ஹஜ் பயணம்: 50-65 வயதுக்கிடைப்பட்ட இலங்கை யாத்திரிகர்களுக்கு முன்னுரிமை
பிரதமர் மஹிந்த ஹஜ் குழுவுக்கு ஆலோசனை
(ஏ.ஆர்.ஏ.பரீல்)
இவ்வருடம் ஹஜ் யாத்திரைக்கு 65 வயதுக்குட்பட்டவர்களே அனுமதிக்கப்படுவார்கள் என சவூதி ஹஜ், உம்ரா அமைச்சு அறிவித்துள்ளதால் இலங்கையிலிருந்து ஹஜ் யாத்திரைக்கு 50 முதல் 65 வயதுக்குட்பட்டவர்களுக்கு முன்னுரிமை வழங்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அரச ஹஜ் குழுவிற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
அத்தோடு முதற் தடவையாக ஹஜ் கடமைக்காக விண்ணப்பித்துள்ளவர்களுக்கு அடுத்தாக சந்தர்ப்பம் வழங்குமாறும் பிரதமர் ஹஜ் குழுவைக்கோரியுள்ளார்.
ஹஜ் யாத்திரையை மேற்கொள்வதற்கு சுமார் 5000 பேர் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திற்கு விண்ணப்பித்திருக்கும் நிலையில் இவ்வருடம் இலங்கைக்கு 1585 ஹஜ் கோட்டாவே கிடைக்கப்பெற இருப்பதால் பிரதமரின் ஆலோசனை கண்டிப்பாக பின்பற்றப்படும் என அரச ஹஜ் குழுவின் தலைவர் அஹ்கம் உவைஸ் விடிவெள்ளிக்குத் தெரிவித்தார்.
மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில், நாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள சுமார் 100 ஹஜ் முகவர் நிலையங்களின் உரிமையாளர்களில் பெரும் எண்ணிக்கையானோர் 65 வயதுக்கு மேற்பட்டவர்களாகையால் அவர்களுக்கும் ஹஜ் யாத்திரிகர்களை அழைத்துச் செல்லும் வாய்ப்பு இல்லாமற் போயுள்ளது. அதனால் அவர்கள் தங்களது ஹஜ் யாத்திரிகர்களை அவர்களது பிரதிநிதி ஒருவரின் பொறுப்பிலே அ-னுப்பி வைக்க வேண்டியுள்ளது.
அத்தோடு இம்முறை ஹஜ் விசாவில் மாத்திரமே ஹஜ் பயணத்தை மேற்கொள்ள முடியும்.வருகைதரு (Visit) விசா மூலம் ஹஜ் பயணத்தை மேற்கொள்ள முடியாது.
தற்போது அனேக ஹஜ் முகவர்கள் உம்ரா பயணத்தில் சவூதி அரேபியாவில் இருப்பதால் அவர்கள் நாடு திரும்பியதும் பெருநாள் தினத்தின் பின்பு அரச ஹஜ் குழு இவ்வருட ஹஜ் ஏற்பாடுகள் குறித்து கலந்துரையாடுவதற்குத் தீர்மானித்துள்ளது என்றார்.– Vidivelli