கலாநிதி அமீரலி,
மேர்டொக் பல்கலைக்கழகம்,
மேற்கு அவுஸ்திரேலியா
வீட்டிலே பால்கேட்டுக் குழந்தை தாயிடம் துடித்தழும்போது, சிறார்கள் பசியென்று தந்தையிடம் கதறி ஏங்கும்போது அந்தப் பெற்றோர்கள், “மக்காள் சற்றுப் பொறுங்கள், ஏதாவது கொண்டு வருகிறோம்” என்று கூறிக்கொண்டு வெளியேசெல்ல எத்தனிக்கையில் அவர்களைச் செல்லாதே என்று சட்டம் தடுத்தால் அவர்களால் அதைத் தாங்கிக்கொள்ள முடியுமா? இதைத்தான் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவின் ஊரடங்குச் சட்டம் செய்து தோல்வியும் கண்டுள்ளது. நாட்டில் நடப்பதோ உணவுக்கும் ஊழலுக்கும் எதிரான மக்கள் போராட்டம். அரசாங்கம் கையாள்வதோ ஆட்சியைக் காப்பாற்றுவதற்கான பாதுகாப்புப் பித்தலாட்டம். பசியை அடக்க உணவு தேவை. ஊழலை ஒழிக்க கண்ணியமான ஆட்சி தேவை. ஊரடங்குச் சட்டமும் அவசரகால ஆட்சியும் அவற்றை வழங்காது ஜனாதிபதி அவர்களே!
இந்தப் பசிக்குக் காரணமே ஜனாதிபதி என்பதை நாடே ஏன்? உலகமே அறியும். அதற்குரிய காரணங்களை ஏற்கனவே இப்பத்திரிகையின் சில கட்டுரைகள் விளக்கியுள்ளன. ஆதலால் அவற்றை மீண்டும் இங்கே விபரிக்கத் தேவையில்லை. சுருக்கமாகக் கூறின், இன்றைய பொருளாதாரப் பிணிக்கு அடிப்படைக் காரணம் அரசின் வங்குறோத்து நிலைமை. அதற்குப் பின்னணியாக அமைபவை ஆட்சியாளர்களின் தலைக்கனம் பிடித்த கொள்கைகளும், சிக்கனமற்ற செலவுகளும், ஊழல் நிறைந்த நிர்வாகமும், மக்களைப் பிரித்தாளும் தந்திரங்களுமே. இத்தனையையும் வளர்த்துக்கொண்டு, அவற்றின் வெப்பத்திலே கூதல் காய்ந்துகொண்டு அதிகாரபீடத்தில் அமர்ந்துள்ள இவர்களால் மக்களின் பசியையும் அகற்ற முடியாது, பொருளாதாரத்தையும் வளர்க்க முடியாது, நாட்டின் அமைதியையும் காக்க முடியாது. ஆனால் இந்தப் பிணிகளைத் தீர்ப்பதற்கு ஆட்சியாளர்களை மாற்றுவது மட்டும் பரிகாரமாகாது. அதைத்தானே எழுபது வருடங்களுக்கும் மேலாக இலங்கை மக்கள் செய்தனர். தலையிடி தீரத் தலையணையை மட்டும் மாற்றுவதுபோல் மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் எல்லாமே பாடிய படல்களின் வரிகள்தான் வித்தியாசமே தவிர இராகம் ஒன்றுதான். இன்றைய தேவை ஒரு புதிய ராகம். அதனைப்பற்றிய சில சிந்தனைகளே இக்கட்டுரை.
பால் மாவுக்கும், எரிவாயுவுக்கும் தினம் தினம் கால்கள் கடுக்கக் கடுக்க அமைதியாக வரிசையில் நின்று, அதனால் பலர் மயங்கி விழுந்ததையும், அவர்களுட் சிலர் உயிரிழந்ததையும் கண்டு துடி துடித்த மக்கள் திரளொன்று இனிமேலும் நின்று பயனில்லை, நடந்தே செல்வோம் ஜனாதிபதியின் இல்லம்நோக்கி என்று முடிவெடுத்ததன் விளைவே சில தினங்களுக்கு முன்னர் மிரிஹானயில் பெங்கிரிவத்தை வீதியில் ஜனாதிபதி இல்லத்தின்முன்னே இடம்பெற்ற அமைதியான ஆர்ப்பாட்டம். இலங்கையில் எந்த ஓர் ஆர்ப்பாட்டமும் இதுவரை நாட்டின் தலைவனின் இல்லத்திற்குமுன் நடைபெற்றதில்லை. அந்த வகையில் மிரிஹான ஆர்ப்பாட்டம் வரலாற்று முக்கியத்துவம் பெற்றுள்ளது. அந்த ஆர்ப்பாட்டத்தைக் குலைக்கவென்று அரசின் கைக்கூலிகள் கையாண்ட வன்செயல்களே அரசின் பாதுகாப்புப் பிரிவினரின் தடியடிப் பிரயோகத்துக்கும், நீர்ப் பீரங்கிகளுக்கும், கைதுகளுக்கும் காரணம் என்பது இப்போது தெளிவாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து இரண்டொரு நாட்களில் நாட்டின் பல பாகங்களிலும் ஆர்ப்பாட்டங்களை நடத்த சமூக ஊடகங்களினூடாக ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதை அறிந்த அரசு ஊரடங்குச் சட்டத்தைப் பிறப்பித்துச் சமூக ஊடக வலைத்தளங்களையும் மூடியது. ஆனால் ஊரடங்கையும்மீறி மக்கள் வீதிக்கு வந்துள்ளனர். அமைதியான ஆர்ப்பாட்டங்கள் செய்தல் ஒரு ஜனநாயகத்தின் அடிப்படைச் சுதந்திரம். அதனைப் படைகொண்டு தடுத்தலும் அடக்குவதும் அராஜகம்.
மிரிஹான ஆர்ப்பாட்டத்தை ஒட்டிய நிகழ்வுகளை நோக்கும்போது எகிப்தின் தஹ்ரீர் அல்லது தியாகிகள் சதுக்கத்தில் “ரொட்டியும் கௌரவமும்” வேண்டும் எனக் கோஷமிட்டு 2011 இல் ஆரம்பமான அரபு வசந்தம் “முபாரக்கே வெளியேறு” என்ற கோரிக்கையுடன் துளிர்விடத் தொடங்கியதுபோன்று இலங்கையிலும் “உணவு தா, ஊழலை ஒழி” என்ற குரலுடன் ஆரம்பித்து “கோத்தாவே வெளியேறு” என்று மலர்ந்துள்ளது. ஆனால் அங்கே நடந்ததுபோன்று இங்கேயும் ஏமாற்றங்கள் ஏற்படலாம். உதாரணமாக, அரபு வசந்தம் இனமத வேறுபாடின்றி எல்லா எகிப்தியரையும் உள்ளடக்கிய ஒரு போராட்டம். ஆனால் அந்த ஆர்ப்பாட்டத்துக்குத் தலைைம தாங்கி அதனை ஓர் அரசியல் போராட்டமாக மாற்றுவதற்கான முற்போக்குக் கட்சிகளை எல்லாம் முறியடித்து அவற்றின் தலைவர்களையும் முபாரக் ஏற்கனவே சிறைக்குள் தள்ளிவிட்டு, பிற்போக்குவாத முஸ்லிம் சகோதரத்துவக் கட்சியை மட்டும் தனது அரசியல் நலனுக்காக இயங்கவிட்டார். அதனால் அரபு வசந்தத்தை இப்பிற்போக்குவாதிகளே வழிமறித்து அதனை கொப்றிக் கிறித்தவர்களுக்கொதிரான போராட்டமாக மாற்றினர். அதே போன்ற ஒரு முயற்சி இங்கேயும் இடம்பெற வாய்ப்புண்டு. உண்மையிலேயே ஜனாதிபதி ஊடகப் பிரிவு மிரிஹான ஆர்ப்பாட்டத்தின் பின்னர் ‘அரபு வசந்தத் தீவிரவாதிகள்’ என்ற வார்த்தைகளைப் பிரயோகித்து அவற்றிற்கொரு மதவாத மூலாம்பூசி முஸ்லிம்களுக்கெதிரான இனக்கலவரமொன்றைத் தூண்ட முயன்ற விஷமத்தனத்தை ஓர் ஆங்கில வார இதழ் சுட்டிக்காட்டியுள்ளது. அதுமட்டுமல்ல, அரபு வசந்தம் ஈற்றில் எவ்வாறு மார்கழிக் கூதலாக மாறி, பழைய குருடி கதவைத்திறடி என்ற கதைபோன்று, பழைய ஆட்சியையே புது முகங்களுடன் உறுதிப்படுத்திற்று என்பதையும் இங்கே சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. இப்போது இங்கேயும் பிரதமரைத்தவிர ஏனைய அமைச்சர்களெல்லாம் பதவி துறந்து புதியதோர் அரசாங்கத்தை பழைய முகங்களிலிருந்தே அமைக்க எடுக்கும் முயற்சி அப்படிப்பட்டதொரு ஏமாற்று வித்தையே. இன்றைய காற்புண்ணுக்கு இது மருந்தாகாது. காலையே வெட்டிவீசும் காலம் வந்துவிட்டது.
அமைதியுடன் அடிப்படைத் தேவைகளுக்காக ஆர்ப்பாட்டம் செய்யும் அப்பாவி மக்களை தீவிரவாதிகளாகவும் பயங்கரவாதிகளாகவும் சிருஷ்டித்து அவர்களின் ஆர்ப்பாட்டங்களுக்குள் கைக்கூலிகளையும் காவாலிக் கூட்டத்தினரையும் நுழையவிட்டு வன்செயல்களைப் புகுத்திய பின்னர் இராணுவத்தினரை ஏவிவிட்டு அக்கலவரத்தை அடக்கி உலகத்தின் பார்வையிலே ஆர்ப்பாட்டக்காரர்களின் புனித போராட்டத்தை மாசுபடுத்திக் காட்டுவது ஆட்சியாளர்களுக்குக் கைவந்த ஒரு கலை. முபாரக் ஆட்சியும் அதைத்தான் தஹ்ரீர் சதுக்கத்தில் அரங்கேற்றியது. அதேமாதிரியான அரங்கேற்றந்தான் பெங்கிரிவத்தை வீதியிலும் சிறு அளவில் அன்று நடைபெற்றது. ஆனால் ஈற்றில் பட்டினிப்படை வென்றது ஆயுதப் படை தோற்றது என்பதற்கு அமைச்சர்களின் இராஜினாமா ஒரு சிறு நிரூபணம் எனக் கூறுவதிலே தவறில்லை.
மிரிஹான சம்பவத்தில் ஏற்பட்ட ஒரு துரதிஷ்டம் என்னவெனில் எகிப்தில் நடந்ததுபோன்று இங்கும் அந்த ஆர்ப்பாட்டத்தில் எந்தக் கட்சித்தலைவனும் கலந்து கொள்ளவில்லை. ஆட்சிக்கெதிராகத் தோன்றும் சாதாரண மக்களின் இயல்பான எதிர்ப்புகளையும் அவர்களின் கொதிப்புகளையும் ஒன்று திரட்டி அவற்றை அரசியல் அடிப்படையில் ஒழுங்குபடுத்தித் தலைமைதாங்கி வழிப்படுத்தக்கூடிய ஓர் அரசியல் கட்சியோ குழுவோ இல்லாதிருப்பது எதிர்க் கட்சிகளின் கொள்கை வங்குறோத்தையே காட்டுகிறது. ஆர்ப்பாட்டம் செய்பவர்களோ சாதாரண மக்கள். அவர்கள் மத்தியதர வர்க்கத்தினராக இருக்கலாம் அல்லது அடிமட்ட வர்க்கத்தினராகவும் இருக்கலாம். அவர்களுக்கு கூச்சலிட்டுக் குறைகளைக் கூறத் தெரியுமே ஒழிய அவற்றிற்குப் பரிகாரம் காணத் தெரியாது. அந்தப் பரிகாரத்தை வழங்கி அதன்மூலம் மக்களின் ஆதரவைத் திரட்டுவதே அரசியற் தலைமைகளின் கடமை.
இலங்கையிலே இப்போது பல கட்சிகள் உள்ளன. அவை எல்லாம் ஒன்றோடொன்று முட்டி மோதிக்கொண்டு எவ்வாறு ஆட்சிக்கு வரலாமென்று துடிக்கின்றனவே ஒழிய இன்றைய நிலைமையை நிரந்தரமாக மாற்றுவதற்கு யாது வழி என்பதை ஆராய்ந்து அதற்கான திட்டமொன்றை வகுத்து அந்தத் திட்டத்தின் அடிப்படையில் ஒன்றுபட்டு அதனை மக்கள்முன் சமர்ப்பித்து அவர்களின் ஆதரவுடன் இந்த ஆட்சியை மாற்ற இதுவரை முயற்சிக்கவில்லை. இருந்தும் இரண்டு கட்சிகள் அவ்வாறான ஒரு விஞ்ஞாபனத்தையாவது வெளிப்படுத்தியுள்ளதை இங்கு குறிப்பிட வேண்டும். ஒன்று இடதுசாரிகளின் தேசிய மக்கள் சக்தி, மற்றது இனவாத சம்பிக ரணவகவின் 43ஆம் படை.
இன்றைய எதிர்க்கட்சிகளுள் மூன்று ஏற்கனவே ஆட்சியில் அமர்ந்திருக்கின்றன. கடந்த எழுபது ஆண்டுகளுக்கும் மேலாக அவை மாறி மாறி ஆட்சிக்கு வந்தபோதும் இந்த நாட்டின் பொருளாதாரத்தையும் சமூக அமைதியையும் கருவறுக்கும் அடிப்படைப் பிரச்சினைகளான ஊழல் நிறைந்த நிர்வாகம், பண முதலைகளின் அழுத்தம், இனவாத மதவாத அரசியல், கல்வித் தகைமைக்கும் முயற்சித்திறனுக்கும் புறக்கணிப்பு, குடும்ப ஆட்சி, வியாபார அரசியல் ஆகியனவற்றை அகற்ற எந்த முயற்சியுமே அவை மேற்கொள்ளவில்லை. ஏனெனில் அந்தக் கிருமிகளை வளர்ப்பதிலேதான் அக்கட்சிகளின் அரசியல் பலமும் செல்வாக்கும் தங்கியுள்ளன. கட்சிகளின் சின்னங்களும் நிறமும் பெயரும்தான் வித்தியாசமே ஒழிய கொள்கைகளும் நோக்கங்களும் ஒன்றுதான். எனவே இவர்களையே மாறிமாறி ஆட்சிசெய்ய விடுவது நாட்டின் இன்றைய பரிதாப நிலைமைக்குப் பரிகாரமாகாது. நடைமுறையிலுள்ள அரசியல் பொருளாதார அமைப்புகளுக்கு அடிப்படை மாற்றங்களைக் கொண்டு வந்து ஒரு புதிய யுகத்தையே ஏற்படுத்தக் கூடிய ஓர் அரசியல் தலைமைத்துவமே இன்றைய பிரதான தேவை. மக்கள் விடுதலை முன்னணியை உள்ளடக்கிய தேசிய மக்கள் சக்தி மட்டுமே அவ்வாறான நோக்கோடு போராடுவதை காணக்கூடியதாக இருக்கிறது. அதைப்பற்றி விரிவாக வேறொரு சந்தர்ப்பத்தில் விளக்கலாம்.
நடைமுறையிலுள்ள ஆட்சியையும் அதன் காவலாளிகளையும் முழுமையாக அகற்றுவது மட்டுமே ஆர்ப்பாட்டங்களின் முழு நோக்காக இருக்கக் கூடாது. அந்த வெற்றிடத்தை யாரைக்கொண்டு நிரப்பி நாட்டின் பிரச்சினைகளுக்கு நிரந்தரமான தீர்வினைக் காணலாம் என்ற நோக்கில் மாற்றுத் தலைமைத்துவத்தை இனங்காணும் முயற்சியாக அது மாறவேண்டும்.– Vidivelli