உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் விவகாரம்: இப்றாஹிம் ஹாஜியாருக்கு பிணை கோர தீர்மானம்
மே 25 இல் வழக்கு விசாரணைக்கு
(எம்.எப்.எம்.பஸீர்)
உயிர்த்த ஞாயிறு தினம் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதல்களில், சினமன் கிராண்ட் மற்றும் ஷங்ரில்லா ஹோட்டல்களில் குண்டினை வெடிக்கச் செய்த தற்கொலை குண்டுதாரிகளான சகோதரர்களின் தந்தை இப்ராஹீம் ஹாஜியார் என அறியப்படும் யூசுப் மொஹம்மட் இப்ராஹீம் சார்பில் பிணை கோரிக்கை முன் வைக்க அவரது சட்டத்தரணிகள் தீர்மானித்துள்ளனர்.
இது தொடர்பில் அவரது சட்டத்தரணிகள் நேற்றுமுன்தினம் கொழும்பு மேல் நீதிமன்றுக்கு அறிவித்தனர்.
இப்ராஹீம் ஹாஜியார் என அறியப்படும் யூசுப் மொஹம்மட் இப்ராஹீம் உள்ளிட்ட மூவருக்கு எதிராக மேல் நீதிமன்றில் குற்றவியல் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இப்ராஹீம் ஹாஜியாருக்கு மேலதிகமாக அவரது மேலும் இரு புதல்வர்களே அவ்வழக்கின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர். இப்ராஹீம் ஹாஜியார் என அறியப்படும் யூசுப் மொஹம்மட் இப்ராஹீம், மொஹம்மட் இப்ராஹீம் ஹிஜாஸ் அஹமட், மொஹம்மட் இப்ராஹீம் இஸ்மாயீல் ஆகியோரே இவ்வழக்கின் பிரதிவாதிகளாவர்.
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பில் அறிந்திருந்தும் அது தொடர்பில் பாதுகாப்பு தரப்புக்கு அறிவிக்காமல் தகவல்களை மறைத்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் பிரதிவாதிகள் மீது சுமத்தப்பட்டுள்ளன. பயங்கரவாத தடைச் சட்டம் மற்றும் தண்டனை சட்டக் கோவையின் கீழ் இந்த குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
அதன்படி இந்த விவகார வழக்கானது நேற்று முன்தினம் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
இதன்போது பிரதிவாதிகள் மூவரும் நீதிபதி முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டனர். இவ்வாறான நிலையிலேயே அவர்கள் சார்பில் பிணை கோரிக்கையை முன் வைக்க எதிர்பார்ப்பதாக மன்றுக்கு அறிவிக்கப்பட்டது. அதன்படி வழக்கானது எதிர்வரும் மே 25 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப் படவுள்ளது.- Vidivelli