ஒரு தகவல் உள்ளது. உண்மையில் இராணுவ தளபதி எனும் ரீதியில் இது தொடர்பில் நீங்கள் என்ன பதிலளிக்க விரும்புகின்றீர்கள்? அந்த தகவல் உண்மையானது தானா? என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த ஜெனரால் சவேந்ர சில்வா, நாட்டில் அரசியலமைப்பொன்று உள்ளது. அந்த அரசியலமைப்புக்கு அமையவே இராணுவம் செயற்படும். அரசியலமைப்புக்கு அமைய நாட்டை பாதுகாப்பதே எமது கடமையாகும். தற்போதைய சூழலில் நாம் அதனையே செய்கின்றோம். நாட்டில் ஜனாதிபதி ஒருவர் இருக்கும் போது இது எப்படி சாத்தியமாகும்.
தற்போதைய ஜனாதிபதியே நாட்டினுடைய ஜனாதிபதி. அரசியலமைப்புக்கு அமைய அவருக்கு அப்பதவியில் இருக்க தற்போதும் அவகாசம் இருக்கிறது. அவ்வாறு இருக்கையில் இராணுவத்துக்கு ஆட்சியை கைப்பற்ற எந்த தேவையும் இல்லை. ஜனாதிபதியே முப்படைகளினுடைய தளபதியாவார். ஜனாதிபதியைப் போன்றே அவர் முப்படைகளுக்கும் தளபதி. அப்படி இருக்கையில் நாம் எதற்கு மீள ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என தெரிவித்தார்.- Vidivelli