றிப்தி அலி
சுதந்திரத்திற்குப் பின்னர் இலங்கையினை ஆட்சி செய்த தலைவர்கள் யாரும் முகங்கொடுக்காத நெருக்கடியினை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தற்போது முகங்கொடுத்துள்ளார்.
சுமார் 69 இலட்சம் வாக்குகளினால் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி செய்து வந்த கோட்டாபய ராஜபக்ஷ,வெறும் 30 மாதங்களுக்குள்ளேயே மக்களின் நன்மதிப்பினை இழந்துள்ளார். அவருக்கு வாக்களித்த 69 இலட்சம் மக்களே இன்று அவருக்கு எதிராக வீதிகளில் இறங்கிப் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
நாடு தற்போது எதிர்நோக்கியுள்ள பொருளாதார பிரச்சினைகளும் அரசியலில் எந்தவித முன் அனுபவமுமற்ற ஜனாதிபதியினால் அமுல்படுத்தப்படுகின்ற நடைமுறைச்சாத்தியமற்ற கொள்கைகளும் காரணமாகவே இவர் மீது வைத்திருந்த நம்பிக்கையை மக்கள் இழந்துள்ளனர்.
சுமார் 10 மணி நேரத்திற்கு மேற்பட்ட மின்சார தடை, கேஸ், எரிபொருள், பால்மாவிற்கான தட்டுப்பாடு, ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி, அத்தியவசியப் பொருட்களின் விலை அசுர வேகத்தில் அதிகரிப்பு, விவசாயத்திற்கு தேவையான உரப் பற்றாக்குறை போன்ற பல பிரச்சினைகளை இலங்கை மக்கள் தினசரி எதிர்நோக்கி வருகின்றனர்.
இதனால் அவருக்கு எதிராக நாட்டின் பல பாகங்களிலும் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருவதுடன் ”GoHomeGota” என்ற சுலோகம் உலகளாவிய ரீதியில் பிரபல்யமடைந்து வருகின்றது.
மிரிஹான சம்பவம்
இதனால் ஆத்திரமடைந்த மக்கள் நாட்டின் பல பாகங்களில் பல்வேறு வகையான போராட்டங்களை முன்னெடுத்தனர். எந்தவொரு அரசியல் கட்சிகளினதும் ஆதரவின்றி முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்களிலொன்று கடந்த மார்ச் 31ஆம் திகதி இரவு கொஹுவலை பிரதேசத்தில் இடம்பெற்றது.
இந்தப் பேரணியில் பங்கேற்றவர்கள், ஊர்வலமாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மிரிஹான பிரதேசத்தில் வசித்து வருகின்ற வீட்டினை நோக்கிச் சென்றனர்.
இதனை பொலிஸார் தடுத்தபோது பேரணி திசை திருப்பப்பட்டு அப்பிரதேசத்தில் ஏற்பட்ட பதற்ற சூழ்நிலையினை கட்டுப்படுத்த கண்ணீர் புகையும், நீர்ப் பிரயோகமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது அப்பிரதேசத்தில் நிறுத்தப்பட்டிருந்த பொலிஸாரின் பஸ்ஸிற்கு இனந்தெரியாத குழுவினரால் தீவைக்கப்பட்டது. இதனால் அமைதியாக இடம்பெற்ற ஆர்ப்பட்டம் கலவரமாக மாறியது.
அவ்விடத்தில் ஊடகவியலாளர் உட்பட 50க்கு மேற்பட்டோர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டதாக சட்டத்தரணிகள் கூறுகின்றனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் கங்கொடவில நீதிமன்றத்தில் ஏப்ரல் 1ஆம் திகதி ஆஜர்படுத்தப்பட்ட போது சுமார் 400க்கு மேற்பட்ட சட்டத்தரணிகள் தன்னார்வமாக ஆஜராகி பிணை பெற்றுக்கொடுத்தனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களை ஆரம்பத்தில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்க அரசாங்கம் முயன்றதாகவும் எனினும் சட்டத்தரணிகளின் தலையீடு காரணமாக பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டிலேயே வழக்குப் பதிவு செய்யப்பட்டு பிணை வழங்கப்பட்டதாகவும் அறிய முடிகிறது.
அட்டாளைச்சேனையில் முஸ்லிம் காங்கிரஸின் பேரணி
இதேவேளை, பொருட்களின் விலையேற்றத்திற்கு எதிராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினால் ஏற்பாடு செய்யப்பட்ட பேரணியொன்று கடந்த ஏப்ரல் 1ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை அட்டாளைச்சேனையில் இடம்பெற்றது.
எவ்வாறாயினும், கட்சியின் ஆதரவாளர்கள் முஸ்லிம் காங்கிரஸின் தலைவருடன் இருக்கிறார்களா அல்லது அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும் அக்கட்சியின் எம்.பிக்களுடன் இருக்கிறார்களா என்பதை நிரூபிப்பதே இந்த ஆர்ப்பாட்டத்தின் மறைமுக நோக்கமாக இருந்தது.
இவ்வாறான ஓர் ஆர்ப்பாட்டத்தை நடத்தக் கூடாது என சமூக ஊடங்களில் முன்வைக்கப்பட்ட பல்வேறு எதிர்ப்புகளையும் மீறி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில் மாட்டு வண்டியில் பேரணியாக செல்ல அக்கட்சியின் தலைவரான ரவூப் ஹக்கீம் ஏறியபோது, மாடு மிரண்டமையினால் அவர் கீழே விழுந்த சம்பவமும் பதிவானது.
இவ்வாறு நாளுக்கு நாள் ஆர்ப்பாட்டங்கள் அதிகரித்ததை அடுத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அவசர கால நிலைமை நாட்டில் பிரகடனப்படுத்தப்பட்டது.
சமூக ஊடக தடையும் ஊரடங்கும்
கடந்த ஞாயிற்றுக்கிழமை (03) நாடளாவிய ரீதியில் ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கான அழைப்பொன்று சமூக ஊடகங்கள் வாயிலாக முன்வைக்கப்பட்டது.
இதனால் கதிகலங்கிய அரசாங்கம், சனிக்கிழமை (02) மாலை 6.00 மணி முதல் திங்கட்கிழமை அதிகாலை 6.00 மணி வரை ஊரடங்குச் சட்டத்தை திடீரென பிரகடனப்படுத்தியது.
இதனையடுத்து மக்கள் பொருட் கொள்வனவிற்காக முண்டியடித்ததை நாடளாவிய ரீதியில் அவதானிக்க முடிந்தது. அன்று முஸ்லிம்கள் புனித ரமழான் மாதத்தின் முதல் நோன்பை நோற்பதற்குத் தயாராகிக் கொண்டிருந்த நிலையில்,ஊரடங்கு அறிவித்தல் வெளியிடப்பட்டமையானது முஸ்லிம்களையும் பெரும் அசௌகரியத்தில் ஆழ்த்தியது. எனினும் பெரும்பாலான பகுதிகளில் இரவு மற்றும் ஐவேளை தொழுகைகள் தங்கு தடையின்றி இடம்பெற்றன.
இதேவேளை, நள்ளிரவு பேஸ்புக், வட்ஸ்அப், யூடீயுப், டுவிட்டர், இன்ஸ்டாகிராம், டிக்டொக் உள்ளிட்ட பல சமூக ஊடகங்களுக்கும் தடை விதிக்கப்பட்டதுடன் ஒன்றரை மணி நேர மின்துண்டிப்பும் அமுல்படுத்தப்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த மக்கள் வி.பி.என் தொழில்நுட்பம் ஊடாக சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி அரசாங்கத்தின் இவ்வாறான சர்வாதிகார நடவடிக்கைகளை கடுமையாக கண்டித்தனர். சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடை மனித உரிமை மீறல் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவும் அறிவித்தது.
பாதுகாப்பு அமைச்சின் சிபாரிசிற்கு அமையவே இந்த தடை விதிக்கப்பட்டது என தகவல் தொழிநுட்ப அமைச்சு அறிவித்தது. எனினும், சுமார் 15 மணித்தியாலங்களின் பின்னர் சமூக ஊடங்களுக்கான தடை நீக்கப்பட்டது.
ஊரடங்குச் சட்டம் அமுலிலிருந்த போதிலும் அதனை மீறியும் அவசரகால நிலைமையை கண்டுகொள்ளாமலும் நாட்டின் பல பிரதேசங்களில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
ஆர்ப்பாட்டங்களைக் கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு பொலிஸார் தள்ளப்பட்டனர். பொதுமக்களின் ஆர்ப்பாட்டங்கள் அரச தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளை நோக்கியும் திரும்பின. இதுவரை பல எம்.பி.க்களின் வீடுகள் ஆர்ப்பாட்டக்காரர்களின் தாக்குதளுக்கு இலக்காகியுள்ளன.
இதனால் அச்சமடைந்த அரசாங்கம், மக்களை சமாளிப்பதற்காக அமைச்சரவை இராஜினாமா எனும் நாடகத்தை அரங்கேற்றியது. ஆரம்பத்தில் பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த ராஜபக்ச இராஜினாமாச் செய்யவுள்ளதாக தகவல்கள் கசிந்தன. எனினும் அவரைத் தவிர ஏனைய அனைத்து அமைச்சர்களும் இராஜினாமாச் செய்தனர்.
இவ்வாறான நிலையில் ஊரடங்குச் சட்டம் கடந்த திங்கட்கிழமை அதிகாலை நீக்கப்பட்டது. இதனை அடுத்தும், பல ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
குறிப்பாக பல பிரபலங்களும் மக்களோடு மக்களாக இணைந்து வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதை காண முடிகிறது. பிரபல கிரிக்கட் வீரர்களான சனத் ஜயசூரிய, ரொஷான் மஹாநாம, மாவன் அதபத்து, திமுத் கருணாரத்ன உள்ளிட்டோரும் பல சினிமா, கலை நட்சத்திரங்களும் இவ்வாறான ஆர்ப்பாட்டங்களில் பங்கெடுத்து வருகின்றனர். அது மாத்திரமன்றி பாரிய வர்த்தக நிறுவனங்களும் இவ்வாறான போராட்டங்களுக்கு தமது ஆதரவை பகிரங்கமாக அறிவித்துள்ளன.
புதிய அமைச்சர்கள் நியமனம்
இதேவேளை, அமைச்சரவை இராஜினாமாச் செய்ததும் நான்கு பேரைக் கொண்ட தற்காலிக அமைச்சரவையொன்று ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டது. இதில் வெளிவிவகார அமைச்சராக ஜீ.எல். பீரிஸும், நிதி அமைச்சராக அலி சப்ரியும், கல்வி அமைச்சராக தினேஸ் குணவர்த்தனவும், நெடுஞ்சாலை அமைச்சராக ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவும் பதவியேற்றனர்.
எனினும், இந்த அமைச்சர் நியமனமும் கடுமையான விமர்சனத்திற்குள்ளாகியது. பதவியேற்ற 24 மணி நேரத்திற்குள்ளேயே நிதி அமைச்சர் பதவியினை இராஜினாமாச் செய்த அலி சப்ரி, ஜனாதிபதிக்கு தேவை என்றால் தனது தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியினையும் இராஜினாமாச் செய்ய தயார் என அறிவித்தார்.
இதேவேளை, கடந்த செவ்வாய்க்கிழமை பாராளுமன்றம் கூடிய போது,பொது ஜன பெரமுன, சுதந்திரக் கட்சி, விமல் வீரவன்ச தலைமையிலான அணி உட்பட சுமார் 42 பாராளுமன்ற உறுப்பினர்கள் சுயாதீனமாக செயற்படுவதாக பாராளுமன்றத்தில் அறிவித்தனர்.
முஸ்லிம் எம்.பிக்களின் “பெல்டி“
பொது ஜன பெரமுனவில் அங்கம் வகிக்கும் பெரும்பான்மை இன எம்.பி.க்களே அரசாங்கத்திற்கான தமது ஆதரவை விலக்கிக் கொண்டுள்ள நிலையில், 20க்கு ஆதரவளித்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்ற கேள்வி முஸ்லிம் சமூகத்திலிருந்து பரவலாக முன்வைக்கப்பட்டது.
இச்சமயத்தில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஷாரப் தான் பாராளுமன்றத்தில் சுயாதீனமாகச் செயற்படவுள்ளதாக அறிவித்தார். இவர் 20 ஆவது திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களிக்காவிட்டாலும் அதன் பின்னர் வந்த சகல வாக்கெடுப்புகளிலும் அரசாங்கத்தை ஆதரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கு ஆதரவாக இவர் குரல்கொடுத்து வந்த நிலையிலேயே, பாராளுமன்றில் சுயாதீனமாக செயற்படவுள்ளதாக அறிவித்தார். இவ்வாறு அவர் பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது சபையில் சலசலப்பு ஏற்பட்டது. முஷாரப், சபையில் உரையாற்றிக் கொண்டிருக்கும்போது பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இவர் முன்னால் 5,000 ரூபா நாணயத்தாளை நீட்டி, பணத்துக்காகவே இவ்வாறான செயல்களில் ஈடுபடுவதாக குற்றஞ்சாட்டினார்.
இதேவேளை, 20ஆவது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளித்தமையினால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கட்சிப் பதவிகளிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள ஹரீஸ் எம்.பி, அக்கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்ட பேரணியில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு பேஸ்புக் ஊடாக அறிவித்திருந்தார்.
ஏற்கனவே இந்த பேரணியில் கலந்துகொள்ள ஆயிரக்கணக்கானோர் தயாராக உள்ளதை அறிந்தவுடனேயே குறித்த அறிவிப்பினை அவர் மேற்கொண்டார்.
இதனிடையே, 20 ஆம் திருத்தச் சட்டத்தை ஆதரித்துவிட்டு அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டு வரும் ஹரீஸ், நஸீர் அகமட், பைசல் காசிம், தௌபீக், அலி சப்ரி ரஹீம், இஷாக் ரஹ்மான் ஆகியோர் இதுவரை தமது நிலைப்பாடுகளை அறிவிக்கவில்லை. இந்த எம்.பி.க்களுக்கு எதிராக முஸ்லிம்கள் கிளர்ந்தெழ வேண்டும், அவர்களது வீடுகளை முற்றுகையிட வேண்டும் என சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருவதை அவதானிக்க முடிகிறது. நேற்று முன்தினம் கல்முனையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் ஹரீஸ் எம்.பி.யின் வீட்டின் முன்பாக சென்று கூச்சலிட்டதையும் அவதானிக்க முடிகிறது.
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு முஸ்லிம் எம்.பி.க்கள் 20க்கு ஆதரவளித்து ஜனாதிபதியை சர்வாதிகாரியாக்கியமையே காரணம் என்பதும் குறிப்பிட்டுக் கூறத்தக்கதாகும்.
கோட்டா பதவி துறப்பாரா?
அமைச்சரவை இராஜினாமாச் செய்தாலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இராஜினாமாச் செய்ய வேண்டும் என்பதே மக்களின் பிரதான கோரிக்கையாகவுள்ளது. எனினும் ஜனாதிபதி பதவி விலகுவதற்கான அறிகுறிகள் எதுவும் தெரியவில்லை. நேற்றைய தினம் பாராளுமன்றில் உரை நிகழ்த்திய அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, ஜனாதிபதி ஒருபோதும் பதவி விலகமாட்டார். எதிர்ப்புகளை சந்திக்க நாம் தயாராகவுள்ளோம் என அறிவித்தார். இந்த அறிவிப்பு மக்களை மேலும் ஆத்திரமூட்டியுள்ளது. ஆர்ப்பாட்டங்கள் மேலும் உக்கிரமடையும் என்பதையே தற்போதைய நிகழ்வுகள் கட்டியம் கூறுகின்றன.
நிலைமையை சமாளிப்பதற்காக, நாட்டின் பொருளாதாரத்தினை கட்டியெழுப்ப அனைத்து கட்சிகளும் இணைந்த அரசாங்கமொன்றினை உருவாக்க முன்வருமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்தார். எனினும், இந்த அழைப்பினை பல கட்சிகள் நிராகரித்துள்ளன. இதனால் எந்தவொரு முடிவினையும் எடுக்க முடியாத நிலைக்கு ராஜபக்ஷ குடும்பமும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் தள்ளப்பட்டுள்ளது. ஆட்சியிலிருந்து விலகவும் முடியாமல் தொடரவும் முடியாமல் இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில் நாட்டில் அமுல்படுத்தப்பட்டிருந்த அவசர கால நிலையும் நேற்று புதன்கிழமை நள்ளிரவில் ஜனாதிபதியினால் நீக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றவர்களின் பிரதான கோரிக்கை ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என்பதாகும். கோட்டாபய ராஜபக்ஷவை ஆட்சிக்கு கொண்டுவந்த அதே மக்களே இப்போது அவர் தமக்குத் தேவையில்லை என்று போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது போன்ற எதிர்ப்பை, சவாலை இதற்கு முன்னர் பதவி வகித்த எந்தவொரு ஜனாதிபதியும் சந்திக்கவில்லை. மக்களின் கோரிக்கையினை ஏற்று அரசியலில் நுழைந்த கோட்டாபய ராஜபக்ஷ, மக்களின் கோரிக்கையின் பிரகாரம் ஜனாதிபதி பதவியிலிருந்து இராஜினாமாச் செய்வதே சிறந்த தீர்மானமாகும்.
அதனையும் மீறி அவர் தொடர்ந்து பதவி வகித்தால், தற்போது நாட்டில் இடம்பெறும் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களாக மாறி கலவரங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாகும்.அது இந்த நாட்டை மேலும் படுகுழியில் தள்ளவே வழிவகுக்கும்.
மக்களின் போராட்டங்களுக்கு முகங்கொடுக்க முடியாமல் பல வெளிநாட்டுத் தலைவர்கள் ஓடி ஒழிந்த வரலாறுகள் பல காணப்படுகின்றன.
அவ்வாறான நிலையில், மக்களின் கோரிக்கைக்கு மதிப்பளித்து ஜனாதிபதி பதவியிலிருந்து கோட்டாபய ராஜபக்ஷ இராஜினாமாச் செய்வதன் ஊடாக நாட்டில் தற்போது முன்னெடுக்கப்படும் போராட்டங்களை முடிவுக்குக் கொண்டு வந்து நாட்டின் பொருளாதாரத்தினை கட்டியெழுப்ப முடியும் என்பதில் மாற்றுக் கருத்திற்கிடமில்லை.–Vidivelli