(ஏ.ஆர்.ஏ.பரீல்)
“இவ்வருட ஹஜ் பயண ஏற்பாடுகளை அரசாங்கம் முன்னின்று மேற்கொள்ளவுள்ளதாக வதந்திகள் பரப்பப்பட்டுள்ளதாகவும், அவ்வாறான தீர்மானம் எதுவும் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படவில்லை எனவும் அரச ஹஜ் குழுவின் தலைவர் அஹ்கம் உவைஸ் ‘விடிவெள்ளி’க்குத் தெரிவித்தார். இதனை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் இப்ராஹிம் அன்ஸாரும் உறுதிப்படுத்தினார்.
இவ்வருடம் ஹஜ் முகவர் தெரிவுகளை ஹஜ் யாத்திரிகர்களே மேற்கொள்ள முடியும். அரச ஹஜ் குழு இவ்வருடம் அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ள முகவர்களின் பட்டியலை யாத்திரிகர்களின் பார்வைக்காக வெளியிடும் எனவும் அரச ஹஜ் குழுவின் தலைவர் அஹ்கம் உவைஸ் தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், முகவர் ஒருவருக்கு ஆகக்குறைந்தது 25 கோட்டாவும் ஆகக் கூடியதாக 100 கோட்டாவும் வழங்குவது பற்றி ஆலோசிக்கப்பட்டு வருகிறது. ஹஜ் யாத்திரிகர்களின் நலன்களைப் பேணும் வகையில் ஹஜ் முகவர்களுக்கு நிபந்தனைகள் விதிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.– Vidivelli