நாட்டில் கடந்த ஓரிரு தினங்களுக்குள் எதிர்பாராத அனைத்து சம்பவங்களும் நடந்து முடிந்துள்ளன. வன்முறைகளைக் கையிலெடுத்து, இனவாதத்தை ஆயுதமாகக் கொண்டு ஆட்சிக்கு வந்தவர்கள் அதே வன்முறை மூலமாக மக்களால் ஆட்சியிலிருந்தும் அகற்றப்பட்டுள்ளனர். கண் முன்னே நடக்கும் சம்பவங்களை நம்மால் நம்ப முடியாதுள்ளது.
ஆனால் வன்முறைகளை ஒருபோதும் நாம் ஆதரிக்கமுடியாது. வன்முறைகள் ஒருபோதும் பிரச்சினைக்குத் தீர்வைத் தரப் போவதுமில்லை. ஆனாலும் ஊழல்மிக்க ஆட்சியாளர்கள் இந்த சம்பவங்களிலிருந்து படிப்பினை பெற வேண்டும். அநியாயமான முறையில் நாட்டினதும் பிறரினதும் சொத்துக்களைக் கொள்ளையடித்து ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்கும் என்பதற்கு உலக வரலாற்றில் பல உதாரணங்கள் உள்ளது போன்றே நமது நாட்டிலும் ஒரு வரலாறு பதிவாகியுள்ளது.
மக்களின் கோரிக்கைகளுக்கு செவிமடுக்காது விடாப்பிடியாக இருந்ததன் விளைவே இதுவாகும். தற்போது பிரதமரும் அமைச்சரவையும் பதவி விலகியுள்ள நிலையில் ஜனாதிபதி தொடர்ந்தும் அதிகாரத்தில் உள்ளார். அவரையும் வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பதில் மக்கள் உறுதியாக உள்ளனர். எனினும் ஜனாதிபதி நேற்று இரவு நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை அவர் பதவி விலகப் போவதில்லை என்பதையே மறைமுகமாகக் கூறிநிற்கிறது.
இந் நிலையில் நாடு மிக நெருக்கடியான கட்டத்தை அடைந்துள்ளது. அடுத்த வாரத்திற்குத் தேவையான எரிபொருள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்குத் தேவையான டொலர் கையிருப்பில் இல்லை என்ற அதிர்;ச்சித் தகவலை மத்திய வங்கி ஆளுநர் நேற்றுத் தெரிவித்துள்ளார். இனி அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதும் கேள்விக்குறி என அவர் குறிப்பிட்டுள்ளார். இவை நாடு தொடர்பான மிக மோசமான சமிக்ஞைகளாகும்.
ஒரு புறம் ஆர்ப்பாட்டங்கள், மறுபுறம் வன்முறைகள், தேசிய அரசியல் மாற்றங்கள் பற்றி நாம் கவனம் செலுத்திக் கொண்டிருக்கையில் மறுபுறம் நாட்டின் பொருளாதாரம் அதல பாதாளத்திற்கு வந்துவிட்டது. அரசியல் ரீதியான ஸ்திரத்தன்மை வராவிட்டால் தானும் பதவி விலகப் போவதாக மத்திய வங்கி ஆளுநர் எச்சரித்திருக்கிறார்.
இந் நிலையில் நாட்டிலுள்ள சகல அரசியல் கட்சிகளும் தமது பொறுப்பை உணர்ந்து செயற்பட வேண்டும். பாராளுமன்ற கதிரைக்கு ஆசைப்பட்டு நாட்டை மேலும் குட்டிச்சுவராக்காது பொருத்தமான தரப்புகளிடம் நாட்டின் நிர்வாகத்தை ஒப்படைக்க முன்வர வேண்டும்.
இது அரசியல் கட்சி பேதம் பார்க்கும் தருணமல்ல. அடுத்த தேர்தல் வரைக்கும் உள்ள குறுகிய காலத்தில் நாட்டை பொருளாதார ரீதியாக தூக்கி நிறுத்த வேண்டியுள்ளது. சர்வதேசத்திற்கு நம்பிக்கை தரக்கூடிய நிர்வாகம் ஒன்றை நாட்டில் நிறுவ வேண்டியுள்ளது. இதன் மூலமே வெளிநாடுகளின் உதவிகளைப் பெற்று நாட்டை முன்கொண்டு செல்ல முடியும். இதற்காக அனைவரும் கைகோர்த்துச் செயற்பட வேண்டும்.
இதற்கப்பால் முஸ்லிம் பிரதேசங்களிலும் வன்முறைகள் பதிவாகியுள்ளன. இரு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சொத்துக்கள் சேதமாக்கப்பட்டுள்ளன. குறித்த அரசியல்வாதிகளின் கடந்த கால அரசியல் நிலைப்பாடுகளில் நமக்கு உடன்பாடு இல்லாவிட்டாலும் அவர்கள் மீதான் வன்முறைகளை ஒருபோதும் ஆதரிக்க முடியாது. இத்தாக்குதல்களில் அரசியலுடன் தொடர்புபடாத அப்பாவி மக்களின் உடைமைகளும் தீயிட்டுக் கொளுத்தப்பட்டுள்ளன. வன்முறைகளில் ஈடுபட்டோர் உடைமைகளைக் கொள்ளையிட்டும் சென்றுள்ளனர். இவற்றை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. எனவே முஸ்லிம் பிரதேசங்களில் அடுத்து வரும் நாட்களில் இவ்வாறான வன்முறைகள் பதிவாகாதிருப்பதை உறுதிப்படுத்த வேண்டியது நமது கடப்பாடாகும். இதுவிடயத்தில் பள்ளிவாசல்கள் மற்றும் சிவில் அமைப்புகள் வினைத்திறனுடன் செயற்பட வேண்டும்.
நேற்று முன்தினம் நீர்கொழும்பில் இடம்பெற்ற சம்பவம் ஏனைய இடங்களில் பரவாதிருப்பது குறித்தும் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். தீய சக்திகள் இதனை இன வன்முறையாக மாற்ற கங்கணம் கட்டியுள்ளன. இதற்கு நாம் பலியாகக் கூடாது. நீர்கொழும்பில் எவ்வாறு பிற சமயத் தலைவர்களின் உதவியோடு முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் தடுக்கப்பட்டனவோ அதேபோன்று ஏனைய பகுதிகளிலும் ஏனைய சமயங்களின் தலைவர்களுடன் முஸ்லிம்கள் கைகோர்த்து நின்று இனவாதத்தை முறியடிக்க வேண்டும்.
நாட்டில் நாம் எதிர்பார்க்கின்ற மாற்றங்கள் விரைவில் நடந்தேறவும் சுமுக நிலை மீளத் திரும்பவும் எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திப்போமாக.– Vidivelli