எஸ்.என்.எம்.சுஹைல்
“தில்ஷானுக்கு பல இடங்களில் பெண் பார்த்தோம். நீண்ட காலமாக திருமணம் சரி வரவில்லை. அண்மையில் கொழும்பை அண்டிய புற நகரொன்றில் பெண் பார்த்திருந்தோம். அது அவருக்குப் பிடித்துப் போயிருந்தது. ஞாயிற்றுக்கிழமை அவரது திருமணத்திற்காக மணப்பெண்ணைப் பார்க்க செல்லவிருந்தோம். அதற்குள் அவரின் உயிர் அநியாயமாக பறிக்கப்பட்டுவிட்டது” என்று ததும்பிய குரலுடன் பேசினார் துவான் ஹாஜி சல்டீன் தாஜுதீன்.
கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிறிமுது உயன தொடர்மாடி குடியிருப்பின் D கட்டடத்தொகுதியின் 4 ஆம் மாடியில் வசிப்பவர் சல்டீன் தாஜுதீன். இரு பெண் பிள்ளைகளுடன் ஒரேயொரு ஆண் பிள்ளையுட்பட மூன்று பிள்ளைகளின் தந்தையான இவர் அண்மைக்காலமாக மாரடைப்பு நோய்க்கு ஆளாகியிருந்தார். இந்நிலையில் ஒரு வாரமாக வைத்தியசாலையில் சிகிச்சை தங்கி சிகிச்சை பெற்றபோது ஏகப் புதல்வர் சிராஜ் என அழைக்கப்படும் துவான் தில்ஷான் தாஜுதீன் தன் அலுவலகத்திலும் விடுமுறை பெற்று தந்தையை கவனித்திருக்கிறார்.
“மிகவும் நல்ல முறையில் தந்தையை அருகிலிருந்து கவனித்துக்கொள்ளும் பிள்ளையை பெற்றிருக்கிறீர். இது பெரும் பாக்கியம்” என்று வைத்தியர்கள் தன்னிடம் குறிப்பிட்டதாகவும் இன்று அவனை இழந்துவிட்டு தவிக்கிறேன் என்றும் கூறி கண் கலங்குகிறார் தந்தை சல்டீன் தாஜுதீன்.
29 வயதான இளைஞன் துவான் தில்ஷான் தாஜுதீன் 1992 ஆம் ஆண்டு பிறந்தார். கொழும்பு சாஹிரா கல்லூரியில் கல்வி பயின்ற அவர், இரண்டரை வருடங்கள் மலேஷியாவிலும் சில காலம் மதீனாவிலும் தொழில் செய்தார். பின்னர் நாடு திரும்பிய அவர், சீமெக் நிறுவனத்தில் பணியாற்றினார்.
அன்று மார்ச் 20 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை. மதிய போசனத்தை தனது மூத்த சகோதரியின் வீட்டில் எடுத்துக்கொண்ட துவான் தில்ஷான் தாஜுதீன், மாலை 5 மணிக்குப் பிறகும் வீட்டுக்கு வந்திருக்கிறார்.விடுமுறை நாள் என்றபடியால் மாலையில் வீட்டில் பொழுதை கழித்த அவர், இரவு 7 மணிக்கு பிறகு கடைக்கு சென்று வருவதாக சென்றுள்ளார்.
8.30 அளவில் மூத்த சகோதரி ரினோஷா தாஜுதீனின் கையடக்கத் தொலைபேசிக்கு தில்ஷானின் கையடக்க தொலைபேசியில் இலிருந்து அழைப்பு வருகிறது. “தில்ஷான் விபத்தில் சிக்கியிருக்கிறார்” என்று மறுமுனையில் சொல்லப்பட்டது. அவர் தனது தங்கை பெரோஸா தாஜுதீனுக்கு அழைப்பை எடுத்து தம்பியை பற்றி விசாரிக்க, தில்ஷான் கடைக்கு சென்றதாவும் தனது கணவர் வீட்டுக்கு வரும்போது கண்டதாகவும் கூறி விடயத்தை நம்ப அவர்களது மனம் இடம்கொடுக்கவில்லை. மீண்டும் அழைப்பெடுத்தவர் தனது தொலைபேசியிலிருந்து தொடர்புகொண்டு விடயத்தை தெளிவுபடுத்தியிருக்கிறார்.
பெரோஸா தாஜுதீன் தனது கணவருடன் உறவினர் ஒருவரின் காரில் நிட்டம்புவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹொரகொல்ல பகுதிக்கு சென்றார். பதற்றத்துடன் சென்ற அவர்கள் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கருகே தனது சகோதரன் சென்ற மோட்டார் சைக்கிள் விழுந்து கிடப்பதை கண்ணுற்று அதிர்ந்து போயினர்.
அப்போதுதான் அவர் பலியான செய்தி கிடைத்தது.
நிட்டம்புவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹொரகொல்ல பகுதி எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு அருகே வைத்து இளைஞர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் குத்திப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக ஸ்தலத்தில் இருந்த நிட்டம்புவ பொலிஸார் தெரிவித்தனர்.
ஞாயிற்றுக்கிழமை இரவு ஹொரகொல்ல எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக துவான் தில்ஷான் தாஜுதீன் எனும் இளைஞன் தனது மோட்டார் சைக்கிளில் வரிசையில் காத்துக்கொண்டிருந்துள்ளார். இதன்போது அதே வரிசையில் எரிபொருள் பெற்றுக்கொள்வதற்காக வந்த முச்சக்கர வண்டி சாரதியொருவர் முண்டியடித்துக்கொண்டு எரிபொருள் நிரப்பச் சென்றுள்ளார். இதனால் அவருக்கும் தில்ஷான் தாஜுதீனுக்கும் இடையே இரவு 8.30 மணியளவில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இடை நடுவே வந்து வரிசையில் புகுந்து பெற்றோல் பெற்றுக்கொள்ள முச்சக்கர வண்டி சாரதி முயன்றமையாலேயே இந்த வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது.
பின்னர் அங்கிருந்து சென்றுள்ள முச்சக்கரவண்டியின் சாரதி, கொழும்பு – கண்டி பிரதான வீதியில் எரிபொருள் நிரப்பு நிலையம் அருகே காத்திருந்துள்ளார். இந் நிலையில் எரிபொருளை பெற்றுக்கொண்டு கொழும்பு திசை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த தில்ஷானை வழிமறித்து கூரிய ஆயுதத்தால் தாக்கி, கொலை செய்துவிட்டு முச்சக்கர வண்டி சாரதி தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட பின்னர் மோட்டார் சைக்கிளுடன் வீழ்ந்துகிடந்த இளைஞன், உடனடியாக வேறு ஒரு வாகனத்தில், வத்துபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிசார் கூறினர்.
சி.சி.ரி.வி. காணொலிகளின் உதவியுடன் நிட்டம்புவ பகுதியை அண்மித்து வசிப்பவரான சந்தேக நபரான முச்சக்கர வண்டி சாரதி பொலிஸாரால் அடையாளம் கணப்பட்டார்.
சம்பவ தினத்திற்கு மறுநாள் 21 ஆம் திகதி நிட்டம்புவ பனாவல பிரதேசத்தைச் சேர்ந்த முச்சக்கர வண்டி சாரதியான 48 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான பீ.ஏ.நுவன் பிரியதர்ஷன கைது செய்யப்பட்டார். இவர் ஆடை பையுடன் தப்பித்து செல்ல முற்பட்டபோதே கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர், அத்தனகல்ல நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டதையடுத்து 14 நாட்கள் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான வழக்கு விசாரணை எதிர்வரும் 19 ஆம் திகதி அத்தனகல்ல நீதிமன்றத்தில் இருப்பதாக தில்ஷான் தாஜுதீனின் குடும்பத்தார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் நிட்டம்புவ பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் அபேரத்ன தலைமையில் உப பொலிஸ் பரிசோதகர் மதுஸங்க, நளின், பொலிஸ் சாஜன்ட்களான விஜேரத்ன, சரத், ஜயதிலக, அமீன், புஸ்பகுமார, பொலிஸ் கொஸ்தாபல்களான, பணாவல, குணதிலக, ரண்தரு, பெரேரா, குலரத்ன, திலகரத்ன,ரத்நாயக மற்றும் சமீர உள்ளிட்ட குழுவினர் சம்பவம் தெடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
“தில்ஷான் (சிராஜ்) சுறுசுறுப்பான இளைஞன். சுற்றத்தாரோடு அன்னியோன்யமாக பழகும் அவர் தொடர்மாடி குடியிருப்பு பகுதியிலேயே பலரது அன்புக்குரியவராக இருந்தார். இதனால், அவரின் ஜனாஸாவில் அதிகமானோர் கலந்துகொண்டனர். எதிர்க்கட்சித் தலைவர் என்னுடன் தொலைபேசியில் உரையாடினார். மகனின் இழப்புக்கு ஆறுதல் சொன்னார். மகனுக்கு நீதி வேண்டி பாராளுமன்றில் அவர் உரையாற்றியமைக்கு நன்றி கூறுகிறேன். முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் உள்ளிட்ட பலரும் வீடுதேடி வந்தனர்” என்று தந்தை சல்டீன் தாஜுதீன் கூறினார்.
“எனக்கும் தம்பிக்கும் 15 வருடங்கள் வித்தியாசம். தம்பி பாசத்தையும் ஒரு மகன் போன்ற பாசத்தையும் அவன் மீது வைத்திருந்தேன். எங்கள் குடும்பத்தில் ஒற்றை ஆண் பிள்ளை என்பதால் எல்லோருக்கும் அவன் செல்லப்பிள்ளை. அவரின் இழப்பை ஈடு செய்ய முடியாது. எதற்கும் துணிவுடன் குரல் கொடுக்கும் அவர் அநீதி இழைக்கப்படுவதை பார்த்துக்கொண்டிருக்க மாட்டார். துணிவுடன் பேசுவார். அன்று அங்கு அநீதி இடம்பெற்றதை தட்டிக் கேட்கப் போய் இந்த விபரீதம் ஏற்பட்டுள்ளது” என்றார் இளைய சகோதரி பெரோஸா தாஜுதீன்.
தில்ஷான் அநியாயமாக படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் நிட்டம்புவ பொலிஸார் விரைந்து செயற்பட்டதாக அவரின் சகோதரி பெரோஸா கூறினார். எனவே, இச் சம்பவம் தொடர்பில் நீதியான விசாரணைகள் இடம்பெற்று நீதி கிடைக்கும் என நம்புகிறோம். என்றாலும், போன உயிரை திரும்ப பெற்றுக்கொள்ள முடியாது என்ற வருத்தமே மிஞ்சியிருக்கிறது என்று கூறி கண்ணீருடன் மௌனித்தார் சகோதரி.
அநீதி இழைக்கப்படும்போது தட்டிக் கேட்பது மனித இயல்பு. குற்றம் இழைத்தவரை தண்டிப்பதற்கே எந்தவொரு பிரஜைக்கும் உரிமையில்லை. நீதிமன்றத்தின் தீர்ப்புக்கமையவே தண்டனைகள் வழங்க முடியும். இந்நிலையில் வரிசை நடைமுறையை மீறிச் செயற்பட்டதை தட்டிக் கேட்டபோது கொலை செய்யும் அளவுக்கு வக்கிரம் கொண்டு செயற்படுவதானது ஏற்றுக்கொள்ள முடியாததாகும்.
நாட்டில் ஏற்பட்டிருக்கும் மோசமான பொருளாதார நிலைமை காரணமாக எல்லா விடயத்திற்கும் வரிசை என்ற நிலை உருவாகி விட்டது. இந்த மரணத்திற்கு இவ்வாறான வரிசைகள் உருவாக காரணமானவர்களே பொறுப்புக் கூறவேண்டும்.
அத்துடன் உயிரிழந்த தில்ஷான் தாஜுதீனுக்கு நீதி கிடைப்பதை உறுதிப்படுத்துவதுடன் குற்றவாளிக்கு உரிய தண்டனை கிடைக்கவும் சம்பந்தப்பட்ட தரப்பினர் விரைந்து செயற்பட வேண்டும்.- Vidivelli