முஸ்லிம் தனியார் சட்ட விவகாரம்: ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செயலணியின் அறிக்கை கிடைத்த பின் தீர்மானம்

நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு

0 494

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
அண்மையில் நான் முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தில் சில திருத்தங்களை மேற்கொள்வதற்கு சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரம் பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் நிராகரிக்கப்பட்டதால் தொடர்ந்தும் இச்சட்டம் தொடர்பில் செயற்பட முடியாதுள்ளது. ஒரே நாடு ஒரே சட்டம் தொடர்பான ஜனாதிபதி செயலணியின் அறிக்கை கிடைத்த பின்பே இச்சட்டம் தொடர்பில் இறுதித் தீர்மானம் மேற்கொள்ள முடியும் என நீதியமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்தார்.
முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுமா அல்லது காதிநீதிமன்ற முறைமை இல்லாதொழிக்கப்படுமா என வினவிய போதே நீதியமைச்சர் விடிவெள்ளிக்கு இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில் , காதிநீதிமன்ற முறைமையைப் பாதுகாத்துக் கொள்வதற்காகவே நான் ஆரம்பத்தில் முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தில் சில திருத்தங்களைச் செய்வதற்கு முயற்சிகள் செய்தேன். அப்போது எமது சமூகத்தில் ஒரு கூட்டம் அதற்குப் பலத்த எதிர்ப்பினை வெளியிட்டது. அதனால் அம்முயற்சி வெற்றிபெறவில்லை. நாம் எப்போதோ எமது தனியார் சட்டத்தில் காலத்துக்கு ஏற்ற திருத்தங்களைச் செய்திருந்தால் இப்போதைய பிரச்சினைகள் உருவாகியிருக்காது.

இலங்கையில் முஸ்லிம்களுக்கென்று தனியான சட்டம் இருக்க முடியாது. அவர்கள் பொதுவான சட்டத்தின் கீழேயே ஆளப்பட வேண்டும் என சில அமைச்சர்கள் கூறுகிறார்கள். ‘ஒரே நாடு ஒரே சட்டம்‘ தொடர்பான ஜனாதிபதி செயலணியின் அறிக்கை கிடைக்கும் வரை பொறுத்திருங்கள். அதன்பிறகு தீர்மானம் மேற்கொள்வோம் என்கிறார்கள்.

ஜனாதிபதியும் குறிப்பிட்ட அறிக்கை கிடைக்கும் வரை காத்திருக்கும்படி தெரிவித்துள்ளார். இதுவே முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தின் இன்றைய நிலைமை. ஒரே நாடு ஒரே சட்டம் தொடர்பான ஜனாதிபதி செயலணியின் சிபாரிசுகள் கிடைக்கப்பெற்றதன் பின்பு அதன் அடிப்படையிலே திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அமைச்சர்கள் தீர்மானித்திருக்கிறார்கள்.

இதேவேளை ஒரே நாடு ஒரே சட்டம் தொடர்பான ஜனாதிபதி செயலணியின் ஊடக செயலாளர் எரந்த நவரத்னவைத் தொடர்பு கொண்டு செயலணியின் அறிக்கை எப்போது ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும் என வினவியபோது அவர் எதிர்வரும் மே மாதமளவில் கையளிக்கப்படும் என்றார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.