ரம்புக்கனை போராட்டத்தின் காரணமாக நிறுத்தப்பட்ட ரயிலில் சிக்கித் தவித்த மக்களுக்கு உணவுகளை வழங்கி உபசரித்த பிரதேச முஸ்லிம்கள்
(ஏ.ஆர்.ஏ.பரீல்)
ரம்புக்கனையில் கடந்த 19ஆம் திகதி இடம் பெற்ற மக்கள் போராட்ட தினத்தன்று இன்னல்களுக்குள்ளான ரயில் பயணிகள் மீது முஸ்லிம்கள் காட்டிய மனிதாபிமானம் பற்றி பெரும்பான்மை சமூகத்தினர் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர். முஸ்லிம்களின் மனிதாபிமான உதவிகள் அவர்களை உணர்வுபூர்வமாக நெகிழ வைத்துள்ளன.
கடந்த 19 ஆம் திகதி ரம்புக்கனையில் எரிபொருள் விலை அதிகரிப்புக்கு எதிராக மக்கள் அமைதி போராட்டங்களை முன்னெடுத்தார்கள். இதனை வலியுறுத்தி தங்கள் கோரிக்கையினை வெற்றி கொள்வதற்காக ரம்புக்கனை ரயில் பாதையை சிலிப்பர் கட்டைகளைக் கொண்டு மறித்து தடைகளை ஏற்படுத்தினர். இதனால் கொழும்பு – கண்டி உட்பட பல ரயில் சேவை பாதிக்கப்பட்டது.
பதுளை ரயில் நிலையத்திலிருந்து காலை 5.30 மணிக்கு புறப்பட்டு வந்த “உடரட்ட மெனிக்கே” புகையிரதம் மாலை 4.00 மணியிலிருந்து இரவு 8.30 மணிவரை ரம்புக்கனை ரயில் நிலையத்துக்கு அண்மித்த இஹல கோட்டே ரயில் நிலையத்தில் தரித்திருந்தது. ரம்புக்கனை வழிபாதையை போக்குவரத்துக்காக ஏற்பாடு செய்யும் வரையிலே இவ்வாறு தரித்திருந்தது.
இச்சம்பவம் தொடர்பில் குறிப்பிட்ட ரயிலில் பயணித்த பயணியொருவர் கருத்துத் தெரிவிக்கையில்; ரயிலில் வயதானவர்கள், சிறுபிள்ளைகள், வெளிநாட்டு உல்லாசப்பயணிகள், குருமார்கள் என பெரும் எண்ணிக்கையானோர் இருந்தார்கள். பிள்ளைகள் மாத்திரம் சுமார் 300 பேர் இருந்தனர். அவர்கள் பசியில் இருந்தனர். உணவுப் பொருட்கள் வாங்குவதற்கு கடைகள் இருந்தன. ஆனால் மக்கள் சாப்பிடுவதற்கு ஒன்றும் இல்லை. உணவு வாங்குவதற்கு இயலுமான இடத்துக்கு செல்வோம் என ரயில் அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டார்கள். இதனையடுத்து ரயில் அதிகாரிகள் புகையிரதத்தை கடுகண்ணாவ ரயில் நிலையத்துக்கு செலுத்திச் சென்றனர். அப்போது நேரம் இரவு 9.00 ஐக் கடந்திருந்தது. சாப்பாட்டுக் கடைகள் அங்கு மூடப்பட்டிருந்தன. குரோசரிகளில் உணவுப்பொருட்கள் குறைந்தளவிலே இருந்தன. இவ்வாறு தவித்துக்கொண்டிருந்த நிலையிலே எவரும் எதிர்பாராத இந்த சம்பவம் நிகழ்ந்தது. முஸ்லிம் சகோதரர்கள் உணவுடன் வருகை தந்தார்கள். எப்படி அவர்கள் ஏற்பாடு செய்தார்கள் என்று தெரியவில்லை.
ரயில் பெட்டிகளுக்குள் உணவுடன் வந்த முஸ்லிம்கள் பிரியாணி மற்றும் நூடில்ஸ் என்பனவற்றை புகையிரத்தில் இருந்து அனைத்து மக்களுக்கும் பங்கிட்டார்கள். ரயிலில் இருந்த குருமார்கள், பிக்குனிகளுக்கும் பங்கிட்டார்கள்.
சுமார் 12 மணித்தியாலங்களுக்கும் மேலாக எவ்வித குறையுமின்றி முஸ்லிம் சகோதரர்கள் உணவு பரிமாறினார்கள்.
இரவு 1.00 மணிக்கே ரயில் கடுகண்ணாவையிலிருந்து கொழும்பு நோக்கி மீண்டும் தனது பயணத்தை ஆரம்பித்தது. நான் அதிகாலை 2.45 மணிக்கே ராகமை ரயில் நிலையத்தில் இறங்கினேன். பதுளையிலிருந்து பயணத்தை ஆரம்பித்த பயணிகளுக்கு இது 20 மணித்தியால பயணமாக அமைந்தது.
முஸ்லிம் சகோதரர்களின் மனிதாபிமான உதவி, உணவளித்தமை எமக்கு உணர்வு பூர்வமாக அமைந்தது. இச்சம்பத்தை வாழ்நாளில் என்றும் எம்மால் மறக்க முடியாது. முஸ்லிம்களின் புனித நோன்பு காலத்தில் அவர்களது தாராள மனப்பான்மையுடன் கூடிய –ஏற்பாடு உதவியை நாம் என்றும் நினைவில் வைத்திருப்போம். என்று தெரிவித்தார். முஸ்லிம்களின் இந்த நற்பண்பினை பெரும்பான்மை மதத்தலைவர்களும் பாராட்டியுள்ளனர்.– Vidivelli