(ஏ.ஆர்.ஏ.பரீல்)
‘கூரகல – தப்தர் ஜெய்லானி பள்ளிவாசலின் கூரையை முழுமையாக அகற்றிக்கொண்டு அருகில் பள்ளிவாசலலொன்றினை அமைத்துக்கொள்ளுங்கள்’ என்று நெல்லிகல- வத்துகும்புரே தம்மரதன தேரர் தன்னைச் சந்தித்த முன்னாள் நீதியமைச்சரின் ஏற்பாட்டில் அனுப்பப்பட்ட மூவரடங்கிய குழுவினரிடம் தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட குழு வத்துகும்புரே தம்மரதன தேரரை இரண்டாவது தடவையாக அண்மையில் சந்தித்து கலந்துரையாடியது. முதலாவது விஜயத்தின்போது ஜெய்லானி பள்ளிவாசலை நில அளவை செய்திருந்தது. அதன் வரைபடத்தையும், உரிய ஆவணங்களையும் குழுவினர் தேரரிடம் சமர்ப்பித்தனர். அதனையடுத்தே நெல்லிகல தேரர் பள்ளிவாசலின் கூரையையும், தற்காலிக நிர்மாணங்களையும் அகற்றிவிட்டு அதனருகில் பள்ளிவாசலொன்றினை நிர்மாணித்துக் கொள்ளுமாறு ஆலோசனை வழங்கினார். இவ்விவகாரம் தொடர்பில் விடிவெள்ளி நெல்லிகல தேரரை தொடர்பு கொண்டபோது பிரச்சினைகளின்றி இவ்விவகாரத்தை தீர்த்துக்கொள்வதற்கு முஸ்லிம் தரப்பு ஒத்துழைக்க வேண்டுமெனவும், அவ்விடத்திலுள்ள ஸியாரம் அப்புறப்படுத்தப்படமாட்டாதெனவும் தெரிவித்தார்.
ஜெய்லானி பள்ளிவாசலுக்கு விஜயம் செய்த குழுவில் நில அளவையாளர், கட்டிடக் கலைஞர், சட்டத்தரணி என்போர் அடங்கியிருந்தனர். குழுவிற்கு தலைமை வகித்த சட்டத்தரணி மத்தீனை தொடர்பு கொண்டு வினவியபோது அவ்விவகாரம் தொடர்ந்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. மேல் மட்டத்தின் ஆலோசனைகள் பெற்றுக்கொள்ளப்படவுள்ளன. இது தொடர்பில் முன்னாள் அமைச்சர் அலிசப்ரிக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் நெல்லிகலதேரருடன் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது என்றார்.– Vidivelli