ஏ.ஆர்.ஏ.பரீல்
2018 ஆம் ஆண்டு பாகிஸ்தானின் பிரதமராக தெரிவு செய்யப்பட்டு பதவி வகித்த இம்ரான்கான் நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பில் தோல்வியைத் தழுவியதையடுத்து பிரதமர் பதவியிலிருந்தும் வெளியேற்றப்பட்டுள்ளார். நம்பிக்கையில்லாப் பிரேரணையின் மூலம் பதவியிலிருந்தும் வெளியேற்றப்பட்ட பாகிஸ்தானின் முதல் பிரதமர் இவர் ஆவார்.
எதிர்க்கட்சியினரின் இம்ரான்கானுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை கடந்த 9ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. பாகிஸ்தானின் அரசியல் வரலாற்றில் எந்தவொரு பிரதமருக்கும் தனது ஐந்து வருட பதவிக்காலத்தை பூர்த்தி செய்து கொள்வதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். இதற்கான காரணம் அரசியல் சூழ்ச்சி மற்றும் இராணுவ புரட்சி என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தான் பாராளுமன்றம் 342 உறுப்பினர்களைக் கொண்டதாகும். இம்ரான்கானுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை பாராளுமன்றத்தில் 174 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் எதிர்க்கட்சி கூட்டணி ஒன்றிணைந்து இந்த நம்பிக்கையில்லா பிரேரணையை முன்வைத்திருந்தது. இம்ரான்கானுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை வாக்கெடுப்புக்குவிடப்படுவதற்கு இருந்த நிலையில் அவர் ஒரு வாரத்துக்குமுன்பு பாராளுமன்றத்தைக் கலைத்து அதற்கு முட்டுக்கட்டையிட்டார்.
இதனையடுத்து அந்நாட்டின் எதிர்க்கட்சி கூட்டணியினர் நீதி மன்றில் பாராளுமன்ற கலைப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்தனர்.மேன்முறையீட்டை விசாரித்த நீதிமன்றம் இம்ரான் கானின் நடவடிக்கை அரசியலமைப்புக்கு முரணானது எனவும் நம்பிக்கையில்லாப் பிரேரணை வாக்கெடுப்புக்கு முட்டுக்கட்டையிட்டமை சட்டவிரோதமானதெனவும் தீர்ப்பளித்தது. அதனையடுத்து நம்பிக்கையில்லா பிரேரணை வாக்கெடுப்பு மூலம் அவர் வெளியற்றேப்பட்டார்.
தற்போது பாகிஸ்தான் எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு பிரதமரான இம்ரான் கான் பொறுப்புக்கூற வேண்டும் என்று குற்றம் சுமத்தியே எதிர்கட்சி கூட்டணி நம்பிக்கையில்லா பிரேரணையை முன்வைத்திருந்தது.
பிரதமர் இம்ரான்கானின் பொருளாதாரக் கொள்கைகளே நாட்டின் பொருளாதார நெருக்கடிகளை தீவிரப்படுத்தியதாகவும் அவர் பொருளாதாரத்தை சரிவர முகாமை செய்யவில்லை எனவும் எதிர்க்கட்சிகளின் கூட்டணி குற்றம் சாட்டியுள்ளது.
பாகிஸ்தானின் எதிர்க்கட்சி கூட்டணியினை பாகிஸ்தான் மக்கள் கட்சி மற்றும் முஸ்லிம் லீக் எனும் கட்சிகள் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. பாகிஸ்தான் மக்கள் கட்சியின் பொதுச் செயலாளராக முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ வின் மகன் பிலாவல் சர்தாரி பதவி வகிக்கிறார். பிலாவலின் தந்தையும்,பெனாசிர் பூட்டோவின் கணவருமான ஆசிப் அலி சர்தாரி பாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி என்பது குறிப்பிடத்தக்கது.
‘கடந்த மூன்று வருடகாலமாக பாகிஸ்தானில் ஜனநாயகம் சவாலுக்குள்ளாகியிருந்தது. இப்போது பாகிஸ்தான் பாகிஸ்தானியர்களின் கைகளுக்குக் கிடைத்துவிட்டது. புதிய பாகிஸ்தானொன்று இப்போது உருவாகும்’ என நம்பிக்கையில்லா பிரேரணை வாக்கெடுப்பு வெற்றிபெற்று இம்ரான்கான் தோற்கடிக்கப்பட்டதும் பிலாவல் பூட்டோ தெரிவித்தார்.
முஸ்லிம் லீக் என், முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரீபின் கட்சியாகும். நவாஸ் ஷரீப் ஊழல் மோசடி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்பு சுகயீனம் காரணமாக விடுதலை செய்யப்பட்டார். தற்போது லண்டனில் வசித்து வருகிறார். அவரது மகளான மர்யம் நவாஸ் ஷரீப் இம்ரான் கானுக்கு எதிராக முஸ்லிம் லீக் என் கட்சியை வழிநடத்தி வந்தார்.
நம்பிக்கையில்லாப் பிரேரணை திட்டமிடப்பட்டிருந்த நிலையில் பாராளுமன்றம் ஏற்கனவே கலைக்கப்பட்டமைக்கு எதிராக சபாநாயகருக்கு எதிராக, மர்யமே நீதிமன்றம் சென்று மேன்முறையீடு செய்தார். இதனையடுத்தே நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்னெடுப்பதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இம்ரான் கான் தஹ்ரீக் ஈ இன்சாப் எனும் கட்சியையே பிரதிநிதித்துவப்படுத்துகிறார். 2018 இல் நடைபெற்ற தேர்தலில் தஹ்ரீக் ஈ இன்சாப் கட்சி அதிகாரத்துக்கு வந்தபோது அக்கட்சி மூன்றாவது அரசியல் சக்தியாக இருந்தது.
பாகிஸ்தான் மக்கள் கட்சியும் மற்றும் முஸ்லிம் லீக் என் கட்சியுமே பாகிஸ்தானில் மாறி மாறி பதவியில் இருந்தது.2018 ஆம் ஆண்டாகும்போது பாகிஸ்தான் அரசியல் – ஊழல் நிறைந்ததாக இருந்தது. இம்ரான் கான் அப்போது ஊழலுக்கெதிரான அரசியல் பயணத்தை ஆரம்பித்தார். 2018 இல் இம்ரான்கான் அப்போது எதிர்கட்சியிலிருந்த இரண்டு பிரதான அரசியல் கட்சிகளின் ஒத்துழைப்புடன் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்து பிரதமரானார். இம்ரான் கான் பதவிக்கு வந்ததும் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்காக அரசாங்கத்தின் தேவையற்ற செலவுகளுக்குத் தடைவிதித்தார்.
சவூதி அரேபியா உட்பட மத்திய கிழக்கு நாடுகளிடமிருந்து உதவிகளைப் பெற்றுக் கொள்வதற்கு முன்னின்று செயற்பட்டார்.
சவூதி அரேபியா உட்பட மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் மேலைத்தேய நாடுகள் இம்ரான் கான் பிரதமர் பதவியேற்றதையடுத்து எதிர்பார்த்தளவு உதவிகள் வழங்கவில்லை. இதனையடுத்து இம்ரான் கானின் அரசாங்கத்துக்கு விரும்பமின்றியேனும் சீனாவுடன் உதவிகளுக்காக தொடர்பு கொள்ள வேண்டியேற்பட்டது.
2018 ஆம் ஆண்டுக்கு முன்பு சீனா பாகிஸ்தானின் அபிவிருத்தித் திட்டங்கள் பலவற்றுக்கு கடனுதவி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். இம்ரான்கான் சீனாவுடன் உறவு பலப்படுத்தியதையடுத்து பாகிஸ்தானுக்கு சீனாவிடமிருந்து தொடர்ந்து கடனுதவிகள் கிடைக்கப்பெற்றன. சீனாவின் திட்டங்கள் பாகிஸ்தானில் ஆரம்பிக்கப்பட்டன.
பாகிஸ்தான் மற்றும் சீனாவுக்கு மிடையில் நெருங்கிய உறவு நிலவியதையடுத்து அது இந்தியா அதிருப்தியடைவதற்கு காரணமாய் அமைந்ததாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். பாகிஸ்தான் மீண்டும் மீண்டும் சீனாவின் கடன் சிக்கலில் மாட்டிக்கொண்டமையே பொருளாதார நெருக்கடிக்குள்ளாகும் நிலைமைக்கு தள்ளப்பட்டது எனவும் அரசியல் ஆய்வாளர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
தனக்கெதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் தோற்றுப்போன 69 வயதான இம்ரான் கான் தான் இறுதிப்பந்துவரை போராடியதாகவும்,ஆனால் ஜனநாயகம் மோசமான நிலைக்குச் சென்று விட்டதாகவும் தெரிவித்தார்.
தன்னைப் பதவியிலிருந்து வெளியேற்றுவதற்கு எதிர்க்கட்சி அமெரிக்காவின் ஒத்துழைப்புடன் சூழ்ச்சி செய்ததாகவும் கூறினார். பக்கச் சார்பற்று செயற்படுவதாக தெரிவித்த இராணுவம் இந்தச் சூழ்ச்சிக்கு ஆதரவு வழங்கியதாகவும் அவர் குற்றம் சுமத்தினார்.
அமெரிக்காவுக்கு சார்பான அரசொன்றே பாகிஸ்தானில் நிறுவப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
என்றாலும் தன்னை பிரதமர் பதவியிலிருந்தும் அகற்றுவதற்கான சூழ்ச்சியின் பின்னணியில் அமெரிக்கா இருந்தது என்பதை நிரூபிப்பதற்கான முக்கிய ஆதாரங்கள் எதனையும் இம்ரான் கான் முன் வைக்கவில்லை.
பாகிஸ்தானில் எதிர்க்கட்சித் தலைவராக ‘முஸ்லிம் லீக் என்’ கட்சியின் சிரேஷ்ட தலைவர் ஷபாஸ் ஷரீபே பதவி வகித்தார்.இவர் நவாஸ் சரீபின் சகோதரராவார். ஷபாஸ் ஷரீப் (70) பாகிஸ்தான் மக்கள் மத்தியில் சிறந்த நிர்வாகி என பெயர் பெற்றவர். நவாஸ் ஷரீபைப் போலன்றி இவர் இராணுவத்தினருடன் அந்நியோன்யமாக செயற்படுபவருமாவார் என தெரிவிக்கப்படுகிறது.
22 கோடி மக்கள் வசிக்கும் பாகிஸ்தானில் உள்நாட்டு, வெளிநாட்டு கொள்கைகள் உட்பட பாதுகாப்புக் கொள்கைகளும் இராணுவத்தின் மேற்பார்வையின் கீழேயே உள்ளன.
பாகிஸ்தானின் புதிய பிரதமராக முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரீபின் சகோதரர் ஷபாஸ் ஷரீப் தெரிவு செய்யப்பட்டுள்ளார். 2023 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் நடத்தப்படும்வரை இவர் பாகிஸ்தானின் பிரதமராக பதவிவகிப்பார். இவர் பஞ்சாப் மாநிலத்தின் முதலமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.
ஷபாஸ் ஷரீப் 1999 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நடந்த இராணுவ புரட்சியின் பின்பு சிறையில் அடைக்கப்பட்டார். பின்பு அவர் சவூதி அரேபியாவுக்கு நாடு கடத்தப்பட்டார்.
அவர் 2007 ஆம் ஆண்டு மீண்டும் பாகிஸ்தானுக்குத் திரும்பினார். பனாமா அறிக்கையின் வெளியீடுகளின் படி பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரீப் சொத்துகளை மறைத்து வைத்திருந்தமைக்காக குற்றவாளியாக இனங்காணப்பட்டதையடுத்து கட்சியின் தலைவராக பதவியேற்ற ஷபாஸ் ஷரீப் அரசியலிலும் பிரவேசித்ததுடன் நவாஸ் ஷரீபின் மகள் மரியமுக்கு கட்சியை வழிநடத்தும் பொறுப்பை ஒப்படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நன்றி: ஏ.எப்.பி.
-Vidivelli