ஏ.ஆர்.ஏ.பரீல்
சவூதி அரேபியாவில் வாழும் முஸ்லிம்கள் மாத்திரமன்றி முஸ்லிம் அல்லாதவர்களில் பெரும் எண்ணிக்கையிலானோரும் ரமழான் மாதத்தில் நோன்பு நோற்கின்றனர். அவர்கள் தங்களது முஸ்லிம் நண்பர்கள், சிநேகிதர்களுடன் மேலும் நெருக்கமாவதற்கு நோன்பு நோற்க வேண்டும் என்ற உணர்வு மேலீட்டால் இவ்வாறு உந்தப்படுகின்றனர்.
“நீங்களாகவே நோன்பு நோற்காவிட்டாலும் நோன்பினை பகிர்ந்து கொள்ளுங்கள். நீங்கள் நோன்பின் சிநேகிதத்தையும், தாராள உணர்வினையும் பகிர்ந்து கொள்வதன் மூலம் உணர்வீர்கள்” என்கிறார் ரபெல் ஜயகர். இவர் ஒரு முஸ்லிம் அல்லர். உரிமைகளுக்கான கூட்டணியின் ரியாத் கிளையின் தலைவராக விளங்குகிறார்.
“இந்த அழகிய அனுபவத்தின் ஒரு பங்காளியாக இருப்பதாக நான் உணர்கிறேன். ரமழான் மாதத்தில் இந்த உணர்வு மேலிடுகிறது. சவூதி மற்றும் பிரான்ஸ் கலாசாரங்களுக்கிடையில் ஓர் இணைப்பை ஏற்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறேன்”எனவும் அவர் தெரிவிக்கிறார்.
ரபெல் ஜயகர் ரியாதில் கடந்த மூன்று வருடகாலமாக வாழ்ந்து வருகிறார். ஆனால் இவ்வருடமே முதல் தடவையாக தான் நோன்பு நோற்றதாகவும் அவர் கூறுகிறார்.
“நான் சவூதி அரேபியாவுக்கு வந்து முதலாவது வருடத்தில் அதிகமானவர்களோடு பழகும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனையடுத்து கொவிட் 19 வைரஸ் தொற்று சவூதியில் பரவியது. அதன் பின்பு தான் அதிகமான சவூதி நண்பர்களை தேடிக்கொண்டேன். அவர்களுடன் பலமான நட்புறவுகளை வளர்த்துக் கொண்டேன்.
நோன்பின் ஆரம்பத்தில் எனது நண்பர்கள் இப்தார் வைபவத்தில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார்கள்.
அழைப்பு விடுத்த எனது நண்பர்களுடன் எனது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள விரும்பினேன். ஆன்மீக மற்றும் சரீர சவால்களை இப்தாரில் கலந்து கொண்டு ஏற்றுக் கொண்டேன்.
ரமழானின் முதல் தினம் நான் ஸ்குவாஸ் விளையாட்டில் ஈடுபட்ட சந்தர்ப்பத்தில் அதிகமாக தாகமாக இருந்தது. அது முதல் தடவை. மிகவும் சவாலான அனுபவம். தண்ணீர் அருந்தாமலிருப்பது கஷ்டமாக இருந்தது. நான் இவ்வாறு தண்ணீர் அருந்தாமலிருந்தது குறித்து பெருமைப்படுகிறேன் என்றார் அவர்.
நோன்பு நோற்றுக்கொண்டு உடற்பயிற்சி நிலையத்துக்கு செல்வதன் மூலம் தனிப்பட்ட இலக்குகளை வெற்றிக் கொள்ள அவரால் முடிந்தது. இவ்வகையான சிறிய வெற்றிகளை ரமழானில் ஒவ்வொரு நாளும் அடைந்து கொள்ள முடிந்தது. பெரும் எண்ணிக்கையான மக்களுடன் ஒற்றுமையாக கட்டுப்பாட்டுடன் எம்மால் ஒன்றுபட முடிகிறது.
ரமழான் புனிதமான ஓர் ஆன்மீக பயிற்சி மட்டுமல்ல, எமக்கு பல வழிகளிலும் சுகாதார மற்றும் உடல்நல நன்மைகளைத் தருகிறது. சூரிய உதயத்திலிருந்து சூரியன் மறையும் வரை நோன்பிருப்பது எமக்கு உடல் ஆரோக்கியத்தை தருகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
நோன்பு காலத்தில் நாம் குறைவாக உண்பதால் எமது வயிறு மற்றும் சீரண தொகுதி சுருங்குவதற்கான வாய்ப்பு கிடைக்கிறது. இதனால் நேரடியாக பசி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படுகிறது. எமது உடல் நிறையிலும் குறைவு ஏற்படுகிறது.
ஒரு குறிப்பிட்ட நேரம் உண்ணாமலும் அருந்தாமலும் இருப்பதன் மூலம் எமது உடலின் கொழுப்பினைக் குறைக்க முடிவதுடன் உடல் நலத்தைப் பேண முடிகிறது என்பது ஆராய்ச்சிகள் மூலம் அறியப்பட்டுள்ளது.
ஒரு மாத கால நீண்ட நோன்பிருப்பதனால் எமது உடலில் படிப்படியாகப் பெரும் வியாதிக்கிருமிகள் வெளியிடும் விஷத்தினை சுத்தம் செய்துகொள்ள முடிகிறது.
அத்தோடு எமது மன நிலைக்கும் சில நன்மைகள் கிடைக்கின்றன. நோன்பிருப்பதனால் எமது மூளையும் அதிக நன்மைகளைப் பெறுகிறது.
அத்தோடு இரத்தத்தில் சீனியின் அளவினை கட்டுப்படுத்துகிறது. இன்சுலின் மற்றும் சீனியின் அளவினைக் கட்டுப்படுத்தும் மருந்துகள் எடுப்பவர்கள் நோன்பு நோற்பது தொடர்பில் முதலில் வைத்திய ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளவேண்டும்.
மரியா ரோஸ் – ஐக்கிய அமெரிக்கா
ஐக்கிய அமெரிக்கா கிளவ் லேன்ட்டைச் சேர்ந்த 21 வயதான மரியா ரோஸ். முஸ்லிம் அல்லாதவர்கள் நோன்பு நோற்பது தொடர்பில் தனது அனுபவங்களை பின்வருமாறு பகிர்ந்து கொண்டார்.
“நான் எனது முதலாவது சர்வதேச பயணத்தை துருக்கி நாட்டுக்கு மேற்கொண்டபோது நோன்பு நோற்பதை ஆரம்பித்தேன். மிகவும் நெருங்கிய நண்பியுடனே நான் எனது பயணத்தை ஆரம்பித்தேன். நாமிருவரும் நோன்பு நோற்பதற்குத் தீர்மானித்தோம். துருக்கி நாட்டவர்கள் நோன்பு நோற்பது போன்றே நாமும் நோன்பினை நோற்றோம் என்றார் மரியா ரோஸ்.
ரோஸ் தனது முஸ்லிம் நாடுகளுக்கான பயணங்களின் போது பல தடவைகள் நோன்பு நோற்றிருக்கிறார். பல்கலைக்கழகத்தில் பயின்ற காலத்திலும் நோன்பு நோற்றிருக்கிறார். அங்கு அவளது நண்பர்களில் அநேகர் வளைகுடா நாடுகளைச் சேர்ந்தவர்கள். சவூதி அரேபியா, குவைத் மற்றும் ஓமானைச் சேர்ந்தவர்கள் அவர்கள்.
“நான் ரமழான் மாதத்தில் ஒவ்வொரு தினத்தையும் எனது நண்பர்களுடனே கழித்தேன். நாங்கள் எப்போதும் ஒன்றாகவே இப்தாரில் உணவருந்தினோம். எமது விடுதியிலிருந்து வெளியில் சென்று சாப்பிடுவதும் ஒன்றாகத்தான்.
ரோஸ் பல்கலைக்கழகத்தில் பயின்று கொண்டிருந்தபோது சவூதி பிரஜையொருவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது ஒவ்வொரு வருடமும் அவர் ரமழானைக் கொண்டாடுகிறார்.
ரமழான் விடுமுறை எனக்கு சாதாரணமானது. அது எனக்கு அமெரிக்காவில் கிறிஸ்மஸைப் போன்றது. நான் கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தின் போது எல்லோருக்கும் பரிசுகள் வாங்குவேன். அது போன்றதே ரமழானும் என்றார்.
அனா மெயிலோவா – ஜோர்ஜியா
ஜோர்ஜியாவைச் சேர்ந்த அனா மெயிலோவா பின்வருமாறு தனது நோன்பின் அனுபவத்தை விபரித்தார். அவர் சவூதி அரேபியாவுக்கான தனது முதலாவது விஜயத்தின் போது நோன்பு நோற்றதை விபரித்தார்.
“நான் முதன்முறையாக சவூதி அரேபியாவில் கப்ஜியில் எனது நண்பி ஹைபா மற்றும் அவளது குடும்பத்துடன் ரமழானை கொண்டாடினேன். அவர்கள் இப்போது எனது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் போலாகி விட்டார்கள்.
நான் ஹைபாவை ஜோர்ஜியாவிலுள்ள பயண முகவர் நிறுவனம் ஒன்றிலே சந்தித்தேன். நாங்கள் இருவரும் அந்த நிறுவனத்தில் ஒன்றாகப் பணி புரிந்தோம்” என்கிறார் அனா மெயிலோவா.
அந்த பயண முகவர் நிலையத்தின் உரிமையாளர் ஹைபாவின் மாமியாவார். அவர் அனாவை தனது வீட்டுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். அன்று முதல் அவர்களது உறவு ஆரம்பமானது.
தற்போது வரை ரமழான் நோன்பு தொடர்பான பயிற்சிகளை ஒன்லைன் மூலமே பெற்று வந்தேன். பழகினேன். தற்போது என்னால் ரமழான் நோன்பினை முழுமையாக நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்கிறாள் அனா.
அவள் தொடர்ந்தும் தெரிவிக்கையில், “ஒவ்வொரு நாளும் நான் எனது குடும்பம் மற்றும் நண்பர்களை வீடியோ கோல் மூலம் தொடர்பு கொள்கிறேன். மிகவும் அழகான பல்வேறு வகையான சுவையான உணவுகளை அவர்களுக்கு காண்பிக்கிறேன். எனது குடும்பம் நண்பர்கள் மற்றும் ஏனையோர் இங்கு வருகை தந்தால் இங்குள்ள அனைத்து வகையான உணவுகளையும் ருசிக்க மறக்க வேண்டாம் என்கிறார். பெரும் எண்ணிக்கையிலானோர் ரமழானில் தங்களது மத நம்பிக்கைகள் எவ்வாறு இருந்தாலும் சவூதி அரேபியாவுக்கு வருகை தருவார்கள் என்று அவர் எதிர்பார்க்கிறார்.
சூரியன் அஸ்தமிக்கும் போது மக்கள் நோன்பு திறக்கிறார்கள். நோன்பு திறக்கும் போது விரைவாக உணவருந்தாது மெதுவாக உணவருந்துமாறு சுகாதார நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள். உடல் போஷாக்கினை உறிஞ்சிக் கொள்வதற்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும்.
ஜான் ஹாஸ் – ஜேர்மனி
ஜேர்மனைச் சேர்ந்த இராஜ தந்திரியான 34 வயதான ஜான் ஹாஸ் தனது ரமழான் அனுபவங்களை இவ்வாறு தெரிவிக்கிறார். அவர் 2021 ஆம் ஆண்டு ஜூலையில் ரியாதுக்கு வருகை தந்தார். அவர் தனது முதலாவது ரமழானை மினா பிராந்தியத்தில் கழித்தார்.
“ஜேர்மனி கெலோன் கிழக்கில் சிறு நகரமொன்றில் நான் சிறுவனாக இருந்த போது எனது கால்பந்தாட்ட குழுவில் முஸ்லிம்களை நான் நண்பர்களாகக் கொண்டிருந்தேன். அதனால் எனது சிறுவயதிலேயே ரமழான் பற்றி அறிந்திருந்தேன். ஆனால் அப்போது நான் நோன்பு நோற்பதைப் பற்றி கவனத்தில் கொள்ளவில்லை.
இப்போது நோன்பு நோற்பதற்கான சந்தர்ப்பம் கிடைத்ததால் அதன் மூலம் முஸ்லிம்களின் அனுபவம், அவர்களது வாழ்க்கை முறை பற்றி அறிந்து கொள்ள முயன்றேன்” என்கிறார் ஜான் ஹாஸ்.
முஸ்லிம்களின் நோன்பின் விதிகளை முழுமையாக கடைப்பிடித்து அவர் நோன்பு நோற்க முயன்றார். ஆனால் அதுமிகக் கடினமானது என உணர்ந்தார்.
“நான் வழமை போன்று காலையில் கோப்பி குடிப்பேன். பின்பு வழமைபோன்று நோன்பின்போது தண்ணீர் அருந்தினேன். ஆனால் சூரியன் அஸ்தமிக்கும் வரை எதுவும் சாப்பிட மாட்டேன்” என்கிறார் ஹாஸ்.
ரமழான் மாதத்தில் சவூதி அரேபியாவில் உணவகங்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும், இதனால் நோன்பு நோற்பது இலகுவாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
நான் அதிக நேரம் நண்பர்களுடனே செலவிட்டேன். அவர்களுடன் இணைந்தே நோன்பு திறப்பதற்கும் பழகிக் கொண்டேன். இந்நிகழ்வு அற்புதமானது.
அத்தோடு அவர்கள் பல்வேறு மத நம்பிக்கைகளை கொண்டவர்கள். அநேகமான வெளிநாட்டவர்கள் சவூதி அரேபியாவின் உள்நாட்டவர்களுடன் நட்புறவினைக் கட்டியெழுப்பி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்த நட்புறவு கலாசாரங்களையும் பழக்கவழக்கங்களையும் பகிர்ந்து கொள்வதற்கு காரணமாய் அமைந்துள்ளன.
சவூதி அரேபியாவின் மொத்த சனத்தொகை சுமார் 35 மில்லியன்களாகும். அங்கு சுமார் 9 மில்லியன் வெளிநாட்டு பணியாளர்கள் வாழ்கிறார்கள். இவர்களில் பெரும் எண்ணிக்கையானோர் முஸ்லிம் அல்லாதவர்களாவர்.
சவூதி அரேபியாவில் வாழும் முஸ்லிம் அல்லாதவர்கள் நோன்பு நோற்க வேண்டும் என்பது கட்டாயமில்லை.
உணவகங்கள் சிற்றூண்டிச்சாலைகள் ரமழானில் நோன்பு நேரத்தில் மூடப்பட்டிருக்கும்.
நன்றி : அரப் நியூஸ்
- Vidivelli