அரசியல்வாதிகளுக்கு முன்மாதிரியாக விளங்கிய முன்னாள் அமைச்சர் மர்ஹூம் எம்.எச்.முஹம்மத்

0 470

ஜனா­தி­பதி சட்­ட­த்த­ரணி
பாயிஸ் முஸ்­தபா

காலஞ்­சென்ற முன்னாள் அமைச்சர் எம்.எச். மொஹம்மட் இன் 6ஆவது சிரார்த்த தினம் கடந்த ஏப்ரல் 26 இல் நினை­வு­கூ­ரப்­பட்­டது. ஒரு சிறந்த அர­சி­யல்­வா­தி­யா­கவும் நல்ல மனித நேய­ரா­கவும் நீண்ட கால­மாக அவரை எனக்கு நன்கு தெரியும்.

அவ­ரு­டைய அர­சியல் வாழ்க்கை நீண்ட வர­லாற்றைக் கொண்­டது. அன்­றைய கால இளை­ஞர்­க­ளுக்கு விஷே­ட­மாக அர­சி­யலில் ஆர்வம் கொண்ட இளை­ஞர்­க­ளுக்கு அவ­ரு­டைய அர­சியல் வாழ்க்கை ஒரு முன்­மா­தி­ரி­யாகக் காணப்­ப­டு­கின்­றது.

எம்.எச்.மொஹம்­மடின் அர­சியல் பிர­வேசம் சந்­தர்ப்­ப­வ­சத்­தாலோ அல்­லது தற்­செ­ய­லா­கவோ இடம்­பெற்ற ஒன்­றல்ல. உள்ளுராட்சி மன்­றங்கள் மூலம் மக்­க­ளுக்கு நீண்ட கால­மாக சேவை செய்து வந்த அர­சியல் பாரம்­ப­ரியம் நிறைந்த குடும்­பத்­தி­லேயே அவர் பிறந்து வளர்ந்­தவர். இதன் கார­ண­மாக அவ­ரிடம் பிறப்­பி­லேயே அர­சியல் ஞானம் காணப்­பட்­டது. அவ­ரது கொள்­ளுப்­பாட்­டனார் அன்­றைய சட்­ட­வாக்கச் சபையின் அங்­கத்­த­வ­ராகக் காணப்­பட்­ட­துடன் 1876ஆம் ஆண்டில் இலங்கைப் பாரா­ளு­மன்­றத்தின் முன்­னோ­டி­யா­கவும் காணப்­பட்டார். அவ­ரது மூத்த மாமன்­க­ளான எம்.ஐ.எம் ஹனீபா மற்றும் எம்.எல்.எம். செய்­னுதீன் ஆகிய இரு­வரும் முறையே 1894 தொடக்கம் 1900 வரையும் 1900 தொடக்கம் 1907 வரையும் கொழும்பு மாந­கர சபை அங்­கத்­த­வர்­க­ளாக இருந்­தனர்.

மொஹம்மட் தனது அர­சியல் பய­ணத்தைத் தொடங்க மேற்­கொண்ட வழி­மு­றைகள், அர­சி­யலில் பய­ணிக்­கும்­போது எதிர்­கொண்ட சவால்கள் அவர் அர­சி­யலில் சிக­ரங்­களை அடைய வழி­வ­குத்­த­தோடு. ஓர் அர­சி­யல்­வா­தி­யாக அவ­ருக்குக் கிடைத்த அங்­கீ­கா­ர­மா­கவும் காணப்­ப­டு­கின்­றது.

மொஹம்மட் தனது 24ஆவது வயதில் மாந­கர சபை உறுப்­பி­ன­ராகத் தெரிவு செய்­யப்­பட்டார். ஆரம்­பத்தில் எஸ்.ஏ. விக்­கி­ர­ம­சிங்க மற்றும் பீட்டர் கெனமன் போன்ற தலை­வர்­களின் கருத்­துக்­களால் ஈர்க்­கப்­பட்ட இவர், இடது சாரி­யாக அர­சி­யலில் தடம் பதித்தார்.
மொஹம்­மதும், வீ.ஏ. சுக­த­தா­ஸவும், எம்.எச். மொஹம்­மடின் தந்தை ஆத­ர­வா­ளராக இருந்த இலங்கைத் தொழிற்­கட்­சியின் ஆத­ர­வா­ளர்­க­ளாக இருந்­த­துடன் இறு­தி­யாக கொழும்பு மாந­கர சபையின் உறுப்­பி­னர்­க­ளா­கவும் தெரிவு செய்­யப்­பட்­டனர்.

வாலிபர் மொஹம்மட் இலங்கை கமி­யூ­னிசக் கட்­சியின் அங்­கத்­த­வ­ராக இருந்த அதே­வேளை, 1947ஆம் ஆண்டு முதற் பகு­தியில் கொழும்பு மாந­கர சபைக்கு ஒரு சுயேட்சை உறுப்­பி­ன­ராகத் தெரிவு செய்­யப்­பட்டார். 1965ஆம் ஆண்டு பாரா­ளு­மன்­றத்­துக்குத் தெரிவு செய்­யப்­ப­டு­வ­தற்கு முன்னர் 1960ஆம் ஆண்டு ஒரு­முறை கொழும்பு மாந­கர சபை மேய­ராகத் தெரிவு செய்­யப்­பட்­டி­ருந்தார். 1965ஆம் ஆண்டில் நடை­பெற்ற பொதுத்­தேர்­தலில் பொரளைத் தொகு­தியில் போட்­டி­யிட்­ட­துடன், அவரை எதிர்த்துப் போட்­டி­யிட்ட சம­ச­மா­ஜ­வாதி விவியன் குண­வர்­த­னவைத் தோற்­க­டித்து அபார வெற்றி பெற்­ற­துடன், டட்லி சேனா­நா­யக்­கவின் அமைச்­ச­ர­வையில் தொழில் வேலை­வாய்ப்பு மற்றும் வீட­மைப்பு அமைச்­ச­ராக நிய­மிக்­கப்­பட்­டி­ருந்தார்.

1977ஆம் ஆண்டு இடம்­பெற்ற பொதுத்­தேர்­தலில் பொரளைத் தொகு­தியில் இருந்து மீண்டும் பாரா­ளு­மன்­றத்­துக்குத் தெரிவு செய்­யப்­பட்­ட­துடன், ஜே.ஆர். ஜய­வர்­த­னவின் அமைச்­ச­ர­வையில் போக்­கு­வ­ரத்து அமைச்­ச­ராக தெரிவு செய்­யப்­பட்­டி­ருக்க வேண்­டிய ஒரு­வரே இவர் ஆவார்.

ஜனா­தி­பதி ஆர்.பிரே­ம­தா­சவின் ஆட்சிக் காலத்தில் 9ஆவது பாரா­ளு­மன்­றத்தின் சபா­நா­ய­க­ராக நிய­மிக்­கப்­பட்­டி­ருந்தார். தனது அர­சி­யலில் பெரும் பகு­தி­யினை சிங்­கள மக்கள் செறிந்து வாழும் பொரளைத் தொகு­தி­யினைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­தி­ய­துடன் அம் மக்­க­ளிடம் இருந்து மிகுந்த ஆத­ர­வையும் வர­வேற்­பையும் பெற்­றி­ருந்தார்.

இவ­ரது இஸ்­லா­மிய குடும்பப் பின்­னணி கார­ண­மாக இவ­ரது வேட்பு மனுவை எதிர்த்­த­போ­திலும் மொஹம்­மடின் நாட்­டுப்­பற்றைப் புரிந்து கொண்­டதன் பின்னர், அவ­ரது தீவிர ஆத­ர­வா­ள­ராக மாறி­யி­ருந்தார். மொஹம்மட் சிங்­கள மக்­களின் சிறந்த நண்­ப­னாக இருந்­த­துடன் தனது சொந்த சமூ­கத்தின் தேவை­களை நிறைவு செய்­வதில் பின் நின்­ற­தில்லை.

பௌத்த விகா­ரை­க­ளுக்கும் தம்ம பாட­சா­லை­க­ளுக்கும் அவர் செய்த சேவைகள் இன்றும் சிங்­கள மக்­களால் நினை­வு­கூ­ரப்­ப­டு­கின்­றது. அவர் இறு­தி­வரை சிங்­கள மொஹம்மட் என்றே அழைக்­கப்­பட்டார். உதா­ர­ண­மாக அவர் போக்­கு­வ­ரத்து அமைச்­ச­ராக இருந்த போது, சிங்­கள மாண­வர்கள் தம்ம அற­நெறிப் பாட­சா­லை­க­ளுக்குச் செல்­வ­தற்கு இல­வச பஸ் சேவை ஒன்­றையும் வழங்­கி­யி­ருந்தார்.

அர­சியல் அல்­லது சமய விவ­கா­ரங்­களில் ஈடு­ப­டு­கின்ற போது, அவர் முஸ்லிம் தலைவர் என்று அழைக்­கப்­ப­டு­வதை அவர் விரும்­ப­வில்லை. முஸ்லிம் உல­மாக்கள் மற்றும் ஏனைய மத போத­கர்­க­ளுடன் வேறு­பாடு இன்றி சக­ல­ருக்கும் உரிய மரி­யா­தை­யையும் கௌர­வத்­தையும் வழங்­கினார்.

சமூ­கங்­களை ஒன்­றி­ணைக்கும் நோக்கில் “வாழ வழி விடு” என்ற கோட்­பாட்டை உரு­வாக்­கி­ய­தோடு, அவ­நம்­பிக்கை, வகுப்பு வாதம் போன்­ற­வற்றை அடிப்­ப­டை­யாகக் கொண்ட தேசிய வாதம் எமது சமூ­கத்தில் கரு­வுற்றுக் கொண்­டி­ருந்த வேளை, தமிழ், முஸ்லிம், சிங்­கள இனத் தலை­வர்கள் ஒன்­றி­ணைந்து செயற்­ப­டு­வதன் முக்­கி­யத்­து­வத்­தையும் வலி­யு­றுத்­தினார்.

மொஹம்மட் இனங்­க­ளுக்­கி­டை­யே­யான ஒற்­று­மை­யையும் சகோ­த­ரத்­து­வத்­தையும் வளர்க்க அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­பட்டார். சர்­வ­தேச ஒற்­று­மை­யையும் நல்­லி­ணக்­கத்­தையும் வளர்க்க இலங்கை இஸ்­லா­மிய நிலை­யத்தின் கீழ் தேசிய ஒற்­றுமை மற்றும் புரிந்­து­ணர்­விற்­கான மையத்­தினை உரு­வாக்­கி­யது குறிப்­பி­டத்­தக்­கது. இந்த அமைப்­பிற்கு சவூதி அரே­பி­யாவின் மக்­கமா நகரில் உள்ள ராபி­தத்துல் ஆலமுல் இஸ்லாம் அனு­ச­ரணை வழங்­கு­வ­துடன் கும்­பு­ரு­க­முவே வஜிர நாயக தேரர் (சப்­ர­க­முவ பல்­க­லைக்­க­ழக உப­வேந்தர்) மற்றும் பான­கல உப­திஸ்ஸ தேரர் (ஜப்பான் இலங்கை மஹா போதி அமைப்பின் இலங்­கைக்­கான பிர­தானி) ஆகியோர் அங்கம் வகிக்­கின்­றனர்.

ஜனா­தி­பதி ஜே.ஆர். ஜய­வர்­த­னவின் ஆட்சிக் காலத்தில் 1981ஆம் ஆண்டு இஸ்­லா­மிய கலா­சார திணைக்­க­ளத்தை ஸ்தாபித்­தது, அவர் முஸ்லிம் சமூ­கத்­துக்குச் செய்த பாரிய சேவை­யாகும். முஸ்லிம் மத விவ­கா­ரங்­க­ளுக்குப் பொறுப்­பான அமைச்சர் என்ற வகையில் ஹஜ் புனிதப் பயணம் தொடர்பில் எழுந்த பிரச்­சி­னை­களை வெற்­றி­க­ர­மாகத் தீர்த்து வைத்த மொஹம்மட், ஒரு சிறந்த ஆன்­மி­க­வா­தி­யா­கவும் காணப்­பட்டார். அவரது குறிக்கோள்கள் மிகவும் தூர நோக்குடையதாகக் காணப்பட்டது. வளர்ந்து வரும் ஓர் இளம் அரசியல்வாதிக்கு அவருடைய வாழ்க்கை ஒரு முன்னுதாரணமாகும். அத்தோடு, எதிர்கால முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு ஓர் எடுத்துக் காட்டுமாகும்.

மனி­தர்­களுள் ஒரு மகத்­தான மனி­த­ராக இன்றும் நினை­வு­கூ­ரப்­ப­டு­கின்றார். கடந்த தசாப்­தங்­களில் சகோ­தர சமூ­கங்­க­ளி­டையே ஏற்­பட்­டுள்ள தப்­ப­பிப்­பி­ரா­யங்­க­ளுக்கு எதி­ராக செயற்­பட்ட ஒரு­வ­ராகக் காணப்­பட்டார். எல்­லா­வற்­றிற்கும் மேலாக தான் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­திய சமூ­கத்­திற்கு மகத்­தான சேவை­யினை ஆற்­றி­யுள்ளார். அவ­ரது சேவை­களை ஏற்று அவ­ருக்கு அல்லாஹ் ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற சுவர்க்கத்தினை வழங்குவானாக! – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.