நாட்டில் ஆட்சியாளர்களுக்கு எதிரான மக்களின் கோபம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு வார காலத்திற்குள் மாத்திரம் சுமார் 300 க்கும் அதிகமான மக்கள் எழுச்சிப் போராட்டங்கள் நாடெங்கும் நடந்துள்ளன. இப்போதும் நடந்து வருகின்றன. எதிர்வரும் நாட்களிலும் இப்போராட்டங்கள் மேலும் உக்கிரமடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் கூட ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச உட்பட அதிகாரத்திலுள்ள அவரது குடும்பத்தினர் முழுவதும் பதவி விலக வேண்டும் என்பதே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் மக்களின் கோரிக்கையாகவுள்ளது. ராஜபக்ச குடும்பமே இந்த நாட்டைக் குட்டிச்சுவராக்கியுள்ளதாக மக்கள் பகிரங்கமாகவே குற்றம்சாட்டுகின்றனர். சாதாரண பொது மக்கள் மாத்திரமன்றி பிரபல்யங்கள் கூட இன்று வீதிக்கு இறங்கிவிட்டனர்.
எனினும் ஜனாதிபதி அவற்றுக்கு செவிசாய்க்கமாட்டார் எனவும் தொடர்ந்தும் பதவியிலிருப்பார் என்றும் நேற்றைய தினம் அரசாங்க அமைச்சர்கள் அறிவித்துள்ளனர்.
மக்களின் போராட்டங்களை தீவிரவாதமாகவும் தேசத்துரோகமாகவும் காண்பிப்பதற்கு அரசாங்கம் எடுத்த முயற்சிகள் பலிக்கவில்லை. உரிய நேரத்தில் சட்டத்தரணிகள் தலையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களைக் காப்பாற்றியுள்ளனர். இல்லாவிடின் அவர்களை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சிறையிலடைப்பதற்கே திட்டமிடப்பட்டிருந்தது.
அவசர காலச்சட்டம், ஊரடங்கு மற்றும் சமூக வலைத்தளங்கள் மீதான தடை என முடியுமான வகையில் பலங்களைப் பிரயோகித்து போராட்டங்களை அடக்குவதற்கு எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. தற்போது இவை அனைத்தும் நீக்கப்பட்டுள்ளன. ஆனாலும் எதிர்வரும் நாட்களில் படை பலம் கொண்டு போராட்டங்களை நசுக்குவதற்கு அரசாங்கம் முயலுமாயின் அது நாட்டின் நிலைமையை மேலும் மோசமடையச் செய்யும்.
மக்கள் போராட்டம் வெடித்ததன் பின்னர் முதன் முறையாக பாராளுமன்றம் நேற்று முன்தினம் கூடிய போதிலும் இதுவரை எந்தவித ஆக்கபூர்வமாக தீர்மானங்களும் அங்கு எட்டப்படவில்லை. நேற்றைய தினம் சமகால நிலைமைகள் குறித்த விவாதம் இடம்பெற்ற போதிலும் வீண் குழப்பங்களும் வாக்குவாதங்களும் நிகழ்ந்தனவே தவிர பிரயோசனமான எந்த கலந்துரையாடல்களும் இடம்பெறவில்லை.
எதிர்க்கட்சிகள் கூட நாட்டை இந்த நெருக்கடியிலிருந்து மீட்பதற்கான எந்தவித தூரநோக்கான திட்டங்களையும் கொண்டிருப்பதாகத் தெரியவில்லை. கோட்டாவை வீட்டுக்கு அனுப்புவோம் என்று போராடுபவர்களிடமும் அடுத்தது என்ன என்பது பற்றிய தெளிவான பார்வை இல்லை. இது மிகவும் ஆபத்தானதாகும்.
ஜனாதிபதிக் கதிரையிலிருந்து ஒருவரை அகற்றிவிட்டு இன்னொருவரைக் கொண்டு வருவதால் மாத்திரம் நாம் எதிர்பார்க்கின்ற மாற்றத்தை ஏற்படுத்திவிட முடியாது. மாறாக முழு அரச பொறிமுறையுமே மாற்றத்தைக் காண வேண்டும்.
இவ்வாறான மோசமான ஆட்சியாளர்களை பதவிக்குக் கொண்டு வந்தது மக்களாகிய நாம்தான் என்பதை முதலில் உணர வேண்டும். சில வருடங்களுக்கு முன்னர் சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த கோத்தாபய ராஜபக்ச, மக்கள் ராஜபக்ச குடும்பத்திற்கு வாக்களிப்பதனாலேயே தமது குடும்பத்தினர் முக்கிய பதவிகளில் இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார். ஆக, மக்கள் இழைத்த தவறின் பிரதிபலன்களையே இப்போது அனுபவிக்க வேண்டியுள்ளது.
இன்றைய நெருக்கடி நிலையைப் பொறுத்தவரை ஆட்சியாளர்களை மாத்திரம் மாற்றுவது தீர்வல்ல. மாறாக நாட்டுக்கென மிகத் தெளிவான கொள்கைகள் அவசியம். இக் கொள்கைகளை வகுப்பதாயின் முதலில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்பட வேண்டும். 20 ஆவது திருத்தம் இல்லாதொழிக்கப்படுவதுடன் சுயாதீன ஆணைக்குழுக்கள் ஸ்தாபிக்கப்பட வேண்டும். பயங்கரவாத தடைச்சட்டம் உள்ளிட்ட மனித உரிமை மீறல்களுக்கு இடமளிக்கும் சட்டங்கள் நீக்கப்பட வேண்டும். ஊழலை முற்றாக ஒழிப்பதற்கான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும். தேர்தலில் போட்டியிடுபவர்களைத் தீர்மானிப்பதற்கான இறுக்கமான வரையறைகள் கொண்டுவரப்பட வேண்டும்.
இவ்வாறான கோரிக்கைகளை முன்னிறுத்தியே மக்களாகிய நாம் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டுமே தவிர, வெறுமனே ஆட்சியாளர்களை மாற்றுவதால் மாத்திரம் தீர்வைக் காணப் போவதில்லை. 2015 இல் ராஜபக்சாக்களை வீட்டுக்கு அனுப்பிவிட்டு நல்லாட்சி அரசாங்கத்தை கொண்டு வந்தோம். பின்னர் அவர்களை வீட்டுக்கு அனுப்பிவிட்டு மீண்டும் ராஜபக்சாக்களிடம் நாட்டைக் கையளித்தோம். இப்போது ராஜபக்சாக்களும் வேண்டாம், வேறு யாரிடமாவது நாட்டை ஒப்படையுங்கள் என்கிறோம்.
உண்மையில் இது நாட்டுக்கு ஆரோக்கியமானதல்ல. மாறாக யார் ஆட்சிக்கு வந்தாலும் தேசிய கொள்கைகளில் கைவைக்க முடியாதவாறான ஒரு புதிய அரசியலமைப்பை வலியுறுத்தும் வகையில் நமது போராட்டங்கள் அமைய வேண்டும். அப்போதுதான் எமது எதிர்கால சந்ததியாவது நிம்மதியான முறையில் இந்த நாட்டில் வாழக்கூடியதாக அமையும்.– Vidivelli