நாட்டின் பொருளாதார நெருக்கடி நிலை தொடர்பில் நிதியமைச்சர் அலி சப்ரி நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் வெளியிட்ட கருத்துக்கள், எதிர்காலம் குறித்த அச்சத்தை மேலும் தீவிரமடையச் செய்கின்றன.
இலங்கையின் கையிருப்பில் 50 மில்லியனுக்கும் குறைவான அமெரிக்க டொலர்களே பயன்படுத்தக்கூடிய வகையில் உள்ளதாக அவர் தெரிவித்திருக்கிறார். 2019 ஆம் ஆண்டு இறுதியில் தாம் அரசாங்கத்தைப் பொறுப்பேற்கும் போது, கையிருப்பில் 7 பில்லியன் அமெரிக்க டொலர் இருந்தது என்றும், தற்போது 50 மில்லியன் டொலர்கூட பயன்படுத்தக்கூடிய வகையில் கையிருப்பில் கிடையாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவிடமிருந்து எரிபொருள் இறக்குமதிக்காக பெற்றுக்கொள்ளப்பட்ட 500 மில்லியன் டொலரில் தற்போது, சுமார் 100 மில்லியன் டொலர் மட்டுமே எஞ்சியுள்ளது. அத்துடன், மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக இந்தியாவினால் வழங்கப்பட்ட ஒரு பில்லியன் டொலர் தொகையில், தற்போது 200 மில்லியன் டொலர் மாத்திரமே உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்;.
பொருளாதார நெருக்கடிக்கான பொறுப்பினை அரசாங்கம் முழுமையாக ஏற்கிறது. வரிக்குறைப்பு செய்தமை தவறான தீர்மானமாகும். அத்தியாவசிய சேவை விநியோகத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைக்கு இன்னும் 2 வருட காலத்தின் பின்னராவது தீர்வு காண முடியுமா என்பதைக் குறிப்பிட்டுச் சொல்ல முடியாதுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
அத்துடன் இறுதியாக சமர்ப்பிக்கப்பட்ட 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் காலத்திற்குப் பொருத்தமற்றது என்றும் புதிய வரவு செலவுத்திட்டம் ஒன்றை முன்வைக்க எதிர்பார்க்கிறோம் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
அமைச்சர் அலி சப்ரியின் இந்தக் கருத்துக்கள் அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசாங்கத்தின் கொள்கைகள் தவறானவை என்பதையும் நாட்டை நிர்வகிப்பதில் அவர்கள் தோல்வி கண்டுள்ளனர் என்பதையுமே பறைசாற்றுகின்றன.
கோத்தாபய ராஜபக்ச பதவிக்கு வந்ததும் செய்த முதல் தவறு வரிகளை நீக்கியமையாகும். பெறுமதி சேர் வரியை 15 வீதத்திலிருந்து 8 வீதமாக குறைத்ததுடன் ஏனைய 7 வரிகளையும் அரசாங்கம் நீக்கம் செய்திருந்தது. இதுவே இலங்கையின் கையிருப்பு திவாலாகுவதற்கான பிரதான காரணமாகும். இவ்வாறு வரிகளை நீக்கியமையை ஒரு வரலாற்றுத் தவறு என நிதியமைச்சர் அலி சப்ரி அண்மையில் ஆங்கிலப் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலும் சுட்டிக்காட்டியிருந்தார். 2019 இல் இவ்வாறு வரி நீக்கம் செய்யப்பட்டமையை கடுமையாக எதிர்த்த முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர, இதன் மூலம் இலங்கை கிரீஸ் அல்லது வெனிசுவேலா ஆகிய நாடுகளைப் போன்று வங்குரோத்து நிலைக்குச் செல்லும் என எச்சரித்திருந்தார். அவர் மறைந்துவிட்டாலும் இன்று அவரது கருத்துக்கள் நிதர்சனமாகியுள்ளன.
இந் நிலையில் இந்த தோல்விகள், பின்னடைவுகள் அனைத்திற்கும் பொறுப்பேற்பதாக கூறுவதுடன் மாத்திரம் நின்றுவிடாது, தமது அரசாங்கம் இழைத்த வரலாற்றுத் தவறுக்காக மக்களிடம் மன்னிப்புக் கோருவதுடன் உடனடியாக ஆட்சியிலிருந்தும் விலகிக் கொள்ள வேண்டும். மாறாக, தாம் பதவி விலகப் போவதில்லை என ஜனாதிபதியும் பிரதமரும் திரும்பத் திரும்பக் கூறி வருகின்றனர். சுமார் 25 தினங்களுக்கும் மேலாக ஜனாதிபதி செயலகத்தின் முன்பாக மக்கள் இரவு பகலாகப் போராடி வருகின்ற போதிலும் அரசாங்கம் மக்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்ப்பதாகத் தெரியவில்லை. மாறாக, போராட்டக்காரர்களை அடக்கி ஒடுக்குவதற்கே முயற்சித்து வருகிறது.
போராட்டக்காரர்கள் தற்போது அலரி மாளிகைக்கு முன்பாகவும் முகாமிட்டுள்ளனர். அங்கு போராட்டத்தில் ஈடுபடுவதற்காக அமைக்கப்பட்டிருந்த கட்டமைப்புகளை அகற்றுவதற்கு பொலிசார் நீதிமன்ற உத்தரவைப் பெற்று அகற்றியுள்ளனர். மறுபுறம் நேற்று பாராளுமன்றத்திற்குச் செல்லும் வீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். எப்படியேனும் பலத்தைப் பிரயோகித்து இந்த மக்கள் எழுச்சியை அடக்கிவிட்டு தாம் ஆட்சியில் தொடரலாம் என்பதே ராஜபக்ச குழுவினரின் எதிர்பார்ப்பாகவுள்ளது. எனினும் மக்கள் இந்த அச்சுறுத்தல்களுக்கு அடிபணிவதாகத் தெரியவில்லை.
இந்த அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டு வருவதில் பௌத்த பிக்குகளின் பங்களிப்பு அபாரமாகும். தற்போது அதே பிக்குகள் அரசுக்கு எதிராக களமிறங்கியுள்ளனர். நாட்டில் உறுதியான மாற்றங்கள் ஏற்படாத வரை எந்தவொரு அரசியல்வாதியையும் சந்திப்பதில்லை என மகாநாயக்க தேரர்கள் அறிவித்துள்ளனர். போராட்டங்களில் பங்கேற்கும் பௌத்த பிக்குகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது. நாடளாவிய ரீதியில் இவ்வாறு பிக்குகள் தொடர்ந்தும் வீதிக்கு இறங்குவார்களாயின் விளைவுகள் விபரீதமாகலாம். அதற்கு முன்னராக தாமாகவே பதவியிலிருந்தும் விலகிக் கொள்வது ஆட்சியாளர்களுக்கு நல்லது.
பாராளுமன்றத்தில் அரசாங்கத்திற்கு எதிராகவும் ஜனாதிபதிக்கு எதிராகவும் நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. எனினும் இவை வெற்றியளிக்குமா என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது. ஊழல்மிக்க ஆட்சியாளர்களுக்கு எதிராக பாராளுமன்றத்தில் கூட உறுதியான ஒரு நிலைப்பாட்டை எட்ட முடியாதிருப்பது துரதிஷ்டமே.
எது எவ்வாறிருப்பினும் நாடு மிக மோசமான நெருக்கடி நிலையைச் சந்தித்துவிட்டது. அடுத்து வரும் நாட்கள் இதைவிட மோசமாகவே மாறப் போகின்றன. இதற்கிடையிலேனும் ஒரு திருப்திகரமான மாற்றம் நாட்டில் ஏற்பட வேண்டும். அந்த மாற்றம் வெறும் மனிதர்களை மாத்திரம் மாற்றுவதாக அன்றி, முழு முறைமையையும் மாற்றுவதாக அமைய வேண்டும்.- Vidivelli