அரசியல் யாப்பை திருத்துவதே நல்லது

மைத்திரி, ரணில், மஹிந்தவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் அதாவுல்லாஹ் சுட்டிக்காட்டு

0 828

யாப்பின் 19 ஆம் திருத்தத்தில் உள்ள குறைபாடுகளே அரசியலில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைக்கு காரணமெனத் தெரிவித்துள்ள தேசிய காங்கிரஸின் தலைவர் ஏ.எல்.எம்.அதாவுல்லாஹ், இதனை சரிசெய்ய அரசியல் சாசனத்தில் திருத்தங்களை மேற்கொள்வது நல்லது என தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு அவர் அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை இங்கு முழுமையாக தருகிறோம்,

‘நமது  – உயர் நீதிமன்றத்திற்கும் பாராளுமன்றத்திற்குமிடையில் இருந்துவருகின்ற “பொறிமுறை”- மேலும் பலப்படுத்தப்பட வேண்டும்.

இன்றைய அரசியல் இழுபறி நிலைமை –  மீண்டும் ஏற்படாதவாறு உறுதிப்படுத்தப்படவும் வேண்டும்.

  1. நாட்டின் இன்றைய அரசியல் இழுபறி நிலைமைக்கு – பாராளுமன்றத்திற்கும் உயர் நீதிமன்றத்திற்குமிடையில் இருந்து வருகின்ற பொறிமுறையின் பலவீனமும் – ஒரு காரணமாக இருக்கலாம் என நான் கருதுகிறேன். ஒரு கட்சியின் தலைவன் என்ற வகையிலும், அரசியலமைப்பு திருத்தங்கள் கொண்டு வரப்பட்டபோது பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவன் என்ற அனுபவத்திலும், இதனை இத்தருணத்தில் சுட்டிக்காட்டுவது பொருத்தமானது என நினைக்கிறேன்.
  2. ஏனெனில், பாராளுமன்றத்தில் இயற்றப்படுகின்ற சட்டங்கள், உயர் நீதிமன்றத்தின் பொருள்கோடல்களுக்கமையவே நடந்தேறுகிறது என நாம் கருதிக் கொண்டிருந்தாலும், சபாநாயகர் – அத்திருத்தங்களுக்கு கைச்சாத்திட்ட பின்னர் அது சட்டமாக்கப்படும் நிலையில், உயர் நீதிமன்றத்தின் அப்பொருள்கோடல்களுக்கமைய அத்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டனவா என்பது பற்றி பரீட்சித்துப் பார்க்கப்படுவதில்லை.
  3. இதேவேளை, பாராளுமன்றத்தால் சட்டமொன்று உருவாக்கப்பட்ட பின்னரும், அது தொடர்பில் மீளாய்வு செய்வதற்கு உயர் நீதிமன்றம் செல்லும் உரிமையினை, இந்திய அரசியலமைப்புச சாசனமும் தன் மக்களுக்கு வழங்கியிருக்கிறது.
  4. இதேவேளை, 19ஆவது திருத்தம் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டபோது நிறைவேற்று அதிகாரத்திற்கும் சட்டவாக்க சபைக்குமிடையில் இருந்து வருகின்ற சமனிலை அறுந்துவிடக்கூடாது என்ற நோக்கில் – பாராளுமன்றம் தொடர்பில் ஜனாதிபதிக்கு இருந்து வந்த அதிகாரங்கள் குறைவில்லாமலும் முன்னரை விடப் பலமாகவும் இருந்ததை உறுதிப்படுத்தியதன் பின்னரே அதற்கு வாக்களித்தவன் என்ற அடிப்படையில், நாட்டின் இன்றைய அரசியல் இழுபறி நிலைக்கும், 19ஆவது திருத்தத்திற்குமிடையில் உள்ள தொடர்புகளை ஆராய விளைகிறேன்.
  5. இத்திருத்தமானது, ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் முன்மொழியப்பட்டதால், அவரின் அரசியல் தொடர்பான எதிரிகளை பலமிழக்கச் செய்வதற்கு அத்திருத்தத்தில் முன்னுரிமை கொடுக்கப்பட்டது நம் பாராளுமன்றத்துள், ஒன்றும் புதிய அனுபவமல்ல.
  6. இருப்பினும், அவர், மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளின் சிலதை நிறைவேற்றுவதுபோல், “அரசியலமைப்புசபை” உருவாக்கமும் அதன் அனைத்து ஆணைக்குழுக்களும் அமையப் பெற்றிருந்தன. அவை ஒரு பார்வையில் ஒப்புக் கொள்ளக்கூடியதொன்றாகும் இருக்கிறது.

iii. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை அடிப்படையாகக் கொண்டியங்கும் நமது அரசியல் சாசனம், சுமார் 40 வருடங்கள் பழமைவாய்ந்ததோடு, அதில் ஏற்கனவே 18 திருத்தங்களும் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இருந்தாலும், ஜனாதிபதி பாராளுமன்றத்தைக் கலைத்தல்   தொடர்பான தத்துவங்களைக் கொண்டிருந்த உறுப்புரிமைகளான, 70(1) இன் உப பிரிவுகளும், 70(3) பிரிவும் அதன் உபபிரிவுகள் போன்றவைகளும், அத்திருத்த வேளைகளின்போது, எவ்வித மாற்றங்களுக்கும் உட்படுத்தப்பட்டிருக்கவில்லை. இதனால் நம் அரசியல் சாசனம் அக்காலங்களில் ஓட்டைகள் போடுவதிலிருந்து தவிர்க்கப்பட்டிருக்கிறது.

  1. iv. அன்றியும், உயர் நீதிமன்றத்தின் பொருள்கோடல்களும் இதற்கமையவே, தொடர்ச்சியாக இருந்து வந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. ஏனெனில், – நமது நாடு எதிர்கொள்ளும் இன்றைய முரண்பாடுகளும் அரசியல் இழுபறி நிலைமைகளும் தோற்றம்பெறக்கூடாது என்பதற்காக.
  2. v. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஒருவருக்கும் பாராளுமன்றத்திற்குமிடையில் ஒவ்வாமை ஏற்படாது – சமனிலை பேணும் நோக்கிலேயே 70(1) இன் (a) தொடக்கம் (d) வரையான உப பிரிவுகள் அமையப்பெற்றிருந்தன. “பொதுத்தேர்தலொன்று நடந்து, ஒருவருடத்தின் பின்னர், ஜனாதிபதியால் பாராளுமன்றத்தைக் கலைக்கக்கூடியவாறாக இருந்த இ அதன் (a) உப பிரிவானதுவும் மேற்சொன்ன சமனிலை பேணுவதற்காகவே அமையப்பெற்றிருந்தது.
  3. 19ஆவது திருத்தத்தின் போது, அந்த 70(1) சரத்தானது அப்படியே விடப்பட்டு அதன் (a) தொடக்கம் (d) வரையிலான உறுப்புரிமைகள் சர்வஜன வாக்கெடுப்பொன்று நடத்தப்படாமல் நீக்கப்பட்டு, அதன் நோக்கங்களுக்கு மாறாக, “4 ½ வருடத்துள் பாராளுமன்றத்தின் 2/3 பங்கு பெரும்பான்மையின் தீர்மானத்தின் மூலமேயன்றி, ஜனாதிபதியொருவரால் அதனைக் கலைக்க முடியாது” எனவும் சேர்க்கப்பட்டது.

vii. இருந்தாலும், மேற்சொன்ன சரத்து 70(1)இன் திருத்தங்களுக்கு நஷ்டஈடாகவும், ரணில் விக்கிரமசிங்கவின் ஜனாதிபதிக் கனவிற்கு ஏற்புடையதாகவும் – “அவசியமேற்படுகின்ற வேளையொன்றில் ஜனாதிபதியானவர் பாராளுமன்றத்தை கலைக்கக் கூடியவாறான,” அதிகாரத்தைக் கொண்ட 33.2(c) சரத்தும் சர்வஜன வாக்கெடுப்பின்றியே தோற்றுவிக்கப்பட்டது.

viii. மேலும், “பாராளுமன்றக் கூட்டத்தொடர் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், ஜனாதிபதியால், சரத்து 70(3) இற்கமைய, அதனைக் கலைக்கக்கூடியவாறாக இருந்த உப பிரிவுகளும் திருத்தப்படாமல் அப்படியே தொடரவிடப்பட்டன.”

  1. ix. இதற்கமைய, சரத்து 70(3)உம் அதன் உப பிரிவுகளும், 33.2(c) பிரிவும் – ஜனாதிபதி ஒருவரால் பாராளுமன்றத்தைக் கலைக்கக்கூடியவாறாக, அதிகாரம் நிறைந்து காணப்பட்டாலும், சர்வஜன வாக்கெடுப்பொன்று நடாத்தப்படாமல், இவைகளைத் திருத்த முயன்றமை ஒரு வரலாற்றுத் தவறென்பதனை சம்பந்தப்பட்ட அனைவரும் ஒப்புக்கொண்டேயாக வேண்டும்.
  2. x. இதுபோன்றே, “ஜனாதிபதி ஒருவருக்கெதிராக 126 உறுப்புரிமையின் கீழ், அடிப்படை மனித உரிமை வழக்கு” தொடர்வது சம்பந்தமாக, சரத்து 35(1) இல் புதிதாக நுழைக்கப்பட்ட பந்தியும் ஒன்றுசேர்ந்தே – இன்றைய நமது நாட்டின் வரலாற்றுத் துயரிற்கு வித்திட்டிருக்கிறது எனத் துணியலாம்.
  3. இறுதியாக – அரசியற் புரட்சியொன்றின்பின், அன்று ஏற்பட்ட, “சம்பிரதாயத்திற்கு முரணான” செயற்பாடுகளின் மூலம், உருவான குழப்பநிலையில், தந்திரோபாயங்கள் பிரயோகிக்கப்பட்டு அவசர அவசரமாக இவை நிறைவேற்றப்பட்டிருந்ததனை – “19ஆவது திருத்தச் சட்டம் இன்று சான்று பகர்கின்றது.

நாட்டுற்பற்றுள்ள தலைவர்களே!

  1. மேற்சொன்ன காரணங்களின் அடிப்படையில்,
  2. மேலே குறிப்பிட்டவாறு, உயர் நீதிமன்றத்திற்கும் பாராளுமன்றத்திற்கும் இடையில் இருந்துவருகின்ற “பொறிமுறையினை” பலப்படுத்துவதற்கு, எதிர்காலத்தில் பாராளுமன்றத்துள் சட்டமொன்று கொண்டுவரப்பட வேண்டியதன் அவசியம் உணரப்படுகின்றது.
  3. இன்றைய ஜனாதிபதியால் – பாராளுமன்றம் கலைக்கப்படுவதற்கு – அன்றிருந்து இன்றுவரை திருத்தப்படாமல் இருந்துவருகின்ற, 70(3) பிரிவும், அதன் உபபிரிவுகளும் மாத்திரம் போதுமானது எனக் கருதமுடிகிறது.

iii. இருந்தாலும், “நாட்டின் இன்றைய, அசாதாரண நிலைமையினை” ஆவலோடு எதிர்பார்த்திருந்த பின்புலங்களினதும், அவைகளை நடைமுறைப்படுத்த எத்தனித்த அரசியல் சக்திகளினதும் செயற்பாடுகளினாலேயே, இன்று – நமது நிறைவேற்று அதிகாரமும், பாராளுமன்றமும் தினமும் முட்டி மோதி – அடிக்கடி நீதிமன்றமும் சென்று வருகிறது. இதனை, நாட்டுப்பற்றுள்ள எந்தக் குடிமகனும் அங்கீகரிக்கவில்லை. நம் தாய்நாடு சீரழிவதை அவர்கள் ஏற்றுக்கொள்ளவுமில்லை என்பது புலனாகிறது.

  1. எனவே, 19ஆவது திருத்தத்தின்போது சர்வஜன வாக்கெடுப்பின்றி உருவெடுத்த சரத்து 33.2(c) யும், சரத்து 70(1) இன் திருத்தங்களும் நீக்கப்பட்டு, இதன் மூலம் – ஜனாதிபதிக்கு பாராளுமன்றத்தைக் கலைக்கக் கூடியவாறு அமையப்பெற்றிருந்த முன்னைய நிலைமைக்கு – நமது அரசியல் சாசனம் மீட்கப்படவேண்டியது – இன்றைய காலத்தின் தேவையாக வலியுறுத்தி நிற்பதனை – மறுக்க முடியாமலுமிருக்கிறது.
  2. v. மேற்சொன்னவாறு – அப்படியே மீண்டுவருமானால் – நமது அரசியல் சாசனம் 19ஆவது திருத்தத்திற்கு முன்னர் இருந்த ஏற்பாடுகளுக்கமைய, சரத்து1(a) இற்கு இணங்க, “பொதுத்தேர்தலொன்று நடந்து ஒரு வருடத்தின் பின்னர், ஜனாதிபதியால் பாராளுமன்றத்தை கலைக்கக்கூடியவாறு” – அது அமையப்பெற்றிருக்கும் அல்லவா.
  3. இதன்மூலம் – மேற்சொன்ன பிரிவு 70.1(a) இற்கமையவோ, அல்லது இதற்கு முன் குறிப்பிட்டவாறு – பிரிவு 70(3)உடன், அதன் உப பிரிவுகளுக்கமையவோ – தேவைக்கேற்றவாறு ஒரு பிரிவினூடாக, பாராளுமன்றத்தைக் கலைக்கக் கூடியதாக அது அமையப் பெற்றிருக்குமல்லவா?. இது –  ஜனாதிபதியினால்  2018.11.09 ஆம் திகதிய, பாராளுமன்றக் கலைப்பு தொடர்பில், வெளியிடப்பட்ட பிரகடனத்தை ஏற்புடையதாக்கும்.

vii. எனவே, இதற்கமைய – 19ஆவது திருத்தத்தின்போது, திருத்தியமைக்கப்பட்ட உறுப்புரிமை 33.2(c)உம், உறுப்புரிமை 70(1) இன் திருத்தங்களும், இடைநிறுத்தப்பட்டு – முன்னைய 70(1) இன் (a) தொடக்கம் (d) வரையான உறுப்புரிமைகளும் அத்தோடு 70(3) உறுப்புரிமையும் அதன் உபஉறுப்புகளும் – இன்று இயங்கவிடப்பட வேண்டியது – நிறைவேற்று ஜனாதிபதி முறைக்கு அத்தியாவசியமானது என்பதை, தாங்கள் ஒவ்வொருவரும் ஏற்றுக்கொள்வீர்கள்.

viii. மேற்சொன்னவாறு, பாராளுமன்றம் கலைந்துவிட்டதாக எடுத்துக் கொண்டால், தேர்தலுக்கு முகம்கொடுத்தபின் – நிறைவேற்று ஜனாதிபதியின் மிக முக்கியமான அதிகாரமாகக் கருதப்பட்ட (அதாவது, “பொதுத்தேர்தல் ஒன்று நடந்து ஒரு வருடத்தின் பின்னர் ஜனாதிபதியால் பாராளுமன்றத்தைக் கலைக்கக்கூடியவாறான”) – உறுப்புரிமை 70.1(a)யும் அதுபோன்றவையும் நீக்கப்பட்டு – நிறைவேற்றதிகாரத்தின் முதுகெலும்பு உடைக்கப்பட்டதுபோல் – அது – அப்படியே கிடப்பில் விடப்பட வேண்டுமென – அப்புதிய பாராளுமன்றம் கருதுமாயின்,

  1. ix. அதற்கேற்ப, அதன் உறுப்புரிமைகளை முறையாக உருவாக்கி, அல்லது இதைவிடவும், சிறந்த யாப்பொன்றினைத் தயாரித்தோ, 2/3 பங்கு உறுப்பினர்களின் பெரும்பான்மையுடன், அது நிறைவேற்றப்படுவதோடுசர்வஜன வாக்கெடுப்பொன்றினையும்சந்தித்து, அதற்கேற்றவாறு நமது அரசியலமைப்பு சாசனத்தை திருத்தியமைத்துக் கொள்வதே, உகந்ததென உணரவும் முடிகிறது.
  2. எனவே, இக்கருத்துகளை தங்களின் மேலான கவனத்திற்கெடுத்து, அனைத்துத் தரப்பினரும் “தகுதியான ஓரிடத்தில்” – இங்கு குறிப்பிடப்பட்டவைகளுக்கிணங்க, இணக்கப்பாடொன்றிற்கு வரமுடியுமாக இருந்தால், விட்ட தவறுகளும் திருத்தப்பட்டு, நமது தாய் நாட்டின் இன்றைய வரலாற்றுத் துயரமும் நீங்கிவிடும்.
  3. மேலும், மிகப்பலமாக இயங்கிவந்த நமது அரசியல் சாசனம் – வேறு நோக்கங்களின் அடிப்படையில் ஓட்டைகள் போடப்படுவதனால் – அரச இயந்திரத்தின் பாகங்கள், இன்று – ஒன்றோடொன்று முட்டிமோதிக் கொள்கின்றவாறான, மற்றவர்களின் அரசியற் கலாசாரம் – எதிர்கால, நம் – சந்ததியினர்களுக்கும் விட்டு வைக்கப்படக்கூடாதவாறும் – இன்றைய நமது தீர்மானங்கள் அவர்களுக்கு முன்மாதிரியானவாறும் அமையப்பெறும்.
  4. மேலும் – பாரம்பரிய சுயாதீனக் கட்டமைப்பைக் கொண்டதும், உயர் கௌரவத்திற்குரியதுமான நமது நீதித்துறையினை – அசௌகரியங்களிலிருந்து பாதுகாக்கவும் முடியும். ஏனெனில் – இத்தவறுகள் – அரசியல்வாதிகளினாலேயே உருவாக்கப்பட்டவைகளாகும். அதனை – அவர்களே பகிரங்கமாக ஏற்றுக்கொண்டு – வெற்றி, தோல்விகளுக்கப்பால் – மக்களின் தேவைகளுக்கு முன்னுரிமை கொடுத்து – மேற்சொன்ன இணக்கப்பாட்டுக்கு வருவதன் மூலம் – வரலாற்றுக்கு முன்மாதிரியாவோம். பிற நாட்டவர்களிடமிருந்து நாம் கற்றுக் கொள்ளவேண்டியது – இக்கலாசாரம் மாத்திரமே அன்றியும் – வேறொன்றுமாகாது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    -Vidivelli

Leave A Reply

Your email address will not be published.