கிண்ணியாவிலிருந்து றிப்தி அலி
2021 நவம்பரில் எட்டு உயிர்களை பலி எடுத்த கிண்ணியா, குறிஞ்சாக்கேணி ஆற்றில் நிர்மாணிக்கப்படுகின்ற பாலத்தின் கட்டுமானப் பணிகள் உடனடியாக பூர்த்தி செய்யப்படாவிட்டால் இன்னும் பல உயிர்களை எதிர்காலத்தில் இழக்க நேரிடும் என 32 வயதான நிலாம் சுசானா தெரிவித்தார்.
“நான் பிறந்தது முதல் இன்று வரை எந்தவித மாற்றமுமின்றி இவ்வாறு மோசமாகவே இப்பாலம் காணப்படுகின்றது. இதனால் எனது இரண்டு பெண் பிள்ளைகளை இன்று நான் இழந்து தவிக்கின்றேன்” என அழுதவாறு அவர் கூறினார்.
பல கனவுகளுடன் வாழ்ந்த எனது பிள்ளைகள் இன்று உயிருடனில்லை. இதற்கான முழுப் பொறுப்பினையும் அரசியல்வாதிகளே ஏற்க வேண்டும் எனவும் சுசானா குற்றஞ்சாட்டினார்.
சுசானாவின் இரண்டு பிள்ளைகள் உட்பட எட்டு உயிர்கள் (பார்க்க அட்டவணை) பலியெடுக்கப்பட்ட அனர்த்தமொன்று கடந்த நவம்பர் 23ஆம் திகதி குறிஞ்சாக்கேணி பாலத்திற்கு அருகிலுள்ள வாவியில் இடம்பெற்றது.
கிண்ணியா நகர சபை, கிண்ணியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளை இணைக்கின்ற 100 மீற்றர் நீளமான பாவனைக்கு உதவாத இப்பாலத்தினை பல்லாயிரக்கணக்கான மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் தினசரி பயன்படுத்தி வந்தனர்.
இதற்கு பதிலாக புதிய பாலமொன்றினை மூன்று கட்டங்களாக நிர்மாணிக்க நெடுஞ்சாலைகள் அமைச்சின் ஆலோசனையின் பிரகாரம் வீதி அபிவிருத்தி அதிகாரசபை நடவடிக்கை எடுத்தது.
பால நிர்மாணம்
முதற்கட்டமாக இப்பாலத்தின் 26 மீற்றர் நீளமான பகுதியின் நிர்மாணப் பணிக்கான விலைமனுக் கோரல் கடந்த 19.02.2021 ஆம் திகதி கோரப்பட்டு V.V. Karunaratne & Company யிடம் ஒப்படைக்கப்பட்டது.
இப்பால நிர்மாணத்திற்கான அடிக்கல் அப்போதைய கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சாவினால் கடந்த 2021.04.10ஆம் திகதி நடப்பட்டது.
சுமார் 226 மில்லியன் ரூபா பெறுமதியான முதற்கட்ட நிர்மாணத்தில் 50.5 மில்லியன் ரூபா ஒப்பந்தக்காரருக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்தது.
எனினும், “நாட்டில் பொருட்களுக்கு நிலவுகின்ற தட்டுப்பாட்டினாலும், ஒப்பந்தக்காரரின் நிதி நிலமையினாலும் இதன் நிர்மாணப் பணிகளை உரிய காலப் பகுதிக்குள் நிறைவு செய்ய முடியவில்லை” என வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு மேற்கொள்ளப்பட்ட தகவல் அறியும் விண்ணப்பத்திற்கான பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில், பழைய பாலம் சிறந்த முறையில் காணப்படாமையினாலும், புதிதாக நிர்மாணிக்கப்படுகின்ற பாலத்தினை வீதியுடன் இணைக்கும் நோக்கிலும், இப்பால நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் அதன் ஒரு பகுதி உடைக்கப்பட்டதாகவும் வீதி அபிவிருத்தி அதிகாரசபை கூறுகின்றது.
இதனால், அப்பிரதேச மக்கள் பல கிலோ மீற்றர் தூரம் பயணித்தே கிண்ணியா நகரை அடைய வேண்டியிருந்தது. இதனால், 2021.03.09ஆம் திகதி கிண்ணியா பிரதேச செயலகத்தில் நடைபெற்ற கூட்டமொன்றின்போது படகுப் பாதை சேவையினை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டதுடன் கிண்ணியா நகர சபை மற்றும் பிரதேச சபை ஆகியவற்றின் அப்போதைய தவிசாளர்களே இதற்கான பொறுப்பினை ஏற்றுக்கொண்டார்கள் எனவும் வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்தது.
இதனைத் தொடர்ந்து கட்டணம் செலுத்தி பாதுகாப்பற்ற படகுப் பாதை சேவையொன்று ஆரம்பிக்கப்பட்டது. இந்த படகுப் பாதை சேவைக்காக எந்தவொரு நிதியும் வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் ஒதுக்கப்படவில்லை. இதில் பயணித்த பாடசாலை மாணவர்கள் உட்பட எட்டுப் பேரே குறித்த அனர்த்தத்தில் உயிரிழந்தனர்.
“இந்த அனர்த்தத்தினால் இன்று நான் மனைவியையும் நான்கு வயது குழந்தையினையும் இழந்து தவிக்கின்றேன்” என 36 வயதான உதுமாலெப்பை சலீம் தனது வருத்தத்தை பகிர்ந்துகொண்டார்.
“பாலர் பாடசாலையில் கல்வி கற்பித்துக் கொடுப்பதற்காக குழந்தையுடன் சென்ற போதே எனது மனைவி இந்த விபத்தில் சிக்கினார். இந்த பாலத்தினை நிர்மாணித்து முடிப்பார்கள் என்பதில் எனக்கு ஒரு சொட்டு நம்பிக்கையுமில்லை” என அவர் கூறினார்.
இதனையடுத்து, குறித்த தினத்தன்று கிண்ணியாவில் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டது. இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக்கின் இல்லம் உட்பட பல இடங்களில் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த தாக்குதலுடன் சம்பந்தப்பட்ட 15 பேர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அதேவேளை, பாதுகாப்பற்ற படகுப் பாதை சேவையில் ஈடுபடுவதற்கு அனுமதி வழங்கிய அப்போதைய கிண்ணியா நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எம். நளீம் மற்றும் பாதையின் உரிமையாளர், செலுத்துநர் மற்றும் கட்டணம் வசூலிப்பவர் ஆகியோரும் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.
நஷ்டஈடு
இந்த சம்பவத்தினால் மரணமானவர்களின் மரணச் சடங்கிற்காக அரசாங்கத்தினால் தலா 25,000 ரூபா வழங்கப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பாராளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம், றிசாத் பதியுதீன் மற்றும் எம்.எஸ். தௌபீக் ஆகியோரினாலும், சமூக அமைப்புக்களினாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
எனினும், அரசாங்கத்தினால் வழங்கப்பட வேண்டிய 200,000 ரூபா நஷ்டஈடு இன்னும் வழங்கப்படவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
உளவியல் நெருக்கடிகள்:
இந்த அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் இன்று வரை குறித்த சம்பவத்தினை மறக்க முடியாமல் சிரமப்படுவதை நேரடியாக அவதானிக்க முடிந்தது.
இவர்களுக்கு தேவையான எந்தவொரு உளவியல் ஆலோசனைகளும் அரசாங்கத்தினாலோ அல்லது தொண்டர் நிறுவனங்களினாலே இதுவரை வழங்கப்படவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கதாகும்.
கடற்படையின் படகுச் சேவை
இந்த சம்பவத்தினை அடுத்து கடற்படையினரால் படகுச் சேவையொன்று உடனடியாக ஆரம்பிக்கப்பட்டது. ஒரு தடவையில் 25 பேர் பயணிக்கக் கூடிய இந்த படகுச் சேவை கடந்த பெப்ரவரி 19ஆம் திகதியுடன் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
“படகுச் சேவையினை பொதுமக்கள் பயன்படுத்துவது மிகக் குறைவாக காணப்பட்டமையினாலேயே நிறுத்தப்பட்டது” என கடற்படை பேச்சாளர் கேப்டன் இந்திக டி சில்வா தெரிவித்தார்.
ஆளுநரின் அசமந்த போக்கு
இதேவேளை, கடந்த 11ஆம் திகதி குறிஞ்சாக்கேணி பிரதேசத்திற்கு விஜயம் செய்த கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத், படகுச் சேவையைப் பயன்படுத்துகின்றவர்களுக்கான பாதுகாப்பு அங்கிகளை அன்பளிப்பு செய்துள்ளார். படகுச் சேவை நிறுத்தப்பட்ட பின்னரே இந்த அங்கிகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இலவச பஸ் சேவை
வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் இலவச பஸ் சேவையொன்று தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ளது. சுமார் 35 பேர் பயணிக்கக் கூடிய இந்த பஸ் காலை 6.30 மணி முதல் இரவு 7.00 மணி வரை 12 இரு வழிப் பயணங்களை கிண்ணியா தொடக்கம் குறிஞ்சாக்கேணி வரை மேற்கொள்கின்றது.
12 கிலோ மீற்றர் நீளமான இந்த சேவைக்காக தினசரி 12,000 ரூபா வீதம் வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் பஸ் உரிமையாளருக்கு வழங்கப்படுகின்றது. எனினும் எரிபொருள் விலை அதிகரிப்பினை அடுத்து 10 இரு வழிப் பயணங்களாக இச்சேவை குறைக்கப்படுள்ளது.
டிசம்பர் 20ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த பஸ் சேவைக்கு ஒரு மாதத்திற்கான பணம் மாத்திரமே அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பூச்சாண்டி காட்டல்
நல்லாட்சி அரசாங்கத்தினால் 750 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவிருந்த இப்பாலத்திற்கான அடிக்கல் அப்போதைய பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்றூபின் அழைப்பில் அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் 2019.07.14ஆம் திகதி நடப்பட்டது.
எனினும், அடிக்கலை தவிர வேறு எந்த நிர்மாணமும் இடம்பெறவில்லை. இதேவேளை, கடந்த ஆட்சியில் இப்பாலத்திற்காக நடப்பட்ட அடிக்கல் தொடர்பில் தமக்கு எதுவும் தெரியாது என வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்தது. எவ்வாறாயினும், இந்நிகழ்வில் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் உயர் அதிகரிகள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
இந்த பாலத்தினை நிர்மாணிப்பதற்காகவே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தீர்மானத்தினையும் மீறி 20ஆவது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளித்ததாக இப்பிரதேச பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக் கூறி வருகின்றார்.
இதேவேளை, “கைவிடப்பட்ட குறிஞ்சாக்கேணி பால வேலைகள் புதிய கம்பெனியூடாக இம்மாத இறுதியில் மீண்டும் ஆரம்பிக்கப்படும்” என கடந்த 12ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் தௌபீக் முகநூலில் பதிவொன்றினை மேற்கொண்டிருந்தார். எனினும், இன்று (31) வரை குறித்த பாலத்தின் நிர்மாண வேலைகள் ஆரம்பிக்கப்படவில்லை.
புறாத் தீவு பாலம்
நாட்டின் புகழ்பெற்ற பாலங்களில் ஒன்றான மாத்தறை கடற்கரைப் பூங்காவை ஒட்டியுள்ள தங்கத் தீவுக்குச் செல்வதற்கான புறாத் தீவு பாலம் கடந்த மார்ச் 4ஆம் திகதி சரிந்து வீழ்ந்தது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பணிப்புரைக்கமைய குறித்த தீவுக்கு செல்வதற்கான புதிய பாலத்தின் நிர்மாணப் பணிகளை 06 மாதங்களுக்குள் நிறைவு செய்ய எதிர்பார்ப்பதாக நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் ஆர்.டபிள்யு.ஆர். பேமசிறி தெரிவித்தார்.
இவ்வாறான நிலையில், புறாத் தீவில் இராணுவத்தினரால் தற்காலிகமாக நிர்மாணிக்கப்பட்ட பாலம் கடந்த மார்ச் 12ஆம் திகதி திறக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பாலத்தின் எதிர்காலம்
இதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆலோசனையின் பிரகாரம் அடுத்த ஒன்பது மாதத்திற்குள் குறிஞ்சாக்கேணி பாலத்தின் நிர்மாணப் பணிகள் நிறைவுசெய்யப்படும் என ஜனாதிபதி ஊடக மையத்தில் கடந்த நவம்பர் 25ஆம் திகதி நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் நெடுஞ்சாலைகள் அமைச்சினால் அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பு மேற்கொள்ளப்பட்டு நான்கு மாதங்கள் கழிந்துள்ள நிலையிலும், இப்பாலத்தின் நிர்மாணப் பணிகள் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை. இதனால் பாதுகாப்பற்ற குறித்த பாலத்தினை பொதுமக்கள் பயன்படுத்துவதனையும், இதனால் சிலர் மோட்டார் சைக்கிளுடன் இந்த ஆற்றினுள் வீழ்ந்ததையும் எமது நேரடி விஜயத்தின் போது அவதானிக்க முடிந்தது.
எவ்வாறாயினும், இப்பாலத்தின் முதற் கட்ட நிர்மாணம் அடுத்த ஓரிரு வாரங்களில் ஆரம்பிக்கப்படுவதுடன், 2ஆம் மற்றும் 3ஆம் கட்டத்திற்கான விலைமனு கோரலும் கோரப்படவுள்ளது என நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் பேமசிறி தெரிவித்தார்.
இப்பால நிர்மாணத்தில் காணப்பட்ட சில பிரச்சினைகளினால் ஏற்பட்ட கால தாமதம் தற்போது நிவர்த்தி செய்யப்பட்டு விட்டது எனவும் அவர் கூறினார்.
நாட்டில் தற்போது நிலவுகின்ற பொருளாதார பிரச்சினைக்கு மத்தியில் இப்பால நிர்மாணம் மேற்கொள்ளப்படுமா? என நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளரிடம் வினவியதற்கு, “மிகவும் அத்தியவசியமான குறிஞ்சாக்கேணி பாலத்தினை அவசரமாக நிர்மாணிக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். இதனால் அமைச்சிடமுள்ள நிதியினைக் கொண்டாவது இப்பால நிர்மாணத்தினை விரைவில் நிறைவுசெய்வோம். இதில் எந்தப் பிரச்சினையுமில்லை” என்றார்.- Vidivelli