எஸ்.றிபான்
நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி, அத்தியாவசியப் பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு, அதனால் ஏற்பட்டுள்ள நீண்ட வரிசைகள், அரசாங்கத்தின் நிர்வாகக் குறைபாடு உள்ளிட்ட பல விடயங்களை முன்னிலைப்படுத்தி அரசாங்கத்திற்கும், ஜனாதிபதிக்கும் எதிராக நாட்டு மக்கள் பல பாகங்களிலும் தன்னார்வத்துடன் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றார்கள். ஜனாதிபதியின் வீடு, ஜனாதிபதி செயலகம், அமைச்சர்களின் வீடுகளையும் சுற்றிவளைத்துப் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றார்கள். இந்த போராட்டங்கள் நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகின்றன.
போராட்டங்களில் மக்கள் முன்வைக்கின்ற கருத்துக்களை அவதானிக்கின்ற போது நாட்டின் சீரழிவுக்குரிய காரணிகளை மக்கள் அடையாளங் கண்டுள்ளார்கள் என்பது முக்கிய செய்தியாகும். கடந்த 75 வருடங்களாக அரசியல்வாதிகளும், கட்சிகளும் இனவாதத்தையும், பிரிவினைவாதத்தையும், மதவாதத்தையும், மொழிவாதத்தையும் அதிகாரத்தைப் பெற்றுக் கொள்வதற்குரிய ஆயுதமாக பயன்படுத்தி மக்களை பிழையாக வழிநடத்தியுள்ளார்கள். இதனால் இன்று நாடு அதலபாதாளத்தில் விழுந்துள்ளது.
அதனால், மக்கள் புதியதொரு அரசியல் கலாசாரத்தையும், சிங்களவர், தமிழர், முஸ்லிம் என்ற வேறுபாடுகளை மறந்து நாம் இலங்கையர் என்பதற்கு வலுச் சேர்க்கவும் தீர்மானித்துள்ளார்கள். இதனால், இன்று ஆட்சியில் உள்ள ஜனாதிபதியும், பாராளுமன்றத்தில் உள்ள 225 பாராளுமன்ற உறுப்பினர்களும் தமது பதவிகளை இராஜினாமாச் செய்ய வேண்டுமென்று போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கின்றார்கள்.
எமது வெற்றிக்கு சிங்கள மக்களே காரணம். சிறுபான்மையினரின் உதவியின்றி ஆட்சி அமைப்பதற்கு சிங்கள மக்களினால் முடியுமென்றும், தமக்கு 69 இலட்சம் மக்கள் வாக்களித்துள்ளார்கள் என்றும் பெருமை பேசிக் கொள்வதற்கு காரணமாக இருந்த சிங்கள மக்களே நாட்டில் அரசாங்கத்திற்கும், ஜனாதிபதிக்கும் எதிராக போராட்டங்களை முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். அதே வேளை, தமிழ், முஸ்லிம், மலையக தமிழர்களும் இந்த போராட்டத்தில் இறங்கியுள்ளார்கள். இத்தகையதொரு சூழ்நிலையில் அமைச்சர்கள் பதவிகளை இராஜினாமாச் செய்துள்ளார்கள். புதிய அமைச்சரவை ஒன்று அமைப்பதற்கு அனைத்துக் கட்சிகளுக்கும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அழைப்புவிடுத்துள்ளார். இதனை எதிர்க்கட்சிகள் நிராகரித்துள்ளன.
இத்தகைய போராட்டங்கள் முஸ்லிம் பிரதேசங்களிலும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இன்றைய ஆட்சிக்கு ஆதரவாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்ற முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக முஸ்லிம் பிரதேசங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற போராட்டங்களில் கோசங்கள் எழுப்பப்படுகின்றன. இதனால், கிழக்கு மாகாணத்தில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளுக்கும், அலுவலங்களுக்கும் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இன்றைய அரசியல் நெருக்கடிகளுக்கு முஸ்லிம் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களும், அக்கட்சிகளும் ஒரு வகையில் காரணம் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். பேரினவாதக் கட்சிகளின் அரசியல்வாதிகள் இனவாதத்தை கையில் எடுத்துச் செயற்பட்ட போது, முஸ்லிம் அரசியல்வாதிகளும் அதற்கு எதிரான இனவாதக் கருத்துக்களை முன் வைத்து தேர்தல்களில் வெற்றி பெற்றுக் கொண்டார்கள். பின்னர் பௌத்த இனவாத்தை பேசி ஆட்சிபீடம் ஏறியவர்களுடன் கைகோர்த்து அமைச்சர் பதவிகளையும், கொந்தராத்துக்களையும் பெற்றுக் கொண்டார்கள்.
இன்றைய ஆட்சியிலும் முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு அதிஉச்ச நிறைவேற்று அதிகாரங்களை வழங்குவதற்காக கொண்டு வரப்பட்ட 20வது திருத்தச் சட்ட மூலத்திற்கு ஆதரவளித்தார்கள். அரசாங்கத்தின் அனைத்து காரியங்களிலும் நியாயங்களை கண்டார்கள். முஸ்லிம்களை பாதுகாத்துக் கொள்வதற்காகவே அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கிக் கொண்டிருக்கின்றோம் என்று சாக்குப்போக்குக் கூறி கட்சியின் தீர்மானத்திற்கு மாற்றமாகவும் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
ஆனால், இன்று இவர்களின் தீர்மானம் பொய்த்துள்ளது. சமூகத்திற்காக அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கவில்லை என்பது நிருபிக்கப்பட்டுள்ளது. முழு நாடும் இனவாதத்திற்கும், மதவாதத்திற்கும் எதிராக நாம் இலங்கையர் என்று போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கின்ற சூழ்நிலையில் கூட தாம் “அரசாங்கத்திற்கு வழங்கிக் கொண்டிருக்கின்ற ஆதரவை வாபஸ் வாங்குகின்றோம். நாம் பிழையாக முடிவுகளை எடுத்துவிட்டோம்” என்று மக்களிடம் சொல்ல முடியாத அளவுக்கு வெட்கித் தலைகுனிந்துள்ளார்கள் முஸ்லிம் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள்.
ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற தேர்தல்களின் போது மொட்டுக்கு வாக்களிப்பது ஹராம் என்றார்கள். தேர்தல் முடிந்ததும் தாம் எதிர்க்கட்சியில் அமர்ந்த நிலையில் அமைச்சர் பதவிகளுக்கு ஆசைப்பட்டு மொட்டு ஹலால் என்றார்கள். சமூகத்திற்காக ஹராத்தை ஹலாக்கிக் கொண்டதாகவும் தெரிவித்துக் கொண்டார்கள்.
இப்போது நாட்டில் பெரும்பான்மை சிங்கள மக்களிடம் ஏற்பட்டுள்ள மனமாற்றத்தையும், நாட்டுக்கு தேவையான உண்மையான நிலைப்பாட்டையும் பார்த்து முஸ்லிம் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அதிர்ச்சியடைந்துள்ளார்கள். தாம் என்ன பேசுகின்றோம் என்று தெரியாமல் உளறிக் கொண்டிருக்கின்றார்கள். ‘மொட்டு முதலில் ஹராம், பின்னர் ஹலால்’ என்று சொன்னவர்களில் ஒருவராகிய பாராளுமன்ற உறுப்பினர் முஷர்ரப் முதுநபீன், தாம் பாராளுமன்றத்தில் சுயமாக இயங்கப் போவதாகத் தெரிவித்துள்ளார். தாம் புதியதொரு அரசியல் கலாசாரத்தை உருவாக்குவதற்குரிய அத்திவாரத்தையிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், முஸ்லிம் காங்கிரஸின் ஏற்பாட்டில் அரசாங்கத்திற்கு எதிராக 03.04.2022 அன்று அட்டாளைச்சேனையில் ஆர்ப்பாட்டப் பேரணியும், பொதுக் கூட்டமும் நடைபெற்றது. இதில் முஸ்லிம் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் முட்டி மோதிக் கொண்டிருக்கின்ற பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனும் கலந்து கொண்டிருந்தார்.
மேற்படி போராட்டத்தை மழுங்கடிக்கச் செய்வதற்குரிய நடவடிக்கைகளை முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மேற்கொண்டிருப்பதாக சமூக ஊடகங்களில் கருத்துக்கள் முன் வைக்கப்பட்டன. இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹாPஸ் தமது முகநூல் பக்கத்தில் தாமும் கட்சியின் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களும் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி தொடர்பில் கட்சியினால் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்ட பேரணிக்கு எந்தவொரு எதிர்ப்பும் கிடையாது. அதனால், பொது மக்கள் அதில் கலந்து கொண்டு ஆதரவு வழங்குமாறு தெரிவித்திருந்தார்.
இவ்வாறு குறித்த ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்து கொள்ளுமாறு கட்சியின் ஆதரவாளர்களுக்கு கூறிய பாராளுமன்ற உறுப்பினர் ஹாPஸோ அல்லது அக்கட்சியின் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களோ கட்சியின் ஏற்பாட்டில் அட்டாளைச்சேனையில் நடைபெற்ற ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்து கொள்ளவில்லை. இதன்மூலம் அவர்களின் இரட்டை முகத்தைக் காணக் கூடியதாக இருக்கின்றது.
இவ்விதமாக சமூகம் சார்ந்த கொள்கை இல்லாமலும், நாட்டில் ஏற்பட்டுள்ள பல்வேறு நெருக்கடிகள் தொடர்பில் தெளிவில்லாமலும் செயற்படுகின்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் முஸ்லிம் சமூகத்திற்குரிய அடையாளமாக இன்னும் எத்தனை நாட்களுக்கு நீடிக்க முடியுமென்று சிந்திக்க வேண்டும்.- Vidivelli