உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு பொறுப்பானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்

பாதிக்கப்பட்டோருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்கிறது ஷூரா சபை

0 556

உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்கள் தொடர்­பாக பாரா­ளு­மன்றத் தெரி­வுக்­குழு மற்றும் ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக்­கு­ழுவில் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள முஸ்­லிம்­க­ளுக்கு இழைக்­கப்­பட்ட அநீ­தி­க­ளுக்கு பொறுப்­பா­ன­வர்கள் சட்­டத்தின் முன் நிறுத்­தப்­பட்டு உரிய முறையில் தண்­டிக்­கப்­பட வேண்டும் என தேசிய ஷூரா சபை தெரி­வித்­துள்­ளது.

அத்­துடன், ஈஸ்டர் தாக்­கு­தலில் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் கோரிக்­கை­வி­டுத்­துள்­ளது.

ஈஸ்டர் ஞாயிறு தாக்­கு­தலின் 3வது ஆண்டு நினைவு தினம் குறித்து தேசிய ஷூரா சபை வெளி­யிட்­டுள்ள ஊடக அறிக்­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. அவ்­வ­றிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

ஈஸ்டர் தாக்­கு­தல்கள் தொடர்­பி­லான பாரா­ளு­மன்ற தெரி­வுக்­குழு மற்றும் ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் அறிக்­கைகள் மீதான நட­வ­டிக்கை மற்றும் தடுப்­புக்­கா­வலில் உள்ள அப்­பா­வி­க­ளது விடு­த­லையைத் துரி­தப்­ப­டுத்த வேண்டும்.

தேசிய ஷூரா சபை ஏப்ரல் 21, 2019 ஞாயிற்­றுக்­கி­ழமை நடந்த கொடூ­ர­மான தாக்­கு­தலின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை நினை­வு­கூர்­வதில் அனைத்து இலங்­கை­யர்­க­ளுடன் இணைந்து கொள்­கி­றது. இந்தத் தாக்­கு­தல்­களால் பாதிக்­கப்­பட்ட அனைத்து சமூ­கத்­தி­னரும், முக்­கி­ய­மாக கிறிஸ்­த­வர்கள் மற்றும் சுற்­றுலாப் பய­ணி­களின் குடும்­பங்­க­ளுக்கு தனது அனு­தா­பத்தை அது தெரி­வித்துக் கொள்­கி­றது.

தாக்­குதல் தொடர்பில் தேசிய ஷூரா சபை சில கருத்­துக்­களைத் தெரி­விக்க விரும்­பு­கி­றது, முஸ்லிம் பெயர்­களைக் கொண்ட சிலரால் நடத்­தப்­பட்ட ஈஸ்டர் ஞாயிறு தாக்­கு­த­லுக்கும் இஸ்­லாத்­திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஈஸ்டர் தாக்­கு­தல்கள் நமது நேசத்­துக்­கு­ரிய நாட்டு மக்­களின் ஒற்­றுமை மற்றும் அமை­தி­யான சக­வாழ்­வுக்கு எதி­ராக மேற்­கொள்­ளப்­பட்ட தவ­றான ஆனால், தோல்­வி­யுற்ற தாக்­கு­த­லாகும்.

தாக்­குதல் நடந்­த­போது இலங்­கை­யிலும் சர்­வ­தேச அள­விலும் உள்ள அனைத்து முஸ்­லிம்­களும் அதிர்ச்­சி­ய­டைந்­தனர். குண்­டு­தா­ரி­களின் இறந்த உடல்­களைக் கூட முஸ்­லிம்­களின் அடக்­கஸ்­த­லங்­களில் அடக்கம் செய்ய அனு­ம­திக்­க­மாட்டோம் என்று அவர்கள் ஏக­ம­ன­துடன் கூறினர்.

மேற்­படி தாக்­கு­தல்­களை நடாத்­திய முஸ்லிம் பெயர் தாங்­கிகள் அதி­கா­ரத்தை அடை­வ­தற்கு சிலரால் பகடைக் காய்­க­ளாகப் பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளனர் என பேராயர் மல்கம் கர்­தினால் ரஞ்ஜித் உட்­பட பல இலங்­கை­யர்­களும் பல­த­டவை கூறி­யுள்­ளனர். இத்­தா­கு­த­லுக்கு உள்ளூர் மற்றும் வெளி­நாட்டு சக்­திகள் சம்­பந்­தப்­பட்­டி­ருப்­ப­தாகத் தோன்­று­வ­தா­கவும் சுதந்­தி­ர­மான விசா­ரணை தேவை என்றும் பேராயர் குறிப்­பிட்­டி­ருக்­கி­றார்கள்.

பெரும்­பான்மை இனத்தைச் சேர்ந்த சில தீவி­ர­வாத அமைப்­புகள் தான் உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்­கா­ரர்­களை கடும்­போக்­கா­ளர்­க­ளாக மாற்ற வழி­வ­குத்­த­தாக உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்கள் தொடர்­பான பாரா­ளு­மன்றத் தெரி­வுக்­குழு மற்றும் ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக்­குழு ஆகிய இரண்டும் அடை­யா­ளப்­ப­டுத்­தி­யி­ருந்­தன. இரு அர­சாங்­கங்­களும் அவர்­களில் எவ­ரையும் விசா­ரிக்­காமல் பேராயர் கூறி­யது போல் முஸ்­லிம்கள் மீது மட்­டுமே வழக்குத் தொட­ரப்­பட்­டது.

சந்­தே­கத்தின் பேரில் கைது செய்­யப்­பட்டு கிட்­டத்­தட்ட மூன்று வரு­டங்­க­ளாக சிறையில் இருக்கும் அதிக எண்­ணிக்­கை­யி­லான முஸ்­லிம்­க­ளுக்கு விடு­தலை வழங்­கப்­ப­டாமல் அவர்­க­ளுடன் தொடர்­பான விசா­ர­ணைகள் மிகவும் மெது­வான வேகத்தில் நடை­பெ­று­கின்­றன. அவர்­களின் குடும்­பங்கள் மனச்­சோர்வு, விரக்தி மற்றும் நிதி நெருக்­க­டியில் இருப்­பது மட்­டு­மல்­லாமல், அந்த குடும்­பங்­களைச் சேர்ந்த இளை­ஞர்கள் தீவி­ர­வா­தி­க­ளாக மாறும் அபா­யமும் உள்­ளது.

2010 ஆம் ஆண்டு முதல் இலங்கை முஸ்­லிம்­களும் அவர்­க­ளது மத, கலா­சார விழு­மி­யங்­களும் மற்றும் வர்த்­தக நிறு­வ­னங்­களும் நாட்டில் தொடர்ச்­சி­யான வெறுப்­பூட்டும் பேச்­சுக்கள், நியா­ய­மற்ற அவ­தூ­றுகள் மற்றும் தாக்­கு­தல்­க­ளுக்கு உட்­பட்­டுள்­ளன. இவை முஸ்லிம் இளை­ஞர்­களை தீவி­ர­வா­தத்­திற்குள் தள்­ளி­யி­ருக்­கின்­றன. ஏரா­ள­மான பள்­ளி­வா­யில்­களும் தாக்­கு­த­லுக்கு உள்­ளா­கின. இதன் நிமித்தம் பெரும்­பான்மை சமூ­கத்தைச் சேர்ந்த நூற்­றுக்கும் மேற்­பட்ட இளை­ஞர்கள் கைது செய்­யப்­பட்­டனர், ஆனால், அவர்கள் அனை­வரும் பிணையில் விடு­விக்­கப்­பட்­டனர். அவர்கள் எவ­ருக்கும் எதி­ராக பயங்­க­ர­வாதத் தடைச் சட்­டத்தின் (PTA) கீழ் வழக்குத் தொட­ரப்­ப­ட­வில்லை. அதே நேரத்தில் பயங்­க­ர­வாத தடைச் சட்டம் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராகப் பயன்­ப­டுத்­தப்­பட்­டது. உல­கெங்­கிலும் உள்ள கோடிக்­க­ணக்­கானோர் வழி­படும் அல்­லாஹ்­விற்கு பெரும்­பான்மை சமூ­கத்தின் தீவி­ர­வா­திகள் கொடும்­பாவி செய்து எரித்து இழி­வு­ப­டுத்­தினர். புனித குர்­ஆனின் பிர­திகள் தீவி­ர­வா­தி­களால் எரிக்­கப்­பட்­டாலும் அந்த குற்­ற­வா­ளி­க­ளுக்கு எதி­ராக எந்த நட­வ­டிக்­கையும் எடுக்­கப்­ப­ட­வில்லை. இந்த அநீ­தி­களால் முஸ்­லிம்கள் மிகுந்த அதிர்ச்­சியும், வருத்­தமும், வேத­னையும் அடைந்­தனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்­களில் கொல்­லப்­பட்ட மற்றும் காய­ம­டைந்­த­வர்­க­ளுக்கு அவர்­களின் இனம், மதம் என்­ப­வற்றை பொருட்­ப­டுத்­தாமல் நீதி வழங்­கப்­பட வேண்டும். அத்­தோடு, உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்கள் தொடர்­பாக பாரா­ளு­மன்றத் தெரி­வுக்­குழு மற்றும் ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக்­கு­ழுவில் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள முஸ்­லிம்­க­ளுக்கு இழைக்­கப்­பட்ட அநீ­தி­க­ளுக்கு பொறுப்­பா­ன­வர்கள் சட்­டத்தின் முன் நிறுத்தப்பட்டு உரிய முறையில் தண்டிக்கப்பட வேண்டியது அவசியமாகும். மேலும், தடுப்புக் காவலில் உள்ளவர்கள் மீதான விசாரணைகள் இனியும் தாமதிக்காமல் முடிக்கப்பட்டு, நிரபராதிகள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும். மேலும் நடவடிக்கை எடுக்கக்கூடிய ஆதாரங்கள் உள்ள சந்தேக நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.

இலங்கையிலுள்ள நீதியை உறுதிப்படுத்த முயலும் அனைத்து அதிகாரிகளுக்கும் தனது முழுமையான ஒத்துழைப்பை வழங்க தேசிய ஷூரா சபை என்றூம் தயாராகவுள்ளது என்றும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.– Vidivelli

Leave A Reply

Your email address will not be published.