நாட்டின் அரசியல் வரலாற்றில் இந்த வாரம் மிக முக்கியமானதொன்றாகும். தற்போது நிலவிக்கொண்டிருக்கும் அரசியல் ஸ்திரமற்ற தன்மை மற்றும் அரசியலமைப்பில் காணப்படும் முரண்பாடுகளுக்கு உயர் நீதிமன்றம் ஓரிரு தினங்களில் தீர்வு வழங்கவுள்ளது. இவ்வாரம் ஒரு தீர்மானமிக்க வாரமென அரசியல் ஆய்வாளர்களும் சட்ட வல்லுநர்களும் கருத்து வெளியிட்டுள்ளனர்.
பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட விஷேட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்குட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமைமீறல் மனுக்கள் தொடர்பில் உயர் நீதிமன்றம் இவ்வாரமே தீர்ப்பு வழங்கவுள்ளது.
இதேவேளை, நாட்டில் உருவாகியுள்ள அரசியல் ரீதியான பிரச்சினைகளுக்கு ஒருவார காலத்திற்குள் தீர்வு காண்பதாக ஜனாதிபதி கடந்த 4 ஆம் திகதி தெரிவித்திருந்தார். ஒருவார காலம் நேற்று 11ஆம் திகதியுடன் முடிவுற்றமை குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தலுக்கு உயர் நீதிமன்றம் கடந்த 7ஆம் திகதி வரை இடைக்கால தடையுத்தரவினை வழங்கியிருந்தது. பின்பு தடையுத்தரவு 10 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டது.
இதேவேளை, மஹிந்த ராஜபக் ஷ பிரதமராக செயற்படுவதற்கும் ஏனைய அமைச்சர்கள் செயற்படுவதற்கும் உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள இடைக்காலத் தடையுத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவும் இவ்வாரம் ஆராயப்படவுள்ளது.
இன்று நடைபெறவுள்ள பாராளுமன்ற அமர்வின்போது ரணில் விக்கிரமசிங்க பிரதமராகப் பதவி வகிக்க பெரும்பான்மை ஆதரவுள்ளதை வலியுறுத்தும் நம்பிக்கைப் பிரேரணையொன்றும் ஐக்கிய தேசிய முன்னணியினால் சமர்ப்பிக்கப்பட்டு விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
நாட்டின் அரசியல் எதிர்காலத்தை உயர்நீதிமன்ற தீர்ப்பே தீர்மானிக்கவுள்ளது. இதேவேளை, உயர்நீதிமன்றத் தீர்ப்பு எவ்வாறு அமைந்தாலும் ஒருபோதும் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிக்கப்போவதில்லை என ஜனாதிபதி திட்டவட்ட மாகக் கூறியுள்ளார்.
இந்நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து பிரதமர் பதவிக்கு ஒருவரை தேர்ந்தெடுத்துக் கொள்வதற்காக உடனடியாகக் கட்சி மாநாட்டைக் கூட்டுமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களில் ஓரிருவர், கட்சியின் செயலாளர் அகிலவிராஜ் காரியவசத்துக்கு கடிதமொன்றினை அனுப்பி வைத்துள்ளதாகவும் அறியமுடிகிறது.
மறுபுறம் வெகுவிரைவில் பொதுத்தேர்தலொன்று நடத்தப்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது. உயர்நீதிமன்ற தீர்ப்பினையடுத்தே இது உறுதிசெய்யப்படலாம். இந்த எதிர்பார்ப்பில் அரசியல் கட்சிகள் காய்நகர்த்தல்களை முன்னெடுத்து வருகின்றன. சுதந்திரக்கட்சியும், பொதுஜன பெரமுனவும் ஒன்றிணைந்து களமிறங்குவதற்கு பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.
பொதுத்தேர்தலில் ஒன்றிணைந்து களமிறங்குவதற்கு பொதுச்சின்னமொன்றினை அங்கீகரித்துக் கொள்வதிலே பிரச்சினை உள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் செயலாளர் ரோஹன லக் ஷ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.
இவ்வாறான நிலைமைகள் காரணமாக நாட்டின் அரசியலில் இவ்வாரம் தீர்மானமிக்கதாக அமையவுள்ளது. தீர்வினை எதிர்பார்த்து நாட்டு மக்கள் காத்திருக்கிறார்கள். நீதிமன்றத் தீர்ப்பும் ஜனாதிபதி மற்றும் அரசியல் கட்சிகளின் தீர்மானங்களும் நாட்டு நலனை முன்னிறுத்தியதாக அமைய வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.
-Vidivelli