(ஏ.ஆர்.ஏ.பரீல்)
காதி நீதிமன்றக் கட்டமைப்பில் நீண்ட காலமாக நிலவிவரும் குறைபாடுகளைத் தீர்த்து காதிநீதிமன்றங்கள் செயற்திறன் மிக்கதாக இயங்குவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு காதி நீதிபதிகள் போரத்தின் உப தலைவர் எம்.இப்ஹாம் யெஹ்யா பிரதம நீதியரசர் ஜயந்தி சி ஜயசூரியவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் பிரதம நீதியரசருக்கு கடிதமொன்றினை அனுப்பி வைத்துள்ளார்.
காதி மேன்முறையீட்டு சபைக்கு கடந்த மூன்று வருடகாலமாக செயலாளர் ஒருவர் நியமிக்கப்படாமலிருப்பதையும் அவர் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். காதி மேன்முறையீட்டு சபை கடந்த மூன்று வருடங்களாக செயலாளர் ஒருவர் இன்றி இயங்கி வருவதால் மேன்முறையீட்டு வழக்குகள் பெரிதும் காலதாமதத்துக்கு உள்ளாவதாகவும் தெரிவித்துள்ளார். எனவே உடனடியாக காதி மேன்முறையீட்டுச் சபைக்கு செயலாளர் ஒருவரை நியமிக்கும்படியும் கோரியுள்ளார்.
காதிகள் போரத்தின் உபதலைவர் பிரதம நீதியரசருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காதிநீதிமன்ற கட்டமைப்பில் பல பிரச்சினைகள் நிலவுகின்றன. நாடு தழுவிய ரீதியில் 65 காதிநீதிபதிகள் கடமையாற்றுகிறார்கள். இவர்களில் 18 பேர் இராஜினாமா, பதவி நீக்கம் மற்றும் பதவிக்காலம் முடிவு காரணமாக பதவியில் இல்லை. இந்த 18காதிநீதிமன்ற பிரிவுகளுக்கும் அருகில் கடமையிலுள்ள ஏனைய காதிநீதிபதிகளே பதில்நீதவான்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
இதேவேளை 48 காதி நீதிபதிகளின் பதவிக்காலம் காலாவதியாகியுள்ள நிலையில் அவர்களது பதவிக்காலம் 2021 ஜூன் மாதம் வரை நீடிக்கப்பட்டுள்ளது. இந்த 48 காதி நீதிமன்ற நீதிப்பிரிவுகளில் 25 பிரிவுகளுக்கு நியமனம் வழங்குவதற்கு வர்த்தமானியில் விண்ணப்பங்கள் கோரப்பட்டாலும் இதுவரை நேர்முகப்பரீட்சை நடத்தப்படவில்லை.
இவ்விவகாரம் தொடர்பில் நீதிச்சேவை ஆணைக்குழு மற்றும் நீதியமைச்சருக்கு கடிதம் மூலம் தெளிவுபடுத்தியும் இதுவரை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.-Vidivelli