ஏ.ஆர்.ஏ.பரீல்
நாடு தழுவிய ரீதியில் போராட்டங்கள், கண்டனப் பேரணிகள், மக்கள் அத்தியாவசியப் பொருட்களுக்காக நாட்கணக்கில் வரிசையில் காத்துக் கிடக்கின்றனர்.
எரிவாயு, எரிபொருள், பால்மா என்று உணவுப்பொருட்களுக்காக காத்திருக்கும் மக்கள் ஆட்சியாளர்களால் கண்டு கொள்ளப்படுவதில்லை.
2019, 2020, 2021 மற்றும் 2022 என்று வரிசையாக முஸ்லிம்களின் நோன்பு காலங்களிலே ஆட்சியாளர்களால் முஸ்லிம் சமூகம் இலக்கு வைக்கப்பட்டிருக்கிறது எனலாம்.
2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள். இத்தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் பலியானார்கள். பலர் பலத்த காயங்களுக்குள்ளானார்கள் இத்தாக்குதல் ஒரு குறிப்பிட்ட முஸ்லிம் பெயர் தாங்கிய குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட போதும் ஆட்சியாளர்கள் முழு முஸ்லிம் சமூகத்தின் மீதே இந்தப் பழியைச் சுமத்தி பழிவாங்கினார்கள்.
நூற்றுக்கணக்கான முஸ்லிம் இளைஞர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டார்கள். இந்தத் தாக்குதலின் பின்னணியில் ஒரு சிலர் இருந்திருக்கலாம். ஆனால் முழு முஸ்லிம் சமூகமும் சந்தேகத்தின் கண்கொண்டே நோக்கப்பட்டது. இன்றும் இதே நிலைமையே நீடிக்கிறது.
இத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரி இதுவரை சரியாக இனங்காணப்படவில்லை. இத்தாக்குதல் சம்பவம் அரசியல் பின்னணியைக்கொண்டது என பரவலாக சந்தேகிக்கப்படுகிறது. பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் இதனையே தொடர்ச்சியாகக் கூறிவருகிறார். இத்தாக்குதல் தொடர்பாக இதுவரை உண்மையான சூத்திரதாரிகள் இனங்காணப்படாமையினால் சர்வதேச விசாரணை தேவையெனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
முஸ்லிம்களின் வேதனைக் குமுறல்களுக்கு மத்தியில் முதலாவது கொரோனா ஜனாஸா பலவந்தமாக எரிக்கப்பட்டது. இச் சம்பவம் நடந்து சரியாக இரண்டு வருடங்கள் பூர்த்தியாகின்ற அதே நாளில் (கடந்த மார்ச் 31ஆம் திகதி மாலை) இந்தக் கொடூர ஆட்சியாளர்களுக்கு எதிராக Go Gota Home என வலியுறுத்தி முதலாவது பாரிய ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது.
இன்றைய ஆட்சியாளர்கள் ஆட்டம் கண்டுவிட்டார்கள். நாட்டில் குறுகிய காலத்தில் பாரிய மாற்றம் ஒன்று நிகழப்போகிறது. ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ஷ மற்றும் அமைச்சர்களின் இல்லங்களை முற்றுகையிடும் அளவுக்கு மக்கள் கொதித்தெழுந்துள்ளனர். நாடெங்கும் வீதிகள்தோறும் ஆர்ப்பாட்டங்களை காணக்கூடியதாக உள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்பு சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்ட அப்பாவி இளைஞர்கள் பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டபோது அவர்களின் பெற்றோர் உறவினர்கள் கதறி அழுதார்கள். சிலர் செய்வதறியாது மயக்கமுற்று வீழ்ந்தார்கள். அவர்கள் அனைவரும் அப்போது இறைவனிடமே கையேந்தினார்கள். நீதிகேட்டார்கள். இறைவனிடம் மன்றாடினார்கள். விசேட நோன்புகளை நோற்றார்கள்.
அவர்களது மன்றாட்டங்கள் கோரிக்கைகள் இறைவனால் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டன என்று இன்று முஸ்லிம் சமூகத்தில் பரவலாகப் பேசப்படுகிறது.
அல்லாஹ் கொடிய ஆட்சியைக் கவிழ்த்துவிட்டான். தண்டித்துவிட்டான். அதுதான் ஆட்சியாளர்களுக்கு இந்தச் சோதனை என்று பகிரங்கமாக கருத்து வெளியிட்டு வருகிறார்கள்.
உயிர்த்த ஞாயிறுதாக்குதலின் பின்பு முஸ்லிம் சமூகமே இலக்கு வைக்கப்பட்டது. முஸ்லிம்கள் அனுபவித்துவந்த உரிமைகள் சூட்சுமமாக பறிக்கப்படுவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அரசாங்கத்தின் உத்தரவின் பேரில் பல பள்ளிவாசல்கள் மூடப்பட்டன.
அரபுக்கல்லூரிகள் 50 க்கும் 75க்கும் இடைப்பட்ட எண்ணிக்கையில் மட்டுப்படுத்தப்படவுள்ளன. அரபுக்கல்லூரிகளின் பாடத்திட்டம் திருத்தியமைக்கப்படவுள்ளது. முஸ்லிம்களின் காணிகள் தொல்பொருள் என்ற போர்வையில் பலாத்காரமாக அபகரிக்கப்பட்டுகின்றன.
அரசாங்கத்தின் திட்டமிடப்பட்ட இந்த அநியாயங்கள் காரணமாகவே இந்த சோதனைகள் உருவாகியுள்ளதாக முஸ்லிம்கள் தெரிவிக்கின்றனர்.
ஜனாஸாக்கள் எரிக்கப்பட்டு சரியாக இரண்டு வருடங்களில்….
கொரோனா தொற்றினால் உயிரிழந்த முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் வலுக்கட்டாயமாக அரசாங்கம் தகனம் செய்துவிட்டமையை முஸ்லிம் நாடுகள் மாத்திரமல்ல முழு உலக நாடுகளும் அறியும். இலங்கை அரசாங்கத்தின் தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்யுமாறு ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் நான்கு அறிக்கையாளர்கள் முன்வைத்த கோரிக்கையைக்கூட அரசாங்கம் கவனத்தில் கொள்ளவில்லை. அரசாங்கம் சிறுபான்மை இனத்தவரின் மத உரிமைகளுக்கு இடமளிக்கவில்லை. அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள மத உரிமைகளைக் கூட அரசு அலட்சியம் செய்தமை இங்கு குறிப்பிட்டுக்கூறக்கூடியதாகும்.
இலங்கையில் முதலாவது கொரோனா ஜனாஸா 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30ஆம் திகதியே பதிவானது. இந்தச் சந்தர்ப்பத்தில் இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களை அடக்கம் செய்யவும் முடியும், எரிக்கவும் முடியும் என்ற ஐ.நா. சுகாதார ஸ்தாபனத்தின் நிலைப்பாடே காணப்பட்டது.
இந்நிலையில் 2020 மார்ச் 30ஆம் திகதி கொரோனா தொற்றால் இறந்தவரின் ஜனாஸாவை அடக்கம் செய்யாது எரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்தது. நீர்கொழும்பில் இடம்பெற்ற இந்த ஜனாஸாவை எரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்ததையடுத்து குடும்பத்தினர் அச்சத்துக்குள்ளாகினர். வேதனைக்குள்ளாகினார்கள். அக்குடும்பத்துடன் பிரதேச சுகாதார அதிகாரிகளும் பொலிஸாரும், பாதுகாப்புத்தரப்பினரும் அச்சுறுத்தும் தொனியிலே பேசியிருந்தனர். ஜனாஸா எரிக்கப்படுவதை தடுப்பதற்கு முடியாமற் போனது. அன்று இரவே ஜனாஸா எரிக்கப்பட்டது.
முஸ்லிம்களின் வேதனைக் குமுறல்களுக்கு மத்தியில் முதலாவது கொரோனா ஜனாஸா பலவந்தமாக எரிக்கப்பட்டது.
இச் சம்பவம் நடந்து சரியாக இரண்டு வருடங்கள் பூர்த்தியாகின்ற அதே நாளில் (கடந்த மார்ச் 31ஆம் திகதி மாலை) இந்தக் கொடூர ஆட்சியாளர்களுக்கு எதிராக முதல் பாரிய ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும். இந்த ஆர்ப்பாட்டத்தில் இன மத வேறுபாடுகளின்றி மக்கள் கலந்து கொண்டனர்.
முஸ்லிம்களின் மத உரிமைகளை கலால் எட்டி உதைத்துவிட்டு ஜனாதிபதியே 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30 ஆம் திகதி ஜனாஸா எரிப்புக்கு உத்தரவிட்டார். அதே ஜனாதிபதிக்கு எதிராக இரண்டு வருடங்களின் பின்பு கடந்த மார்ச் 31 ஆம் திகதி Go Gota Home என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
முதலாவது ஜனாஸா எரிக்கப்பட்டு ஓரிரு தினங்கள் கடந்து இரண்டாவது கொரோனோ ஜனாஸா நிகழ்ந்தது. மருதானையைச் சேர்ந்த ஒருவர் ஐ.டீ.எச். இல் உயிரிழந்தார். இவரது ஜனாஸாவை எரிப்பதற்கும் அவரது வீட்டாரை வற்புறுத்தியே கையொப்பம் பெற்றுக்கொள்ளப்பட்டது.
இதேவேளை 20 நாளேயான ஆண்குழந்தையொன்று பலவந்தமாக தகனம் செய்யப்பட்டமை இலங்கையில் மட்டுமன்றி முழு உலகிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குறிப்பாக முஸ்லிம் நாடுகளில் வாழும் மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இந்தக் குழந்தை 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 7ஆம் திகதி காலை 10.45 மணியளவில் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. 8ஆம் திகதி மாலை 4.15 மணிக்கு குழந்தை மரணமடைந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. மறுதினம் டிசம்பர் 9ஆம் திகதி மாலை 4 மணிக்கு அந்தக் குழந்தை தகனம் செய்யப்பட்டது. குழந்தையின் மரணம் பற்றி பெற்றோருக்கு அறிவிக்கப்படவில்லை. பெற்றோர் நேரம் கழித்து வைத்தியசாலையைத் தொடர்பு கொண்டபோது தான் குழந்தை மரணம் அடைந்துவிட்ட செய்தி பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டது.
ஒரு தனியார் வைத்தியசாலையில் பி.சி.ஆர்.சோதனை நடத்தப்பட வேண்டுமென குழந்தையின் தந்தை மன்றாடியுள்ளார். வைத்தியசாலை நிர்வாகம் அதற்கு அனுமதியளிக்க மறுத்துள்ளதோடு குழந்தையை தகனம் செய்ய கையொப்பம் இடுமாறு அவரை வற்புறுத்தியுள்ளது. தகனம் செய்யப்படுவதை பார்வையிட பொரளை பொது மையானத்துக்கு வருமாறு தந்தைக்கு அழைப்பு விடுத்துள்ளது. தகனம் செய்வதற்கு இன்னும் எத்தனையோ உடல்களை இருக்கும் நிலையில் ஏன் எனது குழந்தையை தகனம் செய்ய இவ்வளவு அவசரம் காட்டுகிறீர்கள் என்ற தந்தையின் கேள்விக்கு வைத்தியசாலை நிர்வாகம் பதிலளிக்கவில்லை. அவர்கள் குழந்தையை எரிப்பதிலே குறியாக இருந்தார்கள் என குழந்தையின் தந்தை ஊடகவியலாளர்களிடம் தெரிவித்திருந்ததை இங்கு நினைவுபடுத்திப் பார்க்க வேண்டும்.
பெரும்பான்மை சமூகத்தின் இனவாத அரசியல் தான் இலங்கையின் போக்கை மாற்றியமைத்தது என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது. 1948 இல் இலங்கை சுதந்திரம் அடைந்தபோது முழு உலகத்துக்கும் முன்மாதிரியான ஒரு நாடாகவே அது திகழ்ந்தது. பொருளாதாரம், அரசியல் ஸ்திரப்பாடு, சமூக நல்லிணக்கம் என அனைத்திலும் அது மேலோங்கியிருந்தது. இன்று உலகில் மிகவும் ஊழல் மிக்க ஒரு நாடாகவும், வங்குரோத்து நிலைக்கு வந்துவிட்ட தோல்வி கண்ட நாடாகவும் இலங்கை மாறியுள்ளது. இந்நிலையை உருவாக்கியவர்கள் இந்த நாட்டின் சிறுபான்மை இனமக்கள் அல்லர்.
இன்று பெரும்பான்மை மக்கள் அரசின் இனவாத திருகுதாளங்களை உணர்ந்து கொண்டுள்ளார்கள். சிறுபான்மை மக்களுடன் கைகோர்த்து வருகிறார்கள். இனவாத பெளத்த மதகுருமார்களுக்கு எதிராகவும் பெரும்பான்மை இனமக்கள் போர்க்கொடி ஏந்தியுள்ளனர்.
ஆட்சியாளர்கள் சிறுபான்மை மக்களுக்கு செய்த கொடூரங்கள் மற்றும் அட்டூழியங்கள் இன்று அவர்களை பழிவாங்கிவிட்டன என்று கூறினால் அது மிகையாகாது.
கொரோனா தொற்றுக்குள்ளாகி மரணிப்போரை கட்டாயம் எரிக்க வேண்டும் என்ற வர்த்தமானி அறிவித்தலை வாபஸ் பெறும்படி பல மனுக்கள் உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டன. குறிப்பிட்ட மனுக்களை விசாரணைக்கு ஏற்காது பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய நிராகரித்தார்.
மூவரடங்கிய நீதியரசர்கள் குழாமின் பெரும்பான்மையின் அடிப்படையில் இம்மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. நீதிமன்றம் இதனை தள்ளுபடி செய்தது.
“எரிக்கப்பட்ட முதலாவது ஜனாஸாவுக்கும் இரண்டாவது ஜனாஸாவுக்கும் கொரோனா இருந்ததா? என்பதில் சந்தேகம் இருக்கிறது. அவர்கள் முதுமை மற்றும் ஏற்கனவே வேறு நோய்களுக்கு உள்ளாகியிருந்த நிலையில் மரணித்திருக்கவும் வாய்ப்பு இருக்கிறது. எரிக்காமலிருந்தாலாவது தோண்டியெடுத்து பரிசோதனை செய்து பார்க்கலாம். ஆனால் அப்படியான சந்தர்ப்பத்தை இல்லாமற் செய்வதற்கே ஜனாஸாக்களை எரித்தனர்” என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மெளலானா தெரிவித்திருந்தார்.
ஜனாஸா முதலாவது எரிக்கப்பட்ட தினத்தையடுத்து இரண்டு வருடங்களின் பின்பு அதாவது 2022 மார்ச் 31 ஆம் திகதி ஜனாஸா எரிப்புக்கு உத்தரவிட்ட ஜனாதிபதிக்கும் அவரது கட்சியினருக்கும் இறைவன் பாடம் புகட்டியுள்ளான் என்றே குறிப்பிடத்தோன்றுகின்றது. அநியாயமிழைக்கப்பட்டவர்களின் பிரார்த்தனை எவ்வளவு பலம் வாய்ந்தது என்பதை இதன் மூலம் நாம் கண்டு கொள்ளலாம்.
ஜனாதிபதி இல்லத்துக்கு அருகில் ஆர்ப்பாட்டங்கள்
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னர் முஸ்லிம் சமூகம் பல இன்னல்களை அனுபவித்து வந்துள்ளது. குறிப்பாக ரமழான் காலத்தில் முஸ்லிம்கள் பல அசெளகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
தங்களுக்கு இன்னல்கள் ஏற்பட்ட போதெல்லாம் ஆட்சியாளர்களால் சவால்கள் விடுக்கப்பட்ட போதெல்லாம் அவர்கள் இறைவனிடமே கையேந்தினார்கள். பொதுத்தேர்தல் மற்றும் ஜனாதிபதித் தேர்தலின்போதுகூட நாட்டில் நல்லாட்சி அமையவேண்டுமென்றே பிரார்த்தித்தார்கள். ஆனால் பதவிக்கு வந்த ஆட்சியாளர்கள் அதிகார மோகத்தில் மூழ்கிவிட்டிருந்தனர். அதன் பிரதிபலனையே இன்று நாடு எதிர்கொண்டுள்ளது.
ஜனாதிபதி வெற்றி பெற்று பதவிக்கு வந்ததும் முஸ்லிம்கள் தனக்கு வாக்களிக்கவில்லை என்று பகிரங்கமாகவே தெரிவித்திருந்தார். அவரது செயற்பாடுகள் முஸ்லிம்கள் அடிப்படைவாதிகள் என்றும் அவர்களைத் தண்டிக்கும் பாணியிலே அமைந்திருந்தது.
அதன் பிரதிபலனே மிரிஹானயில் அவரது இல்லத்துக்கு அருகில் கடந்த 31ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம். எரிபொருள் தட்டுப்பாடு, மின் துண்டிப்பு, விலைவாசி உயர்வு பால்மா தட்டுப்பாடு உள்ளிட்ட பல விடயங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மிரிஹான பொலிஸ் பிரிவில் அமைந்துள்ள ஜனாதிபதியின் இல்லத்துக்கு அருகில் மக்கள் பரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து ஆர்ப்பாட்டத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கொழும்பு மாவட்டம் முழுவதும் கடந்த வியாழக்கிழமை இரவு முதல் வெள்ளிக்கிழமை அதிகாலைவரை பொலிஸ் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது.
வியாழக்கிழமை மாலை 6 மணியளவில் மிரிஹான ஜுப்லி கணு சந்தியில் ஆரம்பித்த அமைதி ஆர்ப்பாட்டம் எம்புல்தெனிய ஜனாதிபதி இல்லத்துக்கு அருகே பெங்கிரிவத்தை வீதியில் அமைதியற்ற நிலைமையை தோற்றுவித்தது. இறுதியில் பாதுகாப்பு படையினர் கண்ணீர்புகை பிரயோகம், இறப்பர் குண்டுத்தாக்குதல் நடத்தி ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்தினர். இதன்போது 4 ஊடகவியலாளர்கள் 39 சிவிலியன்கள் படுகாயமடைந்தனர். இரு பஸ்வண்டிகள் , பொலிஸ் ஜீப் ஒன்று, 2 மோட்டார் சைக்கிள்கள் 2 முச்சக்கரவண்டிகள் தீக்கிரையாக்கப்பட்டன.
ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜுப்லி கணு சந்தியிலிருந்து அமைதிப்பேரணியாக சில சுலோகங்களுடன் மிரிஹான எம்புல்தெனிய ஜனாதிபதி இல்லத்தை நோக்கி நகரலாயினர். இந்நிலையில் அமைதிப்பேரணியாக சென்ற பொதுமக்களை பாதுகாப்பு தரப்பினர் ஜனாதிபதி இல்லத்துக்கு அருகே உள்ள பெங்கிரிவத்தை வீதியின் முகப்பில் தடுத்தனர். இதனால் ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்து கொண்ட மக்கள் மஹரகம119 பஸ்வண்டி பயணிக்கும் வீதியை மறித்து தங்கள் எதிர்ப்பினை வெளியிட்டனர்.
இதன்போது மக்கள் தன்னிச்சையாக ஆயிரக்கணக்கில் அங்கு திரண்டனர். அவர்கள் ‘ஜனாதிபதியே பதவி விலகு’, ‘முடியாவிட்டால் விட்டுச் செல்’, ‘கோட்டா கோ ஹோம்’ போன்ற பதாதைகளை ஏந்தி கோஷமிட்டனர். நிலைமை மோசமடைந்தது. இதனையடுத்து பாதுகாப்பு அங்கு பலப்படுத்தப்பட்டது. நுகேகொடை பொலிஸ் வலயத்தின் அனைத்துப் பொலிஸ் நிலையங்களிலிருந்தும் பொலிஸார் வரவழைக்கப்பட்டனர். கலகத்தடுப்புப் பொலிஸாரும் மேலதிகப் படைப்பிரிவினரும் ஸ்தலத்துக்கு அழைக்கப்பட்டனர்.
நிலைமையை சமாளிப்பதற்காக அப்பகுதியில் மின்தடை தொடரப்பட்டது. தொலைத்தொடர்பு வசதிகளிலும் இடைஞ்சல்கள் ஏற்பட்டன. என்றாலும் சுமார் 5000 க்கும் மேற்பட்ட மக்கள் அங்கு கூடினார்கள். ஜனாதிபதிக்கு எதிரான கோஷம் அதிகரிக்கப்பட்டதையடுத்து பொலிஸார் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க முற்பட்டபோது அது வன்முறைப் போராட்டமாக மாறியது.
இந்நிலையில் பொலிஸார் முதலில் தண்ணீர் பிரயோகம் மேற்கொண்டு ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க முயன்றனர். அது சாத்தியப்படாததையடுத்து பொலிஸார் அதிரடிப்படையினர் கலகமடக்கும் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் தடிகளைக் கொண்டும் இறப்பர் குண்டுகளைக் கொண்டும் ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைத்தனர்.
தீ வைப்புச் சம்பவங்களின் பின்னணியில் இனந்தெரியாத சக்தி ஒன்று இருந்ததாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர். இந்த ஆர்ப்பாட்டம் மற்றும் வன்முறைகள் காரணமாக சுமார் 39 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்கள் சேதமாக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தின் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு அடுத்தக்கட்ட விசாரணைகள் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. குற்றப்புலனாய்வு திணைக்களப் பணிப்பாளரின் தலைமையிலான குழுவினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
ஆர்ப்பாட்டத்தின் பின்னணியில் அடிப்படைவாதிகள்?
மிரிஹான பகுதியில் வியாழன் இரவு மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டம் திட்டமிடப்பட்ட அடிப்படைவாதிகளால் முன்னெடுக்கப்பட்டமை தெரியவந்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
இவர்கள் ‘அரபு வசந்தத்தை நாட்டில் உருவாக்குவோம்’ என்றவாறு குரலெழுப்பி ஆர்ப்பாட்டத்தை வழிநடத்தியுள்ளதாகவும் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.
ஜனாதிபதி ஊடகப்பிரிவின் அறிக்கையில் ‘‘நுகேகொடை ஜுபிலி பிரதேசத்திற்கு அண்மையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களில் திட்டமிட்ட அடிப்படைவாத குழுவினர் முரண்பாடான வகையில் செயற்பட்டு வன்முறையை தோற்றுவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இரும்பு கம்பிகள் மற்றும் தடி உள்ளிட்டவற்றுடன் குறித்த குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்களை தூண்டிலிட்டு ஜனாதிபதியின் வீட்டு பகுதிக்குச் சென்று முரண்பாடான நிலைமையைத் தோற்றுவித்துள்ளனர்.
இவ்வாறு வன்முறையில் செயற்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு அவர்களில் பலர் திட்டமிட்ட அடிப்படைவாதிகள் என்பதும் தெரியவந்துள்ளது. இவர்கள் அரபு வசந்தத்தை நாட்டில் உருவாக்குவோம். என்றவாறு குரலெழுப்பி ஆர்ப்பாட்டத்தை வழிநடத்தியுள்ளனர்’’ என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை மீண்டும் நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை தூண்டிவிடுவதற்கான முயற்சியாகவே பலராலும் நோக்கப்படுகிறது. இதுவரை காலமும் அரசாங்கம் இனவாதத்தை முன்னிறுத்தியே அதிகாரத்தில் அமர்ந்திருந்தது.
இறுதிக்கட்டத்திலும் அதிகாரத்தை இழக்கவுள்ள நிலையிலும் அவர்கள் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளவில்லை.
முஸ்லிம்கள் நாம் புனித ரமழான் மாதத்தில் இறைவனிடம் கையேந்துவோம். நிச்சயம் முஸ்லிம்களுக்கு விமோசனம் கிட்டும்.- Vidivelli