அனைத்து மதத்தவர்களும் ஏற்கக்கூடிய அரசியல் தீர்வு

அரசியலமைப்பினூடாக பெற்றுக்கொடுக்கப்படும் என்கிறார் ரணில்

0 702

வடக்கில் தமிழ் மக்கள் அனுபவிக்கும் துயரங்களை நாம் அறிவோம். நாம் உருவாக்க முயற்சிக்கும் அரசியலமைப்பில் ஒற்றை ஆட்சிக்குள் பிளவுபடாத, பிளவுபடுத்த முடியாத இலங்கைக்குள் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் ஏற்றுகொள்ளக்கூடிய அரசியல் தீர்வு ஒன்றினை பெற்றுக்கொடுக்கத் தயாராக உள்ளோம்.  தமிழ் மக்களுடன் கலந்துரையாடி சகல இனத்தவருக்கும், சகல மதத்தவருக்கும் ஏற்றுகொள்ளக்கூடிய அரசியல் தீர்வொன்றை அரசியலமைப்பின் மூலமாக பெற்றுக்கொடுக்கும் நிலைப்பாட்டிலிருந்து நாம் மாறவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மீதான நம்பிக்கை பிரேரணை நிறைவேற்றப்பட்டதை அடுத்து அவர் சபையில் நன்றியுரை நிகழ்த்தியபோதே  இதனைக் குறிப்பிட்டார். அவர் மேலும் கூறியதாவது,

இந்தப் பிரேரணையை நிறைவேற்ற ஒத்துழைப்பு வழங்கிய சகல உறுப்பினர்களுக்கும் எனது நன்றிகளை தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன். கடந்த ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட அரசியல் சூழ்ச்சியை வெற்றிகொண்ட ஒரு நகர்வாகவே இந்த செயற்பாட்டை நான் கருதுகின்றேன். எனது நண்பர் அனுரகுமார திசாநாயகவின் வார்த்தைகளில் கூறுவதென்றால் ஒக்டோபர் சூழ்ச்சி என்றே கூறவேண்டும். இதில் பாராளுமன்றத்தை பாதுகாக்க நாம் அனைவரும் முன்வந்துள்ளோம். அமெரிக்க ஜனாதிபதி  ஆபிரகாம் லிங்கன் கூறியதன் பிரகாரம் ஜனநாயகம் என்பது  மக்களால் உருவாக்கப்பட்ட ஆட்சிதான் மக்களாட்சி. ஆகவே மக்கள் மூலமாக ஆட்சியை உருவாக்க வேண்டும். பாராளுமன்றம் ஒன்றினை உருவாக்கி அதில் பிரதமர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்பதே அதன் பொருள்.  மாறாக, ஜனாதிபதியால் உருவாக்கப்பட்ட அரசாங்கமல்ல. ஆகவே மக்களாட்சி கொள்கைக்கு நாம் அனைவரும் இணைந்துள்ளோம்.

நாம் எப்போதும் சட்டத்தை சரியாக கையாளும் நாடு. ஆகவே சட்டத்துக்கு கட்டுப்பட்டு முதன்மை சட்டமான அரசியலமைப்பிற்கு கட்டுப்பட்ட நபர்களாக நாம் செயற்பட வேண்டும்.  நாம் எப்போது அரசியலமைப்பிற்கு அமைய செயற்பட வேண்டும். எமக்கு எவ்வாறான அரசியல் கொள்கை இருந்தாலும் கூட அரசியலமைப்பிற்கு அனைவரும் கட்டுப்பட்டு செயற்பட வேண்டும். தாமரை மொட்டுக்கு வாக்களித்தவர்களாக இருக்கலாம் அல்லது மஹிந்த ராஜபக் ஷவிற்கு வாக்களித்தவர்களாக இருக்கலாம். ஆனால் அனைவரும் கூறுவது அரசியலமைப்பினை மீறாது செயற்பட வேண்டும் என்பது மட்டுமேயாகும். எமது போராட்டமும்  அதுவேயாகும்.

சபையில் 122 பேரும்  சபையை பாதுகாக்க முன்வந்தனர். இந்தப் போராட்டத்தில் வெற்றிக்காக போராடியுள்ளனர். அதேபோல் சபாநாயகர் முன்னெடுத்த நடவடிக்கைகளை, தலைமைத்துவத்தை  நாம் எப்போதும் மதிக்கின்றோம். 2015 ஆம் ஆண்டு நாம் ஆட்சிக்கு வந்த நேரம் அப்போது ஜனநாயகம் பலவீனமடைந்திருத நிலையில்  19 ஆம் திருத்தத்தை நிறைவேற்றி பாராளுமன்ற அதிகாரத்தை பலப்படுத்தி, ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைத்து, நீதிமன்ற சுயாதீனத்தை உருவாக்கி சுயாதீன ஆணைக்குழு அமைத்தோம். அப்போது சில விமர்சனங்கள் இருந்தன. ஆனால் நாம் உருவாக்கிய இந்த வரைபு மூலம்  இன்று ஜனநாயகத்தை காப்பாற்ற மக்களே முன்வந்து போராடக்கூடிய சூழல் உருவாகியுள்ளது.

அரசாங்கமாக எமக்குள் குறைகள் இருந்ததன, சரி செய்ய  முடிந்த, செய்ய முடியாத பல செயற்பாடுகள் இருந்தன. எம்மால் வேகமாகப் பயணிக்க முடியாதிருந்தது.  பிரதான  இரண்டு கட்சிகள் இணைந்து செயற்பட்ட காரணத்தினால், மாற்றுக் கொள்கைகள் இருந்ததனால் எம்மால் வேகமாக இலக்கை அடைய முடியாது போனது. மிகவும் மெதுவான பயணத்தையே நாம் பயணிக்க நேர்ந்தது. ஆனால் நாம் கடன் சுமையில் நெருக்கப்பட்ட  நாட்டினையே  பொறுப்பேற்றோம். கடன்களை திருப்ப செலுத்த முடியாத நாட்டினை நாம் பெற்றுக்கொண்டோம். இதன்போது எமக்கு சில நடவடிக்கைகளை கையாள வேண்டியிருந்தது. அதில் கடினமான சில நகர்வுகளும் இருந்தன.  அதேபோல் இயற்கை அனர்த்தங்களை சந்திக்க நேர்ந்தது. மக்களும்  பாரிய கஷ்டங்களை சந்திக்க நேர்ந்தது என்பதை நாம் ஏற்றுகொள்ள வேண்டும். ஆனால்  இந்த நெருக்கடிகளுக்கு மத்தியிலும் நாம் சுகாதாரம், கல்வி, வீட்டுத்திட்டம் ஆகியவற்றுக்கு அதிக முதலீடுகளை செய்தோம். சுதந்திர இலங்கையில் இவ்வாறு அத்தியாவசிய தேவைக்காக நிதி ஒதுக்கீடு செய்த முதல் அரசாங்கம் இதுவாகும்.  எமது ஆட்சியில்தான் இவற்றுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது. அதேபோல் வெளிநாட்டு முதலீடுகளை உருவாக்கி அதன் மூலமாக வேலை வாய்ப்புக்களை அதிகரிக்க நாம் நடவடிக்கை எடுத்தோம். இன்று மீண்டும் நாம் பின்னோக்கி செல்லவேண்டிய நிலைமை உருவாகியுள்ளது. பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய பாதிப்பேற்பட்டுள்ளது.

ஆனால் இவற்றை எம்மால் சரிசெய்ய முடியும். நாம் பொய்யான வாக்குறுதிகளை கொடுக்க விரும்பவில்லை. நாம் ஆட்சிக்கு வந்து விலை குறைப்பை செய்வோம் என கூறிக்கொண்டு ஒரு மாதத்தில் மீண்டும் விலை உயர்வை அதிகரிக்கும் நபர்கள் அல்ல. வரியை குறைக்கின்றோம் என கூறி ஒரு மாதத்தில் மீண்டும் வரியை அதிகரிக்கும் நபர்கள் அல்ல. எம்மால் முறையான  சலுகைகளை பெற்றுகொடுக்க முடியும் என வாக்குறுதி வழங்க முடியும்.   அதேபோல்  இப்போதுள்ள  பொருளாதார  நெருக்கடிக்கு முகங்கொடுத்து நாட்டினை மீட்டெடுக்கும் வேலைத்திட்டங்களை முன்னெடுக்கத் தயாராக உள்ளோம். அதேபோல் இன்று மாவை சேனாதிராஜாவின் கதையை நான் செவிமடுத்தேன்.  வடக்கில் தமிழ் மக்கள் படும் துயரம் என்னவென்பது எமக்கு நன்றாகத் தெரியும். எமது அபிவிருத்தி செயற்பாடுகளில் இந்தப் பிரச்சினைகளுக்கும் தீர்வுகளை பெற்றுக்கொடுக்க நாம் தயாராக உள்ளோம்.  சட்ட ரீதியான பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுக்கவும் நாம் தயாராக உள்ளோம்.

அதேபோல் நாம் முன்னெடுக்கும் புதிய அரசியலமைப்பினை உருவாக்கும் முயற்சியில் ஒற்றை ஆட்சிக்குள் பிளவுபடாத, பிளவுபடுத்த முடியாத இலங்கைக்குள் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் ஏற்றுகொள்ளக்கூடிய அரசியல் தீர்வொன்றினை பெற்றுக்கொடுக்க தயாராக உள்ளோம். அந்த அர்ப்பணிப்புக்கு நாம் தயாராக உள்ளோம். அதில் மாகாண சபைகளை பலப்படுத்தும் வேலைத்திட்டம் அனைத்தும் எமது திட்டத்தில் உள்ளது. அதேபோல் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்கும் நகர்வுக்கும் நாம் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றோம்.  இன்று நாம் அனைவரும் சிங்கள, தமிழ், முஸ்லிம் என்ற பாகுபாட்டில் நாம் செயற்படவில்லை.  மாறாக, இலங்கையர் என்ற உணர்வுடன் ஜனநாயகத்தை, உரிமைகளை பாதுகாக்க நாம் செயற்பட்டு வருகின்றோம். யுத்தத்தின் பின்னர் இன்று நாம் தமிழ் மக்களுடன் கலந்துரையாடி சகல இனத்தவருக்கும், சகல மதத்தவருக்கும் ஏற்றுகொள்ளக்கூடிய அரசியல் தீர்வொன்றை அரசியலமைப்பின் மூலமாக பெற்றுக்கொடுக்க நாம் தயாராக உள்ளோம். அந்த நிலைப்பாட்டிலிருந்து நாம் மாறமாட்டோம் எனக் குறிப்பிட்டார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.