(ஏ.ஆர்.ஏ.பரீல்)
சவூதி அரேபிய ஹஜ் அமைச்சு இலங்கைக்கு இவ்வருடம் ஹஜ் யாத்திரைக்காக 1585 கோட்டா வழங்கியுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் கிடைக்கப்பெற்றுள்ள ஹஜ் கோட்டாவை ஹஜ் முகவர்களுக்கிடையில் பகிர்ந்தளிப்பதற்காக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள அதிகாரிகள், அரச ஹஜ் குழுவுடன் எதிர்வரும் நாட்களில் கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளனர்.
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் ஹஜ் யாத்திரைக்கென 2018, 2019, 2020 ஆம் ஆண்டுகளில் சுமார் 4000 பேர் பதிவுக்கட்டணம் செலுத்தி தம்மைப்பதிவு செய்து கொண்டுள்ளனர். ஹஜ் கடமைக்காக பதிவு செய்து கொண்டுள்ளவர்களிலிருந்தே, சவூதி அரேபிய ஹஜ் அமைச்சின் ஹஜ் வழிகாட்டல்கள் மற்றும் விதிகளுக்கு அமைய பயணிகள் தெரிவு செய்யப்படுவார்கள் என முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் இப்றாஹிம் அன்ஸார் விடிவெள்ளிக்குத் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 65 வயதுக்குட்பட்ட கொவிட் 19 தடுப்பூசி மூன்றினைப் பெற்றுக்கொண்டுள்ளவர்கள் சவூதி அரேபியாவின் ஏனைய வழிகாட்டல்கள் விதிமுறைகளுக்கு அமைவாக ஹஜ் யாத்திரைகளுக்கு தெரிவு செய்யப்படுவார்கள். ஹஜ் பயணிகளை அழைத்துச் செல்லும் முகவர்களும் 65 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும் என்பது சவூதி ஹஜ் அமைச்சின் புதிய விதியாகும்.
இதேவேளை கடந்த வருடங்களில் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகி திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட விசாரணைகளில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டு ஹஜ் முகவர் அனுமதிப்பத்திரம் தடைசெய்யப்பட்டுள்ள முகவர்களுக்கு ஹஜ் கோட்டா பகிர்ந்தளிக்கப்படமாட்டாது என்றார்.
இதேவேளை அரச ஹஜ் குழுவின் தலைவர் அஹ்கம் உவைஸ் கருத்து தெரிவிக்கையில் 50 வயதுக்கும் 65 வயதுக்கும் இடைப்பட்ட விண்ணப்பதாரிகளுக்கும் முதற் தடவையாக ஹஜ் யாத்திரை மேற்கொள்ள விரும்புபவர்களுக்கும் இவ்வருட ஹஜ் யாத்திரிகர் தெரிவில் முன்னுரிமை வழங்கப்படும்.
அத்தோடு ஹஜ் கட்டணம் முகவர்கள் சவூதி அரேபியாவில் யாத்திரிகர்களுக்கு வழங்கும் ஹோட்டல் தங்குமிட வசதி, மக்கா ஹரம் சரீபுக்கும் தங்குமிடத்துக்கும் இடையிலான தூரம் என்பனவற்றை கவனத்தில் கொண்டு நிர்ணயிக்கப்படும் என்றார். – Vidivelli