கலாநிதி அமீரலி,
மேர்டொக் பல்கலைக்கழகம்,
மேற்கு அவுஸ்திரேலியா
முஸ்லிம்களின் திருமறையிலே மூன்று வகையானவர்களைப்பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. இறை விசுவாசமுள்ளவர்கள் அல்லது முஃமின்கள், இறை நிராகரிப்பாளர்கள் அல்லது காபிர்கள், விசுவாச வேடதாரிகள், ஆஷாடபூதிகள் அல்லது முனாபிக்குகள் என்பவர்களே அம்மூவகையினருமாவர். இவர்களுள் மூன்றாம் வகையினரைப்பற்றியே முஸ்லிம்கள் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டுமென்று திருமறை திரும்பத் திரும்ப வலியுறுத்துகிறது.
முஃமின்களுடன் வாழலாம், காபிர்களுடனும் வாழலாம். ஆனால் முனாபிக்குகளுடன் வாழ்வது கடினம். கூடிக் குலாவிக் கூடவே இருந்து குழிதோண்டும் இக்கொடியோரைப்பற்றி மத ரீதியாக விளக்குவதற்கு நான் ஒரு மார்க்க மேதையல்ல. ஆனால் இன்று இலங்கையில் நடைபெறும் அரசியல் பொருளாதார நெருக்கடிகளின் மத்தியில் முனாபிக்குகள் எப்படி எப்படியெல்லாம் ஒரு சமூகத்தை விலை பேசுகின்றனர் என்பதை எண்ணிப்பார்த்து அதனால் எழுந்த சில கவலைபடிந்த சிந்தனைகளை ‘விடிவெள்ளி’ வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
நாடளாவிய ரீதியில் கோத்தாபய அராஜகத்துக்கெதிரான ஓர் அறப்போராட்டம் இன்று வலுப்பெற்றுக் கொண்டிருக்கிறது. “கோத்தாவே போ”, “225 தேவை இல்லை” என்ற விண்ணைப் பிளக்கும் கோஷ ஒலியுடன் தேசியக் கொடியை ஏந்தியவண்ணம், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது, சர்வமத, சர்வ இன ஆண் பெண் அனைவரையும் அணைத்து ஆயுதம் ஏந்தாத போராட்டம் ஒன்றை விழிப்படைந்த ஓர் இளம் சந்ததி தலைமைதாங்கி நடத்திச் செல்கின்றது.
சுதந்திர இலங்கையின் வரலாற்றிலே இவ்வாறான ஒரு மகத்தானதும் புனிதமானதுமான நிகழ்வு இதற்கு முன்னர் என்றுமே நடைபெற்றதில்லை. இந்தப்போராட்டம் எந்த அரசியல் சாயத்தையும் பூசிக்கொள்ளவுமில்லை, எந்த அரசியல் கட்சியும் அதற்குச் சொந்தம் கொண்டாடவும் இல்லை. இதுவும் இப்போராட்டத்தின் தனித்துவங்களுள் ஒன்று. ஆனால் அதன் கோரிக்கைகள் அரசியல் சார்பானவை. அரசியல் என்பது மிக முக்கியத்துவம் வாய்ந்தது, அதனை அரசியல்வாதிகளிடம் மட்டும் ஒப்படைப்பது தகாது என்று அன்றொரு நாள் ஆங்கிலக் கவிஞனும் இலக்கியவாதியுமான ரீ. எஸ். எலியெற் கூறியதற்கு ஓர் உதாரணமாக நடைபெறுகின்றது இப்போராட்டம். இந்தக் கருத்தை பிரஞ்சுத் தலைவன் சார்ள்ஸ் டி கோலும் உரைத்ததாகவும் ஒரு தகவல் உண்டு.
இன்று இலங்கை மக்களை வாட்டிவதைக்கும் பொருளாதாரப் பிரச்சினைகள் ஏராளம். அந்தப் பிரச்சினைகள் பல உயிர்களையும் பலி கொண்டுள்ளன. நாடே வங்குரோத்தாகிவிட்டதை அரசாங்கமே ஏற்றுக்கொண்டுள்ளது. ஆனால் அத்தனைக்கும் அடிப்படைக் காரணம் கோத்தாபய தலைமையிலான ராஜபக்ச குடும்ப ஆட்சியின் ஊழல் மலிந்த அராஜகம் என்பதை இனங்கண்டு அதனை ஒழிக்காமல் பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது என்பதே இப்போராட்டத்தின் சாராம்சம்.
கொழும்பு நகரின் காலி முகத்திடல் இப்போராட்டத்தின் மையக்களமாக மாறிக் கொண்டிருப்பதை ஒளிக்காட்சிகள் உலகெலாம் பரப்பிக் கொண்டிருக்கின்றன. 2011 இல் எகிப்திலே கைரோ நகரின் தஹ்ரீர் அல்லது தியாகிகள் சதுக்கத்தில் நிகழ்ந்த சம்பவங்களை அது ஞாபகப்படுத்துகிறது.
இந்தப் போராட்டத்திலே நோன்பையும் நோற்றுக்கொண்டு துணிச்சலுடன் பங்குபற்றி வீர உரையாற்றும் முஸ்லிம் ஆயிஷாக்களையும் கதீஜாக்களையும், அவர்களுடன் இணைந்து போராடும் பல நூற்றுக்கணக்கான முஸ்லிம் இளைஞர்களையும் குடும்பஸ்தர்களையும் காணும்போது பெருமையாக இருக்கிறது. அவர்களின் தேசப்பற்றும் சமூகப்பற்றும் முஸ்லிம் சமூகத்தின் அண்மைக்கால மாற்றத்தைத் தெளிவாகப் படம்பிடித்துக் காட்டுகின்றன. இந்த மாற்றம் ஏற்படவேண்டும் என்பதை கடந்த இருபது ஆண்டுகளாக எனது கட்டுரைகளில் வலியுறுத்தியுள்ளேன். இறைவனுக்கே புகழெல்லாம். முஸ்லிம்களை ஒரு வர்த்தக சமூகமெனப் பட்டஞ்சூட்டி, அவர்களுக்கும் இந்த நாட்டுக்கும் உள்ள உறவு மாட்டுக்கும் புல்லுக்கும் உள்ள உறவென வருணிக்கப்பட்டு, பள்ளிவாசலும், தொழிலும் குடும்பமும் என்ற ஓர் அரணுக்குள் வாழ்வைக் கழித்த ஒரு சமூகம் எவ்வாறு கல்வி வளர்ச்சியால் இலங்கையின் உயிரோட்டமுள்ள ஒரு சமூகமாக மாறியுள்ளது என்பதற்கு அவர்களின் அறப்போராட்டப் பங்கு சிறந்த ஓர் எடுத்துக்காட்டு.
முஸ்லிம்கள் நாட்டின் பொதுப் பிரச்சினைகளைப் பொறுத்தவரை மற்றவர்களுடன் இணைந்து போராடாது ஒதுங்கி இருப்பர் என்ற ஒரு கறை வரலாற்றில் படிந்துள்ளது என்பதை கடந்த வாரக்கட்டுரையில் நான் சுட்டிக் காட்டினேன். முஸ்லிம்கள் செறிந்து வாழும் கிழக்கு மாகாணம் இன்றைய போராட்டத்தின் ஒரு கிளைக்களமாக மாற வேண்டியது அவசியம். இந்தப் பொறுப்பை முஸ்லிம் புத்திஜீவிகள் துணிவுடன் ஏற்கவேண்டும். ஏற்பார்களென இக்கட்டுரை எதிர்பார்க்கிறது. ஏனெனில் முஸ்லிம்களுக்குள்ள பிரச்சினைகளை முஸ்லிம்களால் மட்டும் தனித்துநின்று தீர்க்க முடியாது. தேசிய நீரோட்டத்துடன் இணைந்துதான் அவற்றை தீர்க்க வேண்டும். அதற்கு அவசியம் தேவை நாடளாவிய அறப்போராட்டங்களில் முஸ்லிம்கள் முழு மூச்சுடன் பங்குபற்றுவது. இப்போது நடைபெறும் அறப்போராட்டத்தைவிடவும் ஓர் அரிய சந்தர்ப்பம் இனியும் கிடைக்குமோ தெரியாது.
அது ஒரு புறமிருக்க, இவ்வாறான பெருமைமிக்க ஒரு மாற்றத்தின் மத்தியிலே முனாபிக்குகளாக முளைத்திருக்கும் ஒரு சில முஸ்லிம் தலைமைத்துவங்களைப் பார்த்து அவர்களைச் சபிப்பதா அல்லது அவர்களுக்காக இறைவனிடத்தில் மன்றாடுவதா என்பது தெரியவில்லை. முஸ்லிம்களின் உரிமைகள் எவை என்ற விபரமே இல்லாமல் அவைகளைப் போராடிப் பெறுவோம் என்று போலி உறுதி மொழிகளை வழங்கி, தாடியும் தொப்பியும் அணிந்துகொண்டு, அல்லாஹு அக்பர் என்ற கோஷத்துடன் தேர்தல் மேடைகளை மதப்பிரச்சார மேடைகளாக மாற்றி, முஸ்லிம் வாக்குகளைப்பெற்று நாடாளுமன்றம் சென்றபின், அங்கே சந்தர்ப்பம் வரும்போது பணத்துக்கும் பதவிக்கும் ஆசைப்பட்டு எதிரிகளுடன் கைகோர்த்துக்கொண்டு சமூகத்தையே விலைபேசும் இவர்களை முனாபிக்குகள் என்று அழைப்பதிலே தவறுண்டா?
இரண்டாயிரத்துப் பதினான்காம் ஆண்டிலிருந்தே அடுக்கடுக்காக முஸ்லிம்களுக்கெதிராக அவிழ்த்துவிடப்பட்ட பேரினவாதக் கலவரங்களை கண்டும் காணாததுபோலிருந்த அன்றைய பாதுகாப்புச் செயலாளர்தானே இன்றைய ஜனாதிபதி. நெறிதவறிய ஒரு முஸ்லிம் தீவிரவாதக் கும்பலை கருவியாகப் பயன்படுத்தி அரங்கேற்றப்பட்ட ஒரு கொலைவெறி நாடகத்தால்தானே அவர் ஜனாதிபதியாக வரமுடிந்தது என்று பலராலும் இப்போது கருதப்படுகின்றது. அப்படி ஜனாதிபதியாகிய பின்பாவது முஸ்லிம்களுக்கெதிரான வன்முறைகளுக்கு இவரால் முற்றுப்புள்ளி வைக்க முடிந்ததா? அந்தச் சம்பவங்களை பட்டியலிட நான் விரும்பவில்லை. அண்மையில் கூரகலை பள்ளிவாசலின் சில பகுதிகளைத் தகர்ப்பதற்கு அனுமதியளித்தவரும் இவர்தானே. அப்படிப்பட்ட ஒரு ஜனாதிபதியின் அதிகாரங்களை மேலும் வலுப்படுத்துவதற்காக நாடாளுமன்றத்தில் 20ஆம் திருத்தம் கொண்டுவரப்பட்டபோது பணத்துக்காகவும் பதவிக்காகவும் அதனை ஆதரித்துக் கை உயர்த்தியவர்கள்தானே ஏழு முஸ்லிம் தலைமைகள். முழு முஸ்லிம் சமூகமுமே தேசத்தின் இழிசொல்லுக்கானது இந்த முனாபிக்குகளால் என்பதை எவ்வாறு மறப்பதோ? இப்போது அதைவிடவும் கீழ்த்தரமான ஒரு செயலை, அதுவும் நாடே கொந்தளித்து அறப்போராட்டத்தில் குதித்துள்ள வேளையில் அந்தப் போராட்டத்தின் இலட்சியங்களைக்கூட விளங்க முடியாமல் அற்ப அமைச்சுப் பதவிகளுக்காக முஸ்லிம் சமூகத்தை மீண்டும் ஒரு முறை அடகுவைத்துள்ள தலைமைத்துவத்தை சமூகம் மன்னிக்குமா என்பது சந்தேகமே.
ஆனாலும் இவர்கள் அந்தப் பதவிகளில் நீண்ட காலம் நீடிக்கப்போவதில்லை என்பது மட்டும் உறுதி. புதிதாக அமைக்கப்பட்டுள்ள அமைச்சரவை புதிய கலசத்தில் ஊற்றிய பழைய மது என்பதை யாவரும் அறிவர். ஏற்கனவே பதவி துறந்த அமைச்சர்களின் இரத்த வாரிசுகளே அந்தப் பதவிகளுட் பெரும்பாலானவற்றை கௌவிக் கொண்டுள்ளனர் என்பதும் இப்போது தெளிவாகிவிட்டது.
அதே சமயம் அறப்போரை எப்படியாவது முடிவுக்குக் கொண்டுவரும் உபாயங்களிலும் ஜனாதிபதி இறங்கியுள்ளதாகவும் செய்திகள் கசிகின்றன. றம்புக்கனையில் ஓர் அப்பாவி உயிர் பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியாகியுள்ளது. இன்னும் எத்தனை உயிர்கள் பலியாகப் போகிறதோ? ஆனால் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபை இவற்றையெல்லாம் களத்திலிருந்தே நோட்டமிட்டுக் கொண்டிருக்கின்றது. ஏற்கனவே உலக அரங்கில் தனது பெயரை மாசுபடுத்திக்கொண்ட ராஜபக்ச ஆட்சி, ஏதாவது அசம்பாவிதங்களை எப்படியாவது ஏற்படுத்தி அவற்றை ஒரு சாட்டாகப் பாவித்து படைகளைக்கொண்டு அறப்போராட்டத்டதை அடக்க நேரிட்டால் சர்வதேச நாணய நிதியின் உதவிகள் கிட்டுமா என்பதும் சந்தேகம். அவ்வாறாயின் பொருளாதார நெருக்கடி இன்னும் பெருகும்.
அறப்போராட்டம் தனது குறிக்கோளை அடையும்வரை ஆறுதல் அடையப்போவதில்லை. ஏனெனில் அதைத்தலைமை தாங்கி நடத்துபவர்கள் விழிப்புற்ற ஓர் இளந்தலைமுறையினர். அவர்கள் ஜனாதிபதியின் பசப்பு வார்த்தைகளுக்கு மசியப் போவதில்லை. இதுவரை காலமும் இனவாரியாகவும் மொழிவாரியாகவும் மதவாரியாகவும் மக்களைப் பிரித்து ஏமாற்றி ஆட்சிக்கு வந்தபின்னர் அலிபாபாக்களாக மாறிய அரசியல்வாதிகளை அவர்கள் இனங்கண்டுள்ளனர். அந்தக் கொள்ளையர்களுக்கு இனிமேலும் சந்தர்ப்பத்தை வழங்க அவர்கள் ஒருபோதும் உடன்படப் போவதில்லை. அவர்களை ஏமாற்ற முடியாது. ஜனாதிபதி ராஜினாமாச் செய்தே ஆகவேண்டும். ராஜபக்ச அரசாங்கமும் கலைக்கப்பட்டே தீரவேண்டும்.
பொறுப்பு வாய்ந்த புதிய அரசை மக்கள் தெரிந்தெடுப்பதற்கு வழிவகுக்கும்வரை அவர்கள் போராடுவர். அந்தப் பொறுப்பை எதிர்க்கட்சிகள் ஏற்று அரசியல் சட்டத்தில் பொருத்தமான மாற்றங்களைக் கொண்டுவந்து சாத்தியப்படுத்தக் கடமைப்பட்டுள்ளன. அவ்வாறான மாற்றங்களேற்பட்டு பொதுத் தேர்தலொன்று நடைபெறும்போது இந்த முனாபிக்குகளின் முன்னணியை முறியடிப்பது முஸ்லிம்களின் கடமை. அதைச் செய்யாவிடின் இறைவனும் உங்களை மன்னிக்கமாட்டான். எத்தனை காலம்தான் அவர்கள் உங்களை ஏமாற்றுவார்கள்? நீங்களும் எத்தனை காலம்தான் ஏமாறப்போகிறீர்கள்? இனவாரியான கட்சிகளின் எதிர்காலம் இருள்படிந்தது என்பதையே இன்றைய அறப்போராட்டம் வலியுறுத்துகிறது.- Vidivelli