சஹ்ரானின் சமையல்காரர் என கூறி கைது செய்யப்பட்டவருக்கு பிணை

0 291

( எம்.எப்.எம்.பஸீர்)
உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தல்­களைத் தொடர்ந்து, அத்­தாக்­கு­தல்­க­ளுக்கு உதவி ஒத்­தாசை புரிந்­த­தாக கூறி, சஹ்ரான் ஹஷீமின் சமையற்காரர் என பொலிஸ் தரப்பால் அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்டு கைது செய்­யப்­பட்ட அசனார் மொஹம்­மது ரமீஸ் எனும் நபரை சுமார் 3 ஆண்­டு­களின் பின்னர் பிணையில் விடு­வித்து நீதி­மன்றம் உத்­த­ர­விட்­டது.

கொழும்பு மேல­திக நீதிவான் பி.என்.எல். மஹ­வத்த இதற்­கான உத்­த­ரவைப் நேற்று முன் தினம் (26) பிறப்­பித்தார். சட்ட மா அதி­பரின் இணக்­கத்­துடன் அவர் இவ்­வாறு பிணையில் விடு­விக்­கப்­பட்டார்.

பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் கீழ் கைது செய்­யப்­பட்­ட­வர்கள் தொடர்பில் ஆராய நிய­மிக்­கப்­பட்ட, முன்னாள் பிர­தம நீதி­ய­ரசர் அசோக டி சில்வா தலை­மை­யி­லான ஆலோ­சனை சபையில், சந்­தேக நப­ரான அசனார் மொஹம்­மது ரமீஸ் சார்பில் அவ­ரது சட்­டத்­த­ர­ணி­யான ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி எம்.எம். சுஹைர் விட­யங்­களைத் தெளி­வு­ப­டுத்­தி­யி­ருந்தார்.

பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் கீழ் கைது செய்­யப்­பட்ட ரமீஸ், சஹ்ரான் திரு­மணம் முடித்­தி­ருந்த ஊரான, குரு­ணாகல்- கட்­டு­பொத்த, கெக்­கு­னு­கொல்ல – மட­லஸ்ஸ பகு­தியைச் சேர்ந்­தவர் எனவும் அவர் அங்கு பர­வ­லாக பல­ராலும் அறி­யப்­படும் சமையற்காரர் எனவும் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி எம்.எம். சுஹைர் சுட்­டிக்­காட்­டி­யி­ருந்தார்.

பயங்­க­ர­வாத செயற்­பா­டுகள் எதிலும் ஈடு­ப­டாத அவர் அநி­யா­ய­மாக 3 ஆண்­டுகள் வரை பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் கீழ் தடுப்புக் காவலின் கீழும் விளக்­க­ம­றி­ய­லிலும் உள்­ள­தா­கவும் அவர் ஆலோ­சனை சபையில் சுட்­டிக்­காட்­டி­யனார்.

திரு­ம­ணங்கள், விழாக்கள் மற்றும் உள்ளூர் வெளி­யூர்­க­ளுக்குச் செல்லும் குழுக்­க­ளுக்கு உணவு சமைப்­ப­தற்­காக ரமீஸ் அடிக்­கடி பதிவு செய்­யப்­ப­டு­வ­தா­கவும், சஹ்ரான் ஹஷிம் சார்­பா­கவும், மூன்று பய­ணங்­களில் அவர் உணவு சமைப்­ப­தற்­காக பதிவு செய்­யப்­பட்­டுள்­ள­தா­கவும், கட்­டணம் பெற்று அவர் அப்­போது சமையல் வேலையை செய்­து­கொ­டுத்­துள்­ள­தா­கவும் முன்னாள் பிர­தம நீதி­ய­ரசர் அசோக டி சில்வா தலை­மை­யி­லான ஆலோ­சனைக் குழு­விடம் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.

எவ்­வா­றா­யினும் சஹ்ரான் பயங்­க­ர­வாத செயற்­பா­டு­களில் ஈடு­பட்­டமை தொடர்பில், ரமீஸ் கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திக­திக்கு பின்னர் செய்­திகள் ஊடா­கவே அறிந்­து­கொண்­டுள்­ள­தா­கவும், அவர் குறித்த தாக்­கு­த­லுக்கு உதவி ஒத்­தாசை புரிந்­த­தாக எந்த ஆதா­ரமும் இல்லை எனவும் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி எம்.எம். சுஹை­ரினால் சுட்­டிக்­காட்­டப்பட்­டுள்­ளது.

இந் நிலையில் இந்த விட­யங்கள் ஆலோ­சனை சபை­யினால் சட்ட மா அதி­பரின் கவ­னத்­துக்கு கொண்­டு­வ­ரப்­பட்ட பின்னர், சட்ட மா அதி­பரின் ஒப்புதலுடன், இது குறித்த வழக்கு நேற்று முன் தினம், விசாரணைக்கு வந்த போது சந்தேக நபருக்கு பிணையளித்து நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

சந்தேக நபருக்காக சட்டத்தரணி ரிஸ்வான் உவைஸுடன் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம். சுஹைர் ஆஜராகியமை குறிப்பிடத்தக்கது.– Vidivelli

Leave A Reply

Your email address will not be published.