ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவும் அவரது அரசாங்கமும் பதவி விலகவேண்டும் என வலியுறுத்தும் ஆர்ப்பாட்டங்கள் உக்கிரமடைந்துள்ளமையால் நாட்டில் கொந்தளிப்பான நிலைமையொன்று உருவாகியுள்ளது. இந்நிலையில், இதனை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் இராணுவம் மற்றும் பொலிஸ் பலத்தை பயன்படுத்த முயற்சிப்பது நிலைமையை மேலும் மோசமடையச் செய்துள்ளது.
பாதுகாப்பு அமைச்சின் அறிக்கை
நாட்டில் நேற்றைய தினம் ( 20) மட்டும் காலை முதல் மாலை வரையிலான காலப்பகுதியில் 12 மாவட்டங்களில் 18 பாரிய ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரால் ஜகத் டயஸ் தெரிவித்தார்.
குறித்த அறிக்கையில், மேற்குறித்த 18 பாரிய ஆர்ப்பாட்டங்களுக்கு மேலதிகமாக பல இடங்களிலும் சிறிய சிறிய குழுக்களாக சேர்ந்து எதிர்ப்புக்களை வெளியிட்ட சம்பவங்கள் பல பதிவாகியுள்ளன.
ஆர்ப்பாட்டங்கள் காரணமாக, நாட்டின் பல முக்கிய வீதிகள் ஊடான போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டதகவும், இதனால் எரிபொருள் விநியோகம், அத்தியவசிய உணவு விநியோகம், உள்ளிட்ட பொருட்கள் சேவைகளை முன்னெடுக்கவும் குறிப்பிடத்தக்க அளவிலான பாதிப்புகள் ஏற்பட்டன.
மக்களின் எதிர்ப்பு வெளியிடுவதற்கான உரிமையை மதிப்பதாக கூறிய அவர், அவ்வுரிமையை பயன்படுத்தும் போது மற்றவர்களுக்கு அது இடைஞ்சல் இல்லாமல் இருக்க வேண்டும் என பொது மக்களிடம் கோரினார்.
13 ஆவது நாளாகவும் போராட்டம்
அரசாங்கத்திற்கு எதிராக தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் ‘கோ ஹோம் கோட்டா’ எனும் தொனிப்பொருளிலான மக்கள் எழுச்சிப்போராட்டம் 13வது நாளாக முன்னெடுக்கப்பட்டுகின்றது.
நேற்று 12 ஆவது நாள் ஆர்ப்பாட்டத்தின்போது ரம்புக்கணையில் போராட்டக்காரர்களுக்கு எதிராக பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தை கண்டித்து கோஷம் எழுப்பப்பட்டது.
எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டமையை கண்டித்து ரம்புக்கணையில் பொதுமக்களால் நேற்றுமுன்தினம் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் பொலிஸாரின் துப்பாக்கிப் பிரயோகத்திற்கு இலக்காகி உயிரிழந்த நபரை காலிமுகத்திடலில் கலந்துகொண்ட மக்கள் நினைவு கூர்ந்தனர்.
இதே வேளை இலங்கை மத்திய வங்கியின் சுயாதீனத்தன்மையை பாதுகாக்குமாறு கோரி இலங்கை மத்திய வங்கி தொழிற்சங்க ஒன்றியமானது காலிமுகத்திடலில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டது. இதன்போது மத்திய வங்கியின் சுயாதீனத்தன்மையை பாதுகாக்குமாறும் அரசியல் தலையீடுகளை நிறுத்துமாறும் அவர்கள் கோரியதுடன் அடக்குமுறையை நிறுத்துங்கள் வன்முறை ஒரு தீர்வல்ல எனும் பதாதைகளை காட்சிப்படுத்தியும் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
மேலும் மக்களின் எதிர்ப்பு போராட்டத்திற்கு மத்தியில் ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி பௌத்ததேரர் ஒருவர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார். திரிபேஹ சிறிதம்ம தேரர் எனும் பௌத்த தேரரொருவரே இவ்வாறு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
ம.வி.மு. ஆர்ப்பாட்டம்
இதனிடையே கடந்த திங்கட் கிழமை மக்கள் விடுதலை முன்னணியினர் அளுத்கமயிலிருந்து ஆர்ப்பாட்டப் பேரணியொன்றை ஆரம்பித்தனர். இந்த பேரணி திங்களன்று பாணந்துறையை வந்தடைந்தது. மறுநாள் செவ்வாய்க்கிழமை பாணந்துறையில் ஆரம்பித்து கொழும்பு நகர மண்டப வளாகத்தை அடைந்தது. பல்லாயிரக்கணக்கான மக்கள் குறித்த ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்துகொண்டு அரசாங்கத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
ஊடகவியலாளர்கள் ஆர்ப்பாட்டம்
நேற்று முன்தினம் செவ்வாய்க் கிழமை காலிமுகத்திடலில் அமைந்துள்ள பண்டாரநாயக்கவின் சிலைக்கு அருகாமையில் ஊடகவியலாளர்கள் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன், நேற்றைய தினம் கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாகவும் ஊடகவியலாளர்களின் ஆர்ப்பாட்டமென்று இடம்பெற்றது. இவ்விரு ஆர்ப்பாட்டங்களிலும் பெருமளவிலான ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
ரம்புக்கணை விவகாரம்
இதனிடையே நேற்றுமுன்தினம் ரம்புக்கணையில் எதிர்ப்பில் ஈடுபட்ட சிவிலியன்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம் சட்ட வரையறைகளுக்கு உட்பட்ட பலப் பிரயோகமா என்பது தொடர்பில் விசாரிக்க மூவர் கொண்ட குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. சமூக பொலிஸ் இராஜாங்க அமைச்சின் செயலர் எஸ்.ரி. கொடிகார தலைமையில் இந்த குழு, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் ஜகத் டயஸினால் அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழுவில், பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலர் எம்.எஸ்.பி. சூரியப்பெரும மற்றும் பாதுகாப்பு அமைச்சின் சட்ட ஆலோசகர் மேஜர் ஜெனரால் ஈ.எஸ். ஜயசிங்க ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.
இந்த குழுவானது, ரம்புக்கணையில், ஆர்ப்பட்டத்தை கலைக்க பொலிஸார் செய்த பலப் பிரயோகம் சட்ட ரீதியிலானதா என்பது தொடர்பில் ஆராயும் என பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.
நேற்று முன் தினம்(19) ரம்புக்கணையில் எதிர்ப்பில் ஈடுபட்டவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதன்போது நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம் மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகத்தினால் காயமடைந்த 13 பேர் தொடர்ந்தும் கேகாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மேலும் மூவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதென கேகாலை வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, காயமடைந்த 15 பொலிஸ் உத்தியோகத்தர்களும் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.– Vidivelli