(ஏ.ஆர்.ஏ.பரீல்)
சவூதி அரேபியாவின் ஹஜ் உம்ரா அமைச்சு, தமது கடமைகளிலிருந்தும் தவறிய 10 உம்ரா நிறுவனங்களுக்கு தலா 50 ஆயிரம் சவூதி ரியால்கள் வீதம் அபராதம் விதித்துள்ளது.
குறிப்பிட்ட உம்ரா நிறுவனங்கள் உம்ரா யாத்திரிகர்களுடன் செய்து கொண்ட சட்ட ரீதியான ஒப்பந்தங்களை மீறியதன் மூலம் தவறிழைத்துள்ளதாக சவூதி அரேபிய ஹஜ் உம்ரா அமைச்சு தெரிவித்துள்ளது. யாத்திரிகர்களுடன் செய்து கொண்டுள்ள ஒப்பந்தங்களை முழுமையாக செயற்படுத்துவது உம்ரா நிறுவனங்களின் கடமையாகும்.
ஒப்பந்தத்தில் முக்கியமாக தங்குமிட வசதி மற்றும் போக்குவரத்து வசதிகள் தொடர்பான விடயங்கள் மீறப்பட்டுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சவூதி அரேபியாவின் ஹஜ் உம்ரா அமைச்சு கடந்த திங்கட்கிழமை இது தொடர்பில் அறிக்கையொன்றினையும் வெளியிட்டுள்ளது.
பயணிகளுக்கு வழங்கப்பட வேண்டிய சேவைகளை உம்ரா நிறுவனங்கள் உரிய முறையில் வழங்காமையை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. யாத்திரிகர்கள் பாதிப்புக்குள்ளாவதை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது. அமைச்சு தொடர்ந்தும் யாத்திரிகர்களின் நலன்களைப் பாதுகாக்கும். அவர்களுக்கு உரிய சேவைகளைப் பெற்றுக் கொடுக்கும்.
இது விடயத்தை உறுதி செய்து கொள்வதற்காக அமைச்சு சேவை வழங்கப்படும் பகுதிகளை தொடர்ந்தும் கண்காணித்து வருகிறது. இதன் மூலம் யாத்திரிகர்களுக்காக சேவை ஒப்பந்தப்படி உறுதி செய்யப்படும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.- Vidivelli