எஸ்.என்.எம்.சுஹைல்
முஸ்லிம் அரசியல் கட்சிகளினதும் அதன் தலைவர்கள், உறுப்பினர்களினதும் ஏமாற்று நாடகங்கள் மீண்டும் அரங்கேறி வருகின்றன. நாட்டில் தேசிய ரீதியாக அரசியல் மாற்றம் ஒன்றைக் கோரி அனைத்து இன மக்களும் ஒன்றிணைந்து போராடி வருகையில், முஸ்லிம் அரசியல் மீண்டும் அதன் மோசமான பக்கத்தைக் காண்பிக்கத் தொடங்கியிருக்கிறது.
நாடு அரசியல் மற்றும் பொருளாதார ரீதியில் பாதாளத்தை நோக்கிச் செல்வதற்கு ஊழல் மோசடிமிக்க கோத்தபாய – மஹிந்த அரசாங்கமே காரணமாக இருக்கிறது என்பது காலி முகத்திடலில் 20 நாட்களாக தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருக்கும் இளைஞர்களின் பிரதான குற்றச்சாட்டாக இருக்கிறது. இவ்வாறானதொரு பயனற்ற அரசாங்கத்தை அரசியலமைப்பின் 20 ஆம் திருத்தம் ஊடாக பலப்படுத்திய பெருமை முஸ்லிம் பிரதிநிதிகளையே சாரும்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் (4 உறுப்பினர்கள்), அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் (3 உறுப்பினர்கள்), தேசிய காங்கிரஸ் (ஒருவர்) ஆகியோருடன் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் 3 முஸ்லிம்களுமாக 11 பேர் 20ஆம் திருத்தம் உட்பட அரசாங்கம் கொண்டு வந்த அனைத்து திட்டங்களுக்கும் கண்ணை மூடிக்கொண்டு கை உயர்த்தினர்.
இவ்வாறு தனி நபரின் கைகளில் அதிகாரங்களைக் குவிப்பதற்கு ஆதரவளித்ததன் காரணமாக இன்று முழு நாடும் குட்டிச்சுவராகியுள்ளது. இதற்கான பொறுப்பை 20ஐ ஆதரித்த அத்தனை முஸ்லிம் எம்.பி.க்களும் ஏற்க வேண்டும். இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவதற்காக மக்கள் இரவு, பகலாக போராடி வருகையில் முஸ்லிம் எம்.பி.க்கள் சிலர் தொடர்ந்தும் அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சுப் பதவிகளைப் பெற்றிருப்பது முஸ்லிம்களை மாத்திரமின்றி ஏனைய இன மக்களையும் கோபத்திற்குள்ளாக்கியுள்ளது.
முஸ்லிம் காங்கிரஸின் மரச் சின்னத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நஸீர் அஹமட் சுற்றாடல்துறை அமைச்சராகவும் திகாமடுல்ல மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மயில் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எஸ்.எம்.எம். முஸர்ரப் ஆடைக் கைத்தொழில் உள்நாட்டு உற்பத்தி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராகவும் பதவியேற்றுள்ளனர். இது மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கின்றது. இதனால், பொத்துவில் மற்றும் ஏறாவூர் பகுதிகளில் இவர்களுக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு எதிர்ப்பை வெளியிட்டனர். அத்தோடு, காலிமுகத்திடல் கோட்டா கோ கமயிலும் இவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டன.
இது இப்படியிருக்க, கட்சியின் கட்டுப்பாட்டை மீண்டுமொரு தடவை மீறிக்கொண்டு அமைச்சுப் பதவியை பெற்றுக்கொண்ட நஸீர் அஹமட் தன்னை ஓர் அவமானச் சின்னமாக மாற்றிக்கொண்டுள்ளார் என்று குற்றஞ்சாட்டியிருந்தார் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்.
அதேபோன்று, கடந்த வாரம் பாராளுமன்றத்தில் உரையாற்றிய அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன், தமது கட்சிக்கு வாக்களித்தவர்களிடம் மன்னிப்பு கோரியிருந்தார்.
“கோட்டாபய ராஜபக்ஷ இந்த நாட்டுக்கு பொருத்தமற்றவர், நாட்டை குட்டிச் சுவராக்கிவிடுவார், எனவே அவருக்கு வாக்களிக்காமல் எங்களுக்கு வாக்களியுங்கள் என்று கூறியே அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மக்களிடம் வாக்கு கேட்டது. நான் உட்பட முஸர்ரபாக இருக்கலாம், இஸாக் ரஹ்மானாக இருக்கலாம், அலி சப்ரி ரஹீமாக இருக்கலாம். அனைவரும் கோத்தா அரசுக்கு எதிராகவே வாக்கு கேட்டு பாராளுமன்றம் வந்தோம். நான் சிறையில் இருக்கும்போது அவர்களை பயன்படுத்தி 20ஐ நிறைவேற்றிக் கொண்டீர்கள். இன்று வெட்கம் இல்லாமல் எனது கட்சிக்காரர்களுக்கு அமைச்சுப் பதவியும் வழங்கியிருக்கிறீர்கள். அவர்களும் வெட்கமில்லாமல் அமைச்சுப் பதவியை பெறுகின்றனர்” என ரிஷாட் உரையாற்றியிருந்தார்.
மு.கா.விலிருந்து நஸீர் அகமட் நீக்கம்
முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உச்ச பீடம் கடந்த 22 ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொழும்பில் கூடியிருந்தது. இதன்போது, கட்சியின் 4 பாராளுமன்ற உறுப்பினர்கள் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தமை குறித்து விளக்கம் கோரும் விடயம் குறித்து ஆராயப்பட்டதாக கட்சியின் தலைவர் ஹக்கீம் தெரிவித்தார்.
மேலும், அவர்களில் மூன்று பேர் அனுப்பியிருக்கும் விளக்கங்களை மேலதிக விசாரணைகளுக்காக ஓய்வுபெற்ற நீதிபதி ஊடாக விசாரணை நடத்துவது என தீர்மானித்திருக்கிறோம். அதுவரையும் அவர்களை கட்சியின் உறுப்புரிமையிலிருந்து தற்காலிகமாக நிறுத்துவதாக முடிவெடுத்திருக்கிறோம். நஸீர் அஹமட் அனுப்பியிருந்த விளக்கம் கட்சிக்கு திருப்திகரமாக அமையவில்லை என்ற அடிப்படையிலும் அவர் உண்மைக்கு புறம்பான விடயங்களை அதில் சொல்லியிருக்கிறார் என்ற அடிப்படையிலும் அவரை உடனடியாக கட்சியிலிருந்து நீக்குவது என்றும் தீர்மானித்திருக்கிறோம் என்று உச்ச பீட கூட்டத்தின் பின்னர் மு.கா. தலைவர் குறிப்பிட்டிருந்தார்.
நஸீர் அகமடின் பதில்
தான் கட்சியிலிருந்து நீக்கப்பட்டமை தொடர்பில் அமைச்சர் நஸீர் அகமட் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தான் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதற்கு ரவூப் ஹக்கீமின் தீர்மானமே காரணமாகும் என கூறியுள்ள அமைச்சர் நஸீர் அஹமட், அவ்வாறிருக்கையில் முறையான விசாரணைகள் எதுவுமின்றி முஸ்லிம் காங்கிரஸில் இருந்து என்னை திடீரென நீக்கிவிட்டதாகக் கூறி அவர் எவ்வாறு இந்த நாட்டைத் தவறாக வழிநடத்த முடியும்?” என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். இவ்வாறு தாம் ஆதரிப்பதற்கு முன்னர் மு.கா. தலைவருக்கும் பசில் ராஜபக்சவுக்குமிடையில் நடந்த இரகசிய சந்திப்புகள் பற்றிய உண்மைகளையும் அவர் வெளியிட்டுள்ளார்.
“தற்போது நமது அயல் நாடொன்றில் இலங்கையின் தூதுவராக இருக்கும் அவரது நண்பருடன் முஸ்லிம் காங்கிரஸினதோ அல்லது சமகி ஜன பலவேகயவின் அனுமதி இன்றி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதுடன் பொதுஜன பெரமுன மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியுடன் உறுதியான புரிந்துணர்வுக்கும் ரவூப் ஹக்கீம் வந்ததை அவரால் மறுக்க முடியுமா?
அதனை தொடர்ந்து, 2020 ஒக்டோபர் 18ஆம் திகதி ரவூப் ஹக்கீமின் கார்னிவல் அலுவலகத்தில் ஜனாதிபதியின் சகோதரர் பசில் ராஜபக்சவுடன் ஒரு மணித்தியாலத்திற்கு மேல் சந்திப்பு நடத்தியதை ஹக்கீம் மறுக்க முடியுமா?
அந்த சந்திப்பில் ரவூப் ஹக்கீமின் அழைப்பின் பேரில் நான் உட்பட பைசால் காசிம், எச்.எம்.எம். ஹரீஸ், தௌபீக் ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டதுடன் எங்கள் அனைவரையும் 20வது திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களிக்குமாறும் பொதுஜன பெரமுன அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுமாறும் எங்களை கேட்டுக் கொண்டதோடு, நான் அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற விரும்பினாலும் சமகி ஜன பல வேகயவின் தலைமைத்துவம் மற்றும் அவரது கண்டி மாவட்ட தேர்தலில் சமகி ஜன பலவேகயவில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு என்பன காரணமாக அவரால் அவ்வாறு செய்ய முடியாமல் உள்ளது.
ஜனாதிபதி அமைச்சரவையில் அங்கம் வகிக்குமாறு அழைத்ததன் பின்னர் தேசிய நலன் கருதி அதனை நான் ஏற்றுக்கொண்டேன். எந்த விசாரணையும் இன்றி என்னை உடனடியாக கட்சியினை விட்டும் நீக்கியதாக கூறப்படும் எந்தத் தகவலும் இதுவரை எனக்கு வரவில்லை, அவ்வாறு கிடைத்தால் அதற்குத் தகுந்த பதிலளிப்பேன்” எனத் தெரிவித்துள்ளார்.
ரிஷாடுக்கு சவால் விடும்
முஸர்ரப் மற்றும் அலி சப்ரி ரஹீம்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உயர்பீடம் கடந்த 23 ஆம் திகதி சனியன்று கூடியது. அதன் பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அ.இ.ம.கா. தலைவர் கருத்து வெளியிடுகையில்,“அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களான இசாக் ரஹ்மான், அலி சப்ரி ரஹீம், எஸ்.எம்.எம். முஸர்ரப் ஆகியோர் கட்சியின் தீர்மானங்களுக்கு எதிராக செயற்பட்டமைக்கு விளக்கம் கோரி கட்சி அனுப்பி வைத்த கடிதத்திற்கு அவர்கள் பதில் கடிதம் அனுப்பியிருந்தனர். அது நீண்டகாலம் நிதானமாக ஆராயப்பட்டு குறித்த பாராளுமன்ற உறுப்பினர்களை விசாரணை செய்வதற்கு அரசியல் உயர்பீடம் முடிவெடுத்துள்ளது. எதிர்வரும் மே மாதம் 4,5 அல்லது 9 ஆம் திகதிகளில் அவர்கள் விரும்பும் ஒரு தினத்தில் அவர்கள் அரசியல் பீடத்திற்கு முன்னிலையாகி விளக்கமளிக்க முடியும்” என கட்சித் தலைவர் ரிஷாட் பதியுதீன் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் கட்சியின் தலைவருக்கு சவால் விடும் வகையில் இராஜாங்க அமைச்சர் முஸர்ரப் மற்றும் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் ஆகியோர் அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர்.
“இருபதுக்கு ஆதரவாக வாக்களிக்கும்படி மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் தான் கூறவில்லை என்று கட்சியின் தலைவரால் (ரிஷாட்) சத்தியம் செய்ய முடியுமா?” என இராஜாங்க அமைச்சர் முஸர்ரப் சவால் விடுத்துள்ளார்.
அத்தோடு, ஆளும் கட்சியிலுள்ள முக்கிய அரசியல் புள்ளி ஒருவரோடு கடைசி நேரத்தில் பேசி தமது கட்சி உறுப்பினர்கள் அரசுக்கு ஆதரவாக வாக்களிப்பதாக ரிஷாட் உறுதிமொழி அளித்தார். நானும் வாக்களிக்கட்டுமா என்று மர்ஜான் பழீல் எம்.பியிடம் கேட்டார் என்று கூறியுள்ள முஸர்ரப்,என்னுடைய சவாலுக்கு அவர் பதிலளிக்கட்டும். அரசாங்கத்திற்கு வாக்களிக்க வேண்டாம் என பொய் சொல்லி அவரால் நடிக்க முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோன்று அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கும் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமும் கட்சித் தலைமை மீது சவால் விடுத்துள்ளார். “உங்களின் விருப்பப்படி 20 ஆவது திருத்த சட்ட மூலத்திற்கு வாக்களிக்குமாறும், இவ்வாறு நான் சொன்னதாக வெளியிலோ அல்லது ஊடகங்களிலோ சொல்ல வேண்டாம் எனவும் ரிசாட் பதியுதீன் எம்மிடம் கேட்டுக்கொண்டார். தலைவர் அன்று சொன்ன ஒரே வார்த்தைக்காக இதுபற்றி நாம் யாரும் வாய் திறக்கவில்லை. ஆனாலும், தனது அரசியல் தேவைக்காக எங்களை கயவர்கள் என்று சொல்லி மக்களிடம் மன்னிப்புக் கோருவதாக பாராளுமன்றத்தில் உணர்ச்சிவசப்பட்டு உரையாற்றியிருந்தார். எனவே,தான் 20க்கு வாக்களிக்க சொல்லவில்லை என்றால், புத்தளம் பெரிய பள்ளிக்கு வந்து நான் அப்படிக் கூறவில்லை என்று சத்தியமிடுமாறு அழைக்கிறேன்” என்றும் அலி சப்ரி ரஹீம் சவால் விடுத்துள்ளார்.
தலைவர்களின் ஆசீர்வாதத்துடன்தான் வாக்களித்தார்களா?
இதனிடையே, தலைவர்களின் அனுமதி மற்றும் ஆசீர்வாதத்துடன் தான் தாம் 20 க்கு ஆதரவளித்ததாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு இதுவரை ஹக்கீமோ ரிஷாடோ உரிய பதிலளிக்கவில்லை. பதில் தருவார்கள் என்று எதிர்பார்க்கவும் முடியாது. இவர்கள் கடந்த காலங்களில் எவ்வாறு டீல் அரசியல் செய்தார்கள் என்பதை மக்கள் நன்கறிவார்கள். இந்த விடயத்தில் கட்சி உறுப்பினர்களும் தலைமைகளும் இணைந்து மக்களை ஏமாற்றும் நாடகத்தை அரங்கேற்றுகின்றனர் என்பதே உண்மையாகும்.
அடுத்த வாரத்திற்குள் பிரதி சபாநாயகர் தெரிவுக்கான வாக்களிப்பும் அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையும் வர இருக்கிறது. இந்த நிலையில் அரசாங்கத்திற்கான ஆதரவை விலக்கிக் கொண்ட முஸ்லிம் எம்.பி.க்களும் இதன்போது எவ்வாறு செயற்படப் போகிறார் என்பது தெரியவில்லை. ஆனாலும்,இவர்கள் மற்றுமொரு அரசியல் வியாபாரத்தை முன்னெடுக்க எத்தனிக்கலாம் என்ற சந்தேகம் இருக்கிறது. ஆதரவை விலக்கிக் கொண்டு பேரம் பேசலில் ஈடுபட்டு மீண்டும் ஆதரவளிக்கும் வாய்ப்புகளும் இல்லாமல் இல்லை. இதற்கு முன்னர் இவ்வாறு நடந்து கொண்டவர்களே இன்றும் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.
அது மாத்திரமின்றி சத்தியம் செய்யும் விடயத்தையும் இவர்கள் கேலிக் கூத்தாக்கியிருக்கின்றர். குறிப்பாக பள்ளிவாசலில் சென்று சத்தியமிடுதல் என்றெல்லாம் கூறி மக்களை ஏமாற்றுகின்றனர். ஏற்கனவே, தேர்தல் பிரச்சாரத்தின் போதும் இவ்வாறு பள்ளிகளுக்கு சென்று சத்தியம் செய்த முஸ்லிம் உறுப்பினர்கள் ஏராளம். தேர்தலுக்கு பின் குறித்த சத்தியத்தை காப்பாற்றினார்களா என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயமாகும். எனவே, இஸ்லாததின் பெயரால் அரசியல் செய்து முஸ்லிம்களை ஏமாற்றும் இவர்களுக்கு மக்கள் சரியான பாடத்தை புகட்டவேண்டும்.
இன்று இளைஞர்கள் மத்தியில் திருப்திகரமான அரசில் விழிப்புணர்வு ஏற்பட்டு வருவதை காணக் சுடியதாக இருக்கின்றது. இந்நிலையில் முஸ்லிம் சமூகத்தில் நிலவும் இவ்வாறான பிற்போக்குத் தனமான கேவலமான அரசியல் செயற்பாடுகளுக்கு முடிவுகட்ட புதிய எழுச்சியொன்று தேவைப்படுகின்றது. தெற்கில் சிங்கள இளைஞர்கள் மத்தியிலும் குறிப்பிட்டளவு முஸ்லிம் இளைஞர்கள் மத்தியிலும் புத்துணர்வு பெற்றிருக்கும் அரசியல் செயற்பாடுகள் கிழக்கிலும் வியாபிக்க வேண்டும். அவ்வாறின்றேல் எத்தனை தலைமுறைகள் வந்தாலும் நம் சமூகம் அரசியலில் மாற்றம் கண்டு நாட்டின் நலனுக்கு முன்னுரிமையளித்து எமது உரிமைகளை வென்று தரப் போவதில்லை.-Vidivelli