அம்பாறை முள்ளிக்குளம் மலை பகுதியில் வெளியாட்கள் நிர்மாண பணிகளை மேற்கொள்ள இடமளிக்கப்படாது
தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் ஹக்கீம் எம்.பி.யிடம் உறுதியளிப்பு
அம்பாறை மாவட்டத்தின் பாலமுனை, முள்ளிக்குளம் மலைப் பிரதேசத்தில் அண்மையில் நடந்தது போன்று, அங்கு வசிக்கும் பொதுமக்களுடன் கலந்தாலோசிக்காமல் தொல்பொருட்களும், புராதனச் சின்னங்களும் இருப்பதாக காரணம் காட்டி வெளியார் நிர்மாண வேலைகளை மேற்கொள்ள இடமளிக்கப்பட மாட்டாது என்றும் , உரிய காரணமின்றி அங்கு வழமையான பயிர்ச் செய்கை நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு விவசாயிகளுக்கு தடை விதிக்கப்பட மாட்டாது என்றும் தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் அனுர மணதுங்க ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீமிடம் தெரிவித்துள்ளார்.
நேற்று முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் தொல்பொருள் திணைக்களத்தில் , அதன் பணிப்பாளர் நாயகத்துடன் நடத்திய பேச்சுவார்த்தையின் போதே இவ்வாறு உறுதியளிக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம்கள் செறிந்து வாழும் அந்தப் பிரதேசத்திற்கு திடீரென சிலர் வந்து நிர்மாண வேலையில் ஈடுபட்டதைத் தொடர்ந்து பெரும் பதற்ற நிலை தோன்றியிருந்ததை சுட்டிக்காட்டி, அவ்வாறான பிரதேசங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கையையும்,கலாசாரத்தையும் பாதிக்கும் விதத்தில் அத்துமீறல் நடப்பதற்கு இடமளிக்கக் கூடாது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் பணிப்பாளர் நாயகத்திடம் வலியுறுத்தியுள்ளார்.
அதற்கு பதிலளித்த தொல்பொருள் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் ,பிரதேச செயலாளருடன் தொடர்பு கொண்ட நிலையில், வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டிருந்த போதிலும்கூட , அங்கு வாழும் மக்களுடன் உரிய முறையில் கலந்தாலோசனை செய்யப்படாமல் அத்தகைய முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட மாட்டாது என்றும் மாவட்ட அரச அதிபருக்கும் அதுபற்றி அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் இவ்வாறான தொல்பொருள் அகழ்வாராய்ச்சி கண்டுபிடிப்புகள் என்ற பின்னணியில் சிறுபான்மை சமூகத்தினர் செறிந்து வாழும் பிரதேசங்களில் அத்துமீறல் இடம் பெறுவதையிட்டு முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் தொல்பொருள் பணிப்பாளர் நாயகத்திடம் விசனம் தெரிவித்தார்.- Vidivelli