கலாநிதி அமீரலி,
மேர்டொக் பல்கலைக்கழகம்,
மேற்கு அவுஸ்திரேலியா
“ஒவ்வொருநாளும் ஆஷூரா
ஒவ்வோர் இடமும் கர்பலா”
(ஈரானின் புரட்சிச் சிந்தனையாளன்
அலி ஷரியாத்தி)
இந்த சுலோகத்துடன்தான் லட்சக்கணக்கான ஈரானியர்கள் (பெண்களுட்பட) நிராயுதபாணிகளாகத் திரண்டெழுந்து வீதிகளையும் பல்கலைக்கழக வளாகங்களையும் முற்றுகையிட்டு சர்வாதிகார ஷா மன்னனை நாட்டை விட்டே விரட்டியடித்தனர். அவ்வாறான ஒரு சந்தர்ப்பம் இப்புனித ரமழானில் இலங்கையிலும் இன்று உருவாகிக் கொண்டிருக்கிறது.
புனித ரமழான் நன்மைகளைக் கொள்ளையடிக்கும் ஒரு மாதம் என்று பள்ளிவாசல்களில் மௌலவிகள் பிரசங்கிக்கக் கேட்டதுண்டு. அது ஒவ்வொரு நோன்பாளிகளையும் நோக்கி அவர்கள் போதிக்கும் உபதேசம். சில வேளைகளில் சில முஸ்லிம்கள் சில விசேட தேவைகளுக்காகவும் இறைவனைத் தொழுது நோன்பு நோற்பதையும் நாம் அறிந்துள்ளோம். அவையெல்லாம் அவரவரின் தனிப்பட்ட நம்பிக்கையைப் பொறுத்தவை. ஆனால் இவ்வருட நோன்பு இலங்கை முஸ்லிம்களுக்கு ஒரு முக்கியமான அல்லது நெருக்கடியான காலகட்டத்தில் நுழைந்து அவர்களின் வாழ்க்கையில் மறக்கமுடியாத ஒரு மாதமாக அமைந்துள்ளது. அதைப்பற்றிய சில சிந்தனைகளை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதே இக்கட்டுரையின் நோக்கம்.
நோன்பு என்றாலே தியாகம் என்பது பொருள். வருடந்தோறும் முப்பது நாட்களுக்குப் பகல் முழுதும் பல்வகைச் சுவைகளையும் ஆசைகளையும் ஒறுத்து இறைவனுக்காக அவற்றை தியாகம் செய்து அவனிடம் பாவமன்னிப்புக் கேட்கும் ஒரு மாதம். இருக்கும் உணவை ஒறுப்பதுதான் தியாகமென்றால் இல்லாத உணவை ஒறுப்பது எப்படி? அந்த வினாதான் எத்தனையோ ஏழை முஸ்லிம் குடும்பங்களை இன்று நோக்கியுள்ளது.
நாட்டின் பொருளாதாரத்தை ஒழுங்காகப் பராமரித்து வளர்க்கத் தெரியாத ஊழல் நிறைந்த ஓர் அரசாங்கமும் அதன் ஜனாதிபதியும் பட்டினியைப் பரிசாக எல்லா ஏழைக் குடும்பங்களுக்கும் இன்று வழங்கியுள்ளனர். அந்தக் குடும்பங்களுள் எத்தனையோ முஸ்லிம் அல்லாத குடும்பங்கள் என்பதையும் மனதிற்கொள்ள வேண்டும். இல்லாத உணவுக்காக அக்குடும்பங்கள் ஏங்கித் தவிக்கின்றன. வீதியிலே இறங்கி ஆர்ப்பாட்டமும் செய்யத் துணிந்துவிட்டன. முஸ்லிம் குடும்பங்களோ இல்லாத உணவை இறை தியாகமாக மாற்றி அமைதி காண்கின்றன. ஆனால் அந்த அமைதியை பட்டினிக்கும் அப்பால் ஒரு படியேறி ஆட்சியாளரின் அநியாயத்தை எதிர்க்கும் ஓர் அமைதிப் போராட்டமாக மாற்றி முஸ்லிம் நோன்பாளிகள் அனைவரும் அனைத்து மத மக்களுடன் இணைந்து தம் குரல்களை எழுப்புவதே இப்புனித மாதத்தைச் சிறப்பிக்கும் ஒரு செயல் என்பதை இக்கட்டுரை வலியுறுத்துகிறது.
அந்த வகையில் கொட்டும் மழையையும் பாராது நோன்புடன் ஆர்ப்பாட்ட மேடையிலே ஏறி “ஜனாதிபதியே வெளியேறு”, என்று கர்ச்சித்த அந்த வீர முஸ்லிம் பெண்ணைக் கண்டு பெருமைப்படாமல் இருக்க முடியுமா? அதேபோன்று சுதந்திர சதுக்கத்தில் ஆர்ப்பாட்டத்துக்கு மத்தியில் இறைவனிடம் கையேந்திய அந்த முஸ்லிம்களையும் போற்றாமல் இருக்க முடியாது.
இலங்கை முஸ்லிம்களிடையே இந்த வருட ரமழான் ஓர் ஆரோக்கியமான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை இங்கே விளக்கவேண்டியது அவசியம். அதாவது, இத்தனை காலமும் பெரும்பான்மை இன மக்கள் முன்னெடுத்த அரசியற் போராட்டங்களிலெல்லாம் முஸ்லிம்கள் பங்காளிகளாய் அல்லாமல் பார்வையாளர்களாக மட்டுமே செயற்பட்டு வந்துள்ளனர். அது முஸ்லிம் சமூகத்தின்மேல் ஒரு கறையாகப் படிந்துள்ளது.
அதற்குக் காரணம் அவர்களின் தலைமைத்துவங்கள் போதித்த அரசியல் மார்க்கம். ஒரு பக்கத்தில் மதத்தலைவர்கள் இந்த வாழ்க்கையே நிலையற்றது, மறுமையே நிலையானதும் நிச்சயமானதும் ஆகும். ஆதலால் மறுமைக்குத் தேவையான மார்க்கக் கடமைகளை நிறைவேற்றிக்கொண்டு இகவாழ்வுக்குத் தேவையான ஜடத்துவ தேவைகளை மட்டும் நிறைவேற்றிக்கொண்டு வாழ்வதே ஓர் உண்மையான முஃமினின் கடமை என்று போதித்ததால் மற்றவர்கள் நடாத்திய அரசியல், பொருளாதார, சமூகப் போராட்டங்களில் முஸ்லிம்கள் பங்குகொள்ளவில்லை. தூரத்திலே நின்று அவற்றை வேடிக்கை பார்த்தனர் என்றே சொல்லலாம். மறுபக்கத்தில் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் நடாத்திய வியாபார அரசியல் அப்படிப்பட்ட போராட்டங்களை முஸ்லிம்களுக்கு அவசியமற்றதொன்றாக ஆக்கி விட்டது. அதாவது முஸ்லிம்களோ இரண்டாவது சிறுபான்மைச் சமூகம். ஆகவே எந்த அரசியல் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அந்தக் கட்சியுடன் சேர்ந்து அந்த அரசின் சலுகைகளைப் பெற்று வாழ்வதே சிறந்த உபாயம் என அத்தலைவர்கள் வலியுறுத்தினர். 1980க்குப் பின்னரும் முஸ்லிம் தலைவர்கள் தனிப்பட்ட கட்சிகளை அமைத்தும் இந்தத் தந்திரமே கடைப்பிடிக்கப்பட்டது. உதாரணமாக, இற்றைவரை பாராளுமன்றத்துக்குச் சென்ற எந்த ஒரு முஸ்லிம் தலைவனாவது அங்கே ஆண்டுதோறும் சமர்ப்பிக்கப்பட்ட வரவு – செலவுத் திட்டத்தைப்பற்றியோ அங்கே கொண்டுவரப்பட்ட பொருளாதாரம் சம்பந்தமான எந்தவொரு மசோதாவின் மீதோ நாட்டு மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் உரையாற்றியது உண்டா? அவர்கள் எல்லாருமே ஆளும் கட்சிக்கு ஆமாப்போடும் பொம்மைகளாகத்தான் இருந்தனர். இதனாலேதான் ஒரு சந்தர்ப்பத்தில் முஸ்லிம்களைப்பற்றி கலாநிதி கொல்வின் ஆர். டி. சில்வா விமர்சித்தபோது அவர்களுக்கும் இந்த நாட்டுக்கும் உள்ள உறவு மாட்டுக்கும் புல்லுக்குமிடையே உள்ள உறவுபோன்றது என்றார். அதாவது மாடு புல்லை மேயுமே தவிர அதை எவ்வாறு வளர்ப்பது என்பதைப்பற்றி அது கவலைப்படுவதில்லை. இது எவ்வளவு ஆபத்தான ஒரு விமர்சனம் என்பதை அன்றைய முஸ்லிம் அரசியல்வாதிகள் உணர்ந்தார்களோ தெரியாது. இவ்வாறு மதத்தலைவர்களும் முஸ்லிம் அரசியல்வாதிகளும் போதித்த போதனையால் பெரும்பாலும் வாத்தகத்தில் ஈடுபட்டிருந்த சாதாரண முஸ்லிம்கள் தாமும் தமது வியாபாரமும் குடும்பமும் பள்ளிவாசலும் என்ற படியே தமது காலத்தைக் கடத்தினர். ஆனால் அதுவோ முஸ்லிம்களிடையே புத்திஜீவிகள் என்ற ஒரு வர்க்கம் மருந்துக்கும் காணக்கிடைக்காமலிருந்த ஒரு காலம். அது இன்று வெகுவாக மாறிவிட்டது.
பதியுத்தீன் மஹ்மூத் தோற்றுவித்த கல்விப் புரட்சியால் வியாபாரச் சமூகமாகக் கணிக்கப்பட்ட முஸ்லிம்கள் முதலில் ஓர் ஆசிரிய சமூகமாக மாறி அதன் வழியாக இன்று அறிவாற்றலும் பல துறைகளிலும் திறமை பெற்ற புத்திஜீவிகளைக் கொண்ட ஒரு சமூகமாகத் தோற்றமெடுத்துள்ளது. அதில் ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் உருவாகியுள்ளனர்.
எனவே தமது சமூகத்தைப்பற்றிய ஒரு விழிப்புணர்வு இவர்களிடையே காணப்படுவதை மறுக்க முடியாது. அவ்வாறான ஓர் ஆரோக்கியமான சூழலில் மற்றைய இனங்களுடன் கைகோர்த்து நாட்டின் பிரச்சினைகளை உள்வாங்கி தேசிய எழுச்சி பற்றிய போராட்டங்களில் முஸ்லிம்கள் சமபங்கு கொள்ளக்கூடிய வாய்ப்புகள் நிறைய உண்டு. அவ்வாறான ஒரு வாய்ப்பு இன்று உருவாகியுள்ளது.
சுமார் இரண்டு வருடங்களுக்கும் மேலாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச ஒரு சர்வாதிகாரிபோல் மாறி ராஜாங்கத்தையே ஒரு குடும்ப ஆட்சியாகவும் எண்ணற்ற ஊழல்கள் நிறைந்த ஒன்றாகவும் கொண்டு சென்றதால் இலங்கையின் பொருளாதாரம் நிமிர்த்த முடியாத அளவுக்குச் சரிந்து கிடக்கிறது. இன்று முஸ்லிம்கள் பட்டினி நோன்பு நோற்பதற்கும் மற்ற இனத்தவர்கள் பட்டினியால் வாடுவதற்கும் இந்த ஆட்சியே காரணம் என்பது தெளிவாகிவிட்டது. இந்த வீழ்ச்சி, கோத்தாபய ஆட்சியுடன்தான் ஏற்பட்ட ஒன்றல்ல. ஆனால் அவரின் ஜனாதிபதி ஆட்சியிலேயே வீழ்ச்சி அதன் உச்சத்தை அடைந்தது என்பதை மறுக்க முடியாது. அதைப்பற்றிய சில விபரங்களை கடந்த விடிவெள்ளி இதழில் நான் விளக்கியுள்ளேன்.
சென்ற சுமார் முக்கால் நூற்றாண்டு காலமாக பௌத்த சிங்கள இனவாதத்தையே ஒரு போதைவஸ்தாகப் பெரும்பான்மை இன மக்களுக்கு ஊட்டி அதில் அவர்களை மயங்க வைத்து தேர்தல் காலங்களிலே அவர்களின் வாக்குகளை வென்றெடுத்து நடத்தி வந்த அரசியல் நாடகத்தின் அந்தரங்கத்தை இப்போதுதான் இன்றைய இளம் பௌத்த சிங்களச் சந்ததி உணரத் தொடங்கியுள்ளது. இந்த ஏமாற்று அரசியலால் தமது எதிர்காலமே இருள்படிந்த ஒன்றாக மாறிவிட்டதை விளங்கிக்கொண்ட அந்தச் சந்ததி இந்த அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து, அர்த்த புஷ்டியுள்ள தூய ஒரு ஜனநாயகப் பாதையில் நாட்டை நடத்துவதற்குத் துணிந்துவிட்டது. இந்தப் புதுயுகச் சந்ததி மதம், இனம், மொழி ஆகிய பிரிவுகளைக் கடந்து எல்லாரும் இந்நாட்டு மக்கள் என்ற ஒரு புரட்சிப்பாணியில் இந்த ஆட்சிக்கெதிரான ஆர்ப்பாட்டங்களை நாடெங்கிலும் ஆரம்பித்துள்ளது. இந்தச் சந்ததிதான் இத்தனை காலமும் இந்த நாட்டு மக்களை சிங்களவரென்றும் தமிழரென்றும் முஸ்லிம்களென்றும், பௌத்தரென்றும், கிறிஸ்தவரென்றும், இந்துவென்றும் இஸ்லாமியரென்றும் பிரித்து வைத்து அந்தப் பிரிவினையைக் கொண்டு பொருளாதார வளம் திரட்டிய பெருச்சாளிகளின் முகக்கவசத்தைக் கிழித்தெறிய முனைகிறது. “கோத்தாவே போ” என்ற கோஷம் வானைப் பிளக்கும் அளவுக்கு ஆர்ப்பாட்டங்களில் ஒலிக்கின்றமை முஸ்லிம்களின் காதுகளையும் எட்டியிருக்க வேண்டும்.
எனவே இப்புனித மாதத்தில் முஸ்லிம் ஆண்களும் பெண்களும் திரள்திரளாக நாடெங்கும் நடைபெறும் ஆர்ப்பாட்டங்களில் சிங்கள தமிழ் மக்களுடன் இணைந்து போராடுவது அவசியம். முஸ்லிம்கள் பொதுப் போராட்டங்களில் பங்கு கொள்வதில்லை என்ற கறையைக் களைந்தெறியும் சந்தர்ப்பம் இது. முஸ்லிம் புத்திஜீவிகளே! களத்திலிறங்கி உங்கள் சமூகத்துக்கு வழிகாட்டுங்கள். இதுவரை உங்களின் சமூகத்தின் முதுகிலே ஏறிக்கொண்டு சுயலாபம் திரட்டிய அரசியல் பச்சோந்திகளையும் வனவாசம் செல்லவைக்கும் காலம் நெருங்கிவிட்டது. எத்தனை காலந்தான் ஏமாற்றுவார்களோ இந்த நாட்டிலே.
முடிவாக, இன்னுமொரு உண்மையையும் முஸ்லிம்கள் அறிந்து கொள்ளல் வேண்டும். இந்த ஆட்சியாளர்களைத் துரத்தியவுடன் பொருளாதாரம் உடனடியாக மீட்சிபெறப் போவதில்லை. அதற்கான சில அடிப்படை மாற்றங்களை அவசரமாக மேற்கொள்ள வேண்டியுள்ளது. சர்வதேச நாணயநிதியின் உதவியும், மத்திய வங்கியின் புதிய ஆளுனரின் உடனடியான நிதிக்கொள்கை சார்பான பரிகாரங்களும், சினேகித நாடுகளின் தாராண்மையும், புதிய ஆட்சியாளர்களின் நிதிக் கொள்கைகளும் ஒன்று சேர்ந்து செயற்பட்டு அவற்றின் பயனை அனுபவிக்க இன்னும் இரண்டு அல்லது முன்று வருடங்களாவது செல்லும். அதுவரை கஷ்டங்களைத் தாங்கிக் கொள்ளத்தான் வேண்டும். அவ்வாறான கஷ்டங்களை எல்லா இலங்கையர்களுக்கும் இலேசாக்கித் தருமாறு இப்புனித மாதத்தில் முஸ்லிம்கள் இறைவனிடம் கையேந்த வேண்டும்.–Vidivelli