காதி நீதிமன்றங்களுக்கு எதிராக திட்டமிட்ட ஊடக பிரசாரங்கள்
சிங்கள ஊடகவியலாளருடனான நேர்காணலில் காதி நீதிபதிகள் தெரிவிப்பு
ஏ.ஆர்.ஏ.பரீல்
தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் சமுதித அண்மையில் நால்வரை நேர்கண்டபோது சில காதிநீதிவான்கள் தங்களிடம் நீதி கோரி வரும் பெண்களிடம் பாலியல் இலஞ்சம் கோருவதாகவும், இலஞ்சம் பெற்றுக் கொண்டு தவறான தீர்ப்புகள் வழங்குவதாகவும் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பதில் அளிக்கும் வகையிலும், பொய்ப் பிரசாரங்களை மறுத்தும், தெளிவுகள் வழங்குவதற்கும் காதி நீதிபதிகள் போரம் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் சமுதித சமரவிக்ரமவை நேரில் சந்தித்தது.
காதிநீதிவான்கள் போரத்தின் பொதுச்செயலாளரும் காதி நீதிபதியுமான சட்டத்தரணி ஹுசைன் அஸ்ஹார் சைனுன் மற்றும் உபதலைவரும், காதிநீதிபதியுமான எம்.இப்ஹாம் யெஹ்யா ஆகியோர் சமுதிதவை நேரில் சந்தித்து நேர் காணலில் பங்கு கொண்டனர். அவர்களுடனான சமுதிதவின் நேர்காணலை இங்கு தருகிறோம். ‘
சில காதிநீதிபதிகளின் வழக்கு விசாரணைகள் வீட்டினுள் நடப்பதென்றால் பெண்கள் அறைக்குள் அழைக்கப்படுகிறார்கள் என்றால் என்ன நடக்கும். பாலியல் இலஞ்சம் கோருகிறார்களாம். இலஞ்சம் பெற்றுக்கொள்கிறார்களாம். உலகில் எங்கு அறைகளில் வழக்கு விசாரிக்கப்படுகிறது. ஏற்றுக்கொள்கிறீர்களா?
காதிநீதிபதிகள் நியமனத்துக்கு நேர்முகப்பரீட்சை நடத்தும் போது வழக்கு விசாரணை நடத்துவதற்கு இடம் இருக்கிறதா என்று கேட்கப்படுகிறது. வீடுகளில் வழக்கு விசாரிக்கப்படுவதில்லை. வீடுகளில் காரியாலயங்கள் இயங்குகின்றன. காதி நீதிவான்கள் தொடர்பில் முறைப்பாடுகள் இருந்தால் இலஞ்ச விசாரணை ஆணைக்குழுவில் முறையிடலாம். பொலிஸிலும் முறையிடலாம். காதிநீதிமன்ற முறையில் குறைபாடுகள் இருக்கின்றன. அவை தீர்க்கப்படலாம். குறைபாடுகள் நீக்கப்பட்டால் இது சிறந்தவொரு சட்டம்.
அரசியல் சுயலாபம் மற்றும் அரசியல் அதிகாரத்தைப் பெற்றுக் கொள்வதற்காக காதி நீதிமன்றங்கள் பற்றி பொய்ப் பிரசாரம் செய்யப்படுகிறது. ஊடகங்களும் இதில் பங்கு வகிக்கின்றன.
காதிநீதிமன்றம் பற்றி பேசப்படுகிறது. மத்ரஸா பாடசாலைகள் கருத்தடை வில்லை, கருத்தடை கொத்து ரொட்டி, டாக்டர் சாபி சிகாப்தீன் பற்றி கடந்த காலங்களில் பேசப்பட்டது. இவையனைத்தும் ஒரே நோக்கோடு முன்னெடுக்கப்பட்டதா?
ஆம். இவையனைத்தும் ஒரே நோக்கோடுதான் முன்னெடுக்கப்பட்டது. அரசியல் அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்காக இனமும், சமயமுமே பயன்படுத்தப்படுகிறது.
இது பற்றி ஞானசார தேரர் பேசினார். அத்துரலியே ரதன தேரர் பேசினார், தாமரை மொட்டு அரசியல்வாதிகள் பேசினார்கள். நீங்கள் இவர்களையா குற்றம் சுமத்துகிறீர்கள்?.
ஆம். இவர்கள்தான் எதிர்த்தார்கள். விமர்சித்தார்கள் ஒரே நாடு ஒரே சட்டம் தொடர்பில் ஜனாதிபதி செயலணியொன்று நியமிக்கப்பட்டுள்ளது. அதன் தலைவர் ஞானசார தேரருக்கு நான் (இப்ஹாம் யெஹ்யா) கடிதமொன்று அனுப்பினேன். காதி நீதிமன்ற அமர்வுகளை வந்து பார்வையிடுமாறு கோரினேன். ஆனால் அவர் வரவில்லை.
முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டம் ஆண்களுக்கு முன்னுரிமை வழங்கியே இயற்றப்பட்டுள்ளது. பெண்களுக்கு இரண்டாம் இடமே வழங்கப்பட்டுள்ளது. அப்படித்தானே?
அதனாலேயே நாம் இந்தச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமென கோரிக்கை முன்வைத்துள்ளோம். சலீம் மர்சூப் தலைமையிலான குழு மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள தொடர்பில் அறிக்கை சமர்ப்பித்துள்ளது. நாமும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்கிறோம்.
முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டம் ஷரீஆ சட்டத்துடன் தொடர்புபட்டதா? நீங்கள் இதனை ஏற்றுக்கொள்கிறீர்களா?
இச்சட்டம் நூற்றுக்கு நூறு ஷரீஆ சட்டத்துடன் தொடர்புபட்டதல்ல. ஷரீஆ சட்டத்துடன் முரண்படும் விடயங்களும் உள்ளடங்கியுள்ளன. பெண்களுக்கு பாதிப்பான விடயங்கள் உள்ளதால் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்கிறோம்.
வழங்கப்பட்ட தீர்ப்புகளுக்கு எதிராக மேன்முறையீடு செய்வதென்றால் காதி நீதிவான்களின் அனுமதிவேண்டும். அப்படித்தானே?.
இல்லை. நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டுள்ளீர்கள். வழக்கு விசாரணை நடைபெறும்போதும் வாதியோ பிரதிவாதியோ விசாரணைகளில் திருப்தியுறாவிட்டால் வழக்கினை வேறு ஒரு காதிநீதிமன்றுக்கு மாற்றிக் கொள்ளலாம்.
மிகவும் குறைந்த தொகைப் பணமே தாபரிப்பு வழக்குகளில் தீர்ப்பளிக்கப்படுகிறது. 3000 ரூபா கூட மாதத்திற்கு தீர்ப்பளிக்கப்படுகிறது?
தாபரிப்பு பெற்றுக்கொள்வதற்கு தாபரிப்பு வழங்குபவரின் வருமானம் உறுதிப்படுத்தப்பட வேண்டும். உறுதிப்படுத்தப்பட்டதன் பின்பே தீர்ப்பு வழங்கப்படுகிறது.
நீங்கள் எம்மோடு ஒன்றாக வாழ விருப்பமில்லையா?ஏன் வேறாக மத்ரஸா பாடசாலைகள், காதி நீதிமன்றங்கள்? ஏன் நாட்டின் பொதுவான சட்டத்திற்கு உங்களால் செல்ல முடியாது?
பொதுவான சட்டம் என்றால் எந்தவோர் இனத்துக்கும் எந்த மதத்திற்கும் விஷேட வரப்பிரசாதங்கள் இருக்க முடியாது என்பதல்லவா? அப்படியென்றால் அரசியலமைப்பில் பெளத்த மதத்திற்கு முதலிடம் வழங்கப்படவேண்டுமென்று குறிப்பிடப்பட்டுள்ளதல்லவா? இது இல்லாமலாக்கப்பட வேண்டுமென நாம் கூறவில்லை. ஒரே நாடு ஒரே சட்டம் என்றால் அரசியலமைப்பில் அப்படி இருக்க முடியாது. அதாவது பெளத்த மதத்திற்கோ, கிறிஸ்தவ மதத்திற்கோ, இஸ்லாம் மதத்திற்கோ முதன்மையளிக்கப்படவேண்டும் என இருக்க முடியாது. அதனாலே நாம் கூறுகிறோம். ஏனைய மதங்கள் மற்றும் இனங்களின் அபிலாஷைகளும் உள்வாங்கப்பட்டிருக்க வேண்டும். அரசியலமைப்பை மாற்ற வேண்டும் என நாம் சவால்விடவில்லை.
ஜனாதிபதி பெளத்தர்களின் வாக்குகளினாலே பதவிக்கு வந்தார். முஸ்லிம்கள் அவருக்கு வாக்களிக்கவில்லை?
தவறு. முஸ்லிம்களில் குறிப்பிட்ட வீதத்தினர் அவருக்கு வாக்களித்தனர். முஸ்லிம்கள் வாக்களிக்கவில்லை என்று கூறமுடியாது. நான் முழு நாட்டுக்கும் அனைத்து மக்களுக்கும் ஜனாதிபதி என்றே அவர் கூறியிருக்கிறார். சமுதிதவாகிய உங்களையும் நாங்கள் குற்றம் சுமத்துகிறோம். நீங்கள் ஒரு தரப்பின் திட்டத்தை அரங்கேற்றுகிறீர்கள். அது அரச தரப்பாகக் கூட இருக்கலாம்.
காதிநீதிமன்றம் தொடர்பான பிரசாரங்கள் அரசாங்கத்தினால் என் மூலமாக மேற்கொள்ளப்படுகின்றன என்கிறீர்களா?
அப்படி இருக்கலாம். இது சமூகத்தின் கருத்து.
ஏன் காதி நீதிமன்றங்களின் வழக்குகள் காலதாமதமாகின்றன?
இல்லை. சுமார் 6 மாதங்களுக்குள் தீர்ப்பு வழங்கப்படுகிறது. மேன்முறையீடு செய்யப்பட்டாலே காலதாமதமாகிறது. ஏனைய நீதிமன்றங்களிலும் இவ்வாறே.
காதி நீதிமன்றங்கள் ஒழிக்கப்பட வேண்டுமென்று கூறப்படுகிறதே?
அவ்வாறு ஒழிக்கப்பட்டால் அது எமது அடிப்படை உரிமை மீறலாகும்.
முஸ்லிம்களுக்கு எதிரான பிரசாரங்கள் அனைத்தும் பொய்யானவை என்றா கூறுகிறீர்கள்?
ஆம். அனைத்தும் பொய்யானவை. அரசியல் பின்னணி கொண்டவை. டாக்டர் சாபி மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை என நிரூபிக்கப்பட்டுள்ளது.அவரது நிலுவை சம்பளம் கூட வழங்கப்படுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
முஸ்லிம்களுக்கு எதிராக சூழ்ச்சி மேற்கொள்ளப்படுவதாகவா கூறுகிறீர்கள்?
நிச்சயமாக அப்படித்தான். காதிநீதிபதிகள் இலஞ்சம் பெற்றுக்கொண்டால் அவர்களைக் கைது செய்வதற்கு சந்தர்ப்பங்கள் உள்ளன. ஆனால் குற்றம் சுமத்துபவர்களால் சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதில்லை. எவருக்கும் காதிநீதிமன்றங்களில் அநியாயம் நடந்திருந்தால் காதிநீதிவான்கள் போரத்துக்கு எழுதுங்கள். நாம் அது பற்றி ஆராய்வோம்.– Vidivelli