ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 25 ஆவது வருடாந்த மாநாடு அண்மையில் கொழும்பு அல் ஹிதாயா கேட்போர் கூடத்தில் நடைபெற்றபோது சிறப்புப் பேச்சாளராக கலந்து கொண்ட கலாநிதி எம்.சி.ரஸ்மின் ஆற்றிய உரையின் தொகுப்பு
இந்த நிகழ்வில் உரையாற்றுவதற்கு, ‘இலங்கை ஊடகங்களும் முஸ்லிம்களின் எதிர்காலமும்’ எனும் தலைப்பு எனக்கு வழங்கப்பட்டுள்ளது. முஸ்லிம்களின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதில் இலங்கை ஊடகங்களின் வகிபங்கு எவ்வாறு அமையப் போகின்றது என்பது விரிவான தேடல் ஒன்றுக்கான கேள்வி. அதற்குரிய விடையைத் தேடுவது எனது பிரதான நோக்கமல்ல. மாறாக, இந்தக் கேள்வியை சரியாகப் புரிந்து கொள்வதே எனது நோக்கமாகும்.
அந்தவகையில், இரண்டு சம்பவங்களை நான் உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
முதல் சம்பவமானது, 2019 ஆம் ஆண்டு மே 25 ஆம் திகதி, இலங்கையில் மிகவும் பிரபலமான சிங்கள நாளிதழ் ஒன்றில் வெளியிடப்பட்ட “தலைப்புச் செய்தி” பற்றியது. குறித்த சிங்கள நாளிதழின் ஆசிரியர் ஒரு சிரேஷ்ட ஊடகவியலாளர். அவர் இலங்கை பத்திரிகை ஆசிரியர்கள் சங்கத்தின் பிரதான உறுப்பினராகவும் இருந்து வருகின்றார்.
அந்த முன்பக்க பிரதான செய்தியின் தலைப்பு “வட மத்திய மாகாணத்தைச் சேர்ந்த ஸஹ்ரானின் ஐந்து ஆதரவாளர்களின் வங்கிக் கணக்குகளில் 100 கோடி ரூபாய் கண்டுபிடிக்கப்பட்டது” என அமைந்திருந்தது. குறித்த செய்தியில் “சஹ்ரானுடன் தொடர்புடைய சந்தேக நபர்களான ஐந்து முஸ்லிம்களின் கணக்குகளில் 100 கோடி பணம் இருப்பதாக பொலிசார் பத்திரிகைக்கு உறுதிப்படுத்தினர்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
உண்மையில், ஐவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களது பீ அறிக்கையில் பத்திரிகைச் செய்தி பற்றிக் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. சஹ்ரானுடன் தொடர்பு வைத்திருப்பதாகவே குற்றப் பத்திரிகையில் குறிப்பிடப்பட்டது. எனினும் கிட்டத்தட்ட 6 மாதங்கள் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். இவர்களில் சிலர் தமது அரசாங்க உத்தியோகங்களை கூட இழக்க வேண்டி வந்தது. இவர்கள் அனைவரும் தங்கள் சொந்த சமூகங்களிலும் அதற்கு வெளியிலும் கடுமையான விமர்சனங்களையும் இழிவான பார்வைகளையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இந்த பத்திரிகைச் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த செய்தி முதலில் எனக்குப் பெரும் ஏமாற்றத்தைத் தந்தது. என்னைப் போலவே எனது பெரும்பாலான சிங்கள நண்பர்களும் இந்தச் செய்தியால் ஏமாற்றமடைந்து தமது கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்ததை நான் அவதானித்தேன்.
இக் காலப்பகுதியில் முஸ்லிம் இனம், முஸ்லிம் பள்ளிவாசலுக்கு அருகில், முஸ்லிம் கிராமம், முஸ்லிம் சமய நிறுவனங்கள், முஸ்லிம் சமய பாடசாலைகள்…. போன்ற பல வார்த்தைகள் அதிகம் புழக்கத்தில் இருந்தன. இவை சிங்கள மொழி மூல ஒலி, ஒளிபரப்பு ஊடகங்களின் செய்திகளில் அதிகம் பயன்படுத்தப்பட்டன. அதே காலகட்டத்தில், முஸ்லிம் கிராமங்களில் இராணுவத்தினர் முன்னெடுத்த தேடுதல் நடவடிக்கைகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டு பரபரப்பான செய்தியாக்கப்பட்டது. இது முழு முஸ்லிம் சமூகத்தையுமே நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு கடுமையான அச்சுறுத்தல்மிக்கவர்களாக சித்திரித்தது.
தலைப்புச் செய்தி தொடர்பான தேடல்
இக் காலப்பகுதியில், தைரியமிக்க இரண்டு இளம் சுயாதீன ஊடகவியலாளர்களான நிராஷா பியவதனி மற்றும் ஷபீர் முகம்மட் ஆகியோர் குறித்த தலைப்புச் செய்தியைப் பற்றிய ஒரு புலனாய்வுக் கட்டுரையை வெளியிட்டனர். அவர்கள் கண்டறிந்த சில விடயங்களை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.
பத்திரிகையில் குறிப்பிடப்பட்ட ஐவரில் ஒருவருக்கு சொந்தமாக வங்கிக் கணக்கு ஒன்று கூட இல்லை. மற்றொருவர் வீடு கட்டுவதற்காக வங்கியில் கடன் எடுத்து, அதனை தனது மாதச் சம்பளத்திலிருந்து செலுத்தி வருபவர். இது வரை அவரால் வீட்டின் நிர்மாண வேலைகளை முழுமையாக பூர்த்தி செய்ய முடியவில்லை. பாடசாலை ஆசிரியராக கடமையாற்றும் மற்றொரு நபர், விபத்தில் சிக்கியதில் இருந்து, மலம் கழிப்பதற்காக உடைந்த கதிரை ஒன்றையே பயன்படுத்தி வருபவர். கொமட் ஒன்றைக்கூட வாங்குவதற்கு வசதியற்றவராக அவர் இருந்துள்ளார்.
சந்தேக நபர்கள் மே 24 ஆம் திகதி கைது செய்யப்பட்டனர். மே 25 ஆம் திகதி செய்தி வெளிவந்தது. மே 27ஆம் திகதி மஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். தீர்ப்பு வழங்கப்படுவதற்கு முன்னரே, அடிப்படை பொலிஸ் விசாரணைகள் கூட முடிவடைவதற்கு முன்னரே இந்தச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது என்பது இதிலிருந்து தெளிவாகிறது.
இந்த தலைப்புச் செய்தி குறித்த புலனாய்வு அறிக்கையிடலைச் செய்த நிராஷா பியவதனி, சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியுடன் பேசியிருக்கிறார். அதற்கு, தாம் அவ்வாறான தகவல்கள் எதனையும் ஊடகங்களுக்கு வழங்கவில்லை எனவும், பொலிஸாரை மேற்கோள்காட்டி குறித்த பத்திரிகை எவ்வாறு செய்தி வெளியிட்டுள்ளது என்பது தனக்குத் தெரியாது எனவும் பதிலளித்துள்ளார். எனினும், பொலிஸார் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே தான் இந்த செய்தியை எழுதியதாக சம்பந்தப்பட்ட பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். செய்தியை வெளியிட்ட பத்திரிகையின் பிரதம ஆசிரியரிடம் வினவியபோது, இந்தச் செய்தியை உண்மைச் சரிபார்ப்பு செய்ய முடியாது என்று அவர் கூறியிருக்கிறார். ஏன் துல்லியத்தை உறுதிப்படுத்தாமல் தலைப்புச் செய்தியை வெளியிட்டீர்கள் என்ற கேள்விக்கு, பத்திரிகையின் பிரதம ஆசிரியர் அளித்த பதிலை இங்கு நான் கூற விரும்பவில்லை.
சந்தேக நபர்களின் புகைப்படங்கள்
பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டிருந்த சந்தேக நபர்களின் புகைப்படங்களை நான் உற்றுநோக்கினேன். எல்லோரினதும் புகைப்படங்களிலும் ஒரே நிற பின்னணியே இருந்தது. பின்னர்தான், இந்தப் புகைப்படங்கள் பொலிஸ் நிலையத்தில் வைத்து, பொலிசாரினாலேயே எடுக்கப்பட்டுள்ளன என்பது தெரியவந்தது.
விசாரணை ஆரம்பிக்கும் முன்பே, சந்தேக நபர்களின் படங்களை பிரதேச செய்தியாளரிடம் வழங்க பொலிஸ் ஓ.ஐ.சி.க்கு எந்தச் சட்டத்தின் கீழ் அனுமதி அளிக்கப்பட்டது என பொலிசாரிடம் கேட்பதற்கு அந்த சந்தேக நபர்களின் குடும்ப உறுப்பினர்கள் எவருக்கும் தைரியம் இருக்கவில்லை என்பது துரதிஷ்டவசமானது.
இரண்டாவது கதை
இது நடந்தது கொழும்பு தாபரே மாவத்தையில். அது ஒரு வெள்ளிக் கிழமை நண்பகல். நான் ஒரு முச்சக்கர வண்டியில் ஏறி ஜாவத்தை பள்ளிவாசலுக்கு ஜும்ஆ தொழுகைக்காக சென்று கொண்டிருக்கிறேன். அப்போது சில முஸ்லிம் ஆண்களும் சிறார்களும் பள்ளிவாசலை நோக்கி அப் பாதையால் நடந்து சென்று கொண்டிருக்கிறார்கள். அவர்களையும் இந்த வண்டியில் ஏற்றிக் கொண்டு பள்ளிவாசலுக்குச் செல்வோம் என முச்சக்கர வண்டி சாரதியிடம் கூற நினைத்தேன். அதற்கு முன்னரே அவர் வண்டியின் வேகத்தை குறைத்து, “இவர்களால்தான் நாட்டில் நாம் மோசமான நிலைமைகளுக்கு முகங்கொடுக்க வேண்டி வந்துள்ளது” என கடுமையான தொனியில் சப்தமிட்டார். அப்போதுதான் அவர் என்னை ஒரு முஸ்லிம் என அடையாளம் கண்டுகொள்ளவில்லை என்பதை உணர்ந்தேன். “நாம் இந்த தம்பிலாக்களை (முஸ்லிம்களை) எந்த சந்தர்ப்பத்திலும் நம்பக் கூடாது” என்றும் அவர் கூறினார். “ இவர்களை நாம் கொல்ல வேண்டும். இவர்களுக்கு அதிக சுதந்திரத்தைக் கொடுத்தது நம்மவர்களது பிழை” என்றும் அவர் தொடர்ந்து கூறிக் கொண்டிருந்தார். நான் அவரது கருத்துகளுக்கு எந்த பிரதிபலிப்புகளையும் வழங்கவில்லை. முச்சக்கர வண்டி மலலசேகர மாவத்தையை (பள்ளிவாசலுக்கு அண்மித்த பகுதி) தாண்டும்போது மேலும் சில முஸ்லிம்கள் தமது கார்களில் பள்ளிவாசலை நோக்கிச் செல்வதை கண்டோம். அப்போதும் அந்த சாரதி தனது கோபத்தை வெளிப்படுத்தினார். “பாருங்கள். அவர்கள் எவ்வாறு போகிறார்கள் என. இன்னும் சில நாட்களில் அவர்கள் நமது நாட்டை நிச்சயம் கைப்பற்றி விடுவார்கள். இதைத்தான் அவர்கள் பள்ளிவாசல்களில் போதிக்கிறார்கள்”
இன்னும் சிறிது நேரத்தில் சிறு பிள்ளைகளுடன் நடந்து செல்லும் மேலும் சில முஸ்லிம்களைக் கண்டோம். “இவர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ்.காரர்கள்” என்றார் அவர்.
அந்த இடத்தில் நான் மிகவும் சங்கடமாக இருப்பதை உணர்ந்தேன். அதற்குக் காரணம் அவர் என்னிடம் கூறிய விடயங்கள் அல்ல. மாறாக நானும் ஒரு முஸ்லிம் என்பதை அவர் தெரிந்து கொண்டால் என்ன நடக்கும் என்ற அச்சமே. எனவே பள்ளிவாசல் பகுதியை அடையும் முன்னர் முச்சக்கர வண்டியிலிருந்து இறங்கி விடத் தீர்மானித்து அவ்வாறே செய்தேன். பள்ளியில் தொழுதுவிட்டு வெளியில் வந்தேன். வெள்ளிக்கிழமைகளில் காணப்படும் வழக்கமான கூட்டம் அங்கிருந்தது. அவர்கள் மத்தியில் இருந்து ‘சேர்’ என அழைத்தவாறே யாரோ எனது கையைப் பற்றிப் பிடிப்பதை உணர்ந்தேன். அவர் வேறு யாருமல்ல. அதே முச்சக்கர வண்டி சாரதிதான்.
அவர் என்ன சொல்லியிருப்பார் என நினைக்கிறீர்கள்?
“ நீங்கள் முச்சக்கர வண்டியில் இருந்து திடீரென இறங்கியதும் நான் ஏதோ தவறு நடந்துவிட்டதாக உணர்ந்தேன். எனது மனம் சங்கடப்பட்டது. சேர், நீங்களும் முஸ்லிமாக இருக்கலாம் என நான் உணர்ந்தேன். உடனடியாக உங்களை பின்தொடரத் தொடங்கினேன். நான் நினைத்தது சரிதான். நீங்கள் பள்ளிவாசலை நோக்கிச் செல்வதைக் கண்டேன். நான் நடந்து கொண்ட விதம் பற்றி கடுமையாக கவலைப்படுகிறேன். அதற்காக உங்களிடம் மன்னிப்புக் கோருகிறேன்” என்றார்.
நான் அவரது முகத்தைப் பார்த்தேன். மீண்டும் அவர் “மன்னித்துவிடுங்கள் சேர்” என்றார்.
இப்போது நான் ஐந்து கேள்விகளை இங்கு முன்வைக்கிறேன்.
1. ஊடகவியலாளர்கள் மற்றும் முச்சக்கர வண்டி சாரதியின் நடத்தைகளின் அடிப்படையில் இது ஒரு சில தனி நபர்களின் பிரச்சினை என்று கருத முடியுமா?
2. சிங்கள பத்திரிகை ஆசிரியர், பிரதேச செய்தியாளர், மற்றும் பொலிஸ் ஓ.ஐ.சி. ஆகியோரின் நடத்தையை அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் பெரும்பான்மை சமூகத்திற்கு பொதுமைப்படுத்த முடியுமா?
3. மக்கள் ஒருவருக்கொருவர், குறிப்பிடத்தக்க வழியில், அவர்களின் மதத்தின் காரணமாக எதிர்வினையாற்றுகிறார்கள் என்று கருதுவது நியாயமா?
4. வெறுப்புப் பேச்சை ஊக்குவிக்கும் முஸ்லிம்கள் மற்றும் சிங்களவர்கள் அனைவரும் இனவாதிகள் என்று கருதுவது நியாயமா?
5. அப்படியானால், இந்த எல்லா பிரச்சினைகளுக்கும் மூல காரணம் என்ன?
எனது பார்வையில், பொறிமுறைமைதான் (System) கேள்விக்குட்படுத்தப்பட வேண்டியதாகும்.
முஸ்லிம்களும் சிங்கள சமூகமும் கண்ணுக்குத் தெரியாத அரசியல் வேலைத்திட்டம் ஒன்றுக்கு பலியாகிவிட்டனர். இது தமது சொந்தப் பிழைப்புக்காக வெவ்வேறு சமூகங்கள் மத்தியில் பாகுபாடு, வெறுப்பு, சந்தேகம், தவறான புரிதல் மற்றும் சகிப்புத்தன்மை என்பவற்றை தோற்றுவிக்கும் ஒரு திட்டமாகும். இந்த அரசியல் திட்டத்திற்குள் ஊடகங்களுக்கு அதிக சுதந்திரம் இல்லை. உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு முஸ்லிம்களுக்கு எதிரான கதையின் புதிய வடிவம் தேவைப்பட்டதும் அதே அரசியல் திட்டத்திற்கேயாகும்.
முஸ்லிம்களுக்கு எதிரான உணர்வுகளை ஆதரிக்கும் பெரும்பாலான சிங்கள ஊடகவியலாளர்கள் மற்றும் இளைஞர்கள் அதே அடக்குமுறை மற்றும் பாரபட்சமான அரசியல் திட்டத்தால் பாதிக்கப்பட்டவர்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இனவாதம் மற்றும் வெறுப்பு பேச்சு அவர்களின் சொந்த தெரிவு அல்ல.
முஸ்லிம்களுக்கு எதிரான கதைகள்
பெரும்பாலான ஊடகங்கள், “முஸ்லிம்கள் பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்த முயல்கிறார்கள், முஸ்லிம்களின் சனத்தொகைப் பெருக்கம் சிங்களவர்களை அச்சுறுத்துகிறது” என்று ஒரு கதையை பிரசாரப்படுத்தின. முஸ்லிம் உணவகங்கள் சிங்கள வாடிக்கையாளர்களுக்கு உணவுகளில் விஷம் கலந்ததாக, குறிப்பாக கருத்தடை மாத்திரைகளை கலந்ததாக குற்றம்சாட்டப்பட்டது. முஸ்லிம்களுக்குச் சொந்தமான வணிக வளாகங்கள் சிங்களப் பெண்களின் கருவுறுதலைப் பாதிக்கும் பொருட்களைக் கொண்ட ஆடைகளை விற்பனை செய்வதாகக் கூறப்பட்டது.
இலங்கையில் முஸ்லிம்களுக்கு அதிகமான சுதந்திரம் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. இஸ்லாம் பெண்களை ஒடுக்குகிறது என்பதை நிறுவ பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டன. இஸ்லாம் தீவிரவாதத்தை, வன்முறையை ஊக்குவிக்கிறது என்றும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு எதிராக வெறுப்பை தூண்டுகிறது என்றும் பிரசாரம் செய்யப்பட்டது. முஸ்லிம்கள் எப்போதும் குற்றவியல் வன்முறைகள் மற்றும் பயங்கரவாதத்துடன் தொடர்புடையவர்கள். வேறு எந்த சமூகத்திலும் இதே போன்ற நிகழ்வுகள் நடந்தால், அது இயல்பான விடயமாக மட்டுமல்ல, சாதாரண நிகழ்வாகவும் பார்க்கப்படுகிறது.
என்ன விளைவுகள்?
முஸ்லிம்களுக்கு எதிரான பிரசாரங்கள், போலிச் செய்திகள், முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சுகள் இயல்பாக்கப்பட்டுள்ளன. முஸ்லிம்கள் தங்கள் குரல் கேட்கப்படவில்லை, பிரதிநிதித்துவப்படுத்தப்படவில்லை அல்லது ஊடகங்களில் போதுமான அளவு உள்வாங்கப்படவில்லை என்று சிந்திக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். இரு சமூகங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான இளம் சந்ததியினர் தம்மிடையே அவநம்பிக்கை, தவறான புரிதலை வளர்த்து, நம்பிக்கையிழந்துள்ளனர். பெரும் எண்ணிக்கையிலான முஸ்லிம் இளைஞர்கள் காயங்கள் மற்றும் அழிவுகளின் நினைவை சுமந்து வருகின்றனர். சமூக வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் ‘இனத்துவ அகங்காரம்’ முக்கிய காரணியாக மாறியுள்ளது. மிதமான குரல்கள் அடக்கப்பட்டன. நீங்கள் முஸ்லிம்களுக்கு எதிராக ஒரு தேநீர் கடையை தொடங்கினால் அங்கு அதிகம் வியாபாரம் நடக்கும் எனக் கூறுமளவுக்கு முஸ்லிம்களுக்கு எதிரான உணர்வு இளைஞர்களின் மனதில் ஆழமாக வேரூன்றியுள்ளது. ஆனால் இவை எதுவும் இயற்கையாகவோ அல்லது தனிநபர்களின் விருப்பத்திலோ நடக்கவில்லை என்பதையே இங்கு நான் சுட்டிக்காட்ட விரும்பினேன்.
இவை அனைத்தும் ஏதோ ஒரு பொறிமுறையின் கீழ் திட்டமிடப்பட்டு நடக்கின்றன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
முஸ்லிம் சமூகத்தில் நிலவும் போதாமை
இவ்வாறு கூறும்போது, ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் தீவிரவாத சிந்தனைகளை எதிர்க்கும் திறன் கொண்ட, தர்க்கரீதியான மனோநிலையை உருவாக்கத் தவறிவிட்டதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இஸ்லாம் எவ்வாறு அமைதி மற்றும் நல்லிணக்கத்தைப் போதிக்கிறது என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை, ஆனால் இஸ்லாத்தின் போதனைகள் பல்வேறு மட்டங்களில் எவ்வாறு கற்பிக்கப்படுகிறது என்பதில்தான் கடுமையான சிக்கல் உள்ளது. முஸ்லிம்களின் சமய மற்றும் சிவில் நிறுவனங்கள் இளம் தலைமுறையை அவர்கள் வாழும் அரசியல் முறைமையின் வட்டத்துக்கு அப்பால் (beyond bubble) சிந்திக்கவும் செயல்படவும் வலுவூட்டத் தவறிவிட்டன.
முஸ்லிம்களுக்கான பிரத்தியேக ஊடகம்
மீடியா போரம் முஸ்லிம்களுக்கென தனியான ஊடகம் ஒன்றுக்காக பரப்புரை செய்து வருவதை நான் அறிவேன். ஆனால், இவ்வாறான ஒரு ஊடகத்திற்கான எந்த எழுத்து வடிவிலான மூலோபாயத் திட்டத்தையும் நான் இதுவரை கண்டதில்லை. இலங்கையில் வளர்ந்து வரும் ஊடக வெளி மற்றும் சுற்றுச்சூழலின் தன்மையை ஆழமாக ஆய்வு செய்தவன் என்ற வகையில், மத அடையாளத்துடன் கூடிய இத்தகைய ஊடகங்களால் தற்போதுள்ள அனைத்து பிரச்சினைகளையும் சரி செய்ய முடியாது என்பது எனது தனிப்பட்ட கருத்தாகும்.
சிறுபான்மையினரின் குரலை வலுப்படுத்தவும், நேர்மறையான கதையாடலை உருவாக்கவும் (positive narrative)அனைத்து வகையான தீவிர வெளிப்பாடுகளையும் எதிர்க்கவும் மற்றும் அவர்களின் ஜனநாயக நலன்களைப் பாதுகாக்கவும் ஊடகங்கள் ஒரு சக்திவாய்ந்த கருவியாக இருந்தாலும், தனியான ஊடகத்திற்கான முஸ்லிம் மீடியா போரத்தின் முன்னெடுப்புகளில் எனக்கு நம்பிக்கை இல்லை.
தனியான இன- மத அடையாளத்துடன் கூடிய பிரத்தியேக ஊடகத்தினால் கருத்து வேறுபாடுகள் கொண்ட மக்களை இணைக்க முடியாது என நான் அஞ்சுவதே இதற்குக் காரணமாகும்.
எவ்வாறாயினும், மீடியா போரம் தமது கோரிக்கையில் இன்னும் உறுதியாக இருந்தால், சிங்கள ஊடகங்களில் முஸ்லிம்களை மோசமாக சித்தரிப்பதில் உள்ள சிக்கல் தன்மை, சமூக யதார்த்தம் மற்றும் அரசியல் என்பவற்றை புரிந்து கொள்வது முக்கியமாகும்.
நான் முன்னர் விபரித்தபடி முஸ்லிம் மக்களும் முஸ்லிம் அரசியலும் கண்ணுக்குப் புரியாக ஒரு பொறியின் கீழ் இருப்பதையும் உணர்ந்து கொள்ள வேண்டும். முஸ்லிம்கள் பற்றிய சிங்கள ஊடகங்களின் பதிவு இயல்பாக இடம்பெறும் ஒன்றல்ல. அத்தோடு, குறிப்பிட்ட சிங்கள ஊடகவியலாளர்களின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளால் மாத்திரம் இடம்பெறுவதும் அல்ல. இவை யாவும் அந்த சமூகப் பொறியின் பல்வேறு பிரதிபலிப்புகளில் ஒன்றாகும்.
துருவப்படுத்தல்
நாம் ஏற்கனவே ஒரு துருவப்படுத்தப்பட்ட சமூகத்தில் வாழ்கிறோம் என்பதை புரிந்து கொள்ள மறந்துவிடக் கூடாது.
இலங்கையில் பெரும்பாலான தனிநபர்கள் ஒரு வட்டத்திற்குள் (bubble) நின்றே வளர்க்கப்படுகிறார்கள். நாம் ஒருவரையொருவர் அறிந்திருக்கிறோம். ஆனால் நாம் ஒருவரையொருவர் புரிந்து கொள்ளவில்லை. கிராமப்புறங்களில் வளரும் ஒவ்வொரு முஸ்லிம் பிள்ளையும், நகரங்களில் உள்ள பல பிள்ளைகளும் தாழ்வு மனப்பான்மையுடனும் பாதிக்கப்பட்டவர்கள் என்ற மனோ நிலையுடனுமே பிரதான நீரோட்டத்துடன் தொடர்பற்றவர்களாகவுமே வளர்க்கப்படுகின்றனர்.
நமது கல்வி முறை நல்ல பௌத்தர்கள், நல்ல முஸ்லிம்கள், நல்ல இந்துக்கள் மற்றும் நல்ல கிறிஸ்தவர்களை உருவாக்கி வருகிறது, ஆனால் நல்ல இலங்கையர்களை உருவாக்க தவறிவிட்டது. நான்கு வருடங்களுக்கு ஒரே பல்கலைக்கழகத்தில் படிக்கும், ஒரே விடுதிகளில் தங்கியிருக்கும் பட்டதாரிகளும் கூட, ஒருவரையொருவர் புரிந்து கொள்ளாமல் – பெரும்பான்மையானவர்கள் தங்கள் வட்டத்திற்குள் (bubble) சௌகரியமாக இருக்கிறார்கள்.
45 சிங்கள மற்றும் இந்து மாணவர்களிடம் நான் அண்மையில் மூன்று கேள்விகளை கேட்டேன். முஹம்மது நபி (ஸல்) அவர்களின் தந்தையின் பெயர் என்ன? என்ற கேள்விக்கு அவர்கள் தெரியாது என பதிலளித்தனர். ஆனால் அவர்கள் அனைவரும் தாம் தமது முஸ்லிம் நண்பர்கள் மூலமாக `வட்டிலப்பம்` சாப்பிட்டுள்ளதாக கூறினார்கள்.
அல்குர்ஆனிலிருந்து ஒரு போதனையை மேற்கோள் காட்ட முடியுமா என்று கேட்டேன். எல்லாரும் தங்களுக்குத் தெரியாது என்றார்கள். ஆனால் அவர்களில் பெரும்பாலோர் நோன்புக் கஞ்சி குடித்துள்ளதாகக் கூறினர். ஹஜ் பண்டிகை பற்றி ஒரு விடயம் சொல்ல முடியுமா என்று கேட்டேன்.
அவர்களில் பெரும்பாலோர் ரமழானுக்குப் பிறகு கொண்டாடப்படுவது என்று கூறினர். தங்களுக்கு பல இஸ்லாமிய நண்பர்கள் இருப்பதாக அவர்களில் பெரும்பாலானோர் கூறினர். இதே கேள்விகளை நீங்கள் முஸ்லிம் மாணவர்களிடமும் கேட்டால் அதே பதிலையே கூறுவார்கள் என நான் உறுதிபடக் கூறுவேன்.
முஸ்லிம்களுக்கு எதிரான உணர்வுகளை ஆதரிக்கும் பெரும்பாலான சிங்கள ஊடகவியலாளர்கள் மற்றும் இளைஞர்கள் அதே அடக்குமுறை மற்றும் பாரபட்சமான அரசியல் திட்டத்தால் பாதிக்கப்பட்டவர்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இனவாதம் மற்றும் வெறுப்பு பேச்சு அவர்களின் சொந்த தெரிவு அல்ல. தனிப்பட்டவர்களுக்கு அப்பால் சென்று, இந்த பொறிமுறைமையையே நாம் எதிர்க்க வேண்டும்.
ஊடகப் பரப்பு
இலங்கையில் வளர்ந்து வரும் செய்தி ஊடக மற்றும் தகவல் சூழலைப் புரிந்துகொள்வது மீடியா போரத்திற்கு மிகவும் முக்கியமானதாகும். ஜேர்மனியைச் சேர்ந்த ரிப்போட்டர்ஸ் விதௌட் போடர்ஸ் எனும் அமைப்புடன் இணைந்து ‘வெரிடே ரிசர்ச்’நிறுவனம் நடாத்திய ஆய்வில், இலங்கையில் ஊடகங்களின் உரிமை என்பது மிகச் சிலரின் கைகளிலேயே உள்ளது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களின் பங்குகளில் 75 வீதத்திற்கும் அதிகமானவை ஐந்துக்கும் குறைவான நபர்களாலேயே கட்டுப்படுத்தப்படுகின்றன. இதே ஆய்வு, இலங்கையில் ஊடகங்கள் அதிகாரத்திலும் வர்த்தகத் துறையிலும் உள்ளவர்களின் ஆதிக்கத்திலேயே உள்ளன என்ற உண்மையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. இந்த யதார்த்தம் இலங்கைக்கு மாத்திரம் உரியதல்ல.
அதேபோன்று அரச ஒலி, ஒளிபரப்பு ஊடகங்கள் அதிகாரத்திலுள்ள அரசாங்கங்களின் அதிக செல்வாக்குக்கு உட்படுகின்றன. இங்கு நான் ஆட்சிக்கு வரும் எல்லா அரசாங்கங்களையுமே குறிப்பிடுகிறேன்.
இது தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட மேலும் இரு ஆய்வுகள் பற்றியும் குறிப்பிட விரும்புகிறேன். ஒன்று, நாலக குணவர்தனவால் எழுதப்பட்ட பொது மக்களின் நம்பிக்கையை மீளக்கட்டியெழுப்புதல் எனும் தலைப்பிலானது. அடுத்தது ஐரெக்ஸ் நிறுவனத்தினால் வெளியிடப்பட்ட ஊடக நிலைபேறு சுட்டி. இந்த இரு ஆய்வுகளும் இலங்கையிலுள்ள ஊடகங்கள் சுயமாக தமது இருப்பை உறுதி செய்யவும் சுயாதீனமான நிறுவனங்களாக தம்மைக் கட்டியெழுப்பவும் முடியாதுள்ளதை கண்டறிந்துள்ளன. இப் பின்னணியில், தனியான ஊடகம் தேவை என குரல் கொடுக்கும் மீடியா போரமோ அல்லது ஏனைய ஊடக நிறுவனங்களோ இந்த சிக்கலான சந்தையில் நிலைத்துநிற்பதற்கான சாத்தியமான திட்டங்களைக் கொண்டிருக்கின்றனரா என்பது எனக்கு உறுதியாகத் தெரியவில்லை.
ஊடக சுதந்திரம் காலாவதியாகிவிட்டது
ஊடகம் என்றால் என்ன என்பதே கேள்விக்குறியாகியுள்ள இன்றைய சூழலில் நாம் ஊடக சுதந்திரம் பற்றிப் பேச வேண்டியுள்ளது.
அவுஸ்திரேலியாவில் வசிக்கும் ஊடக நிபுணர் கலாநிதி காலிங்க செனவிரத்ன எழுதிய “ உண்மைக்குப் பின்னரான கால கட்டத்தில் ஊடக சுதந்திரம் மற்றும் தவறான தகவல்களின் கற்பிதம்” எனும் தலைப்பிலான ஆங்கில நூலில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு விடயத்தை இங்கு மேற்கோள்காட்ட விரும்புகிறேன். அரசாங்கத்தின் கைகளுக்குள் சிக்கியுள்ள ஊடகம் மக்களுக்கு சேவை செய்கின்ற அல்லது மக்களது பிரச்சினைகளுக்காக குரல் கொடுக்கின்ற சக்தியை இழந்துவிட்டது என அவர் குறிப்பிடுகிறார். இது நீண்ட உரையாடலை வேண்டி நிற்கும் ஒரு விடயம் என்கின்ற போதிலும், தேர்தல்கள், இன முரண்பாடுகள் போன்ற சந்தர்ப்பங்களில் ஊடகங்கள் எவ்வாறு நடந்து கொண்டன என்பதை நாம் நன்கு அறிவோம்.
அதேபோன்று எமது ஊடகங்களில் கட்டமைக்கப்படும்“உண்மை” என்பதும் பிரச்சினைக்குரிய யதார்த்தமாக மாறியுள்ளது. டாக்டர் ஷாபி விடயத்தில் எவ்வாறு ஊடகங்கள் நீதிபதிகளாகவும் நடுவர்களாகவும் செயற்பட்டு சோடிக்கப்பட்ட கதைகளை உருவாக்கின என்பதை நாம் அறிவோம்.
ஒரு கட்டத்தில் சஹ்ரானுக்கு அரசாங்கம் சம்பளம் வழங்கியதாக அரச தரப்பு எம்.பி.க்களை மேற்கோள்காட்டி ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இந்த விவகாரம் பாராளுமன்றத்திலும் விரிவாக பேசப்பட்டது. சமூக ஊடகங்களிலும் இது பற்றி அதிகம் விவாதிக்கப்பட்டது. பின்னர் அதே ஊடகங்கள் இந்தக் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என இலகுவாகக் கூறின. இவ்வாறு ஊடக பரப்புரை மற்றும் பிழையான தகவல்கள் என்பன இன்று ‘சுதந்திர ஊடகத்துக்கு’ பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளன.
தனியான ஊடகம் தேவை என குரல் கொடுக்கும் மீடியா போரமோ அல்லது ஏனையவர்களோ இவ்வாறான ஒரு சிக்கல் மிகுந்த சந்தையில் சுயாதீனமாக, சுதந்திரமாக மற்றும் நியாயமாக இருப்பதற்கான மூலோபாயத் திட்டம் மற்றும் நிதிக் கொள்திறனைக் கொண்டிருக்கிறார்களா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
ஏன் டிஜிட்டல் ஊடங்கள் தெரிவாக வரமுடியாது?
டிஜிட்டல் மீடியா தொழில்நுட்பம், ஊடக ஒருங்கிணைப்பு, சமூக ஊடகங்கள் மற்றும் ஸ்மார்ட்போனின் அதிகப்படியான பயன்பாடு ஆகியவை ஊடகங்கள் பாரம்பரியமாக இயங்கும் விதத்தை மாற்றியுள்ளது என்ற உண்மையையும் முஸ்லிம் மீடியா போரம் கருத்திற் கொள்ள வேண்டும்.தற்போது, ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் ஒவ்வொரு குடிமகனும் ஊடக நிறுவனமாக மாறிவிட்டனர். ஊடக நெறிமுறைகள் பாரியளவில் சவாலுக்குட்படுத்தப்பட்டுள்ளன. இருப்பினும், முஸ்லிம் மீடியா போரத்தின் பரப்புரைகள் டிஜிட்டல் தளங்களை நோக்கி முன்வைக்கப்படவில்லை.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவை விவகாரம்
இன்றைய நாட்களில் அதிகம் பேசப்படுவது, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவை பற்றியாகும். அது ஒரு பல்லின சமூகத்தில் தமது உரிமைகளையும் பிரதிநிதித்துவத்தையும் தக்கவைத்துக் கொண்டு, தர்க்க ரீதியாக சிந்தனை செய்து வாழக்கூடிய முஸ்லிம் ஆளுமைகளை உருவாக்கத் தவறியுள்ளது. ஒரு கட்டத்தில் முஸ்லிம் சேவை, மற்றுமொரு சமய கல்விக் கூடமாகவும் மாறியுள்ளது.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் 5 வேளையும் அதானை ஒலிபரப்ப வேண்டும் என எந்தவொரு முஸ்லிமும் கோரிக்கைவிடுக்கவில்லை. இது ஒரு அரசியல் செயற்திட்டமாகும். ஆயிரக் கணக்கான முஸ்லிம்கள் இதனால் மகிழ்ச்சியடையலாம். அரசாங்க வானொலியில் அதானை ஒலிபரப்பும் ஒரே நாடு இலங்கைதான் என்று அவர்கள் இதன் மூலம் பெருமைப்பட்டுக் கொள்ளலாம். இன்று இது முஸ்லிம்களின் உரிமையாக கூட காட்சிப்படுத்தப்படுகிறது.
ஆனால், அதான் ஒலிபரப்பாகும் நேரம் வந்தவுடன், ஏனைய சமயங்களது நிகழ்ச்சிகள் இடைநிறுத்தப்படுகின்ற சந்தர்ப்பங்கள் பற்றி என்னால் அறிய முடிகிறது. இந்த நாட்டிலுள்ள எல்லா பிரஜைகளுக்குமான செய்தி ஒலிபரப்பாகும்போது கூட, அதான் ஒலிக்கும் நேரம் வந்தால் செய்தி இடைநிறுத்தப்படுகிறது. வெறும் பணத்துக்காக சினிமா பாடல்களுக்கு முன்னும் பின்னும் தொழுகைக்காக அழைக்கும் அதான் பயன்படுத்தப்படுகிறது.
இருப்பினும் ஏனைய சமயங்களுக்கு மதிப்பளிக்காத வகையில், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் அதான் ஒலிபரப்பப்படுவதானது நியாயமானதல்ல. ஒரு பல்லின, பல கலாசாரங்களைக் கொண்ட சமூகத்தில் ஒவ்வொரு சமயமும் கலாசாரமும் அவற்றின் அரசியல் அதிகாரரங்களுக்கு அப்பால் சமமாக நடாத்தப்பட வேண்டியது அவசியமாகும்.
நான் சில மாதங்களுக்கு முன்னர் முஸ்லிம் சேவை நிகழ்ச்சிகளை பகுப்பாய்வு செய்தேன். அதில் காலை வேளையில் ஒலிபரப்பப்படும் 95 வீதமான நிகழ்ச்சிகள் அனுசரணை செய்யப்பட்டவை. 80 வீதமானவை குறைந்த தயாரிப்பு தரம் கொண்ட, முழுக்க முழுக்க சமய நிகழ்ச்சிகளே. உயர்ந்த தரம் கொண்ட இஸ்லாமிய இசை, நாடகம், இலக்கியம், வரலாறு, கலாசாரம் மற்றும் பன்மைத்துவம் என்பன பணத்துக்காக இங்கு குறைமதிப்பிற்கு உட்படுத்தப்படுகின்றன.
கடந்த வருடம் ரமழானின் போது 47 நிமிடங்களுக்கு விளம்பரங்கள் ஒலிபரப்பப்பட்டதை நான் கவனித்தேன். – இது ஒலிபரப்பு நேரத்தைச் சுரண்டுவது இல்லையா? இரண்டரை மணி நேரங்கள் கொண்ட காலை நிகழ்ச்சியில் 30 நிமிடங்கள் நேரச் சரிபார்ப்பு விளம்பரங்களே ஒலிபரப்பப்படுகின்றன.
முஸ்லிம் சேவை ரமழான் மற்றும் பிற காலங்களில் மில்லியன் கணக்கான ரூபாய்களை சம்பாதிக்கிறது. ஆனால் நாடக கலைஞர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் ஒரு நாடகத்திற்கு தலா 1000 ரூபா வீதம் கொடுப்பனவு வழங்குவதற்குக் கூட நிர்வாகம் தயக்கம் காட்டுவது துரதிஷ்டவசமானது. ஆனால் எந்தவித வருமானத்தையும் ஈட்டித்தராத பிரிவுகள் அவற்றின் நாடகங்களுக்காக போதுமான கொடுப்பனவைப் பெற்றுக் கொள்கின்றன.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், அதன் நிலைபேறுக்காக பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன், ஆனால் அது ஏன் நிகழ்ச்சிகளின் தரத்தை மேம்படுத்தி விளம்பரக் கட்டணங்களை அதிகரிக்கக் கூடாது? இதனூடாக ஏன் தேவையான பணத்தை பெற முயற்சிக்கக் கூடாது?
முஸ்லிம் சேவை குறித்து ஆராய்வதற்காக இரண்டு குழுக்கள் நியமிக்கப்பட்டன. இந்தக் குழுக்களில் நியமிக்கப்பட்ட தனி நபர்களைப் பற்றி விமர்சிக்க நான் விரும்பவில்லை. அது எனது நோக்கமும் அல்ல. ஆனால், இக் குழுக்கள் அரச ஒலிபரப்பில் முஸ்லிம் சேவையின் தரத்தை அதிகரிக்கவும் அதன் தனித்துவத்தைப் பேணிக்கொள்ளவும் உதவக் கூடியவை என நான் நம்பவில்லை.
முடிவுரை
ஒலிபரப்பு ஊடகங்களின் அதிக புகழ் மற்றும் செல்வாக்கைக் கருத்தில் கொண்டு, ஊடகங்களை இனிமேலும் நல்லிணக்கத்துக்கு குந்தகம் விளைவிக்க பயன்படுத்தக்கூடாது என்பதை உறுதிப்படுத்துவது முக்கியம்.
இன-மத அடிப்படையிலான ஊடகங்களைக் கோருவது தொடர்பில் முஸ்லிம் மீடியா போரம் தனது மூலோபாயத் திட்டங்களை மீள்பரிசீலனை செய்ய வேண்டும். தனிமைப்படுவதிலும் அந்நியமாதலிலும் ஒருபோதும் தீர்வு கிடைக்கப் போவதில்லை.
தேசிய ஒற்றுமையை பலப்படுத்தும் வகையில் சக ஊடகவியலாளர்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டியது முஸ்லிம் ஊடகவியலாளர்களின் கடப்பாடாகும். இதன் மூலமே இன ஒற்றுமைக்கு பாதிப்பாக அமையக்கூடிய விடயங்களை தைரியத்துடனும் சட்ட ரீதியாகவும் தொழில்முறை ரீதியாகவும் எதிர்கொள்ளக் கூடியதாக இருக்கும். அத்துடன் இலங்கையின் பன்மைத்துவ சமூகத்தினுள் முஸ்லிம்களையும் சரிசமமாக நடாத்த வேண்டியதன் அவசியத்தை சக ஊடகவியலாளர்கள் விளங்கிக் கொள்வதற்கு உதவ வேண்டியதும் முஸ்லிம் ஊடகவியலாளர்களது கடப்பாடாகும். அத்துடன் தமது சுய அடையாளத்தைப் பாதுகாத்துக் கொண்டு தேசிய நலனுக்காக பணியாற்றுவதற்காக தம்மை மீளக் கட்டமைத்துக் கொள்வதும் முஸ்லிம் ஊடகவியலாளர்களைப் பொறுத்தவரை காலத்தின் தேவையாகும்.
இந்த டிஜிட்டல் யுகத்தில், செலவு குறைந்த, வினைத்திறன்மிக்க, இலகுவாக கையாளக் கூடிய டிஜிட்டல் ஊடகத்தை சாத்தியமாக்குவது பற்றி முஸ்லிம் மீடியா போரம் சிந்திக்க முடியும். இருப்பினும், அது தனியானதொரு ஊடகத்தை உருவாக்குவது என்பதை விடுத்து, தேசத்தினதும் அனைத்து மக்களதும் நலன்களுக்காக பணியாற்றுகின்ற, உலகளாவிய ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஊடக நெறிமுறைகளைப் பின்பற்றுகின்ற தொழில்சார் முஸ்லிம் ஊடகவியலாளர்களை உருவாக்குவதாக அமைய வேண்டும். எனது பார்வையில், இன்னுமொரு பாரம்பரிய இன-, மத பின்னணி கொண்ட ஊடகம் ஒன்றில் முதலிடுவதை விட இதுவே மிகவும் அவசியமானதாகும்.
வழக்கமான நிகழ்வுகள், பாராட்டு வைபவங்கள், ரமழான் பெருநாட்கள், பள்ளிவாசல் திறப்பு நிகழ்வுகள் என்பன சில வேளைகளில் பெரிய தாக்கங்களை ஏற்படுத்தக் கூடிய சிறிய நகர்வுகளாக இருக்கலாம். எனினும் கலாசாரங்களை அறிந்து கொள்கின்ற, பரிமாறிக் கொள்கின்ற, ஒருவரோடொருவர் ஈடுபாட்டுடன் செயற்படக் கூடிய நிலைபேறான தாக்கங்களை ஏற்படுத்தக் கூடிய பாரிய நகர்வுகளே இங்கு அவசியமாகும்.
இறுதியாக, இலங்கை முஸ்லிம்களின் இதயமாக விளங்குகின்ற இலங்கை வானொலி முஸ்லிம் சேவையை, முஸ்லிம் புத்திஜீவிகளின் பங்களிப்புடன் மறுசீரமைப்பது காலத்தின் தேவை என்பதை வலியுறுத்த விரும்புகிறேன்.
-Vidivelli