(ஏ.ஆர்.ஏ.பரீல்)
காணாமல்போனோர் அலுவலகத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு என்னால் எந்தவித நிவாரணத்தினையும் உதவியினையும் வழங்க முடியாது என்பதை உணர்ந்ததன் பின்பே நான் எனது பதவியினை இராஜினாமா செய்தேன் என காணாமல் போனோர் அலுவலகத்தின் ஆணையாளர்களில் ஒருவராக பதவி வகித்த சிரேஷ்ட சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் தெரிவித்தார்.
2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் காணாமல் போனோர் அலுவலகத்தின் ஆணையாளர்களில் ஒருவராக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட சிராஸ் நூர்தீன் தனது பதவியை இராஜினாமா செய்வது தொடர்பில் அதற்கான காரணங்களைக் குறிப்பிட்டு ஜனாதிபதிக்கு கடிதமொன்றினை அனுப்பி வைத்திருந்தார்.
காணாமல்போனோர் அலுவலகம் சுதந்திரமாக செயற்பட வேண்டும். எந்தவொரு தரப்பினதும் தலையீடுகள் இருக்கக்கூடாது. ஆனால் இவ் அலுவலகத்தின் மீது நீதியமைச்சின் தலையீடுகள், வெளிவிவகார அமைச்சு தேவையான உதவிகளை வழங்க தவறியமை, திறைசேரி தேவையான நிதியினை ஒதுக்காமை, அலுவலகத்தின் செயற்பாடுகளை செயற்திறனாக முன்னெடுப்பதற்கு ஏனைய ஆணையாளர்கள் முறையாக நியமிக்கப்படாமை என்பன தனது இராஜினாமாவுக்கான காரணிகள் என ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
சிராஸ் நூர்தீன் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில் காணாமல் போனோர் அலுவலகத்துக்கான ஆளனி எண்ணிக்கை 120 பேராக இருக்க வேண்டும். ஆனால் 23 பேரே நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.
காணாமல் போனோரின் 21,500 கோவைகளைக் கையாள வேண்டியுள்ளது. இலங்கை சர்வதேச உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளதன் பிரகாரம் இவ்வலுவலகம் வருடாத்தம் ஐக்கிய நாடுகள் சபைக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். ஆனால் அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை. 2018 இல் அது தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. 2021 ல் இறுதி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.
நான் பதவியேற்றதும் கடந்த டிசம்பர், ஜனவரி மாதங்களில் யாழ்ப்பாணம் கிளிநொச்சி பகுதிகளுக்கு கள விஜயத்தினை மேற்கொண்டு காணாமல் போனோர் குடும்பங்களின் பிரச்சினைகளை கேட்டறிந்தேன். என்றாலும் இவ் அலுவலகத்தின் ஊடாக எனது கடமைகளை சுதந்திரமாக முன்னெடுக்க முடியாதுள்ளது.
நான் கடந்த மார்ச் மாதம் பிரச்சினைகளைக் கூறி பதவியை இராஜினாமா செய்வதாகக் கூறினேன். வெளிவிவகார அமைச்சின் செயலாளருடன் கலந்துரையாடலும் இடம்பெற்றது. ஆனால் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை.
எனது பதவிக்காலம் முடிய மேலும் 32 மாதங்கள் இருக்கின்றன. என்றாலும் நான் நான்கு மாத சேவையின் பின்பு இராஜினாமா செய்துள்ளேன் என்றார்.- Vidivelli