எஸ்.என்.எம்.சுஹைல்
நாடு முட்டுச் சந்தியில் நிற்கிறது. அடுத்த கட்டத்திற்குச் செல்ல முடியாத நிர்க்கதி நிலையொன்றை தோற்றுவித்திருக்கிறார் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச. பிழையான விவசாய கொள்கை மற்றும் பொருளாதார திட்டமிடல் என்பனவே இந்த நிலைமைக்கு உடனடிக் காரணங்களாகும். 1978 ஆம் ஆண்டுக்கு பின்னர் பின்பற்றப்பட்ட திறந்த பொருளாதார கொள்கை, வரையறையற்ற வெளிநாட்டு இறக்குமதி, உள்நாட்டு உற்பத்திகள் ஊக்குவிக்கப்படாமை என்பன நீண்டகால காரணிகளாகும்.
இன்றைய பொருளாதார நெருக்கடிகளுக்கு திறனற்ற நிர்வாகத்துறைக்கும் பிரதான பங்கு இருக்கிறது. இதனால்தான், நிலைமையின் காரண கர்த்தாவான ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவை ஜனாதிபதி பதவியிலிருந்து விலகும்படி வலியுறுத்தி தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. அத்தோடு, அரசின் நிர்வாக கட்டமைப்புகளும் இந்த நிலைமைக்கு பொறுப்புக் கூற வேண்டியவை.
ஊழல், மோசடி, துஷ்பிரயோகங்கள் மற்றும் வீண் விரயங்களையும் பிரத்தியேக காரணிகளாக குறிப்பிடலாம். அரச நிர்வாக கட்டமைப்பிலும் அதிகார தரப்பிலும் ஊழல் மோசடிகள் நிறைந்திருப்பதாக மக்கள் விடுதலை முன்னணி தொடர்ச்சியான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றது. ஊழல் மோசடிகள் பொருளாதார முன்னேற்றத்தை தடுப்பதில் பெரும் பங்காற்றுகின்றன என்பதை மறுக்க முடியாது.
இந்நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலையிலிருந்து நாட்டை உடனடியாக மீட்டெடுக்க முடியாது. இன்னும் சில மாதங்களில் இந்நிலைமை மேலும் உக்கிரமடையும். இப்போதே, முறையான பொருளாதார கொள்கைத் திட்டமொன்றை அமுல்படுத்தினாலேயே இன்னும் ஓரிரு வருடங்களுக்குள் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரலாம்.
இன்றைய நிலையில் ஆளும் தரப்பில் நம்பிக்கையிழந்துள்ள நிலையிலேயே அவர்களை ஆட்சியிலிருந்து வீட்டுக்குச் செல்லும்படி மக்கள் வீதிக்கு இறங்கி போராடி வருகின்றனர். எனினும், ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட இவர்கள் அரசியலமைப்பின்படியே இன்று ஆட்சியில் இருக்கின்றார்கள். மக்கள் தாம் வழங்கிய ஆணையை மீளப் பெற்றுக்கொண்டிருக்கிறார்கள். எனவே இவர்கள் நாட்டின் நலன்கருதி ஆட்சி அதிகாரத்திலிருந்து விடைபெற வேண்டும்.
எனினும், மற்றுமொரு தேர்தலை சந்திக்கும் நிலைமையில் இன்று நாடு இல்லை. அத்தோடு, அரசியலமைப்பின்படி உடனடியாக தேர்தலுக்குச் செல்லவும் முடியாது. நீதிமன்ற ஆலோசனைக்கமைவாகவே தேர்தலொன்றுக்கு முகம்கொடுக்க முடியும். அத்தோடு, நிறைவேற்று அதிகார ஜனாதிபதியை பதவி விலகச் செய்தல் என்ற கோரிக்கையை நடைமுறைப்படுத்தினாலும் அடுத்தது என்ன என்ற கேள்விக்கு விடை இல்லை. இருப்பினும், அரசியலமைப்பின் சட்ட ஏற்பாடுகளுக்கமைய இவற்றை சீர் செய்ய முடியும். என்றாலும் அதிகார பேராசை பிடித்த ராஜபக்சாக்கள் நாட்டின் நலன் கருதி பதவி விலகுவதற்கு தயாராக இருப்பதாக தெரியவில்லை.
ஜனாதிபதி இடைக்கால அரசை அமைப்பது தொடர்பாக கடந்த வாரம் கருத்து வெளியிட்டிருந்தார். அத்தோடு, பிரதமர் பதவி விலகுவார் என ஜனாதிபதி கூறியதாக செய்திகள் வெளியாகியிருந்தன. இதனை பிரதமரின் தரப்பு மறுத்திருந்தது. அத்தோடு, தான் எக்காரணத்தைக் கொண்டும் பதவி விலகப் போவதில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ச திட்டவட்டமாக அறிவித்துள்ளார். ஆளும் கட்சியின் நிலைமை இப்படித்தான் இருக்கிறது.
ஆளும் கட்சியின் நம்பிக்கை நட்சத்திரமாக இப்போது இருப்பவர் நிதி மற்றும் நீதியமைச்சர் அலி சப்ரி. தனது சட்ட மற்றும் மொழிப்புலமை மூலம் அவர் சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சு வார்த்தைகளை முன்னெடுத்து வருகிறார். ராஜபக்ச தரப்பில் யாருமே முன்வராத நிலையில் அல்லது அதற்கான தகுதிகளைக் கொண்டிராத நிலையில், நிதியமைச்சைப் பொறுப்பெடுத்துள்ளதன் மூலம் இன்றைய பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை ஓரளவு மீட்பதற்கான பங்களிப்பை அவர் வழங்குகிறார். எனினும் அவரது முயற்சிகள் எந்தளவு தூரம் வெற்றியைத் தரும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி உடனடியாக ஆட்சியமைக்கவோ அல்லது ஜனாதிபதி யோசனை முன்வைத்துள்ள இடைக்கால அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதற்கான விருப்பத்தையோ வெளிப்படுத்தவில்லை. அக்கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச மக்களின் ஆணையுடனேயே ஆட்சியை பெற்றுக்கொள்வோம் என கூறியிருக்கின்றார்.
ஐக்கிய மக்கள் சக்திக்குள் பொருளாதார நிபுணர்களான கபீர் ஹாசிம், ஹர்ஷ டி சில்வா மற்றும் எரான் விக்ரமரத்ன போன்றோர் இருக்கின்றனர். இவர்கள் நீண்டகாலமாக இந்த அரசாங்கத்தை எச்சரித்து வந்தனர். அத்தோடு, அரசாங்கத்தின் பிழையான பொருளாதார கொள்கைகள் பற்றி தெளிவுபடுத்தி வந்தனர். இதனை அரசாங்கமும் மக்களும் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. இன்று நிலைமை மோசமாகியிருக்கின்றது.
பாராளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியே இருக்கிறது. அக்கட்சியும் கட்சியின் தலைமையின் இன்றைய அரசியல் நகர்வுகளை பார்க்கும்போது இரண்டும் கெட்டான் நிலைமையே காணப்படுகின்றது. குறிப்பாக அரசாங்கத்திற்கு எதிரான கருத்துக்களை ஊடகங்கள் மூலமாக தெரிவித்து வந்தாலும் அரசாங்கத்தோடு தொடர்ந்து டீல் வைத்துக்கொண்டு நகர்வதாகவே தோன்றுகின்றது. இடைக்கால சர்வகட்சி அரசாங்கத்தை நிறுவுவதில் ஆர்வம்காட்டும் சுதந்திரக் கட்சியின் பொருளாதார கொள்கையில் தெளிவு இல்லை. ஆனாலும், 2019 க்கு பின்னர் அரசாங்கத்தின் விவசாய கொள்கையிலும் இவர்களுக்கு பெரும் பங்கு இருக்கிறது. அமைச்சரவையில் இடம்பிடித்திருந்த சு.க. மக்கள் புரட்சியொன்று ஏற்படும்வரை அமைதியாக இருந்துவிட்டு பின்னரே அரசாங்கத்திலிருந்து விலகி சுயாதீனமாக செயற்படப் போவதாக அறிவித்தது.
நாட்டின் இன்றைய நிலைமைக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கூடுதல் பொறுப்பு கூற வேண்டியவர். உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பான பல குற்றச்சாட்டுகள் அவர் மீது முன் வைக்கப்பட்டு வருகின்ற நிலையில் 2018 ஆம் ஆண்டு அரசியலமைப்பை மீறி ராஜபக்சாக்களை மீண்டும் அதிகாரத்துக்கு கொண்டுவந்தவரும் சிறிசேன தான். அத்தோடு, நல்லாட்சி அரசாங்கத்தோடு உறவுகளை முறித்துக்கொண்ட மைத்திரி 2019 ஜனாதிபதித் தேர்தலில் கோட்டபாய ராஜபக்ச போட்டியிடுவதற்கு பிரதான காரணகர்த்தாவாகவும் இருந்தார். எனவே, நாட்டின் நிர்வாகத்துறையில் அடுத்தடுத்து வந்த ஆட்சியாளர்களின் பிழையான நடவடிக்கையிலும் குறிப்பாக மஹிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேனவின் இறுதி ஆட்சிக் காலப் பகுதி மற்றும் கோத்தபாய ராஜபக்சவின் முழுமையான ஆட்சிக் காலப்பகுதியிலும் அரசியலமைப்பை மீறும் நடவடிக்கைகள் இடம்பெற்றிருக்கின்றன. 20 ஆம் திருத்தத்திற்கு சுதந்திரக் கட்சி முழு ஆதரவை வழங்கிய நிலையில் 19 தான் சரி என மைத்திரிபால சிறிசேன இப்போது கூறுகின்றார். ஆக அவர் பொறுப்புக் கூறலில் இருந்து விடுபட முடியாது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பே பாராளுமன்றில் நான்காவது கூடுதல் ஆசனங்களை வைத்திருக்கும் கட்சியாகும். அக்கட்சி தமிழர்களின் கோரிக்கைகளுடன் இன்றைய அரசியல் சூழ்நிலைகளை அணுகுவதை காண முடிகின்றது. இருந்தாலும் அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் இராசமாணிக்கம் சாணக்கியன் ஆகியோரின் நகர்வுகளை பார்க்கும் போது சில மாற்றங்களை காணக் கூடியதாக இருக்கின்றது.
மூன்றே பாராளுமன்ற உறுப்பினர்களை வைத்திருந்தாலும் தேசிய மக்கள் சக்தி அல்லது மக்கள் விடுதலை முன்னணியானது அரசுக்கு எதிரான நடவடிக்கைகளில் பலமாக செயற்படுவதாகவே தோன்றுகிறது. ஐக்கிய மக்கள் சக்தியும், தேசிய மக்கள் சக்தியும் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கும் எதிர்ப்பு பேரணிகளானது அரசாங்கத்தை அச்சுறுத்துவதாகவே தோன்றுகின்றது.
குறிப்பாக மக்கள் விடுதலை முன்னணியானது ஊழலுக்கு எதிராக செயற்படுவதையும் அரசியல் கொள்கை உருவாக்கத்தில் ஆர்வம் காட்டுவதாகவும் தெரிகிறது. எனினும் அவர்களின் முறையான பொருளாதார திட்டத்தையோ கொள்கையையோ நம்மால் காண முடியவில்லை.
பாராளுமன்றத்தில் ஒற்றை பிரதிநிதித்துவத்தை வைத்திருந்தாலும் இன்று மிகவும் பேசப்படும் நபராக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இருக்கிறார். 1978 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சி அறிமுகப்படுத்திய பொருளாதார கொள்கையில் முரண்பாடு இருந்தாலும் ரணில் விக்ரமசிங்க இன்று பேசும் பொருளாதார விடயங்கள் ஏற்புடையதாகவே இருக்கின்றது. குறிப்பாக எதிர்காலத்தையும் இளைஞர்களையும் மையப்படுத்தியதாக அவரின் கருத்துக்கள் வெளிப்படுவதை காணக் கூடியதாக இருக்கின்றது. அத்தோடு, சர்வதேசத்தை அணுகி எவ்வாறு பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள வேண்டும் என்ற நிலைப்பாட்டிலும் அவர் தெளிவாக இருக்கின்றார்.
பொருளாதார கொள்கை, எதிர்கால சந்ததியினரின் இருப்பு மற்றும் நாட்டின் நலன் குறித்து பேசும் ரணில் விக்ரமசிங்க தான் பலமாக இருப்பினும் அரசியல் கட்சி ரீதியில் மிகவும் பலவீனமாக இருப்பதையே உணர முடிகின்றது. இலங்கை மக்களால் புரிந்து கொள்ளப்படாத ஒரு அரசியல்வாதியாக இருந்த விக்ரமசிங்க இன்று மெல்ல மெல்ல புரிந்துகொள்ளப்படுகின்ற நபராக தோற்றமளிக்கிறார். எனினும், அடுத்த தேர்தலிலேயே அவரின் கொள்கைகள் எந்தளவு வெற்றி பெறும் என்பதை அறிய முடியும்.
இதுதவிர, இந்த பொருளாதார நெருக்கடிகளிலும் இக்கட்டான அரசியல் சூழ்நிலையிலும் பதவிகளின் பின்னாலும் குறுகிய அரசியல் நோக்கிலான சண்டைகளினாலும் நாற்றம் எடுத்திருக்கிறது முஸ்லிம் அரசியல். எனவே, அக்கட்சிகளால் இன்றைய தேசிய பிரச்சினைக்கு எந்தவித தீர்வையும் வழங்க முடியாது என்பதே யதார்த்தமாகும்.
ஜனாதிபதியும் அரசாங்கமும் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி காலி முகத்திடலில் இளைஞர்கள் முன்னெடுத்து வரும் எழுச்சிப் போராட்டமானது ஒரு மாதத்தை எட்டுகின்றது. இந்நிலையில், ராஜபக்சாக்களை வீட்டுக்கு அனுப்பிவிட்டு அடுத்த நகர்வு என்ன என்பது பற்றிய தெளிவும் இளைஞர்களிடத்தில் இருத்தல் அவசியமாகும். அவ்வாறு ஒரு திட்டத்தின் ஊடாக அடுத்தகட்டத்தை நோக்கி நகர்வதன் ஊடாகவே வெற்றிகரமான புரட்சியாக இதனை மாற்ற முடியும். வெறுமனே ராஜபக்சாக்களுக்கு எதிரான போராட்டமாக மாத்திரம் இதனை முன்னெடுக்காது நாட்டை மீட்டெடுத்து சரியான திசையில் கொண்டு செல்வதாக அமைய வேண்டும். அதற்கான சரியான தலைமைத்துவத்தை தெரிவு செய்து நகர வேண்டும். – Vidivelli